Friday 21 September 2012

களவு



பெ. கருணாகரன் / சிறுகதை

மாலை மங்கிக் கொண்டிருந்தது. மேற்கு வானம் சொங்கிக் கிடந்தது. முனுசாமி முந்திரி மரங்களை நிமிர்ந்து பார்த்தான். அங்கும் இங்குமாக மஞ்சள் நிறத்திலும், சில பச்சை நிறத்திலுமாக முந்திரி - நல்ல விளைச்சல்

கடவுள் புண்ணியத்தில் இந்த வருஷம் எந்தப் பூச்சியும் புடிக்கலை.
வீட்டுக்குக் கிளம்ப தயாரானான். அதற்கு முன் அடையாளம் வைக்க ஆரம்பித்தான். வெட்டி வைத்திருந்த கருவேலங் கிளைகளைப் படத்தியாய் கீழே கிடத்தினான். மறுமுனையைச் சிறிய கயிற்றில் கட்டி செம்மண் பூமியில் இழுக்கத் தொடங்கினான்.

கருவேல முட்கள் பூப்போன்ற செம்மண்ணை மெழுகிக் கொண்டே சென்றன. பழைய காலடித் தடங்களும், சுவடுகளும் அழிந்து, தரையில் நெடுக முட்கீறல்கள் பதிந்தன. கருவேலங்கிளையை நான்கு ஏக்கரையும் சுற்றி இழுத்து முடித்தான். கிளைகளை அங்கேயே போட்டான்.

இனி யாருக்கும் முந்திரி திருட தைரியம் வராது. அப்படி மீறி யாராவது வந்து முந்திரி பறிக்க முயன்றால் புதிதாகப் பதிந்த காலடித் தடம் அடையாளம் காட்டிவிடும். காலடித் தடத்தின் அளவைக் கொண்டு ஆணா... பெண்ணா... ஆண் என்றால், அவனா, இவனா? காட்டுப் பக்கம் யாராவது வந்தார்களா என்றெல்லாம் குறிப்பறிந்து களவாணியை கண்டுபிடித்துவிட முடியும்.
முனுசாமி நிம்மதியாகக் கிளம்பினான்.

றுநாள் காலையில் எட்டு மணி சுமாருக்கு முனுசாமி காட்டுக்கு வந்தபோது, மனது துணுக்குற்றது. கருவேல அடையாளத்தை மீறி புதிதாய் ஒரு ஜோடி பாதத் தடங்கள் ஒரு முந்திரி மரத்தின் உட்புறமாய் நுழைந்து மறைந்தது. முனுசாமியின் பார்வை தன்னிச்சையாய் மரத்தைத் துழாவியது.
அடடா, கீழ்க் கிளைகளில் பழுத்துத் தொங்கிய சில பழங்களைக் காணோம். அவனுக்குள் ஆவேசம் வந்தது. களவாணியை விட கூடாது.

பாதத் தடத்தை கூர்ந்து கவனித்தான். சிறிய அழகான பாதங்கள். கண்டிப்பாக ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்கும். பாதம் வலுவாக மண்ணில் பதிந்திருக்கவில்லை. எனவே, அவள் எடை முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்கு கிலோவுக்குள்  இருக்கலாம். இளவட்டமா? அல்லது வயசாளியா? இப்படியெல்லாம் அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சலசலப்பு. யாரோ மரத்துக்கு உட்புறமாக நகர்ந்து செல்லும் சருகுகள் மிதிபடும் ஓசை.

யாராது... மரியாதையா வெளியே வந்துடு...உரத்துக் கத்தினான்.
சலனமற்ற நிசப்தம்! உள்ளே நுழைந்து விடுவதென்ற தீர்மானத்துடன், கூடாராமாய் வளர்ந்து நின்ற மரத்தின் கிளைகளை ஒதுக்கிக்கொண்டு உள்ளே நுழைய எத்தனித்தபோது...

சரசரவென சருகுகள் மிதிபடும் ஓசை,  மரத்தின் அடுத்த பக்கத்தை நோக்கி  நகர்ந்தது.

தொடர்ந்து, “அம்மாஎன்ற பெண் அலறல். தொடர்ந்து காய்ந்த சுள்ளி ஒன்று ஒடிந்து விழும் சத்தம். மரத்துக்கு வெளியே இப்போது யாரோ ஓடினார்கள். இவனும் விடாமல் துரத்திக்கொண்டு வெளியே வந்தபோது, யாரையும் காணோம். கூடார மரங்கள் கம்மென்று குந்தியிருந்தன.

வேறு ஏதாவது மரத்துக்குள் ஒளிந்திருப்பாளோ? அருகிலுள்ள மரங்களுக்குள் நுழைந்து பார்த்தான். சடை சடையாய் தரையில் படர்ந்து கிடந்த கிளைகள்தான் அவனை வரவேற்றன. ஏமாற்றத்துடன் திரும்பி பழைய இடத்துக்கே வந்தான்.

அவள் அலறியது ஏன்? ஒரு சுள்ளி அவளைக் குத்தியிருக்க வேண்டும். அதனால்தான் கத்தியிருக்கிறாள். அவள் வெளியேறிய திசையில் இருந்த கிளைகளை நோட்டமிட்டான்.

அட... ஒரு சுள்ளி இடுக்கில் ஒரு கொத்து முடி. நோகாமல் எடுத்துப் பார்த்தான். சுருட்டை! குட்டையும் இல்லாத நீளமும் இல்லாத நடுத்தர நீளம். முடியில் நரை கலக்கவில்லை. அதனால் ஊரில் சுருட்டை முடியோட இருக்கிற இளவட்டப் பொண்ணுங்க யார்... யார்?

ஊரில் இருந்த சுமார் நூறு இளவட்டப் பெண்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டு வந்தபோது, சுருட்டை முடி இல்லாத 90 முகங்கள் விடைபெற்றன. மீதமிருந்த பத்து சுருட்டை முடிக்காரிகள். ரொம்ப நீளம் - அல்லது குட்டை செம்பட்டை நிறம் என்ற அடிப்படையில் ஐந்து பேருக்கு விடை கொடுத்தான்.
மீதமிருந்த ஐந்து பேரை அசை போட்டான். கிழக்குத் தெரு செண்பகத்துக்கு கால் சற்று ஊனம். அவளாக இருக்காது. ஆலமரத் தெரு பத்மினி? அவள் கொஞ்சம் குண்டு. அவளாகவும் இருக்காது. கணக்குப் போட்டுக் கொண்டே வந்தபோது, கடைசியாக நினைவுக்கு வந்தவள் கோவிந்தசாமியின் மகள் பரிமளம். கிடைத்த ருசுக்கள் எல்லாமே அவளுக்குப் பொருந்தி வந்தன. பரிமளத்தை நினைத்ததும் அவனுக்குள் பகபகவென்றிருந்தது. என்ன ஒரு உடல் வாளிப்பு அவளுக்கு.

ஊரிலிருந்கிற கருப்பாயிகளுக்கு நடுவே, கொஞ்சம் செவத்தவள் பரிமளம். அவளிடம் இவன் பலமுறை வம்பு பண்ணியும் ஒரு தடவை கூட அவள் மசிந்து வரவில்லை.

ஒருமுறை ஏரியில் அவள் குளித்துக் கொண்டிருந்தபோது, உள் நீச்சலடித்துப்போய், மார்க்கட்டுப் பாவாடையை உருவி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்துவிட்டான். அவள் குய்யோ முய்யோ என்று கூச்சலிட, அந்த வழியாக வந்த வேறு சில பெண்கள் அவளுக்கு உடை தந்து மானங் காத்தார்கள்.

இன்னொரு தடவை, ஊரில் வீரனாருக்கு ஆடு வெட்டி பூஜை போடப்பட்டது. ஊரில் இருந்த எல்லோருக்கும் கறியுடன் சாப்பாடு. பந்தியில் அவளது எதிர்வரிசையில் இவன் அமர்ந்தான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே கறித்துண்டு ஒன்றில் பாதியைக் கடித்து அவளது இலையில் நைசாக வைத்தான். அவள் எடுத்துத் தின்கிறாளா என்று ஆர்வமாகப் பார்த்தான். ஆனால், நடந்தது வேறு... சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை மடக்கி விட்டு வேகமாக எழுந்து கொண்டாள். இவன் நொந்து விட்டான்.

அவள் தண்ணீர் மொண்டு வரும்போதும் இவன் சைக்கிளில் செல்லும்போதும் சில முறை செல்லமாய் வம்புகள். அவள் அவனைக் கண்டுகொள்ளவே  இல்லை. இவன் வம்படியாய் அவளிடம் நேரில் கேட்டபோது, உணர்ச்சிகளற்ற முகத்துடன் அவள் சொன்ன பதில்:

நாங்க ஏழை... நீங்க பணக்காரங்க. உங்களுக்கு இது விளையாட்டு... ஆனால், எனக்கு வாழ்க்கை...”

கிளி இப்போது வசமாகக் கிளையில் வந்து உட்கார்ந்திருக்கிறது. சரியான சந்தர்ப்பம். விட்டுவிடக் கூடாது.

யலில் மங்கிப்போன பல நிற உடைகளில் பெண்கள்... களை பறிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பரிமளம் இந்த கும்பலில்தான் இருக்கவேண்டும். எங்கே? தேடினான். பச்சை தாவணியில், வயலுக்கு நடுவில் அந்த சுருட்டை! வாட்டுகிற வெயிலிலும் வாடாமல்லியாய்த் தோன்றினாள்.

வரப்பில் நடந்துகொண்டே, ‘க்கும்என்று கனைத்தான். கனைப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘இங்கே வா என்று அழைத்தான். பரிமளம் மருண்ட விழிகளுடன் தயங்கி தயங்கி வந்தாள். அவள் நெற்றியில் காயம்.

நெற்றியில் என்ன காயம்?”

ம். ஏரவானம் இடிச்சுட்டுது...” கண்களைப் படபடத்தபடியே சொன்னாள். எமப் பயல் கண்கள்!

கூசாமல் பொய் சொல்றியே... அது என்ன காயம்னு எனக்குத் தெரியும். முந்திரிச் சுள்ளி குத்திய காயம்தானே...”

ம்ஹூம்... எரவானம் இடிச்சது.”

மறுபடியும் பொய் சொல்றியே...” என்றவன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த சுருட்டை முடியை அவளிடம் காட்டினான்.

இது உன் முடி... இதுக்கென்ன சொல்றே?”

அய்யய்யோ... தெரிஞ்சு போச்சா?” என்றாள் பதற்றமாக. அவளது குரலில் அவமானமும் வெட்கமும்.

சத்தம் போட்டுடாதய்யா... யாருக்காவது கேட்டுடப் போவுது...”

வெட்கம் பார்க்கறவ திருடறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும்.”

ஏதோ, இல்லாதப்பட்டவங்க திருடிட்டோம். மன்னிச்சுடுய்யா...”

நீ இல்லாதப்பட்டவளா?” -அவன் பார்வையைத் தழைத்தபோது, அவள் அவசரமாய் மாராப்பைச் சரிசெய்து கொண்டாள்.

சரி, விஷயத்தை நான் வெளியே சொல்லாமல் மறைக்கணும்னா, எனக்கு என்ன தருவே?”

என்னய்யா பேசுறே? எல்லாரும் வேலையை விட்டுட்டு நம்பளையே வேடிக்கை பார்க்கறாங்க..” எரிச்சலாய்க் கிசுகிசுத்தாள்.

இன்னிக்குச் சாயங்காலம் முந்திரிக்காட்டுக்கு அதே மரத்துக்கு வந்துடு... எனக்கு என்ன வேணும்னு நான் அப்ப சொல்றேன்.”

அவளுக்குள் சொரேல் என்றது. அப்போதைக்குச் சரி என்று தலையாட்டி நிலைமையைச் சமாளித்தாள். சூரியன் மேற்குச் சரிவில் சறுக்கத் தொடங்கியபோது, அவளது பகீர் அதிகமானது. மாலையில் முந்திரி காட்டுக்குப்  போவதில்லை என்று முடிவெடுத்து விட்டாள். முந்திரிப்பழம் சாப்பிட ஆசைப்பட்டது இப்படிப் பிரச்சினை ஆகிவிட்டதே என்று  வருந்தினாள்.

றுநாள் காலையிலேயே ஊருக்குள் தமுக்குச் சத்தம்!

ராசாங்கத்தின் முந்திரிக்காட்டில் கோவிந்தசாமி மகள் பரிமளம் திருடியது சம்பந்தமா விசாரிக்க இன்னிக்கு ராத்திரி ஆலமரத்தடியில் பஞ்சாயத்து கூடுதுவோய்...”

-இதைக் கேட்ட கோவிந்தசாமிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. பரிமளம் தாரை தாரையாய் அழத் தொடங்கினாள்.

ங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. ட்யூப் லைட். ஆலமரத்தின் கீழே ஊர் திரண்டிருந்தது. பரிமளம் கைகட்டி இடதுபுறமாய் நின்றிருந்தாள். வலதுபுறமாக முனுசாமியும் அவனது அப்பா ராசாங்கமும் நின்றிருந்தார்கள். நாட்டாமையும், ஊரின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையில் உட்கார்ந்திருந்தார்கள்.

நாட்டாமை தொண்டையைச் செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.

ம்... ராசாங்கம்... என்ன நடந்ததுன்னு சொல்லுய்யா...” என்றார் மீசையைத் தடவிக்கொண்டே.

ராசாங்கம் நடந்ததைச் சுருக்கமாகக் கூறி முடித்தார்.

நாட்டாமை பரிமளத்தின் பக்கம் திரும்பினார்.

என்ன புள்ள... இதுக்கு நீ என்ன சொல்ற?”

பரிமளம் நிமிர்ந்து முனுசாமியைப் பார்த்தாள். ‘பாவி, அப்படிக் கெஞ்சிக் கேட்டும் என்னை சபைல நிறுத்தி அவமானப்படுத்திட்டியேடா...’ மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.

இப்படி மவுனமா இருந்தா என்ன அர்த்தம்?” -நாட்டாமைக் குரல் உயர்ந்தது.

சொல்றதுக்கு என்ன இருக்கு. திருடிட்டு மாட்டிக்கிட்டா... அதுதான் தலையைக் குனிஞ்சு நிக்கிறா ராசாங்கம் இறைந்தார்.

இந்த மவுனத்தைத் திருடியதுக்குச் சம்மதம்னு எடுத்துக்கிட்டு தீர்ப்பை சொல்லிடவா?என்றார் நாட்டாமை.

மீண்டும் பரிமளத்திடம் மௌனம்.

சரி. பரிமளம் குற்றத்தை ஒப்புக்கிட்டதா நினைச்சு நான் தீர்ப்பைச் சொல்லிடறேன். முந்திரியைப் பறிகொடுத்த ராசாங்கத்துக்கு ஐநூறு ரூபாயும், இந்த பஞ்சாயத்துக்கு ஐநூறு ரூபாயும் அபராதமா இன்னும் மூணு நாள்ல கோவிந்தசாமி கட்டிடணும்நாட்டாமை கூறி முடித்தவுடன், முனுசாமி குறுக்கிட்டான்.

நாட்டாமை ஐயா... அந்த பொண்ணு திருடுனதுக்கு அபராதமா போட்டீங்க... அது போதாதுங்க... எனக்கு முந்திரிப்பழம்தான் வேணும்என்றான் அழுத்தமாக.

என்னப்பா சொல்ற நீ...?” நாட்டாமை குழப்பமாகப் பார்த்தார்.

இந்தக் களவாணிபுள்ள என் மனசையில்ல திருடிட்டா. அதுக்கு அபராதம் கெடையாதா?”

இதைக் கேட்டதும் மொத்த கூட்டமும், ‘இங்க பார்ரா இவனை என்று வியப்பாகப் பார்த்தது. கூட்டம் சலசலத்தது. நாட்டாமை கையமர்த்தினார்.

என்னப்பா இது? சரியான விடலைப்பய புள்ள விளையாட்டா இருக்கே...” என்றார் கொஞ்சம் கோபமாக.

பெரியவங்க எல்லாம் என்னை மன்னிச்சிடுங்க. என் அப்பாரு எனக்குப் பெரிய இடத்திலேர்ந்து பெண் தேடிக்கிட்டு இருக்காரு... இந்த நேரத்துல ஏழைப் பொண்ணு பரிமளத்தைக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னா கண்டிப்பா சம்மதிக்க மாட்டாரு. அதனாலதான் பெரியவங்களைக் கூட்டி, பஞ்சாயத்துன்னு ஒரு நாடகம் போட்டேன். உண்மையிலே பரிமளம் எதையும் திருடலே.  என் மனசைத் தவிர...”

சலசலத்த கூட்டம், ‘நல்ல தமாஷ்ப்பா! என்று கலகலத்தது.

தலைகுனிந்திருந்த பரிமளம் இப்போது நிமிர்ந்தாள். காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி நின்றாள். மௌனத்தால் நன்றி சொன்னாள். இதழ்க் கோடியில் வெட்கச் சிரிப்பைச் சிந்தினாள்.

ராசாங்கம் உன் பையன் இப்படிச் சொல்றான். நீ என்னய்யா சொல்ற?” என்றார் நாட்டாமை.

இந்த கிறுக்குப்பய புள்ள  இப்படி பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல... ஊர்ல வீண் வம்பு, வெட்டிச் சண்டை போட்டுகிட்டு சுற்றி வந்தான். மயிலிறகு தடுக்கி, யானை கவுந்த கதையா இவள் மேலே ஆசை வச்சுட்டான். இனிமே என்ன செய்யறது? அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான்....என்றார் ராசாங்கம்.

ந்தமான இருட்டு... முதலிரவு அறை... பரிமளத்தின் மடியில் படுத்திருந்தான் முனுசாமி.

அன்னிக்கு சாயங்காலம் முந்திரிக் காட்டுக்கு வரச் சொன்னேனே... ஏன் வர்லே...?”

திருடினதைக் காரணம் காட்டி... என்னை ஏதாவது பண்ணிப்புட்டீங்கன்னா?” பயந்த மாதிரி பாவனை காட்டினாள்.

ஆமாம்... இவ வெல்லக் கட்டி - கடிச்சு தின்னுடப் போறாங்கஎன்று கூறிக்கொண்டே அவளது உள்ளங்கையை வலிக்காமல் உதடுகளால் கடித்தான்.

எனக்கு ஒரு சந்தேகம்ங்க...”

இன்னிக்குத்தான் கல்யாணம்  ஆச்சு... அதுக்குள்ள சந்தேகமா? சொல்லுபுள்ள...”

பஞ்சாயத்துல சொன்னீங்களே முந்திரிப் பழத்தையும், முந்திரிக் கொட்டையையும் திருப்பித்தரணும்னு. அதுக்கு என்ன அர்த்தம்?”

உனக்குத் தெரியாது?” என்றான் குறும்பாக.

ம்ஹூம்...”

இதாண்டி முந்திரிப்பழம்...” அவளது மூக்கைப் பிடித்துத் திருகினான்.

... வலிக்குது விட்றாதீங்க...” என்று அனத்தினாள் அவள்.