Sunday 9 June 2013

எனக்கொரு காதலி இருக்கின்றாள்

பெ. கருணாகரன்


சுரேஷ் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்கு மாறியிருந்தான். வசதியற்றவர்களுக்குப் படிப்பு என்பது பிரகாசமாய் இருப்பதில்லை. அவர்கள் படிப்பதற்கு கிடைப்பது கூட சென்ற ஆண்டு மாணவர்களின் பழைய புத்தகங்கள்தான். சுரேஷின் அப்பா ராஜாராமும் அவனுக்குப் பாதி விலையில் எங்கிருந்தோ பழைய புத்தகங்களைத்தான் வாங்கித் தந்தார்.

வகுப்பறையில் பல மாணவர்கள் பொலிவு குலையாத புதிய புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருக்கும்போது, பழைய புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பது, சுரேஷுக்கு மனத்தாழ்வாகவே இருந்தது. இருந்தாலும் அந்தப் பழைய புத்தகங்களில் ஒரு ுசுகந்த மணம் வீசுவதாகவே உணர்ந்தான் சுரேஷ்

கடந்த ஆண்டு அந்தப் புத்தகத்தை வைத்துப் படித்தமாணவி பெயர் கமலா. ஒன்பதாம் வகுப்பு பி செக்ஷன் என்று எழுதியிருந்தது. ஒரு பெண் தொட்டுப் புழங்கிய, மார்போடு அணைத்துக் கொண்டு பள்ளிக்கு எடுத்துச் சென்றிருந்த புத்தகம் என்ற ஒரு கிறக்கம். புத்தகத்தை அடிக்கடி விரித்து முகர்ந்து பார்ப்பான்.

அவன் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற பிறகு, இரண்டு வாரங்கள் இப்படியாக ஓடின. திடீரென்று அவனுக்குள் ஒரு கவனஈர்ப்பு. கமலா எப்படி இருப்பாள்? அழகானவளா? கறுப்பா, சிவப்பா? அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ரகசியக் குமிழியிட்டது. அவள் விருத்தாசலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாகப் புத்தகக் குறிப்பு கூறியது.

எப்படி அவளை அடையாளம் காண்பது? அந்தப் பெண் யாரென்று நிச்சயம் அப்பாவுக்குத் தெரியும். அவரிடம் கேட்டால்? அவர் தவறாக நினைத்துவிட்டால்? கூடவே, அப்பாவிடம் மகன் கேட்க வேண்டிய கேள்வியா அது? எனவே ஏதாவதுஅழுகுணி வேலை செய்து தான் கமலா யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று, அன்று முழுவதும் மண்டையை உடைத்துக் கொண்டான். என்ன செய்யலாம்?

பழம் நழுவி பாலில் விழும் என்பார்கள். சுரேஷ் விஷயத்தில் அதுதான் நடந்தது. அறிவியல் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவன் அதனுள் இருந்த ஓர் அரசாங்க சாணிக் காகிதத்தால் ஈர்க்கப்பட்டான். எடுத்து ஆர்வத்துடன் பிரித்தான். அது ஜாதிச் சான்றிதழ். கோபுரச் சின்னம் முத்திரை குத்தப்பட்டு பச்சை நிற மையால் தாசில்தார் கையெழுத்துப் போட்டிருந்தார்.

கமலாவின் சான்றிதழ் அது. ஜாதியைப் பார்த்தான். தன்னுடைய ஜாதிதான் என்று தெரிந்தபோது, கமலாவின் மீது கூடுதல் ஈர்ப்பு வந்தது
உற்சாகமானவன் மறுநாள் காலையில் எழுந்ததும் தந்தையிடம் அந்த ஜாதிச் சான்றிதழைக் காட்டினான். அப்பா இந்த சர்ட்டிபிகேட் நீங்க வாங்கிக் கொடுத்த புத்தகத்தில் இருந்ததுப்பா..." - அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

ராஜாராம் வாங்கிப் பார்த்தார். என்னடா இது?"

“அந்தப் பெண்ணோட ஜாதி சர்ட்டிஃபிக்கேட்பா..."

“ஓ... மாரிமுத்து மகளோட சர்ட்டிபிக்கேட்டா?  நான் விருத்தாசலம் பக்கம் போற தேவையில்லையே..." என்று யோசித்தவர், நீதான் தெனமும் ஸ்கூலுக்குப் போறில்ல... அப்படியே போய் கொடுத்துடு..." என்றார்.

“வீடு தெரியாதேப்பா..."

“போஸ்ட் ஆபீஸ் முன்னாடி நீல கேட் போட்ட வீடுடா... மாரிமுத்து வீடுன்னு அங்கே கேட்டால் சொல்லுவாங்க..." அவர் வெளியே சென்றார்.

கமலா... இன்று உன்னைச் சந்திக்கப் போறேன்... மனசுக்குள் இனிப்பாகச் சொல்லிக் கொண்டான்.

சுரேஷ் போஸ்ட் ஆபீசுக்குச் சென்று சேர்ந்தபோது, காலை மணி எட்டு. அவள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன்அவளைப் பிடித்துவிட நினைத்தான். நீல நிற கேட் வீடு. ஓடு வேயப்பட்டிருந்தது. நடுத்தரக் குடும்பம்!

தயக்கத்துடன் சென்று, சார்..." என்று அழைத்தான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கதவு திறந்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றிருந்தார்.
“நான் ராஜாராமின் மகன் சுரேஷ். நீங்க மாரிமுத்துசார் தானே...?"

“ஓ... வாப்பா... அப்பா நல்லா இருக்காரா?" என்று நலம் விசாரித்தார் மாரிமுத்து. அவனுக்குள் சந்தோஷம் பீறிட்டது.

“சார்... இந்த சர்ட்டிஃபிகேட் உங்க பொண்ணோடதா பாருங்க. புத்தகத்துக்கு நடுவில் இருந்தது..." - முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக் கொள்வது அவனுக்குக் கைவந்த கலை.

வாங்கிப் பார்த்த மாரிமுத்து, அடடே... இதைத்தான் தேடிக்கிட்டிருந்தோம்" என்றவர், உள்நோக்கி முகம் திருப்பி, கமலா... இங்கே வாம்மா..." என்று குரல் கொடுத்தார். அவனது இதயத் துடிப்பு எகிறியது. நீல நிறத் தாவணிச் சீருடையில் இடது காலைச் சற்று விந்தியபடி நடந்து வருகிற பெண்தான் கமலாவா?

அவனது உணர்ச்சிகள் பல்வேறு தளங்களில் கலந்து சுழன்றன. இரண்டு வாரங்களாக மனசுக்குள் பூட்டி வைத்திருந்த ரகசிய சினேகிதி மாற்றுத் திறனாளி என்கிற அனுதாபமா? ஏமாற்றமா? ஆர்வத்துக்கு விழுந்த முற்றுப்புள்ளியா? அவனுக்குள் இனம் காண முடியாத உணர்வுகள்.

“என்னப்பா?" - குரலில் இனிமை இருந்தது.

“நாம தேடிக்கிட்டிருந்த ஜாதி சர்ட்டிஃபிகேட்... இதோ இருக்கும்மா... உன் பழைய புத்தகத்தில் மறந்துபோய் வச்சுட்டே..." அவள் அதை வாங்கிப் பார்த்தாள். சுரேஷ் அவளது முகத்தைப் பார்த்தான். எவ்ளோ பெரிய கண்கள்!
சுருள் முடியுடன், சிகப்பாக, சட்டென்று சுண்டியிழுக்காத எளிமையுடன் அழகாகத்தான் இருந்தாள்.

“இவர் யாருப்பா?" என்று கேட்டாள் கமலா.

“இங்கே ராஜாராம் வருவாரில்லே, அவர் மகன்தான்..."

“ஓ" என்று கேட்டுக் கொண்டவள், சாந்தமாக அவனைப் பார்த்துவிட்டு, தாங்க்ஸ்..." என்றாள். சுரேஷ் விடைபெற்றுத் திரும்பினான். அன்று முழுக்க வகுப்பில் அவனால் பாடத்தைக் கவனிக்க முடியவில்லை. கமலாவின் முகமே வந்து நின்றது. கடவுள் அந்தப் பெண்ணுக்கு ஏன் ஊனத்தை கொடுத்தார் என்று நொந்து கொண்டான்.

அன்று மாலை பள்ளி விட்ட பிறகு, கமலாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவசர அவசரமாகக் கிளம்பி கடை வீதிக்கு வந்தான். பச்சை, நீல சீருடைகளில் மாணவிகள் சென்று கொண்டிருந்தனர்.

காத்திருந்தான். யார் யாரோ வந்தார்கள். கமலாவை மட்டும் காணோம். மாணவிகள் கூட்டம் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. சுரேஷ் அவநம்பிக்கையின் விளிம்புக்குப் போனபோது தான், தனது இரண்டு தோழிகளுடன் கமலா மெல்ல மெல்ல நடந்து வந்தாள். அந்த மூன்று பேரில் கமலாதான் நல்ல அழகு!

நடந்து, நடந்து அவனை நெருங்கினார்கள். கமலா தனது கவனத்தைச் சுற்றுப்புறத்தில் திருப்பாமல் லயித்துப் பேசியபடி வந்தாள். ’பார்... என்னைப் பார்... சுரேஷ் மனசுக்குள் அலறினான். அவள் திரும்பவில்லை. அவர்கள் அவனைத் தாண்டிச் செல்லவிருந்தார்கள்.

இனியும் தாமதியேல் என்று அவர்களைக் குறுக்காகக் கடந்து சென்றான் சுரேஷ்  - ஸ்டைலாகச் செருமிக் கொண்டு. இப்போது கமலா நிமிர்ந்து பார்த்தாள். அவளது முகத்தில் ஆச்சரியம்! இவன் எங்கே இங்கே? ஆச்சரியத்துக்கு நடுவே மெல்லிய புன்முறுவல் ஓடியது அவளது முகத்தில்! சுரேஷ் இறக்கை இல்லாமலே பறந்தான்.

அன்றிலிருந்து கமலாவை தரிசிக்கும் வழக்கம் தொடர்ந்தது. இதற்காகக் காலையிலேயே கிளம்பி வந்து கடைவீதியில் நின்று விடுவான் அவன். கமலா கடந்து போன பிறகு, அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடி தாமதமாய்ச் சென்று முட்டி போடுவான். மாலையிலும் பள்ளி விட்டவுடன் கடைவீதிக்குப் பறந்து விடுவான் புத்தகப் பையுடன்.

கமலாவின் ஸ்பரிசம் படிந்த புத்தகங்களைப் பிரித்துப் படிக்கும் போது, அவனுக்குப் பரவசமாய் இருக்கும். புத்தகத்தைத் தடவிப் பார்க்கின்ற ஆசையிலேயே அடிக்கடி படிக்க ஆரம்பித்தான். அப்படிப் படிக்க ஆரம்பித்ததன் விளைவு, எட்டாம் வகுப்பில் இருபதாவது ராங்க்கில் இருந்தவன் ஒன்பதாம் வகுப்பில் மாதாந்திரத் தேர்வில் மூன்றாவது ராங்க் எடுத்தான். வகுப்பு ஆசிரியர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.

கமலாவுடனான பார்வை சினேகிதம், காலை ஒரு மேனியும் மாலை ஒரு வண்ணமுமாக வளர்ந்தது. கடைவீதியில் பூக்கடைகள் மிகுந்திருக்கும் பகுதியில்தான் சுரேஷ் தினமும் வந்து நிற்பான். அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது, கமலாவும் சரியாக அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள். இப்படியாக இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டதில்லை. ஆயிரம் கோடி மொழிகளைப் பார்வையிலேயே பேசிக் கொள்ளும்போது, வாய்மொழி தேவையோ?

கமலாவின் மீது தனக்கிருப்பது காதல் உணர்வு என்று நினைத்தான் சுரேஷ். எதிரெதிர் பால் ஈர்ப்பும் அவள் மாற்றுத் திறனாளி என்ற அனுதாபமும் தன் மனதில் காதலை ஆழ வேரூன்றி வைத்திருப்பதாக நினைத்தான்.

காதல் என்பது நீருக்குள் சிக்கிக் கொண்ட காற்றுக்குமிழ் போல வெளியேறவே துடிக்கும். அவளைப் புகழ்ந்து யாராவது பேச மாட்டார்களா... பொழுதெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கும். காதலின் இந்த சர்வதேச விதி சுரேஷுகும் பொருந்தியது. கமலாவைப் பற்றி தனது வகுப்பு நண்பர்களிடம் கூற விரும்பினான். எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்று கூறிக் கொள்வதில் உள்ள ஹீரோத்தனமான பெருமிதம் அவனை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளத் தூண்டியது.

ஆனால், அது எவ்வளவு அபாயகரமானது என்பது முட்டாள் சுரேஷுக்கு அப்போது புரியவில்லை. காதலிப்பவர்களில் பெரும் பகுதியினர் முட்டாள்கள்தானே! உணர்ச்சி வசப்படும் முட்டாள்கள்!

பொதுவாக மீசை அரும்பத் தொடங்கும் எட்டாம், ஒன்பதாம் வகுப்புப் பருவங்களில் - தனக்கு ஒரு பெண் நண்பி அல்லது காதலி இருப்பதாகப் பெருமையடித்துக் கொள்வது அந்தப் பொடிசுகளுக்குப் பெருமிதத்துக்குரிய விஷயம். தங்களைப் பெரிய மனிதன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான எத்தனிப்பு. தான் அழகானவன் என்பதை நிரூபித்துக் கொள்வதற்கான துடிப்பு! சுரேஷும் அதிலிருந்து விலகிவிடவில்லை.

அவனது நண்பர்கள் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பெண்ணுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

“என் ஆள் வனஜாவை நேத்து கோவில்ல பார்த்தேன். கோயில்ல சுத்திக்கிட்டு வரும்போது கரண்ட் ஆஃப் ஆயிடுச்சி... சரியான சந்தர்ப்பத்தை விடுவேனா? இறுக்கிக் கட்டிப் பிடிச்சு கன்னத்திலும் கழுத்திலும் முத்தம் கொடுத்துட்டேன்" என்பான் ராஜா.

அவனுக்குப் பதில் கூறுவதுபோல, சுந்தரம் சொல்லுவான். என் ஆள் சுமித்ரா என் வீட்டுக்குப் பக்கத்து வீடுதானே... போன வாரம் எங்க வீட்ல எல்லோரும் பக்கத்து ஊர்ல கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க...நான் மட்டும்தான் வீட்ல தனியா இருந்தேன். அப்போதுதான் சுமித்ரா என் வீட்டுக்கு வந்தாள். கதவைப் பூட்டிக்கிட்டு ரொம்ப ஜாலியா இருந்தோம்..." என்பான்.

எல்லாமே கடைந்தெடுத்த கட்டுக்கதைகள். மீசை அரும்பத் துடித்தாலும் சமூகம் பொடியன் என்று அலட்சியப்படுத்துவதை ஜீரணிக்க முடியாமல் பின்னிப் புனையப்படும் பொய்கள். அந்த வயசுக்காரர்களுக்கு அதில் வக்கிரம் கலந்த இதம்.

இப்படித்தான் ஒருநாள் நண்பர்கள் கற்பனைச் சரடுகளை விட்டுக் கொண்டிருந்தபோது சுரேஷும் அதே அளவு கற்பனைகளுடன் தன் கதையைச் சொன்னான்.

“இதுமாதிரி விஷயங்கள் உங்களுக்கு மட்டும்தான் இருக்கா? எனக்கும் இருக்குடா..." என்று ஆரம்பித்தான்.

இத்தனை நாளாய் சைவப் பூனையாய் வாய் மூடியிருந்தவன், வாய் திறந்ததும், மற்றவர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர்.

“என்னடா சொல்றே?"

“நான் சொல்ற பொண்ணு கமலா. கேர்ள்ஸ் ஸ்கூல்ல டென்த் படிக்கறா..." என்றான் சுரேஷ்.

“உன்னைவிட வயசுல பெரியவளா?" என்றான் ராஜா.
“காதலுக்கு வயசாடா முக்கியம். மனசுதான் முக்கியம்" என்றான் சுரேஷ், பெரிய மனிதத் தோரணையுடன். மற்றவர்கள் எதுவும் பேசவில்லை. அவன் தொடர்ந்தான்.

“நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டீப்... நான் எதைச் சொன்னாலும் அவள் செய்வாள்... எங்கள் ஜாதிதான். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள்... எங்கம்மாவை அத்தைன்னுதான் கூப்பிடுவாள்... எங்கம்மாவும் அவளை மருமகளேன்னுதான் கூப்பிடுவாங்க... நானும் அவங்க வீட்டுக்குப் போவேன்..." என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிடத் தொடங்கினான் சுரேஷ்.

“அவளை எங்களுக்குக் காட்டுவியாடா?" என்றான் ரவி. மற்றவர்கள் தாங்கள் காதலிக்கும் அல்லது சில்மிஷம் செய்ததாகக் கூறும் பெண்ணை அதுவரைக் காட்டியதில்லை. காட்டவும் முடியாது. காரணம் அப்படி யாருமே கிடையாது.
ஆனால், சுரேஷ் காட்டுவதாக உறுதியளித்தான். ஒரு கண்டிஷன்...  நீங்க இருக்கும்போது, அவள்கிட்டே பேச மாட்டேன். அப்புறம் கோவிச்சுக்குவா.." என்றான் சுரேஷ் ஒரு தற்காப்புடன்.

அன்று மாலை பள்ளிவிட்டதும் ராஜா, ரவி, சுந்தரம், மோகனை அழைத்துக் கொண்டு சுரேஷ் கடை வீதிக்கு வந்துவிட்டான். காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில், கமலா தனது தோழிகளுடன் வந்தாள்.

“மூணு பேரில் யாருடா உன் ஆள்?" என்றான் ரவி.

“நடுவில்... காலை விந்தி விந்தி நடந்து வர்றாளே... அவள்தான்..." என்றான் சுரேஷ்.

“பிடிச்சதுதான் பிடிச்சே... நல்ல மாதிரியா பிடிக்கக்கூடாதா?" என்று கேட்டான் சுந்தரம். சுரேஷ் அவனை முறைத்தான்.

கமலா நிமிர்ந்து சுரேஷைப் பார்த்தாள். அவனுக்கு அருகில் நின்ற அவனது நண்பர்களைப் பார்த்ததும், முகத்தில் மிரட்சி காட்டினாள். அவர்கள் சென்ற பிறகு சுந்தரம் கேட்டான் சீண்டலாக.

“போயும் போயும் ஒரு நொண்டிப் பெண்தான் உனக்குக் கிடைச்சாளா?"
அவ்வளவுதான். கடைவீதி என்பதையும் மறந்து கண்மூடித்தனமாகக் கோபம் கொண்டான் சுரேஷ். சுந்தரத்தின் கன்னத்தில் சரேலென்று அறைந்தான். சுந்தரத்துக்குக் கண்கள் கலங்க... அவமானத்திலும் கோபத்திலும் அவன் முகம் சிவந்தது.

பாய்ந்து சுரேஷின் சட்டையைப் பிடித்தான்.

“ஏண்டா அடிச்சே என்னை?" சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

“ஏண்டா அவளை நொண்டின்னு சொன்னே?"

“விந்தி நடக்கிறவளை வேற எப்படிடா சொல்ல...?" என்று இளக்காரமாகப் பதில் சொன்னான் சுந்தரம். இந்தப் பதில் சுரேஷை மேலும் எரிச்சலாக்கியது. சட்டையைப் பிடித்திருந்த சுந்தரத்தின் கைகளைத் தட்டிவிட்டு, அவனது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.

“சுரேஷோட மோதாதே... சுடுகாட்டுக்குப் போகாதே.." என்று அந்த நேரத்திலும் பஞ்ச் டயலாக் பேசினான் சுரேஷ். முகத்தில் வாங்கிய குத்திலிருந்து சற்று நிதானித்த சுந்தரம், இப்போது சுரேஷின் முகத்தில் குத்தினான். ஆவேசமாக பதிலுக்கு சுரேஷ் அடிக்க கடைவீதி வேடிக்கை பார்த்தது.

“சண்டை வேண்டாம்டா... வந்துடுங்க போகலாம்..." ரவி பரபரத்தான். அதற்குள் பெரியவர்கள் சிலர் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டனர். அப்போதுதான் தனது உதடுகளில் ஈரம் உணர்ந்த சுரேஷ், தொட்டுப் பார்த்தான். பிசுபிசுப்பாய் ரத்தம். சுந்தரம் குத்தியதில் அவனது உதட்டோரம் கிழித்து விட்டிருந்தது.

“டேய் உன்னைப் பின்னாலே கவனிச்சுக்கிறேண்டா..." - சவால் விட்டான் சுரேஷ்.

மறுநாள் வகுப்பில் சுரேஷும் சுந்தரமும் பேசிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் சுந்தரம், வகுப்பில் எல்லோரிடமும் கமலா விஷயத்தைப் பரப்பிவிட்டான். சுரேஷ் துணுக்குற்றான். கமலா விஷயத்தில் அவசரப்பட்டு விட்டதாக வருந்தினான்.

சுந்தரம் அத்தோடு நிற்கவில்லை. விளையாட்டுப் பாடவேளையில் சுரேஷின் புத்தகங்களில்கமலா என்று எழுதப்பட்டிருந்த இடங்களை எல்லாம் கிழித்தெறிந்தான். ஆனந்தக் களிப்படைந்தான்.

கமலா பெயர் கிழிக்கப்பட்ட புத்தகங்களைப் பார்த்த சுரேஷுக்கு ரத்தக் கண்ணீர் வராத குறைதான். சுந்தரம் தான் கிழித்திருப்பான் என்று அவனால் யூகிக்க முடிந்தது. ஆனால், இது விஷயமாக நேரடியாக  மோதுவது சரியாக இருக்காது என்று முடிவு செய்தான். அவனுக்குள் அக்னிக் குழம்பு கொதிக்கலானது.

அன்று மாலை. கடைவீதியில் சுரேஷ் நின்று கொண்டிருந்தபோது கமலா வந்தாள் - தோழிகளுடன். அவனைப் பார்த்ததும் அவளது கண்கள் கலங்கின. சுரேஷ் பதறினான். கமலா தன் தோழிகளிடம் கண் காட்டிவிட்டு சுரேஷை நெருங்கினாள்.

“அன்னிக்கு உங்கக்கூட வந்தவங்க யாரு? அதிலே கருப்பா இருந்தவன் காலையிலே நான் ஸ்கூலுக்கு வர்றப்போ என்னைப் பார்த்து நொண்டின்னு சொல்லி கிண்டல் பண்றான்" - கமலாவின் விழிகளில் தாரை தாரையாய் நீர். கமலா விறுவிறுவென நடந்து சென்றாள்.

சுரேஷ் துயரமானான். அவள் சொன்னகருத்தவன் சுந்தரம்தான்! டேய், சுந்தரம்... என்று பற்களைக் கடித்துக் கொண்டான். விஷயம் அத்தோடு முடியவில்லை. சுரேஷ், கமலா விஷயம் அவனது வகுப்பறையிலிருந்து பள்ளியிலும் பரவலானது. ஆசிரியர்களின் காதுகளிலும் அவை போய்ச் சேர்ந்தன.

“சுரேஷ்... பெரிய மனுஷனாயிட்டே போலிருக்கு" என்று சில ஆசிரியர்கள் ஜாடையாகக் கிண்டலடித்தார்கள். கணக்கு வாத்தியார் ராமச்சந்திரன் காதிலும் விஷயம் போய்ச் சேர்ந்தபோது அதிர்ந்தார். அவர் கமலாவின் தந்தை மாரிமுத்துவுக்குக் குடும்ப நண்பர்.

அன்று மாலையே அவர் மாரிமுத்துவிடம் விஷயத்தைக் கூற அவர் கொதித்தார். கமலாவை அழைத்து கோபத்தில் அவளிடம் குதித்தார். மறுநாள் காலையிலேயே சுரேஷின் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.

“வாங்க மாரிமுத்து..." வரவேற்றார் ராஜாராம்.

“வரவேற்பெல்லாம் அப்புறம்... உன் பையனைக் கூப்பிடுய்யா..."

“குளிக்க ஏரிக்குப் போயிருக்கான்... என்ன விஷயம்?" என்றார் ராஜாராம்.

“நீயும் நானும் சம்பந்தியாகணும்னு துடிக்கிறான் உன் மகன்..." என்று கூறிய மாரிமுத்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி முடித்தார்.

அப்போதுதான் சுரேஷ் அங்கு வந்தான். மாரிமுத்து படபடவென்று பொரிய ஆரம்பித்தார். ஏண்டா, என் பொண்ணு உன்னைக் காதலிக்கறதா ஊர் முழுக்கச் சொல்லி வச்சிருக்கியேடா... என்னிக்காவது என் மகள் உன்கிட்டே பேசியிருக்காளா? உடல் ஊனமான பொண்ணு, ஏதோ பள்ளிக்கூடத்துக்குப் போய் படிச்சா, எதிர்காலம் நல்லா இருக்கும்னு அனுப்பினா, அது உனக்குப் பிடிக்கலையா? உன் வயசுக்கு இதெல்லாம் தேவையா?" - படபடவென பொரிந்தவர்,

“ராஜாராம், உன் முகத்துக்காக இவனை விடறேன்... இல்லே, போலீஸ்லே சொல்லி முட்டியைப் பேர்த்திருப்பேன்..." - கர்ஜித்து விட்டுப் போனார் மாரிமுத்து. அவர் போன பிறகு, ராஜாராம்  தழுதழுக்கப் பேசினார்.

“டே... தலைக்கு வளர்ந்துட்டே... உன்னை அடிக்க முடியாது. நான் சொல்றதைக் கேட்டுக்கோடா... நமக்கு சொத்து எதுவும் இல்லே... நீ படிச்சு வளர்ந்து பெரிய ஆளா வருவேன்னு நினைச்சேன். அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கிடாதேடா... மறுபடியும் இதுமாதிரி ஏதாவது கேள்விப்பட்டேன்... உயிரோட என்னைப் பார்க்க முடியாது..." அவரது கண்கள் கலங்கி விட்டிருந்தன.

அன்று சுரேஷ் வகுப்புக்குச் செல்லவில்லை. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு, மாரி ஓடையில் சுற்றினான். அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தடியில் புத்தகப் பையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து, வேப்ப மரத்தின் மேலே வெறித்தான்.

கமலாவுடனான நட்பு, இனிமையானதாகவும், புனிதமானதாகவும் அவனுக்குப்பட்டது. கமலாவை இனி பார்க்க முடியாது. அதை அவளும் விரும்ப மாட்டாள். மீறிப் போய்ப் பார்த்தால், மீண்டும் வீட்டில் பிரச்சினை வெடிக்கும்!

காவியமாய் வரவேண்டிய உறவு - முற்றுப்புள்ளியாகி விட்டதே. அவசரப்பட்டு நண்பர்களிடம் கமலாவைப் பற்றிக் கூறியிருக்கக் கூடாது. கமலாவின் சிரிப்பும் புன்னகையும் அவன் மனதில் ஆழப் புதைந்து கிடந்தன.
ரகசியம் காக்க வேண்டிய விஷயம். உள்ளுக்குள் வைத்து ஆனந்தப்பட வேண்டிய உணர்வு. அதனால்தான், அதை அகம் என்று  இலக்கியம் பேசுகிறது. கூடா நட்பு காரணமாக இன்று எல்லாமே அவஸ்தையாகிப் போனது.

இதற்கெல்லாம் காரணம்... அவனது கோபம் சுந்தரத்தின் மீது முகாமிட்டது. ’சுந்தரம்.. அவளை நொண்டி என்றா கேலி செய்தாய்? நாளை உலகம் உன்னையும் அப்படித்தான் பேசப் போகிறது!

சுரேஷ் கோபத்தை மறைத்தான். மறுநாளிலிருந்து நல்ல பிள்ளையாய் பள்ளிக்குப் போய் வந்தான். சுந்தரத்தின் கணக்கை, தீர்ப்பதற்கான நேரத்துக்காகக் காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான கிரிக்கெட் மேட்ச்! எதிரணியில் சுந்தரம்!

சுரேஷ் பந்து வீச வந்தான். எதிரில் மட்டை பிடித்தவன் சுந்தரம். தனக்கான நேரம் வந்து விட்டதாகவே நினைத்தான் சுரேஷ். கால்கள் பூமியில் புதைந்து விடுமளவுக்கு ஆவேசமாக ஓடி வந்த சுரேஷ் மொத்த பலத்தையும் கொடுத்து அழுத்தமாய் வீசினான். அளவு குறைவாகச் சென்ற பந்து... தரையில் ‘பிட்ச் ஆகாமல் நேராக சுந்தரத்தின் இடதுகால் முட்டியில் பட்டு எகிறியது.

பந்து பட்ட விநாடியே, வலியில் சுந்தரம் மட்டையை தூர வீசினான். முட்டியைப் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து புரண்டான். கதறினான். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பந்துக் கிண்ண மூட்டில் ஜவ்வு கிழிந்து, சில நுணுக்கமான எலும்புகள் நொறுங்கிவிட்டிருந்தன

மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் இருந்தான் சுந்தரம்.
“முன்புபோல காலை மடக்கி நீட்ட முடியாது. நடப்பதும் சற்று விந்தி விந்திதான் நடக்க வேண்டும்" என்று கூறிவிட்டார் டாக்டர். சக மாணவர்களுடன் சுரேஷ் சுந்தரத்தைப் பார்க்கச் சென்றபோது, சுந்தரம் அவனைப் பார்த்த பார்வை, பாவி... இப்போ உனக்கு திருப்திதானே..." என்று கேட்பதுபோல இருந்தது!