Wednesday 24 April 2013






சாதுவும் சண்டியும்..!

பெ. கருணாகரன்

கிண்டிரேஸ் குதிரைகள்
சண்டைக்கு உதவாது!
சண்டைக் குதிரைகள்
கிண்டியில் தேறாது!

ஓடும் பொதுகுணம்
குதிரைக்கு எனினும்
ஒவ்வொரு குதிரைக்கும்
இயல்புகள் வேறு!

எல்லாக் குதிரைக்கும்
வாய்ப்புகள் உண்டு;
வாய்ப்புக்கு நடுவே
சவுக்கடி உண்டு!

சவுக்கடி பட்டதும்
பார சாரிகள்
எகிறிக் குதித்து
எதிர்ப்பைக் காட்டும்!
மீண்டும் மீண்டும்
சவுக்கடித் திருவிழா!
சண்டிகள் உடலில்
புண்களே அதிகம்!
புண்களைச் சுமந்து
பாரமும் சுமக்கும்!

சவுக்கொலி கேட்டதும்
சாதுக்கள் அடங்கும்!
குளம்புகள் தெறித்திட
பயணத்தைத் தொடங்கும்!

சண்டியோ சாதுவோ-
அடிமை வாழ்க்கையே
புரவிகள் தலைவிதி!

அடிபடும் வலிகள்
சண்டிகள் உடலில்!
அடிபணி துயரம்
சாதுக்கள் மனதில்!

சாதுக் குதிரைகள்
காயம் தவிர்த்தவை;
சண்டிக் குதிரைகள்
காயம் தரித்தவை!

துள்ளல் இல்லை;
எகிறல் இல்லை;
நிதானம்; நிதானம்;
சாதுக்கள் ஓட்டத்தில்!

எழும்பிக் குதித்து
கால்கள் உடைந்து
துன்பம் சூழ்ந்திடும்
சண்டிகள் வாழ்க்கையில்!

அடிபடும் சண்டிகள்;
அடிபணி சாதுக்கள்
இரண்டின் வாழ்க்கையும்
இரங்கற் குரியது!

Tuesday 23 April 2013



காகிதப் படகில் சாகசப் பயணம் – 11

சுஜாதா தி கிரேட்!

பெ. கருணாகரன்

1987 ஜூலை மாதம் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சி முகாம் தியாகராய.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்தது. முதல்நாள் அமர்வில், முதல் நிகழ்ச்சி எழுத்து இயந்திரன் சுஜாதாவுடையது. எல்லோருக்கும் அவரைப் பார்க்கவும் அவருடன் பேசவும் ஆவலாக இருந்தனர். எனக்குள்ளோ வயிற்றில் புளி கரைந்தது. அவர் நிகழ்ச்சி முடிந்து எப்போது கிளம்புவார் என்றே மனம் கிடந்து பதட்டத்தில் அடித்துக்கொண்டது. மனசுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத கலவரப் புயல்.

மிக அழகாகவும் எளிமையாகவும் பத்திரிகையாளன் யார்? அவன் தகுதிகள் என்னென்ன என்று குறும்பு கொப்பளிக்கும் விதமாகவும் பேசினார் சுஜாதா. என்னால்தான் அதனை முழுதாக ரசிக்க முடியவில்லை. அவர் பேசி முடித்துக் கிளம்பிய பிறகுதான் ‘அப்பாடா’ என்றிருந்தது. எனக்கு மட்டும் ஏன் அப்படியொரு பதட்டம்? காரணம் இருக்கவே செய்தது. 1985ம் ஆண்டு நான் கல்லூரியில் படித்தபோது, செய்த விளையாட்டுத்தனமான ஒரு விஷமத்தனம்தான் என் பதட்டத்துக்குக் காரணம். விஷயம் இதுதான். பொதுவாக புதிததாக எழுத வரும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. அது பிரபல எழுத்தாளர்களின் கதை என்றால் உடனே பத்திரிகையில் வெளியிடுகிறார்கள். புதிய எழுத்தாளர்கள் என்றால் அவர்களது கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள் என்பதுதான். எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது. (ஆனால், உண்மை அதுவல்ல என்பதை பின்னாட்களில் விகடன், குமுதம் இதழ்களில் சிறுகதை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தபோதும் நான் புரிந்து கொண்டேன். அவை குறித்த அனுபவங்கள் அப்புறம். இப்போது மறுபடியும் சுஜாதா விஷயத்துக்கு வருவோம்).

குமுதத்துக்கு நான் ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். அந்தக் கதை பிரசுரத்துக்கு ஏற்கப்படாமல் திரும்பி வந்துவிட்டது. எனக்கு அந்தக் கதை மிகச் சிறப்பானதாகப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதே கதையை ஒரு ஜெயகாந்தனோ சுஜாதாவோ எழுதியிருந்தால் நிச்சயம் பிரசுரமாகியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான் எனக்கு அந்த போசனை உதித்தது. ஒரு பிரபல எழுத்தாளரின் பெயரில் அந்தக் கதையை மீண்டும் குமுதத்துக்கே அனுப்பி வைத்தால்..?

ஆனால், அது சரியான யோசனையாய்ப் படவில்லை. எழுத்தாளர்களின் கையெழுத்து, பத்திரிகை ஆபீசில் இருப்பவர்களுக்குத் தெரியும். எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். என்ன செய்யலாம்? எனக்குள்ளே இருந்த கிரிமினல் உயிர் கொண்டெழுந்தான். அந்தச் சிறுகதையை ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னதாக ஒரு துணுக்காக்கி குமுத்த்துக்கு அனுப்ப நினைத்தேன். யார் பெயரில் அனுப்பலாம்? உடனே நினைவுக்கு வந்தவர் எழுத்துப் பிதாமகன் சுஜாதா. உடனே அந்தக் கதையை வைத்து இட்டு கட்டி துணுக்குத் தயாரித்தேன். அதனை என் புனைப் பெயரில் அனுப்பிவைத்தேன். அதன் விளைவுகளைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே. அந்தத் துணுக்கு கீழே...

நான் ஏன் ஜெயகாந்தனைப்போல் எழுதவில்லை?
‘நான் இப்போதெல்லாம் அதிகமாக விஞ்ஞானத்தைப் பற்றியே எழுதுகிறேன் என்றும் ‘உங்களால் ஒரு புதுமைப்பித்தன், ஜெயகாந்தனைப்போல் எழுத முடியாதா?’ என்றும் பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
அந்தச் சாலையின் வழியாக ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஒரு மூட்டை அரிசியை ஏற்றிக்கொண்டுச் செல்கிறான். எதிரே வேகமாக வந்த லாரி அந்த மர்ட்டு வண்டியில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்று விடுகிறது. அரிசி சாலையில் சிதறுகிறது.

சிறிதுநேரத்தில் பலநாட்களாகப் பட்டினி கிடக்கும் நம்ம பிளாட்பாரப் பிச்சைக்காரன் பெரியசாமி அந்த வழியாக வருகிறான். அந்த விபத்தைப் பார்த்துவிட்டு வண்டிக்காரனுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று நினைத்து வேகமாக நெருங்குகிறான்.
ஆனால், அந்த அரிசி சமாச்சாரம் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறது. அரிசியை மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றான். –இப்படியும் என்னால் எழுத முடியும்.

ஆனால், இதுபோல் எழுதிக் கொண்டிருந்தால் நாளைய தலைமுறைக்காரன் ‘சுதந்திரம் வாங்கி ஐம்பது ஆண்டுக்குப் பிறகும் நமது முன்னோர்கள் பிச்சைக்காரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று கேவலமாக நினைத்துவிடுவான். அதனால்தான் நான் நமது இன்றைய வளர்ந்த நிலையையும் நாளைய வளரும் நிலையைப் பற்றியும் எழுதுகிறேன்.’
-விருத்தாசலம் கலைக்கல்லூரி இயற்பியல் மன்றத் துவக்க விழாவில் : சுஜாதா 

துணுக்கை எழுதி முடித்துவிட்டு விருந்த்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் சுஜாதா அவ்வாறு பேசியதாக்க் குறிப்பிட்டு விளைவுகள் பற்றி யோசிக்காமல் குமுதத்துக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த வாரமே குமுதத்தில் அந்தத் துணுக்கு வெளியானது. 

இப்போது யோசிக்கும்போது அது மிகப்பெரிய சிறுபிள்ளைத்தனம் என்று புரிகிறது. அந்தக் கதைக்காக அந்தத் துணுக்குப் பிரசுரிக்கப்படவில்லை. அதில் சுஜாதாவின் கருத்தாக நான் எழுதியிருந்த அந்த கமெண்ட்டில் ஒரு வம்பு இருந்தது. அதனால்தான் அது பிரசுரமானது. குமுதம் வெளிவந்த அன்று மதியம் விருத்தாசலம் குமுதம் ஏஜெண்டான செல்லம் ஐயரின் கடைக்குச் சென்றபோது, அவர் என்னிடம் சூடாக, ‘என்னப்பா எழுதினே குமுதத்தில்? எனக்கு டெலிகிராம் கொடுத்து உன்னைப் பற்றி குமுதம் ஆபீசிலிருந்து கேட்டாங்க... இங்க எல்லோரும் காலேஜ் பசங்கதான் எழுதறாங்க...’னு பதில் அனுப்பிட்டேன்...” என்றார். அதன்பிறகு அடுத்து என்ன ஆகுமோ என்று வயிற்றுக்குள் திகில் பந்துகள் துள்ளிக் குதித்துக்கொண்டே இருந்தன.

அடுத்த இதழ் குமுதத்தில் சுஜாதாவின் மறுப்பு வெளிவந்திருந்தது. ‘குமுதம் 22.11.1984 இதழில் 65‘ம் பக்கத்தில் ‘நான் ஏன் ஜெயகாந்தனைப்போல் எழுதவில்லை?’ என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தத்தைக் கண்டு திடுக்கிட்டேன். விருத்தாசலம் பக்கம் தலைவைத்துக் கூட படுத்ததில்லை நான். அங்கே கலைக்கல்லூரி இயற்பியல் மன்றத்திலோ துவக்க விழாவிலோ எப்படிப் பேச முடியும்? இம்மாதிரி விஷமச் செய்திகளைப் பிரசுரிக்கும்முன் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பிரசுரிக்கலாம். அவசியமில்லாத controversy-களைத் தவிர்க்கலாம்’
-பெங்களூர்-13, சுஜாதா

இந்தத் துணுக்குக்குப் பிறகு என் புனைப்பெயரில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஆனால், சுஜாதாவுக்கு என் மீது கோபம் இருக்கும் என்ற உறுத்தல் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அந்தத் துணுக்கைப் பத்திரிகையாளர்கள் யாராவது பார்த்திருந்தால் மற்ற பத்திரிகைகளிலும் என் படைப்புகள் வெளிவர இயலாமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்பதால்தான் அந்த முடிவு. விகடன் மூன்றுநாள் முகாமுக்கு சுஜாதா வந்திருந்தபோதும் என் பதட்டத்துக்குக் காரணம் அதுதான்.

சென்னையில் விகடனில் வேலைக்குச் சேர்ந்தபிறகு பலமுறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். என்றாலும் அந்தச் சந்திப்பின் போதெல்லாம் நான் பதற்றமாக உணர்ந்ததே அதிகம்.

ஒருநாள் சுஜாதாவிடம் அந்தத் துணுக்கை எழுதியவன் நான்தான் என்று நேரில் சொல்லி வருத்தம் தெரிவித்து விடவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவ்வப்போது மனதில் ஓடும். ஆனால், அதற்கான தைரியம் இல்லாததால் அந்த எண்ணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.

குமுதத்தில் பணியில் இருந்தபோதுதான் சுஜாதாவை அதிகம் சந்திக்க முடிந்தது. அவரது இயல்பான தோழமை எனக்குப் புரிந்தது. பொதுவாக யார் மனதையும் துன்புறுத்தி அறியாதவர் சுஜாதா. யாருக்கும் எந்தவித உறுத்தலும் ஏற்படாதவாறு, பேசக் கூடியவர். இதனை சில அனுபவங்கள் மூலம் நான் நேரில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், அவற்றை இங்கு எழுத முடியாது. அவை இங்கு தேவையும் இல்லை. 

இருந்தாலும் அவருடனான சில சம்பவங்கள். ஒரு நாள் குமுதம் அலுவலகத்துக்கு வந்து அவர் ஆசிரியர் குழுவினரைச் சந்தித்தார். அந்த வாரம் நான் எழுதியிருந்த கதையைப் பற்றிக் கூறியவர், ‘இடுப்பில் வேட்டி கட்டலாம். கைக்குட்டையைக் கையிலதான் வெச்சிக்கணும். ஒரு கைக்குட்டையை வேட்டியாகக் கட்டக் கூடாது...’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதாவது, அது ஒரு சிறிய கதைக்கரு. அதை வைத்துக்கொண்டு நான் ஐந்து பக்கக் கதையாய் இழுத்திருந்தேன். அதைத்தான் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். 

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஒருநாள் துணிந்துவிட்டேன். இன்று அவரிடம் எப்படியாவது விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு கட்டி அவருக்கு போன் செய்தேன். ‘சார்... உங்களைப் பார்க்கணும்...’ என்றேன்.

‘என்ன விஷயம்பா?’ என்றார்.

‘ரொம்ப நாளா மனசுக்குள்ளே கிடந்து உறுத்திக்கிட்டிருக்கிற விஷயம். அதைச் சொல்லி உங்கக்கிட்டே மன்னிப்பு கேட்கணும்...’ என்றேன்.

‘பரவாயில்லே... போன்லேயே சொல்லுங்க...’ என்றார்.

நான் ஏகப்பட்ட தயக்கங்களுக்குப் பிறகு, திக்கித் திணறி விஷயத்தைச் சொல்லி முடித்தேன். எதிர்முனையில் அவர் சூடாவார் என்று இனம்புரியாத திகிலுடன் எதிர்பார்ர்த்தேன். 

ஆனால், அவரிடமிருந்து மென்மையாக ஒரு பதில் வந்தது. ‘அப்படியா? அப்படி எனக்கு எதுவும் ஞாபகமில்லையே...’ என்று கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார். அவரது இந்தப் பதிலால் பல்லாண்டுகளாக மனதை அறுத்துக் கொண்டிருந்த ஒரு முள் கழன்று காலுக்குக் கீழே விழுந்ததாய் ஓர் உணர்வு. மனசு லேசானது. என்றாலும் எனக்கு இன்னும் அந்தச் சந்தேகம் உண்டு.

சுஜாதாவின் நினைவுச் சக்தி அபாரமானது. எனக்கு எதுவும் ஞாபகமில்லையே என்று அவர் சொன்னதில் எனக்கு இன்று வரை முழு நம்பிக்கை இல்லை. உண்மையிலேயே மறந்துதான் போனாரா? அல்லது, இவன் பல வருடமாக ஒரு விஷயத்தை மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து இவனை விடுவிக்க வேண்டும் என்று அப்படி ஒரு பொய்யைச் சொன்னாரா?

இரண்டாவதுதான் சரியாய் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அதுதான் சுஜாதா. அவர் யார் மனதையும் துன்புறுத்தி அறியாதவர். யாருக்கும் எந்தவித உறுத்தலும் ஏற்படாதவாறு, பேசக் கூடிய பண்பாளர்!



காகிதப் படகில் சாகசப் பயணம் - 5

பயணங்கள் முடிவதில்லை!

பெ. கருணாகரன்

மீபத்தில் விகடன் ஆசிரியர் ரா. கண்ணன் ஃபேஸ்புக்கில் விகடன் அலுமினி பக்கத்தில் ‘மாணவப் பத்திரிகையாளர் திட்டம் இல்லாதிருந்தால் நாமெல்லாம் என்னவாகியிருப்போம்?’ என்று சக நண்பர்களுக்கு நிலைத்தகவல் போட்டிருந்தார். என்னவாகியிருப்போம்? சுவாரஸ்யமான யூகங்களைக் கிளப்பிவிடும் கேள்வி அது.

அதற்கு முன் அந்தத் திட்டத்தைப் பற்றி சில வரிகள். மாணவப் பத்திரிகையாளர் திட்டம் என்பது ஒரு திட்டம் மட்டுமல்ல. அது ஓர் இயக்கம். மாணவப் பத்திரிகையாளனாய்த் தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. இதுவரை என்னைப்போல் ஆயிரம் பேருக்கும் மேலே மாணவப் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது விகடன். அதில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பத்திரிகைத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் எந்தப் பின்புலமும் இல்லாத பலரையும் இன்று வாழ்க்கை யுத்தத்தில் அனாயசமாக வாள் சுழற்ற அது கற்றுக் கொடுத்துள்ளது. நெருக்கடிகளை வெல்லும் நெளிவு சுளிவுகளைக் கற்றளித்திருக்கிறது. 

கண்ணனின் நிலைத்தகவலுக்கு நான் இவ்வாறு பின்னூட்டம் எழுதினேன். ‘மாணவப் பத்திரிகையார் திட்டம் இல்லாதிருந்தாலும் நான் பத்திரிகையாளனாகவே ஆகியிருப்பேன்’ என்று. 

ம். பத்திரிகையாளனாக வேண்டும என்பது என் ஆழ்மனதில் ஊறித் திளைத்த கனவு. பத்தாம் வகுப்பில் ஃபெயிலானபோது, அந்த ஓராண்டில் மின் அச்சகத்துக்குச் சென்று கம்போசிங் கற்றுக்கொண்டேன். காரணம், பத்திரிகை வேலைக்கு அது அத்யாவசியம் என்கின்ற என் யூகிப்பு. ஒரு பத்திரிகையின் பணி உள்கட்டமைப்பு, அந்தப் பணியில் கம்போசிங் தேவையா என்பது குறித்த விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அவற்றைத் தெரிந்து கொள்ளவோ வழிகாட்டவோ எனக்கு யாருமில்லை. எனக்குள் நானே கருவாகி எனக்கு நானே எருவாகியும் வளர்ந்தேன் என்பதே நிஜம். ப்ளஸ் டூ முடித்தவுடன் என் சிறுகதைகள், கவிதைகள் தினகரனில் வெளிவந்திருந்ததால் அதனையே எனக்கான பரிந்துரையாக்கி தினகரனுக்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். அதன்பிறகு என் கதைகளை தினகரனில் வெளியிடுவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஹா... ஹா... 

அதன்பிறகு கல்லூரி வந்து படித்துக் கொண்டிருக்கும்போதே விகடன் உட்பட பல பத்திரிகைகளில் சுமார் 50 சிறுகதைகள் எழுதியிருந்தேன். இந்த நிலையில்தான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் குறித்த அறிவிப்பை விகடனில் பார்த்தேன். விண்ணப்பத்தைப் பார்த்தவுடன் இது நமக்கெங்கே கிடைக்கப் போகிறது என்ற தயக்கம்தான் தோன்றியது. காரணம் அதில் புகைப்படம் எடுக்கத் தெரியுமா? தட்டச்சத் தெரியுமா? ஷார்ட் ஹேண்ட் தெரியுமா என்று ஏகப்பட்ட தகுதி தொடர்பான கேள்விகள். எதுவும் எனக்குத் தெரியாது, எழுதுவதைத் தவிர. நான் விரக்தியில் விண்ணப்பம் போட வேண்டாம் என்ற நினைத்தேன். நண்பர்கள் கி. நாகராஜனும் இரா. துரையப்பனும்தான் நம்பிக்கையளித்து விண்ணப்பிக்க வைத்தனர். 

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருந்த அனைத்துத் தகுதிக் கேள்விகளுக்கும் ரொம்ப வெட்கப்பட்டுக் கொண்டே தெரியாது என்று நிரப்பி ஒருவாறு நம்பிக்கை இல்லாமலே விண்ணப்பித்தேன். முதல்கட்டமாக திருச்சியில் நடந்த எழுத்துத் தேர்வில் என் எழுத்துத் திறமை என்னை நேர்முகத் தேர்வுக்குத் தகுதியாக்கியது. நேர்முகத் தேர்வில் நான் பதிலளித்த விதமும் என் சிறுகதைகளும் என்னைத் தேர்வு செய்தன. திறமையிருப்பவர்களை யாரும் பரிந்துரைக்கத் தேவையில்லை. நம் திறமைகளே நமக்கான பரிந்துரைகள். இன்றும் இதில் நான் உறுதியாய் இருக்கிறேன். திறமை இருந்தும் மதிக்கப்டவில்லையென்றால் அங்கிருந்து எவ்வளவு விரைவில் வெளியேற முடியுமோ வெளியேறி விடுங்கள். அங்கிருந்து கொண்டு புலம்பாதீர்கள். இது என் அனுபவ அறிவுரை. 

து 1987ம் ஆண்டின் ஜூலை மாதம். இரண்டாம் தேதி - விடிகாலை 3.30 மணி. மலைக்கோட்டை விரைவுத் தொடர்வண்டி என்னை விருத்தாசலம் சந்திப்பில் ஓர் எச்சில் திவலையாய் துப்பிவிட்டுச் சென்றது. 

கையில் சூட்கேஸ் கனத்தது. அதனைவிட தலை சற்று கூடுதலாகவே கனத்துக் கொண்டிருந்தது. சில தினங்கள் முன்புவரை நான் கொளஞ்சியப்பர் அரசுக் கலைக்கல்லூரியின் ஒரு சராசரி மாணவன். இன்று விகடன் மாணவப் பத்திரிகையாளன். எனக்குப் பின்னே ஓர் ஒளி வட்டம் இருப்பதாகவும் எல்லோரும் என்னையே கவனித்துக் கண்டிருப்பதாகவும் ஒரு மூடப் பிரமை. பெருமிதமான, பரவசமான என் வாழ்வின் உன்னதமான அந்தத் தருணத்தை இப்போது நினைத்தால் இன்றும் என் உடல் சிலிர்க்கும். 

விகடன் மாணவப் பத்திரிகையாளன்! இப்படிச் சொல்லிக் கொள்ளும்போதே மனதுள் ஒரு கம்பீரம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. மாணவப் பத்திரிகையாளராகும் வரை நான் ஒரு தனிநபர். ஆனதும் நான் ஒரு சாமுராய். ஒவ்வொரு செய்திச் சேகரிப்புக்குச் செல்லும்போதும் புரவியில்லாத போராளி என்ற மனோபிம்பத்தோடுதான் நான் கிளம்புவேன். என் நடையிலும் எழுத்து நடையிலும் கம்பீரம் உணர்ந்த காலம் அது. நூறு சதம் பத்திரிகை வேலையை நேசிக்கும் என் சக மாணவப் பத்திரிகையாளர்களுக்கும் அத்தகைய பிம்பம் தோன்றியிருக்கலாம்.

நேற்றுவரை அடையாளமில்லாதிருந்தவனுக்கு இன்று ஒரு கம்பீர அடையாளம். பையில் விகடன் நிருபர் என்பதற்கான அடையாள அட்டை. கண்களில் ததும்பி வழியும் கனவுகள். அந்த ஒரே நாளில் சமூகத்தின் என் மீதான மதிப்பீடுகள் தலைகீழாக மாறிப் போயின. வாழ்வில் அன்றிலிருந்து சுறுசுறுப்பும் சுவாராஸ்யமும் கூடிப் போயின. 
ஒருபுறம் நண்பர்கள் வட்டமும் மறுபுறம் எதிரிகள் வட்டமும் விரிந்தன. வருமானச் சான்றிதழ் கொடுக்காமல் கடுப்படித்த தாசில்தார் ‘உட்காருங்க சார்’ என்று பவ்யம் காட்டினார். காவல் நிலையத்திலும் நாற்காலி வரவேற்பு. கல்விக் கட்டணம் கட்டுவதற்குக் கூட பெற்றோரின் கைகளை எதிர்பார்த்திருந்தவன் சுய காலில் நிற்கத் தொடங்கிய நாட்கள். 

மாணவப் பத்திரிகையாளனாய் இருந்த அந்த ஒரு வருடத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் நான் பயணம் செய்யாத ஊர்கள் மிகக் குறைவே. தினமும் புதிதாக 25 பேரையாவது சந்தித்து நட்பாக்கிக் கொள்வது என்று தீர்மானம் போட்டிருந்தேன். எனக்கு அது கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு. அதிலும் வெற்றி பெற வேண்டும். அதேநேரம் விகடன் மாணவப் பத்திரிகையாளராய் அவுட் ஸ்டேண்டிங் தகுதி பெற்று எம்டி எஸ். பாலசுப்பிரமணியனின் கையால் சிறப்புப் பரிசு பெற்று விகடனில் வேலைக்குச் சேர்ந்து வேண்டும. இதுவே என் ரத்தத்தில் ஊறிப் போன அப்போதைய லட்சியமாய் இருந்தது. 

பகலெல்லாம் ரிப்போர்ட்டிங் சென்றதால் கல்லூரிக்குச் செல்வதில் சிரமமிருந்தது. என் நிலையுணர்ந்த க்ல்லூரிப் பேராசிரியர்கள் நான் வகுப்பில் இல்லாதபோதும் எனக்குப் பிரசெண்ட் போட்டுப் பெருந்தன்மை காட்டினார்கள். ஜூனியர் விகடனில் ஒருபுறம் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்க, மறுபுறம் ஆனந்த விகடனில் சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருந்தேன். திட்டத்திலிருந்த அந்த ஆண்டு மட்டும் 13 சிறுகதைகள் எழுதினேன். எல்லாம் ஒருபக்க, இரண்டு பக்கக் கதைகள். ஜூவியில் சுமார் 40 கட்டுரைகள் வெளியாகின.

மறுபுறம் கல்லூரிப் பாடம். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாடோடி இலக்கியம், சம கால இலக்கியம் என்று தலையணை சைஸ் புத்தகங்களுடன் போராட்டம். புத்தகத்தின் சைஸ் பார்த்தவுடனே தூக்கம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
‘எம்.ஏ.வில் நல்ல மார்க் எடுத்து எம்.பிஃல். முடிச்சுடுங்க. பேராசிரியர் வேலை கிடைக்கும். நல்ல சம்பளமும் மரியாதையும் கிடைக்கும். பத்திரிகை வேலை உங்களுக்கு வேண்டாம். இது தற்காலிகப் போதை. உங்களால் இதில் பெரிய வளர்ச்சி காண முடியாது’ என்று அப்போது என் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் தூபம் போட்டார்கள். ஆனால், என்னால் அதனை ஏற்க முடியவில்லை. 

ஏனோ அரசு வேலையில் மனம் ஆரம்பத்திலிருந்தே நாட்டம் கொள்ளவில்லை. ஒரு நாடோடித்தனமான வாழ்க்கையையே மனம் விரும்பிக் கிடந்தது. ஒரு பத்திரிகையாளனாக இருந்தால்தான் அது இயலும் என்று தோன்றியது. என் மனோபாவத்துக்கு வாத்தியார் வேலை சரிவராது. எனக்கான திட்டம தெளிவாக இருந்தது. பத்திரிகையாளன் ஆவது! பத்திரிகைக்குள் நுழைந்து நிறைய கதைகள் எழுதுவது. இதுதான் அந்தத் திட்டம். (அது நடந்ததா என்பதை இன்னொரு இடத்தில் சொல்கிறேன்).

ஆழ்மனதில் புதைந்து போன அந்த உறுதியான முடிவால், பேராசிரியர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்தேன். என் முடிவுகளில் உறுதியாய் இருந்தேன். 

ஆனது. அந்த ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் நான் அவுட் ஸ்டாண்டிங் வரமுடியவில்லை. டிஸ்டிங்ஷன்தான் கிடைத்தது. (அதேநேரம் முதுகலைப் படிப்பில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்). அவுட் ஸ்டாண்டிங் இல்லை என்பதற்காக நான் நிராகரிக்கப்படவில்லை. என் எழுத்துத் திறன் எனக்கான நாற்காலியை வழங்கவே செய்தது. அடுத்த ஆண்டு நான் விகடனில் ஸ்பெஷல் கரெஸ்பான்டெண்டாக நியமிக்கப்பட்டேன். அதற்கடுத்த ஆண்டு விகடன் ஆசிரியர்க் குழுவில் இணைக்கப்பட்டேன். 

கண்ணன் கேட்டதுபோல் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் இல்லாது போயிருந்தால் நான் நிச்சயம் பத்திரிகையாளனாய்தான் ஆகியிருப்பேன். ஆனால், இப்போதைய உயரம் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். 

ஒரு மாணவப் பத்திரிகையாளனாய் தேர்வு பெற்று, பல இதழ்களில் பணிபுரிந்து தினம் தினம் ஒரு நர்சரிப் பள்ளி மாணவனின் அறியாமையை அகற்றிக் கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தோடு புதிது புதிதாய் கற்றுக்கொண்டும் அடுத்துவரும் இளைய தலைமுறைக்குக் கற்றதைக் கற்பித்துக் கொண்டும் பிரமாண்டாய் தகத்தகாயமாய் ஒளிவீசி நீண்டு விரிந்து செல்லும் ராஜபாட்டையில் இன்னும் ஒரு மாணவப் பத்திரிகையாளனாகவே பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது  :)
 

ஓடுதல் மட்டுமே குதிரைக்குச் சந்தோஷம்!

பெ. கருணாகரன்

வெற்றிக் கோடு குறித்துக் 
கவலையில்லை எனக்கு...
அது வெறுமையால் நிறைந்தது
முன்னாலும், பின்னாலும்
ஓடிக் கொண்டிருப்பவர்கள் குறித்தும்
கவனமில்லை எனக்கு
அது நிரந்தரமற்றது

முந்திச் செல்பவன் குறித்த பொறாமையோ
பிந்திச் செல்வது குறித்த அவமானமோ
எதுவும் இல்லை எனக்கு

எந்தக் குதிரையும்
முதலில் வருவதற்காகச் சந்தோஷமோ
கடைசியில் வந்ததற்காக
வருத்தமோ கொள்வதில்லை.
ஓடுதல் மட்டுமே குதிரைக்குச் சந்தோஷம்




கை கொடு மச்சி..!


விழுந்தவன் எழுவது
உலகினில் நியதி!
அழுதவன் மீண்டும் 
விழுவது உறுதி!

கீழே விழுந்த
துகளல்ல நாமெலாம்;
காற்றுள பந்துகள்
எதிர்த்து எழும்புவோம்!

எழும்பிடும் பந்தே
கோல்கம்பம் நுழையும்!
தேங்கிடும் பந்துகள்
தோல்வியில் உறையும்!

தோல்வி அனுபவம்
வெற்றியின் ஆசான்!
தோல்வியில் துவண்டவனை
எவனும் பேசான்!

வென்றவர் சரித்திரம்
சொல்வது எல்லாம்,
ஒன்று படுதலே
வெற்றியின் ரகசியம்!

கவுரவர், பாண்டவர்
மோதினால் பாரதம்!
கவுரவர் – கவுரவர்
மோதுதல் கேவலம்!

நமக்கெதி ராக
நமது வாட்களா?
பிறர்நடைப் பாதையில்
நம்வனப் பூக்களா?

நிறங்களை விடுத்து
கரங்களை இணைத்து
ஒவ்வொரு நொடியையும்
உன்னதம் ஆக்குக!



ஃபேக் ஐடிகளின் மாநாடு!

(ஒரு நேரடி கவிதை ரிப்போர்ட்)


புறக்கணிப்புகளால் பொங்கியெழுந்த
ஃபேக் ஐடிகள் பேரணி நடத்தி-
அவசர மாநாடு போட்டன.

தேனாம்பேட்டை குட்டிச் சுவர் ஒன்றிலிருந்து
‘புறக்கணிப்பவர்களைப் புறக்கணிப்போம்’
என்று கோஷமிட்டபடி புறப்பட்டது பேரணி.
வழியிலிருந்த போஸ்டர்களில்
தலைவர்கள், நடிகர், நடிகைகளின்
முகங்களில் சாணியடிக்கப்பட்டன.

‘முகங்களே வேண்டாம் என்கிறோம்
முகப்பூச்சு கிரீம் ஒரு கேடா..?’
என்று கேட்டபடி முகப்பூச்சு கிரீம் பேனர்களைக்
கிழித்தெறிந்தன சில.

ஸ்டுடியோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

மாநாட்டில்-
‘தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில்
அப்பாடக்கர்களைச் சிறையிலடைத்து
லாடம் தட்ட வேண்டும்’ என்று கொந்தளித்தது
‘பட்டாக்கத்தி பைரவனின்
வெண்ணைய் வெட்டும் கத்தி’ என்ற ஐடி.

‘நாம் கமெண்ட், லைக் போட்டு
வளர்த்துவிட்ட சிலர்
இன்று அப்பாடக்கர் ஆனதும்
நம்மையே ஏளனம் செய்கிறார்கள்
நன்றி கெட்டவர்கள்’
புலம்பித் தீர்த்தது
‘நான்தான் தம்பி அடுத்த பிரதமர்’ என்னும் ஐடி.

‘ஒரிஜினல் போட்டோ வைக்கத்
தடை விதிக்க வேண்டும்
அதனால்தானே நாம்
ஏளனம் செய்யப்படுகிறோம்...’ என்றது
‘ஊசி காதில் ஒட்டகத்தை நுழைத்தவன்’ என்கிற ஐடி.

‘நமது நண்பர்களாய் இருக்கும்
ஒரிஜினல் ஐடிகளை பிளாக் செய்து
அவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்’ என்றது
‘பிளாக் செய்தாலும் வேறு ஐடியில் வருபவன்’ என்ற ஐடி.

‘இன்றைய நிலையில்
பிரதமரிலிருந்து பிச்சைக்காரர் வரை
யாருக்கு இருக்கிறது உண்மை முகம்?
அவங்களைக் காட்டச் சொல்லு.
நாங்க காட்டறோம்...’
என்று சவால் விட்டது
‘ஆப்பில் உட்காருவது எனக்கு ஆஃப் அடிப்பது மாதிரி’
என்ற ஐடி.

‘நம்மை ஃபேக் என்று கிண்டல் செய்பவர்களின்
ஐடிகளை ஹேக் செய்வதற்கென்று
சிறப்புத் தொழில்நுட்பப் பிரிவொன்றை
அமைப்போம்...’ என்று ஆலோசனை சொன்னது
‘எம்பிபிஎஸ் படித்து என்ஜினீயர் ஆனவன்’ என்ற ஐடி.

இறுதியில்,
‘ஃபேஸ்புக் மாதிரி
ஃபேக்புக் என்ற நெட்வொர்க்கை
ஆரம்பிக்க வேண்டும் என்று மார்க்குக்கு
வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு
சியர்ஸ் சொல்லி குவார்ட்டர் விட்டு,
கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்து
திருப்தியுடன் கலைந்தன.