Tuesday 15 October 2013



காதல் பொய்கள்

பெ. கருணாகரன்

காட்சி - 1

ஊட்டி...
ஏரியில் படகு போய்க்கொண்டிருந்தது. உள்ளே பத்மினி, ஷ்யாம் சுந்தர்.
“ஷாம்...
“ம்...
“மீசையில்லாத இந்த மழு மழு முகம், அளவான கிருதா... அப்படியே உங்களைப் பார்க்க நடிகர் ஆர்யா மாதிரியே இருக்கு. கடிச்சுத் தின்னலாம் போல...
“மாமிச பட்சினியே... என் மனம் கவர் பத்மினியே...
அவன் பாடத் தொடங்கினான்.
“சார் குஷி மூட்ல இருக்கிற மாதிரி தெரியுது. இவ தொல்லை இத்தோடு ஒழிஞ்சுதுங்கிற சந்தோஷம்தானே..?
“பத்து... நீ முட்டாள். பிரியப் போறதை நினைச்சு அழச் சொல்றியா? இடுக்கண் வருங்கால் நகுக... அவன் கண்களின் ஓரம் ஈரம் எட்டிப் பார்த்தது.
“ஏய்.. என்ன இது, அழுதுக்கிட்டு..? பிரியறது கஷ்டமா இருந்தால் சொல்லுங்க... நான் சொன்ன மாதிரி மலையிலேர்ந்து குதிச்சு செத்துப் போயிடுவோம்.... எத்தனையோ காதலர்களை இணைத்து வைத்த இந்த மலை, நம்மையும் இணைத்து வைக்கட்டும்...
“என்ன பத்து மறுபடியும் முட்டாள் மாதிரி உளர்றே... ஏன் சாகணும்? சோகம் தாங்கு... முடியலைன்னா அழுதுக்கோ. சாகாதே. லைஃப் எவ்வளவு பெரிய மிராக்கிள். வாழறதுக்குக் கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணலாமா? சோகம் மறந்து சந்தோஷமா இருக்கப் பழகிப்போம்... என்றவாறே கண்களின் ஓரத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னான்.
“பத்து... இந்தப் பச்சைப் புடவையிலே உன்னைப் பார்க்கையில் கை துறுதுறுங்குது...

காட்சி-2

“இந்த நீலப் புடவையிலே நீ தேவதை மாதிரி இருக்கே... என்றான் பரஞ்சோதி. இடம் – அதே ஊட்டியில் பொட்டானிக்கல் கார்டன். ஆனால், எதிரிலிருந்த சொர்ணாவின் முகத்தில்தான் சந்தோஷம் இல்லை.
“எப்படி உன்னால் இந்த நேரத்தில் சந்தோஷமா இருக்க முடியுது ஜோதி? சோகம் வரலே? கண்ணீர் வரலே... பிரியப் போறதை நினைச்சால் உனக்குத் தவிப்பா இல்லே? நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காமலேயே இருந்திருக்கலாம் போல தோணலை?
“இல்லை சொர்ணா... உன்னைப் பார்த்தது சந்தோஷம். பழகியது சந்தோஷம். கடந்த கால சந்தோஷங்களில் நிகழ்காலச் சோகங்களை மறப்போம்...
“எனக்கு முடியலே... நாம புன்னகை மன்னன்ல கமல் - ரேகா குதிச்ச மாதிரி குதிச்சிடலாம்...
“உணர்ச்சி வசப்படாதே. நம்ம பிரிவை வலி இல்லாமல் சந்தோஷமா ஒரு கெட் டுகெதரா வச்சுக்கலாம்னுதானே இங்கே வந்தோம். திட்டத்தை மாற்றாதே. என் அக்காவின் முகத்தை ஒருமுறை நீ நினைச்சுப் பார். கால் ஊனமுள்ள அவளைக் கல்யாணம் பண்ணிக்க நல்ல இடமா ஒரு வரன் வந்தது. ஒரே நிபந்தனை, பெண் கொடுத்துப் பெண் எடுத்துக்கணும்கிறாங்க. நான் கட்டிக்கிறதைத் தவிர, வேறு வழி இல்லையே சொர்ணா. குடும்பத்திலே இருக்கிறவங்க சந்தோஷத்துக்காக, நாம் சில தியாகங்களைச் செய்து தானே ஆகணும்?
“பொண்ணு பேர் என்ன சொன்னே? என்றாள் ஏக்கமாக.
“பத்மினி...

காட்சி – 1A

“மாப்பிள்ளை பெயர் என்ன? என்று கேட்டான் ஷ்யாம் சுந்தர்.
“பரஞ்சோதி...
“லக்கி பர்சன்... என்று பெருமூச்சுடன் சொன்னவன், “பசிக்கிற மாதிரி இருக்கு... வா, சாப்பிடலாம்... என்று ஓட்டலுக்கு அழைத்துப் போனான்.
ஓட்டலில் அவன் இட்லியும் ரவா தோசையும் சொன்னதும்...
“எனக்கும் அதையே சொல்லுஙக... என்றாள் பத்மினி.
“உனக்கும் இதுதான் பிடிக்குமோ?
“ஊத்தப்பம்தான் பிடிக்கும்.  ஆனாலும் இந்த நிமிஷத்திலிருந்து இட்லி, ரவா தோசை எனக்கும் ஃபேவரிட்... என்றாள் குறுகுறுப்புடன் அவனைப் பார்த்தவாறு. சாப்பிட்டு முடித்துவிட்டு, இரண்டு பாதாம் கீர் ஆர்டர் செய்தாள். “ஃபார் அவர் ஸ்வீட் ஃபேர்வெல்.... என்ற அவளின் கமெண்ட்டை ரசிக்கும் மூடில் அவன் இல்லை.
“இன்றிலிருந்து நான் ஸ்வீட் சாப்பிடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்... என்றான் கசப்புடன்.

காட்சி – 2A

“எனக்கு ஊத்தப்பம் வேண்டும்... என்றாள் சொர்ணா.
“சரியான ஊத்தப்பம்... என்று கிண்டலடித்தான் பரஞ்சோதி. சாப்பிட்டுக் கொண்டே அவன் சொன்னான். “கிளியோப்பாட்ராவின் மூக்கு சற்றுக் கோணலாகியிருந்தால் ரோமப் பேரரசு நிமிர்ந்திருக்கும்னு சொல்வாங்க. எடுப்பான உன் மூக்கு நான் தடுமாறக் காரணமாகி விட்டது... –அவன் சொன்னதை அவள் ரசித்தாள்.
“காதில் அணிந்திருக்கும் உன் ஜிமிக்கி, மிக அழகாகவும், சிறியதாகவும் நீ சிரிக்கும்போதெல்லாம் ஊஞ்சலாடி இம்சைப்படுத்துது. வலப்புற மூக்குக்கு அருகிலுள்ள மச்சம் திருஷ்டிப் பொட்டு மாதிரி குதூகலப்படுத்துது... என்றான் கிறக்கமாக.
“டூ மச்... டூ மச்... அவளது உதடுகள் பதற்றமாய் உச்சரித்தாலும் அவனின் கடைசி வர்ணனையை ரசிப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.

காட்சி-1B

“வேறு வழியே இல்லையா? ஏக்கமாய்க் கேட்டான் ஷ்யாம்.
“இல்லே ஷாம்... இதுதான் நாம கடைசியாப் பார்த்துக்கிறதா இருக்கும். நான் உங்களைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும் அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சுட்டாரு. உங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒற்றைக் காலில் நின்றேன். பயன் இல்லே... கயிறை எடுத்து ஃபேன்ல மாட்டித் தொங்கப் போயிட்டாரு. சின்ன வயசுலேர்ந்து பாசத்தைக் கொட்டி வளர்த்தவர். அவர் விருப்பத்தை நிறைவேற்ற என் விருப்பத்தை மாற்றிக்கிறதைத் தவிர வேற வழி தெரியலே... என்றாள்.
“ஒரு வருடம் லவ் பண்ணியிருப்போம். அதையெல்லாம் மறக்க முடியும்னு எனக்குத் தோணலை. ஏதாவது ஒரு ரூபத்தில் நீ என் நினைவுகளில் வந்து துன்புறுத்திக்கிட்டே இருப்பே... என்றான் ஷ்யாம்.

காட்சி – 2B

“துன்பமாத்தான் இருக்கும். கொஞ்சநாள்தான். அப்புறம் எல்லாம் மறந்துடும். நமக்காக மட்டுமே நாம் வாழ்ந்திடறதில்லையே. மற்றவர்களுக்காகவும் நாம் வாழ வேண்டியதிருக்கே.. என்றான் பரஞ்சோதி.
“போடா முட்டாள்... ஆண்கள் எளிதில் எல்லாத்தையும் மறந்துடுவீங்க. பெண்கள்?  வெறித்தனமாக் காதலிச்சவனை இப்ப வெல்விஷராய்ப் பிரிய சொல்றே. பிரிஞ்சுடுவோம். கல்யாணத்துக்கு மறக்காமல் பத்திரிகை அனுப்பு. அட்சதை போட வர்றேன்... சிரித்துக் கொண்டும் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டும் அவள் சொன்னாள்.

காட்சி -3

மலர்த் தோரணங்கள் தொங்கவிடப் பட்டு, மலர் தூவி  அலங்கரிக்கப்ட்டிருந்தது படுக்கையறை. முதலிரவு... மேலே மின்விசிறி சத்தமின்றி ரங்க ராட்டினம் ஆடியது. படுக்கையில் புன்னகையுடன் பரஞ்சோதியும், பத்மினியும்.
“பத்மினி... முன் பின் அறிமுகமில்லாத நம்மை காலம் சேர்த்து வச்சிருக்கு. அதனால, நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாமா? – அவள் மௌனமாய்த் தலையாட்டினாள்.
“உன் நிறத்துக்கு இந்தப் பச்சைப் புடவை சுமாராதான் இருக்கு, நீல நிறத்தில் புடவை கட்டினால் தேவதை மாதிரி இருப்பே... என்றான்.
“பச்சைப் புடவைதான் எனக்கு நல்லா இருக்குன்னு என் ஃபிரெண்ட்ஸ் சொல்லுவாங்க. ஓ.கே. நாளைக்கே உங்க விருப்பத்தை நிறைவேற்றிட்டால் போச்சு... கூலாய்ச் சொன்னாள் அவள்.
“அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கும் எனக்கும் ரெண்டு வயசு வித்தியாசம்தான் இருக்கும். அதனால இந்த வாங்க போங்கன்னு மரியாதையெல்லாம் வேணாம். பரஞ்ஜோதின்னு கூப்பிடு. வாய் வலிக்காமல் சுருக்கி ஜோதின்னு கூடச் செல்லமாய்க் கூப்பிடலாம். அழகாக இருக்கும்...
“சரிடா ஜோதி... என்று சிரித்துக் கொண்டே அவனது கன்னத்தில் செல்லமாகத் தட்டியவள், “என்னையும் நீங்க பத்மினின்னு நீளமாய்க் கூப்பிடாமல் பத்துன்னு சுருக்கிச் செல்லமாக் கூப்பிடப் பாருங்க. அன்னியோன்னியம் பெருகும்...‘ என்றவள், அவனது கிருதாவைப் பிடித்து இழுத்தாள்.
“என்னது இவ்வளவு நீள கிருதா..? இது ரொம்ப பழைய ஸ்டைல். கிருதா அளவைக் குறைச்சுட்டு மீசையை எடுத்துடுங்க. ஒரு சாயல்ல ஆர்யா மாதிரியே இருப்பீங்க... என்றாள்.
“நடிகர் ஆர்யாவை உனக்குப் பிடிக்குமோ?
“ம்... ரொம்பவும்... என்று மேலும் கீழுமாகத் தலையாட்டினாள் தலைகுனிந்தவாறே. அவன் டீபாயின் மீதிருந்த தட்டிலிருந்து ஒரு ஜாங்கிரியை எடுத்து விண்டு அவளிடம் கொடுத்தான். அவள் வேண்டாமென்று தலையாட்டினாள்.
“எனக்கு ஸ்வீட் பிடிக்காதுங்க...
“நீயே ஒரு ஜாங்கிரி... உனக்கெதுக்கு ஜாங்கிரி? என்று சிரித்துக் கொண்டே சொன்னவன், “உனக்கு என்ன உணவெல்லாம் பிடிக்கும்..? என்று கேட்டான்.
“இட்லி, ரவா தோசை இரண்டும்தான் ஃபேவரிட். ஒரு பிடி பிடிப்பேன். உங்களுக்கு?
“ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ஊத்தப்பம்னு என்னைக் கிண்டல் பண்ணுவாங்க...‘ என்று கூறியவன், சட்டையைக் கழற்றி கட்டில் கைப்பிடியில் போட்டான். பிறகு அவளது முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்தான்.
“உன் மூக்கு இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருந்திருக்கலாம். உன் முக அமைப்புக்கு இன்னும்  பொருத்தமாக இருந்திருக்கும்...
“அப்புறம்?
“உன் ஜிமிக்கி கொஞ்சம் பெரிசா இருக்கு. சிறிதாக இருந்தால் அழகு இன்னும் அதிகமாகும்...
“அப்படியே ஆகட்டும் பிராணநாதா... என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.
“அப்புறம்... அப்புறம்...? யோசித்தவன், தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து பால்பாயிண்ட் பேனாவை எடுத்தான். அவளது மூக்கின் வலது பக்கத்துக்கு அருகில் புள்ளி வைத்தான்.
“ஏய்... என்ன பண்றே..? செல்லமாகச் சிணுங்கினாள்.
“மச்சம். இந்த இடத்தில் உனக்கொரு மச்சம் இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்... என்றான். பிறகு சிறிது யோசித்து விட்டு, “ஹனி மூனுக்கு எங்கே போகலாம்? என்று கேட்டான்.
“அவள் சொன்னாள் ஊட்டி...
“நான் நினைச்சேன்... நீ சொல்லிட்டே... இதுக்கு முன்னாடி ஊட்டிக்குப் போயிருக்கியா?
“ம்ஹூம்... நீங்க?
“ம்ஹூம்... என்றான் அவனும் – பார்வையைத் திருப்பிக் கொண்டு.

Tuesday 17 September 2013


சிறுகதை

மாயவலை

பெ. கருணாகரன்


ஏன் தேவா இப்படி குடிச்சு வீணாப் போறே...?”  என்றாள் சோனா.
நீ இப்ப என்ன சொல்ல வர்றே?” முகம் நிமிர்த்திக் கேட்டான் தேவா.

குடிக்கிறதை நிறுத்தச் சொல்றேன்...  நீ குடிச்சு சாதிச்சதென்ன...? ஆபீசுக்குத் தண்ணியடிச்சுட்டு வந்து, போன மாசம் மெமோ வாங்கினே.  உன் ரெக்கார்ட்ல பிளாக் மார்க்... நியாயமா உனக்குக் கிடைக்க வேண்டிய ப்ரொமொஷன் பரமசிவத்துக்குக் கிடைச்சிருக்கு.

அவனோட டிசிப்ளின் மேனேஜ்மெண்ட்டுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ திறமையானவன். ஆனால், டிசிப்ளின் இல்லாதவன். போர்டு மீட்டிங்கில் உனக்கு ஃபேவராக யாரும் பேசலை தெரியுமா...?”

லுக் சோனா... எனக்கு ப்ரைவஸி முக்கியம்... என் சுதந்திரத்தில் யார் தலையிடறதையும் அனுமதிக்க மாட்டேன்.  பல தடவை என்கிட்டே இதைப் பற்றிப் பேசிட்டே. நானும் பதில் சொல்லிட்டேன். இந்த விஷயத்தில் நீ தலையிடாதே...” 

கோப்பையிலிருந்த அந்தத் திராவகத் திரவத்தின் கடைசித் துளிகளை வயிற்றுக்குக் கொடுத்தான்.

சோனாவின் குரலில் கெஞ்சல்.  “விட்டுடு... இந்தக் கேவலத்தை விட்டுடு...  உன்கிட்டே திறமை இருக்கு. டிசிப்ளின் இருந்தால்தான் லைஃபில் உயர்வு, மரியாதை வரும். இந்த வருஷம் விட்டுப் போன ப்ரோமோஷனை அடுத்த வருஷமாவது  நீ வாங்கணும்...”

சோனா கூறிக் கொண்டிருக்கும்போதே, தேவா பாட்டிலில் இருந்த மதுவைக் கோப்பையில் சரித்தான். பிறகு அதை வாய்க்குக் கொடுத்தான்.

ப்ரொமோஷனாவது, புண்ணாக்காவது... எனக்கு அதெல்லாம் பெரிசில்லே... எனக்கு எது பிடிக்குமோ அதன்படி வாழ விரும்பறேன். எனக்கு இது பிடிக்குது. இதில் கிடைக்கிற சந்தோஷம் பற்றி உனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்கணும்னா வா... கம்பெனி தா... ரெண்டு பெக் அடி...

கொடுமைடா சாமி...” என்று காதை மூடிக்கொண்டவள், பிறகு கேட்டாள்.

என் வீட்டில் எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க...”

கோப்பையை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்தான். “உனக்கு ஒரு லவ்வர் இருக்கிற விஷயத்தை அவங்ககிட்டே சொல்ல வேண்டியதுதானே...

அதுக்காகத்தான் உன்கிட்டே பேச வந்தேன். குடிக்கிறதை நிறுத்து.”
நான் குடிக்கறதை நிறுத்துறதுக்கும் நாம கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்...?”

இருக்கு... எந்தப் பொண்ணும் தன் புருஷன் குடிகாரனா இருக்கறதை விரும்பமாட்டாள். நானும் விதிவிலக்கில்ல...”

எல்லாம் தெரிஞ்சுதானே நீ லவ் பண்ண ஆரம்பிச்சே...?”

ஆமா... தப்புதான்... ஃபீல் பண்றேன். முன்னாடியெல்லாம் வாரத்துக்கு ஒரு தடவைன்னு இருந்தது. இப்போ தினமும்னு ஆகிப்போச்சு. அடிமை ஆயிட்டே. உடம்புக்குக் கேடு. அந்தஸ்துக்குக் கேடு... இந்தச் சனியனை விட்டொழி... நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.”

என்ன அட்வைஸா...? லவ்வராக இருந்தாலும் உனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. அதைத் தாண்டி உள்ளே நுழையாத...”

கடைசியா கேட்கறேன்... குடிப்பதை நிறுத்துவியா, மாட்டியா?”
தேவா ஆக்ரோஷமாய் எழுந்தான்.

ந்நோ... முடியாது. என் சன்டே மூடை ஸ்பாயில் பண்றதுக்காகவே புறப்பட்டு வந்தியா?”

சோனா எழுந்தாள்.

போறேன் தேவா... இந்த நிலையில் நாம ரெண்டு பேரும் லவ் பண்ணுறதில் அர்ததமே இல்லே... உனக்கு சாராயம்தான் ப்ரையாரிட்டி. சாராய பாட்டிலேயே கட்டிக்கிட்டுத் தூங்கு. இது மாதிரி தொடர்ந்து குடிச்சிட்டிருந்தே நீ நாசமா போயிடுவே... ஒரு பயலும் உன்னைச் சீந்தமாட்டான்...”

சர்தான் போடி... தர்மபத்தினி... சாபம் கொடுக்கறா... நீ இல்லேன்னா எவளும் கிடைக்க மாட்டாளா என்ன..? சீக்கிரம் இடத்தை காலி பண்ணு...” உள் நுழைந்த திரவச் சாத்தான் கொக்கரித்தது.

முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு குன்றிப்போன உணர்வுடன் வெளியேறினாள் சோனா.

மறுநாள் அலுவலகத்தில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இது நிழல் யுத்தமா...? நிஜயுத்தமா..? அவளுக்குப் புரியவில்லை. அவனிடம் பேசவில்லையே  தவிர, அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. பேசத் துடித்தது மனசு. அவன் மீதிருந்த கோபம் கடிவாளம் போட்டது.

இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தன. திடீரென்று அந்தச் சம்பவம் நடந்தது. தேவா கம்பெனிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான். மது அருந்திவிட்டு சாலையில் இறங்கி ரகளை செய்ய, போலீஸ் அவன் மீது நியூசென்ஸ் கேஸ் போட்டது. கம்பெனியோ அவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
தட்டுத் தடுமாறி தேவா நடந்து கொண்டிருந்தான். தார்ச்சாலை பொதக் கொதக் என்று உள்ளே வாங்குவது போல உணர்வு. டிஸ்மிஸ் ஆகி இரண்டு வாரங்கள் விளையாட்டாய் ஓடிவிட்டன. தினமும் தீர்த்த யாத்திரை! பகல்... இரவு என்ற கணக்கு இல்லாமல்!

வேலை இல்லாததால். ஞாயிற்றுக்கிழமை எது என்று கூட அடையாளம் காண முடியாத குழப்பம். இதற்கிடையில் முதல் தேதி வந்து பயமுறுத்தியது. மாதா மாதம் சுளையாய் முப்பதாயிரம் ரூபாய். அது இப்போது இல்லை. வங்கி பேலன்ஸும் பேலன்ஸ் இழந்து தடுமாறியது. பணம் இல்லாமல் வாழ முடியுமா? பொருளாதார நிர்ப்பந்தம் அவனைப் பயமுறுத்தியது.

வேறு சில கம்பெனிகளில் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டான். அவனது ஒழுக்கம், தகுதியின்மையாக குறுக்கே நின்றது. அறைக்கு வந்தபோது உறக்கமே வரவில்லை. அழுகை வந்தது. குடிக்க வேண்டும் போலிந்தது. மீதம் வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் குடித்தான். அழுகை அதிகரித்தது. மனசு உறுத்தியது. வாழ்க்கை அவ்வளவு தானா? சோனா சொன்ன மாதிரி நான் நாசமாகப் போய்விடுவேனா? என் அத்தியாயம் முடிந்ததா?
மல்லாந்து படுத்து உத்தரத்தை வெறித்தான். இந்த நிலைமைக்கு தான் வரக் காரணம்? - யோசித்த போது விடை கிடைத்தது. எழுந்து சென்று முகம் கழுவினான். அந்த ஊர் அவனுக்கு ஏனோ பிடிக்காமல் போனது. வேறு எங்காவது போய்விடத்  தீர்மானித்தான். அவன் செய்த இரண்டாவது தீர்மானம் குடிக்கக் கூடாது.

இது நடந்து எட்டாண்டுகளுக்குப் பிறகு, எக்கனாமிக் டைம்ஸில் அவனது பேட்டி வெளியாகியிருந்தது. சாஃப்ட்வேர் பிஸினஸில் மும்பையில் முன்னணி நிறுவனம் என்று அவனது கம்பெனியைப் புகழ்ந்து தள்ளி அறிமுகம் செய்திருந்தார்கள். தேவா தனது பேட்டியில்,
நான் இந்த அளவுக்கு முன்னேறியதுக்குக் காரணம் ஒரு பெண். லவ் ஃபெயிலியர் ஒரு ஆணை தேவதாஸாகத்தான் மாற்றும். ஆனால், என் லவ் ஃபெயிலியர் என்னை உயர்ந்த நிலைக்குக்கொண்டு வந்திருக்கு. நான் எதிர்காலத்தில் நாசமா போயிடுவேன்னு என் லவ்வர் சொன்னாள். அப்படி இல்லை, நான் வாழ்ந்து காட்டறேன் பார் என்கிற வைராக்கியத்தோடு வாழ்க்கையைத் திட்டமிட்டேன். அதனால்தான் சாஃப்ட்வேர் பிஸினஸில் என்னால் முன்னணிக்குவர முடிந்தது.  இதற்கு நான் அந்தப் பெண்ணுக்குத்தான் நன்றி சொல்லணும்என்று கூறியிருந்தான்.

பேட்டி வெளிவந்த அன்று... மதியம் போன் அடிக்கவே, எடுத்தான். மறுமுனையில் சோனா!

தேவா... எப்படி இருக்கே?” என்றாள்.

நல்லா இருக்கேன். நீ எப்படி சோனா இருக்கே...?”

ஃபைன். உன் பேட்டி படிச்சேன். எனக்குத்தான் நன்றி சொல்லணும்னு சொல்லியிருந்தே... சிரிச்சுட்டேன்.  நான் உன்கிட்டே சொன்ன சென்ஸ் வேறே...  நீ அதைப் புரிஞ்சுக்கிட்டது  வேற மாதிரி... .கே. நீ ஆள் எப்படி இருக்கே..? போட்டோவில் பார்த்தேன் கன்னம் உப்பியிருக்கு... தொப்பை போட்டுட்டியா என்ன?”

நோ... நோ... ஆல்வேஸ் ஸ்லிம்தான்....”

கல்யாணம்...?”

அவள் கேட்டதும் தயங்கினான்.  என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான். ஏதோ ஒரு உணர்வு; உந்துதல்.

ம். ஆயிடுச்சி...” என்றான்.

தேவா நாம சந்திக்க முடியுமா? சென்னை வந்தால் என்னை வந்து பாரேன்...” - நுங்கம்பாக்கத்தில் ஒரு முகவரி கொடுத்தாள்.
நுங்கம்பாக்கத்தின் இருதயப் பகுதியில் அந்தத் தனி பங்களா உயர்ந்து நின்றிருந்தது. குறைந்தது பத்துகோடி ரூபாய் மதிப்பிருக்கும். ஆச்சரியத்துடனும் சந்தேக்துடனும் காரிலிருந்து இறங்கினான் தேவா. வாட்ச்மேனிடம் பெயர் சொல்ல, “மேடம், உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க...” என்று  பதில் சொன்னான்.

கேட் திறக்க... உள்ளே நுழைந்தான். பரந்து கிடந்த புல், பூச்செடிகளுக்கு நடுவே உட்கார்ந்திருந்தது பங்களா. போர்டிகோவை ஒட்டிய பால்கனியில் தேவதை கணக்காக சோனா. “வா தேவா...” என்று  பால்வெளிர் பற்கள் தெரிய வரவேற்றாள்.

புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, படிகளில் ஏறினான். முன்னிலும் கொஞ்சம் குண்டடித்து அழகு கூடியிருந்தாள் சோனா.

உன் வொய்ஃபைக் கூட்டிட்டு வரலே...?” சோனா கேட்டாள்.
அவளுக்கு வேற ஒரு வேலை இருக்கு... அதான் வர முடியலை...” அவள் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான். தொடர்ந்து, “இந்த வீட்டில் நீ மட்டுமா இருக்கே?” -கல்யாணம் ஆயிடுச்சா என்பதன் மறைமுக கேள்வி.

எஸ். வேலைக்காரங்க இருக்காங்க.  துணைக்குப் புத்தகம், டி.வி.  பெரும்பான்மையான நேரங்கள் பிஸினஸில் போயிடும். குறையொன்றுமில்லை...” என்றாள்.

நான் டிஸ்மிஸ் ஆன பிறகு என்னை ரூமுக்கு வந்து ஒரு தடவை கூட நீ பார்க்கலே... அதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன் தெரியுமா?”

தப்பு தேவா... பல தடவை நான் உன் ரூமுக்கு வந்தேன். ஆனால், நீ ரூமிலேயே இல்லே. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு நீ காலி பண்ணிட்டதா சொன்னாங்க... அதுக்கப்புறம் நீ எங்கே போனேன்னு தெரியலை. அதைவிடு, நீ மட்டும் என்னவாம்? ஆபீசுக்குப் போன் பண்ணிப் பேச வேண்டியதுதானே...”

டிஸ்மிஸ் ஆகி ரோட்ல நின்ன நான், எந்த முகத்தோட ஆபீஸில் பேசறது சொல்லு..? சாஃப்ட்வேர் பிஸினஸ் ஆரம்பித்த பிறகு, ஆபீஸில் உன்னைப் பார்க்க வந்தேன். நீ சூஸைட் அட்டெம்ட் பண்ணி, உயிர் பிழைச்சு வேலையை ரிஸைன் பண்ணிட்டதா சொன்னாங்க... என்ன ஆச்சு?”

சோனா அமைதியாகச் சொன்னாள்.

ஒரு சன்டேயில் நீ என்னை அவமானப்படுத்தி  அனுப்பிய பிறகு, உன்மேல் எனக்கு வருத்தம். அதே நேரம் உன்னை என்னால வெறுக்கவும் முடியலைடா... ஏன்னா, உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகி நாம ஒண்ணு சேருவோம்கிற நம்பிக்கை இருந்துச்சி... ஆனால், நீ ஊரை விட்டுப்போன பிறகு, எல்லாத்துக்கும் காரணம் நான் தானோன்னு உறுத்தலாயிருச்சி... பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன். அப்போதான் தூக்க மாத்திரை சாப்பிட்டு செத்துப்போக முயற்சி பண்ணினேன். ரூம்மேட் காப்பாத்திட்டா... ஃப்ரெண்ட்ஸ் அட்வைஸ் பண்ணினாங்க.

தனிமையில் செல்ஃப் அனலைஸ் பண்ணிப் பார்த்தேன். என்னை மதிக்கத் தெரியாத, என் கருத்தைப் பரிசீலனைக்குக் கூட ஏற்பத் தயாரில்லாத உனக்காக நான் சூஸைட் பண்ணிக்க முயன்றது முட்டாள்தனம்னு பட்டது. இருந்தாலும் உன்னை மறக்க முடியல. அதுக்குக் காரணம் என்னன்னு யோசிச்சேன். என் மைண்ட் ரொம்ப ஸ்பேஸியஸ் ஆக இருந்தது. அதனால்தான் நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன்னு தெரிஞ்சது. மூளையை டைட் ஷெட்யூல்ல வச்சுக்கத் தீர்மானிச்சேன். அதற்கு ஒரே வழி, பிஸினஸ்... உன் ஞாபகங்களை எனக்குள் கிளறிவிட்ட ஆபீஸ் வேலையை ரிஸைன் பண்ணிட்டு, கார்மெண்ட்ஸ் பிஸினஸில் இறங்கினேன். கடுமையான உழைப்பு, வலி இல்லாமல் வெற்றிகரமாக வாழற வித்தையைக் கத்துக்கிட்டேன். எமோஷனல் குறைந்து மைண்ட் பேலன்ஸ் ஆனது.

இன்று தமிழகத்தில் முக்கியமான  கார்மெண்ட்ஸ்களில் என்னுடையதும் ஒன்று...” சொல்லிக் கொண்டிருந்த சோனாவை பிரமிப்பாகப் பார்த்தான் தேவா.

நீண்ட நேரம் பேசினார்கள். மதிய உணவு சாப்பிட்டார்கள். பிறகு விடை பெற்றுக் கிளம்பினான். அதன்பிறகு அவன் சென்னை வரும்போதெல்லாம் அவளைச் சந்தித்தான். எதற்காக வருகிறோம் என்ற காரணமே இல்லாமல் சென்னை வந்தான். பல வருகைகள்... பல சந்திப்புகள்... அப்படித்தான் ஒருநாள்... சென்னையில் அவர்கள் சந்திப்பு நடந்தது. அவன் தயக்கத்துடன் கேட்டான்.

சொல்றேன்று தப்பா நினைக்க மாட்டியே...”

சொல்லு தேவா...”

வெவ்வேறு ஃபீல்டுகளில் சிறப்பாக வெற்றியடைந்திருக்கும் நாம ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது...?”

சிரித்தாள் சோனா.

யு மீன்... ரெண்டாவது கல்யாணம்...?”

ஸாரி சோனா... எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு உன்கிட்டே பொய் சொன்னேன்...”  -அவள் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.

நீ நாசமாப் போயிடுவேன்னு என்னைச் சொன்னே... உனக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும்ங்கிற ஆவேசம் அடி மனசில்... அதனாலேயே குடிக்கிறதை விட்டேன்.  நீ இல்லாத போதும் நான் நல்லா வாழறேன் பாருன்னு காட்டறத்துக்காக நான் சொன்ன பொய்தான் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னது. என்னை மன்னிச்சிடு. மனசின் எதோ ஒரு மூலையில் நீ இன்னும் இருக்கிறேன்னு நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு இதுவரை கல்யாணம் பண்ணிக்கத் தோணலையோ என்னவோ...”
சிரித்தாள் சோனா.

எனக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம்தான் இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். ஆனால், இந்த நிமிஷத்திலிருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். தேவா, இந்த எட்டு வருஷத்தில் நீ நிறைய மாறியிருப்பேன்னு நினைச்சேன். ஆனா, ஒரு சின்ன மாற்றம்கூட உன்கிட்டே இல்லே. உன் ஈகோ, கொடூர நகம் கொண்ட ராட்சசனா மேலும் மேலும் வளர்ந்து சில்லித்தனங்கள் பண்ணிக்கிட்டிருக்கு... நீ சொன்ன கல்யாணப் பொய் சில்லித்தனத்தின் உச்சகட்டம்.

எனக்கு முன்னாடி நீ நல்லா வாழணும். அதைப் பார்த்து நான் வயிறு எரியணும். அதுதானே நீ சொன்னதன் அர்த்தம்? நான் அவமானமாய் உணர்றேன்...

நாம பிரிந்த பிறகுதான் நல்லா இருக்கோம். சேர்த்திருந்தபோது, வலிகள்தான் மிச்சம். பிரிஞ்சிடலாம் தேவா. நீ நல்ல குடும்பப் பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.  நாம் குட் ஃப்ரண்ட்ஸா மட்டும் இருந்துடுவோம். மறுபடியும் ஒரு மாயவலையில் சிக்கிட்டுப் போராட வேண்டாமே.”

ஒரு சின்ன பெருமூச்சுடன் எழுந்தான் தேவா.