Saturday 14 July 2012

கவிதை



தண்டி ஓட்டம்!
-பெ. கருணாகரன்

வெற்றிக் கோடு குறித்துக்
கவலையில்லை எனக்கு...
அது வெறுமையால் நிறைந்தது
முன்னாலும், பின்னாலும்
ஓடிக் கொண்டிருப்பவர்கள் குறித்தும்
கவனமில்லை எனக்கு
அது நிரந்தரமற்றது

முந்திச் செல்பவன் குறித்த பொறாமையோ
பிந்திச் செல்வது குறித்த அவமானமோ
எதுவும் இல்லை எனக்கு

எந்தக் குதிரையும்
முதலில் வருவதற்காகச் சந்தோஷமோ
கடைசியில் வந்ததற்காக வருத்தமோ கொள்வதில்லை.
ஓடுதல் மட்டுமே குதிரைக்குச் சந்தோஷம்

கிண்டி மைதானமாயினும்
தண்டி மணற்பரப்பாயினும்
ஓடுவேனே தவிர,
யாத்திரை செய்ய மாட்டேன்.

அதனை தண்டி ஓட்டம் என்று
சரித்திரம் குறிப்பெழுதிக் கொள்ளும்.



Sunday 8 July 2012

மாண்புமிகு மனிதர்கள்




கே. பாலசந்தர்

-பெ. கருணாகரன்

தமிழ்த் திரைப்பட டைரக்டர்களில், ‘ஸ்டார் மேக்கர்கள் நிறைய உண்டு; சூப்பர் ஸ்டார் மேக்கர் ஒரே ஒருவர்தான். அவர்தான் கே. பாலசந்தர். செல்லமாய் கே.பி.
தமிழ் நாடகம், சினிமா இரண்டிலும் இவர் நுழைந்த பிறகுதான், அறிவுப்பூர்வமான மாறுதல்கள் நிகழ்ந்தன. புதுமைகள் பிறந்தன. படிய வாரிய தலை; மடிப்பு கலையாத சட்டை; ஒட்ட வெட்டப்பட்ட நகங்கள்; சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை. இப்படி பாலசந்தர் தொடர்பான எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்ஷன்.
தஞ்சை மாவட்டம் _ நல்லமாங்குடி கே.பி. பிறந்த ஊர். பெற்றோர் : கைலாசம் ஐயர், காமாட்சியம்மாள். 9.7.1930_ம் ஆண்டு பிறந்த இவருக்கு, ஓர் அண்ணன்; நான்கு சகோதரிகள். பள்ளி நாட்களில் படிப்பில் சூப்பர் ஸ்டூடண்ட். அந்த நாட்களில், தெரு நண்பர்களைக் கூட்டிக் கொண்டு நாடகங்கள் போடுவார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதும் நாடக ஆசை அடங்கவில்லை. தானே எழுதி, நடித்து இயக்கிய நாடகங்கள் சிதம்பரத்திலும் அரங்கேறின. கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, முத்துப்பேட்டையில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி! தனது நாடகங்களை மாணவர்களிடமும் அரங்கேற்றினார் பாலசந்தர்.
பட்டிணப் பிரவேசம்!
1950_ல் சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலை. இங்கேயும் பாலசந்தரை நாடக மோகம் விடவில்லை. மாலை ஐந்து மணியடித்ததும், எல்லோரும் வீட்டுக்கு மூட்டை கட்டும்போது, கே.பி.யின் பாதங்கள் சபாக்களை நோக்கி நகர்ந்தன. தனது நாடகத் திறனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது.
ஏ.ஜி.எஸ். ஆபீஸில் ஒரு விழா. உயரதிகாரியைச் சந்தித்து நாடகம் போட அனுமதி கேட்டார். அதிகாரி சம்மதித்தார். நாடகத்தின் பெயர் சினிமா விசிறிசதா சர்வ காலமும் சினிமாவையே நினைத்துக் கொண்டிருக்கும் கேரக்டரை பற்றிய கதை.
இடையில் இருந்ததோ ஒரே நாள். மொத்த வசனத்தையும் ஒரே நாளில் யாரால் மனப்பாடம் செய்ய இயலும்? இறுதியில், எல்லா கேரக்டர்களையும் தான் ஒருவனே நடித்து விடுவதென முடிவு செய்தார். மோனோ ஆக்டிங்!
ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாடகம்! விதவிதமான கேரக்டர்கள்; உணர்வுகள்; நாடகத்துக்கு ஆடியன்ஸிடம் பலத்த வரவேற்பு! அதன் பிறகு, நாடகங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இதில் விநோதம் என்னவென்றால், இளைஞரான கே.பி. போட்டதெல்லாம் அப்பா வேடம்!
நாடகங்களில் நடித்தபடியே தனக்கென்று சொந்தமாக ராகினி ரெக்ரியேஷன்ஸ்என்ற பெயரில், ஒரு நாடகக் குழுவையும் ஏற்படுத்திக் கொண்டார் கே.பி. சபா வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் திருமணம், ஜானவாசம் என்று எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் நாடகம் போட்டார்.
பாமா விஜயம்!
மகள் புஷ்பலதா பிறந்த நேரம் - கே.பி.யின் வாழ்வில் நல்ல நேரம். அவருக்கு, வி.எஸ்.ராகவன் குழுவுக்கான முழுநீள நாடகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் பெயர் கௌரி கல்யாணம்! இதில் கே.பி. வில்லனாக நடித்தார்.
ஏ.ஜி.எஸ். ஆபீஸின் உயரதிகாரி டிரான்ஸ்பராகிப் போனபோது, பிரிவு உபசார விழாவில் கே.பி. மேடையேற்றிய நாடகம், மேஜர் சந்திரகாந்த். மேஜர் சந்திரகாந்த்தாக கே.பி.யே நடித்தார். இந்த நாடகத்தில் ஃபேட்இன், ஃபேட்அவுட் என பல மேடைப் புதுமைகளைப் புகுத்தினார்.
அமெச்சூர் நாடகத்திலிருந்து முழுநீள நாடகம் நடந்த முடிவு செய்தார் கே.பி. சுந்தரராஜன் நடிக்க ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் மேஜர் சந்திரகாந்த் அரங்கேறியது. அதே நாடகம் மீண்டும் நாரத கான சபாவில் நடந்தது.
இந்தக் காலக்கட்டத்தில்தான் கே.பி.யுடன் நெருக்கமானார் நாகேஷ். அவருக்காக எழுதப்பட்ட நாடகம்தான் சர்வர் சுந்தரம்.மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 25 முறை மேடையேறியது சர்வர் சுந்தரம்.
இந்த நிலையில்தான், கே.பி.யின் மெழுகுவர்த்திஎன்ற நாடகத்துக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர். தெய்வத்தாய்படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அரங்கேற்றம்!
கே.பி. டைரக்ட் செய்த முதல் படம் நீர்க்குமிழிகே.பி.யால் அரங்கேற்றப்பட்ட ஐந்தாவது வெற்றிகரமான நாடகம் நீர்க்குமிழி. இதில் நடித்தவர் நாகேஷ். இந்த நாடகம் அரங்கேறிய போதே, பலத்த வரவேற்பு. நாடகத்தைப் பார்த்த டைரக்டர் ஏ.கே.வேலன் அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.
நீர்க்குமிழிக்குப்பிறகு, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், இருகோடுகள் என்று ஏகப்பட்ட படங்கள் இயக்கினாலும் 1973_ல் வெளிவந்த அரங்கேற்றம்படம் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ்ப்படவுலகத்தினர் தொடுவதற்கும் யோசிக்கிற கதை. பாலசந்தரின் ட்ரீட்மெண்ட்- அந்தக் கதையை எல்லோரும் ஏற்கும்படி செய்தது. அதன்பிறகு, இவரது படமாக்கல் முறை மாறியது. சொல்லதான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு என்று தொடர்ந்து வந்த படங்கள், பாலசந்தரின் தனித்துவத்தை நிரூபித்தன.
எல்லாப் படங்களிலும் புதுப்புது உத்திகள்; புதுப்புது ஃபிரேம்கள். டைரக்ஷனில் பாலசந்தர் டச் என்று தனி ஸ்டைலே உருவானது. இவர் தொட்டதெல்லாம் துலங்கியது; கண்பட்டதெல்லாம் நடித்தது.
கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி என்று இன்று திரையுலகை ஆக்கிரமித்திருக்கும் பல நடிகர், நடிகைகள் பாலசந்தரின் அறிமுகங்கள்தான். அதேபோல், விசு, அமீர்ஜான், நடிகை லட்சுமி, வஸந்த், சுரேஷ் கிருஷ்ணா சரண், ஹரி, என்று டைரக்ஷனில் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கும் இவரது சிஷ்யப்பிள்ளைகள் ஏராளம்.
தமிழ்த் தவிர, கன்னடம், தெலுங்கு, இந்திமொழிப் படங்களிலும் கே.பி.யின் வெற்றி முத்திரைகள் ஏராளம். மரோசரித்ராஅறுநூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள், தனியார் நிறுவன விருதுகள் என்று ஏராளமான விருதுகள் அவரது வரவேற்பறையில். ஆனால், பேசும்போதோ, ‘நான் ஒண்ணும் பெருசா செய்துடலையேஎன்பார் குழந்தை மாதிரி.
நான் அவனில்லை!
கே.பி.யின் கோபம் நாடறிந்தது. ஆனால், அது சில நொடிகளிலேயே மறையும் நீர்க்குமிழி போன்றது. தான் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, பொறுமையின்மையினால் வருகிற கோபம் அது.
நடிகரோ, நடிகையோ நடித்தது திருப்தியில்லாதபோது, தானே நடித்துக் காட்டுவார். அதன் பிறகும் சரியாக நடிக்கவில்லை என்றால்தான் கோபம் வரும். திட்டி விடுவார். திட்டுவாங்கிய கலைஞர் அடுத்த ஷாட்டில் சரியாக நடிக்கும்போது, மனம் விட்டுப் பாராட்டுவார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், ஜாலியாக இருப்பார். அவர்தானா இவர்என்று ஆச்சரியமாய் இருக்கும்.
அவர்கள்!
சின்னத்திரையை இப்போதுகூட பல சினிமா இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பெரிய திரையில் பிஸியாக இருந்த காலத்திலேயே, பாலசந்தர் சின்னத் திரைத் தொடர்களையும் இயக்கினார். சினிமாவுக்கு அடுத்து டி.வி. மீடியாதான் பவர்ஃபுல்லாக வரும் என்று அப்போதே தீர்மானித்த தீர்க்கதரிசனம் அது. இவர் இயக்கிய ரயில் சிநேகம், பிரேமி, கையளவு மனசு, காசளவு நேசம், ஜன்னல் என்று டி.ஆர்.பி.யை எகிற வைத்த சீரியல்கள் ஏராளம்.
மின்பிம்பங்கள்தயாரிப்பில் உருவான சீரியல்கள் மூலம் உருவான இயக்குநர்கள் பட்டியலும் நீளமானது. சி.ஜே.பாஸ்கர், நாகா, சுந்தர் கே.விஜயன், ‘மெட்டிஒலிதிருமுருகன், சமுத்திரக்கனி, பத்ரி _ இவர்கள் அனைவரும் பிறந்த இடத்தின் பேர் சொல்லும் பிள்ளைகள். சின்னத்திரையின் கலக்கல் மன்னர்கள்!
அச்சமில்லைஅச்சமில்லை
ஏராளமான வெள்ளிவிழாப் படங்கள், நூறு நாள் படங்களைக் கொடுத்த இந்தச் சிந்தனை மார்க்கண்டேயருக்கு, இப்போது வயது 82. ஆனால், அவரது சிந்தனைகளிலோ என்றும் 16. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் இவர் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 125. சினிமா, சின்னத்திரை ஆகியவற்றில் இவர் டைரக்ட் செய்தவற்றின் எண்ணிக்கை 100க்கும் மேல். கே.பி. மகா துணிச்சல்காரர். யாருக்காகவும் எதற்காகவும் தனது கருத்துக்களில் பின் வாங்கமாட்டார்.
தன்னைப் பற்றி ஒரே வார்த்தையில் கே.பி. வைக்கும் விமர்சனம்: ‘‘அச்சமில்லை!’’



Saturday 7 July 2012

தாவணி



மீன்கள் துள்ளும் தாவணி
பெ. கருணாகரன்

அம்மா, சின்னம்மா, அக்கா, தங்கைகள் அவர்களது சோட்டுப் பெண்கள் என்று அல்லிகள் ராஜ்யத்தில், கூட்டுக் குடும்பத்தில் தனியனாய் வளர்ந்தவன் நான். அப்பா, சித்தப்பா இரவில்தான் வருவார்கள் என்பதால் வீட்டில் ஆண் வாடை என்றால் நான் மட்டுமே. அதனால், பெண்களுடனே வளர்ந்தவன். பெண்களைத் தவறான பார்வைப் பார்ப்பதில் குற்ற உணர்ச்சியுள்ளவன். தமிழில் உள்ள முக்கியமான கெட்ட வார்த்தைகளில் ‘பொட்டக் கழுத...’ என்கிற வார்த்தையும் ஒன்று என்று நினைப்பவன். அதனால், இந்தத் தாவணி கட்டுரையில் ரொமான்ஸ் இருக்காது. இது சைவத் தாவணி.
சுமார் முப்பது ஆண்டுகளக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன ஆச்சு என்று அக்காவிடம் நான் கேட்கப் போனால், எல்லோரும் என்னை விரட்டினார்கள். ஊரிலிருந்து சொந்தக்காரர்கள் எல்லாம் வந்தார்கள். வாழைப்பழம், சாக்லெட், சர்க்கரை என்று வீடே இனிப்பு மயமானது.
சிலதினங்கள் கழித்து, அக்காவைக் கூட்டிக் கொண்டு அம்மா வெளியில் சென்றபோது, அக்கா புதிய தாவணி கட்டியிருந்தார். அவரது நடையில் ஒரு தயக்கம். முகத்தில் வெட்கம். அதை அணிந்து நடப்பதில் ஓர் அசௌகரியத் தன்மை. சிறிய பதட்டம்...
அக்கா இதற்கு முன், அப்பாவின் துண்டை தாவணி மாதிரி தோளில் போட்டுக் கொண்டு, முந்தானை போன்ற பாவனையில் அதன் நுனியைப் பிடித்து விசிறிக் கொண்டு வீட்டில் சுற்றிவரும் போதெல்லாம், அம்மா, “துண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போய் வேலையைப் பாருடி...” என்று விரட்டுவார்.
அக்கா அவருக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டு இங்கும் அங்கும் ஆட்டம் காட்டுவார். அன்று அவர் விரும்பி அணிந்த உடையை அம்மா எதிர்த்தார். இன்று அம்மாவே விரும்பி அணிவிக்கிறார். ஆனால், அக்காவுக்குஅதில் ஏனோ விருப்பமில்லை.
இப்போது யோசிக்கும்போது, பெண் வளர்ந்து பெரிய மனுஷியாகி விட்டதை அவருக்கு அணிவிக்கும் உடை மூலம் வெளி உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. மஞ்சள் நீராட்டு விழாவிற்கெல்லாம் பதாகை வைக்கும் மனோபாவம் இதன் நீட்சிதான் போலும்.
சில ஆண்டுகளுக்கு முன் என் மகள் துண்டை எடுத்து தாவணி பாவனையில் தோளில் போட்டுக் கொண்டு வீட்டில் கண்ணாடியில் அழகு பார்த்ததும், பத்து வயதானபோதே என் பையன், ‘அப்பா... எனக்கு மீசை முளைச்சுடுச்சா பாரேன்...’ என்று என்னிடம் கேட்டதும் ஒரேவித மனோபாவத்தின் இருவேறு வெளிப்பாடுகள் என்றே தோன்றுகிறது.
தாங்கள் பெரியவர்கள் ஆகிவிட்டதான அல்லது ஆகிவிட வேண்டும் என்கிற அநதச் சின்ன வாண்டுகளின் ஆசைகளே அவை. நானும் கூட சிறுவயதில் பெரியவர்களின் செருப்பைப் போட்டுக் கொண்டு ‘த்த்தக்கா, பித்தக்கா’ என்று நடப்பதில் ஆனந்தமடைவேன். அதில் ஒரு ‘பெரிய மனுஷ’ சந்தோஷம்.
அக்காவுக்கு அதிகமாக கடையில் புதிய தாவணி எடுத்ததே இல்லை. அம்மாவின் பழைய சேலைகளே இரண்டாகக் கிழிக்கப்பட்டு தாவணிகளாய் மாறின. புடவை 70 எம்.எம். என்றால், தாவணி 35 எம்.எம்.
மழைநாட்களில் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருகரையும் வெள்ளம் வரும். வெள்ளம் வடிந்தபிறகு, ஆற்றங்கரையோரம் கெண்டை, வவுத்தான் கெண்டை போன்ற மீன்கள் துள்ளாட்டம் போடும். நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்போம். பெரும்பாலும் அக்காக்களின் தாவணிகளே மீன் பிடிக்கப்பயன்படும். தாவணி வலை?
தாவணியை விரித்து, அந்தப்பக்கம் ஒருவனும், இந்தப் பக்கம் ஒருவனுமாக இருகைகளாலும் விரித்து தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் பிடித்துக்கொண்டு, கரையை நோக்கி தாவணியை இழுத்து வருவோம். குட்டி குட்டியாக ஏகப்பட்ட மீன்கள் சிக்கும். அவற்றைக் கரையில் பள்ளம் தோண்டி அந்த நீரூற்றில் மீன்களை விட்டு அவை நீந்துவதைப் பார்ப்பதில் தனி சுவாரசியம்தான்.
இன்றைய தலைமுறையினர் மீன் பிடிக்க நினைத்தாலும் முடியாது. நதியில் நீரும் இல்லை. வீட்டில் அக்காக்கள் உண்டு. தாவணிகள் இல்லை.
இப்போதெல்லாம் தாவணிகளின் பயன்பாடு அருகிவிட்டது. அத்திப் பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவதுதான் தாவணிப் பெண்களைக் காண முடிகிறது. கல்யாணம் போன்ற விஷேச நிகழ்ச்சிகளில் பட்டுப் புடவை கட்டுவதைப் போலவே, தாவணிகளும் வீட்டு விஷேச உடையாய் மருகிவிட்டது.
ரயில்வே ஸ்டேஷன், சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் அடிக்கடி நான் காணும் காட்சி, ஒரு பெண் தன் புடவையின் இடுப்புப் பகுதியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு, அவிழ்ந்து கொண்ட சேலையைக் கட்டுவதற்கு மறைப்பான இடம் இருக்கிறதா என்று பதட்டத்துடன் தேடுவார். இந்த அனுபவம் பலருக்கும் நேர்ந்திருக்கும்.
பருவமடைந்த பெண்கள் அணியும் நம் பாரம்பரிய உடைகள் அசௌகரியமானவையாகவே தோன்றுகிறது. அவர்கள் எந்த வேலை செய்தாலும் அவர்களின் கவனம் அவர்கள் கட்டியிருக்கும் தங்கள் புடவையின் மீதும் பதிந்திருக்கும். இதுவும் ஒரு வகை மல்டி டாஸ்க்தான்.
எனக்குக் கூட வேட்டி கட்டும்போது ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். என் கவனமெல்லாம் வேட்டியின் மீதே இருக்கும். எங்கேயாவது அவிழ்ந்து மானத்தை வாங்கிவிடக் கூடாதே என்று கைகளால் அதனை அவ்வப்போது, தொட்டுப் பார்த்துக் கொள்வேன். அதனால் வேட்டியின் மீது எனக்கு நாட்டமில்லை. பேண்ட்தான் வசதி. இதே மானோபாவம்தான் தாவணியையும் வழக்கொழித்திருக்க வேண்டும்.
தாவணியின் இடத்தை இப்போது சல்வார்களும், சுடிதார்களும் நிரப்பிவிட்டன. நவீன உடை என்று கருதப்பட்ட சல்வார் இன்று நடைமுறை உடையாகி, தாவணி பாரம்பரிய உடையாகி பீரோவில் அந்துருண்டை மயக்கத்தில் தூங்குகிறது. ஃபேஷன் ஷோவில் நவயுவதிகள் தாவணி அணிந்து கேட் வாக் செய்வதைக் காண முடிகிறது. பெண்கள் கல்லூரிகளில் தாவணி தினம் கொண்டாடி பாரம்பரியத்தை நினைவுப்படுத்தி மகிழ்கிறார்கள்.
பாரம்பரிய உடை வழக்கொழிந்த சோகம் சிலருக்கு இருக்கலாம். அது தேவையில்லை என்றே நினைக்கிறேன். சௌகரியமான எந்தப் பாரம்பரியமும், நவீனத்திடம் தோற்பதில்லை. அசௌகரியமானவற்றைதான் நவீனம் இட்டு நிரப்புகிறது. புடவையாகட்டும், தாவணியாகட்டும் இரண்டின் முக்கிய பலன் முந்தானைதான். அந்த முந்தானையின் இடத்தைத் துப்பட்டாக்கள் பிடித்துவிட்டன. தேவையை எது எளிதாக நிறைவேற்றுகிறதோ அவற்றுக்கே மக்கள் தாவுகிறார்கள்.
தாவணியும் அப்படிதான். சல்வார், சுடிதார் என்கிற நவீனத்தின் வெற்றியின் சூட்சுமப் புள்ளி அதுதான்.
என் மகளிடம் ஒருமுறை ‘தாவணி எடுத்துத் தரவா?’ என்று நான் பாசத்துடன் கேட்டபோது, ‘போப்பா... உனக்கு வேறு வேலை இல்லை...’ என்று சூடாக முறைத்தாள். ஒரு தலைமுறை சௌகரியத்தை முன்னெடுத்து தங்கள் உடை இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது, தாவணிகள் பரணுக்குப் பறந்தன.
புடவைக்கும் அந்த நிலை வரலாம். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம்.


பால்யம்!

-பெ. கருணாகரன்

காலண்டில் முட்டை போட்ட
கணக்கு வாத்தியாரின்
சைக்கிள் டயரை
ஊக்கு வைத்து பஞ்சர் செய்ததுண்டு!

மூன்றாம்ப்பில்
வகுப்புக்கு கட்அடித்து
கமலக்கண்ணனுடன்
பெரிய கோயிலின்
நான்காம் மாடத்தில்
படுத்தபடி
திருட்டு தம் அடித்ததுண்டு!

ஜெகன்மோகினி போஸ்டர் கிழித்து
தரையில் விரித்து
ஜெயமாலினிமேல்
படுத்துப் புரண்டதுண்டு!

தலைதூக்கித் தலைதூக்கிப்
பழிப்பு காட்டும்
ஓணான் கழுத்தில்
தென்னங்குச்சி சுருக்குப் போட்டு
கள்ளிப் பாலை அதன்
கண்களில் ஊற்றி
துடிக்கவைத்து ரசித்ததுண்டு!

ஹோம்ஒர்க் அதிகம்தரும்
சயன்ஸ் வாத்தியாருக்கு
எச்சில் துப்பி துரைபொங்க
காபி வாங்கிவந்து கொடுத்ததுண்டு!

இன்ன பிற வக்கிரங்களும்
துஷ்டத்தனங்களும்
விஷமத்தனங்களும்
எனக்குள் உண்டு நிறைய!

என்றாலும் என்அம்மா
பக்கத்து வீட்டுப் பாட்டியிடம்
கூறிக் கொண்டிருப்பாள்
'என்மகனுக்கு சூது வாது தெரியாது!'

Thursday 5 July 2012



அரட்டைக்கு மட்டுமா ஃபேஸ்புக்?

முகநூல் நண்பர்கள் சிலர் சங்கம் வைத்து சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்


சம்பவம் - 1
புதுவையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சர்மிளா. அவளது தந்தை
சக்திவேலிடமிருந்து வசந்தகுமாருக்கு ஒரு கடிதம் வருகிறது. சர்மிளாவின் இதய  அறுவை சிகிச்சைக்கு 2,40,000 ரூபாய் தேவைப்படுவதாகவும் இதில் புதுவை முதலமைச்சர் நிதியிலிருந்து ரூ. 1,20,000 கிடைத்துள்ளதாகவும் சில இடங்களில் கடன்வாங்கி அவரே 30,000 ரூபாய் தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மீதமுள்ள ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்குத் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார் சக்திவேல். (கடிதத்துடன் தனது மருத்துவமனை ஆவணங்களையும்
இணைத்திருந்தார்)
உடனே இதுகுறித்து தனது சுவரில் நிலைத்தகவல் எழுதினார் வசந்தகுமார்,
ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை தாமதமாகிக் கொண்டிருப்பதால் உடனடியாக
அறுவைச் சிகிச்சை செய்து அந்தச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
அதனால், உதவி செய்பவர்கள் நேரடியாகவும் உடனடியாகவும் மருத்துவமனை பேரிலேயே காசோலை அனுப்புமாறு கோரிக்கை வைத்திருந்தார். அடுத்த சிலதினங்களிலேயே போதுமான பணத்தை முகநூல் நண்பர்கள் மருத்துவமனை வங்கிக் கணக்கிலும் நேரிலும் சென்று கொடுத்தனர். வசந்தகுமார் மற்றும் முகநூல் நண்பர்களான கலாரானியும் அவரது கணவரும் நேரில் சென்றும் சிறுமியை அருகில் இருந்தும்
பார்த்துக் கொண்டனர், இப்போது, சிறுமி சர்மிளா சிகிச்சை முடிந்து நலமாக இல்லம் திரும்பி விட்டார், அத்தோடில்லாமல் பாண்டிச்சேரி சென்று முதல்வர். ரங்கசாமி அவர்களைச் சந்தித்து நன்றி சொல்லி வந்திருக்கிறார்கள்.

சம்பவம் - 2
ஈரோடைச் சேர்ந்த மில் தொழிலாளியின் ஒரே மகன் சிவசங்கர். தாயார் லதா
குடும்பத்தலைவி. எட்டாம் வகுப்பு தேர்வெழுதி விட்டு 9 ஆம் வகுப்பு செல்லும் கனவுகளோடு இருந்தவனுக்கு திடீரென்று கையில் வீக்கம் ஏற்பட்டது. கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பதாகக் கூறி அந்த ஏழைப் பெற்றோருக்கு அதிர்ச்சியளித்தனர். உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு சோதனைகள் செய்த மருத்துவர்கள் குழு, ரத்தப் புற்றுநோய் தீவிரமடைந்து காணப்படுவதாகவும் பலமான வீரியமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்கட்ட சிகிச்சையின்போது, குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு தினமும் இரண்டு யூனிட் இரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினர். அதிலும் குறிப்பாக இரத்த்தில் உள்ள தட்டணுக்கள் (PLATTELET) மட்டும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து விட்டனர். சக முகநூல் நண்பர் கயல்விழி லட்சுமணன் மூலம் இதுகுறித்துத் தகவல் அறிந்த வசந்தகுமார் மருத்துவமனை விரைந்தார். சிறுவனைப்போய்ப் பார்த்தார். தைரியமளித்தார். முகநூலில் சிறுவனுக்கு ரத்தம் வேண்டும் என்பதை நிலைத்தகவலாகவும் எழுதினார். அதனைப் படித்த,நண்பர்கள் ஒரு மாதச் சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை அட்டவணை போட்டுக்கொண்டு தொடர்ந்து வழங்கினர். தவிர, வசதியில்லாத அந்தச் சிறுவனின் மற்ற மருத்துவச் செலவுகளுக்காகவும் நண்பர்கள் இணைந்து முகநூல் முலம் நிதி திரட்டினார், இவர் சொன்னதன் பேரில் மருத்துவமனைக்கு முகமே அறியாத பல நபர்கள் வந்து அந்த தாயாரிடம் பண உதவி அளித்தனர், இதன் மூலம் கிட்ட தட்ட 1 , 50 ,௦௦௦ பண உதவி கிடைத்தது. தற்போது முதல்கட்ட சிகிச்சை முடிந்து ஓரளவு உடல்நிலை தேறியுள்ள சிவசங்கர் அடுத்த கட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கிறான்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் குறிப்பிடப்படும் வசந்தகுமார் யார்? அவருக்கும்  பாதிக்கப்பட்டவர்களுக்கும்  என்ன உறவு?

வசந்தகுமார் அடிப்படையில் ஒரு கணினி வரைகலைஞர் (Graphic Designer)  தனது முகநூல் நண்பர்களுடன் இணைந்து முகநூல் நண்பர்கள் சங்கம்  அமைத்து, பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வருகிறார். மேலே கண்ட மூன்று சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் முகநூல் நண்பர்கள் சங்கத்தினர்தான். இந்தச் சங்கத்தின் பொறுப்பாளரான வசந்தகுமார் பேசுகிறார்

சங்கம் கண்ட முகநூல்
அடிப்படையில் நான் ஓர் ஓவியன்விளம்பர பதாகைகள், விளம்பர போர்டுகள் போன்றவைகளை பத்தாண்டுகளுக்கு முன் கையாலேயே வரைந்து டிசைன் செய்து வந்தேன்.  விஞ்ஞான வளர்ச்சியால் நானும் கணினி கற்று அதே வேலையை கணினி மூலம் செய்ய ஆரம்பித்தேன்.. என் வேலை பெரும்பாலும் இணையத்தை சார்ந்திருந்ததால் ஓய்வு நேரம் கிடைக்கையில் விளையாட்டாக முகநூல் வர ஆரம்பித்தேன். கிராஃபிக் டிசைனராக நான் இருப்பதால் முதன் முதலில் விளையாட்டாக நண்பர்களின் பிறந்தநாள், மணநாள் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகள் டிசைன் செய்து அதனை நிலைத்தகவலாகப் போட்டேன். அதன் மூலம் நண்பர்கள் மகிழ்ந்தார்கள். நட்பு வட்டம் பெருகியது. 
பொதுவாக முகநூல் ந்ண்பர்கள் மொக்கை போடுபவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அரட்டை அடிக்கறதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். பணி நெருக்கடிகளில் இருக்கும நண்பர்களுக்கு அதுதான் பெரிய ரிலீஃப். அதேநேரம் அரட்டை நடுவில் உருப்படியாகவும் இயங்க வேண்டியது நமது  கடமைன்னு நினைக்கிறேன்.. ஒருவகையில் அந்த அரட்டைதான், எங்கள் அமைப்பிற்கு அடித்தளம்னு கூடச் சொல்லலாம். ஒருநாள் திடீர்னு ஒரு யோசனை தோணுச்சி. முகநூல் நண்பர்களுக்கு இணையம் மூலமாகவே பட்டிமன்றம் நடத்தினால் என்ன? உடனே செயல்படுத்தினேன். முதன் முதலில் நண்பர்களை வைத்து இணையம் மூலமாகவே பட்டிமன்றம் நடத்தி அதற்குப் பரிசுகளும் அளித்தோம். இதனால் என் நட்பு வட்டம் மேலும் பெருகியது.. பெருகிய நட்பு வட்டம், இந்த மாபெரும் மீடியாவின் மூலம் நல்ல விஷயங்களை சூமூகத்துக்கு நாம் ஏன் செய்யக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியது. அதன் விளைவாக  பிறந்தநாளுக்கு வாழ்த்து அட்டை வெளியிடுவதோடு நில்லாமல் திடீர் குருதி தேவைகளையும் நிலைத்தகவலில் அறிவிப்பு செய்து சில அறுவைச் சிகிச்சைகளுக்கு குருதி பெற்றுக் கொடுத்தோம் பின்னர் வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் ஆதரவற்றோர் ஆசிரமங்களில் உணவளிக்க விரும்பினர் அதை இங்கிருந்தே நாங்கள் செய்தோம். அவற்றையும் நிலைத்தகவலாகப் போட்டு மகிழ்ந்தோம்.  அந்நிலையில்தான் நண்பர்கள் அளித்த ஆதரவு புதிய எண்ணங்களை எழுப்பியது. இதே செயலை ஏன் இன்னும் விரிவாக ஒரு பதிவு பெற்ற அமைப்பாக செய்யக் கூடாது என்று நினைத்தபோது எழுந்ததுதான் FFF .அதாவது, FACEBOOK FRIENDS FOUNDATION இந்த அமைப்பை ஒரு அறகட்டளை போன்ற கட்டமைப்புடன் நிறுவி உள்ளோம்.  தவிரஅரசில் பதிவும் செய்திருக்கிறோம். இதில் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு  9 நபர்கள் கொண்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளனர். ஷன்முகமூர்த்தி, லியாகத் அலி, எழிலன், வெங்கடேசன், ராமசுப்ரமணியராஜா, கலாராணி, அலீஸ் வசந்த், முனுசாமி முத்துராமன்  மற்றும் நான் ஆக மொத்தம் ஒன்பது நபர்கள் கொண்ட கட்டமைப்பு இது.....எனினும் அனைத்து உறுப்பினர்களுமே இங்கே நிர்வாகிகள்தான். தற்போது வரை எங்கள் சங்கத்தில் 170 உறுப்பினர்கள் உள்ளனர்...

எங்கள் வழக்கறிஞர்களாக தியாகராஜன் மோகன் (ஸ்ரீரங்கம்) தங்க கதிரவன் (நாகபட்டினம்) ஆகியோரும், ஆர்வலர்களாக மாதவன் விஜயராஜன் (மதுரை), மதன் செந்தில் (சென்னை), சிவா (திருநெல்வேலி), இளவரசன் (நாகர்கோயில்), கிரிதரன் (சென்னை), சோனா கிரண் (சென்னை) ஆகியோரும் ஆதரவாளர்களாக  டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் டெல்லி கணேஷ், பாடகர் U K . முரளி ஆகியோரும் உள்ளனர். இது தவிர, வெளிநாட்டிலும் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளனர். ஜெசுஜெயராஜ் (அபுதாபி), பாலு முனியசாமி (குவைத்), லோகநாதன் (இலங்கை), நாகூர்கனி (இலங்கை), சங்கர் அஸ்வின் (குவைத்), தமிழ்செல்வன் (கத்தார்), கன்னைய்யா (கத்தார்), பானுஸ்ரீ (மலேசியா), கபிலன் (சிங்கப்பூர்), சங்கர் மணி அய்யர் (மும்பை), முருகன் லோகநாதன் (துபாய்) ஆகியோர் வெளிநாடுகளில் நிர்வாகிகளாக உள்ளனர்.
சங்கத்துக்கு முன்பு உறுப்பினர் கட்டணம்  துவங்கும்போது வாங்கினோம், அதன் பிறகு எந்தப் பணமும் வசூலிக்கவில்லை..
பொருளுதவியைக் காட்டிலும் தற்போதைய எங்கள் தேவை உடலுழைப்பே. 
கொள்கை ரீதியான முடிவுகளோ, அல்லது பண பரிவர்த்தனைகளோ நான் தனி ஆளாக ஏதும் செய்திட இயலாத வண்ணம் சங்கம் கட்டமைக்கபட்டிருக்கிறது.. எங்கள் சங்கத்தின் பெயரைக் கூட முகநூலில் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் எங்கள் நண்பர்கள்தான். எங்கள் ஸ்லோகனான நட்பு சொல்வோம் நற்பணி செய்வோம்என்கின்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்தும் எங்கள் நண்பர்கள்தான்.

இருவர்
எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆரம்பம் முதலே ஆக்கமும் ஊக்கமும் அளித்து உற்சாகப்படுத்தி வரும் இருவரை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர்  சந்திராயன் விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். முகநூல் மூலம் அவரும் பல சேவைகள் ஆற்றி வருகிறார் அந்த அனைத்து சேவைகளிலும் எங்களையும் இணைத்து கொண்டு எங்கள் சங்கத்துக்குப் பெருமை சேர்க்கிறார், அவரோடு இணைந்து இதுவரை உயர்கல்வி கற்க வழி இல்லாத ஏழை மாணவர்கள் பலருக்கு 1,50,000 ரூபாய் வரை முகநூல் மூலமே நன்கொடைகள் பெற்று உதவி அளித்திருக்கிறோம் என்பது குறிப்பிட தக்கது.
எங்களை இன்று வரை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் மற்றொரு அன்பு நண்பர் திரைப்பட நடிகர்.  டெல்லி கணேஷ். நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான சிறு சிறு நன்கொடைகளையும் வழங்கி உள்ளார், முக்கிய நிகழ்வுகளில் நேரடியாக வந்து கலந்துகொண்டு சிறப்பு செய்கிறார்.

நம்பினார் கெடுவதில்லை
எங்களது கவனத்திற்கு வரும் விஷயங்களின் உண்மைத் தன்மையை முதலில் ஆராய்கிறோம். உதவி தேவைப்படுவது உண்மைதான் என்னும் பட்சத்தில் முகநூலில் நிலைத்தகவல் போடப்படும் அதைக் கண்ட நண்பர்கள் தானே முன்வந்து உதவிகள் அளிப்பார்கள். .எதையும் திட்டம் போட்டுச் செய்வதில்லை...   உதவி கோரி விண்ணப்பம் வந்த பிறகே அதைத் தீர்த்து வைக்கும் செயலில் இறங்குவேன். இறங்கியபிறகு வேண்டுமானால் திட்டமிடுதல் தேவைப்படலாம்.
ஒரு ஊரில் ஒருவருக்கு உதவித் தேவைப்படும் நிலையில் அந்த ஊருக்கருகில் உள்ள எங்கள் நண்பர்கள் சென்று அந்த உதவியைச் செய்து வருகிறோம், மதுரை, சேலம், காஞ்சிபுரம், பாண்டிச்சேரி உட்பட  பல்வேறு ஊர்களில்  பல்வேறு உதவிகள் செய்திருக்கிறோம். எங்களின் ஒரே  தைரியம், ஆயிரக் கணக்கான முகநூல் தோழமைகளும் தோழமைகளின் தோழமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கைவிட மாட்டார்கள்.
 முகம் காணா நட்புகளாக இருந்தவர்களை நேரில் சந்தித்த அனுபவங்களும் நிறைய. அவற்றை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.  அதேநேரம் அந்தச் சந்திப்பின்போது, சமூகத்திற்கு ஒரு நற்காரியம் செய்யும் வண்ணமே அந்த ஏற்பாடு இருக்கும்.  குறிப்பாக ரத்ததானம் அளித்தல், கண் தானம் அளித்தல், கல்வி உதவிகள் அளித்தல் இப்படி பலவாறு...”.

என்ன செய்துள்ளீர்கள்?
எங்கள் சங்கம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களுக்கு இதுவரை லட்சக்கணக்கில்  கல்வி உதவி வழங்கப்பட்டுள்ளது. பலமுறை பல்வேறு ஊர்களிலும் நண்பர்கள் ரத்த தான, கண்தான நிகழ்ச்சிகள்  நடத்தியுள்ளோம். நண்பர்களின் பிறந்தநாளின்போது ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களுடன் அன்றைய பொழுதைக் கழித்துவருவோம். முனைவர் மயில்சாமி அண்ணாதுரையின் பிறந்தநாளில் ரத்ததான முகாம் நடத்தி, குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கி அவரது சாதனைகளை அங்குள்ள குழந்தைகளிடம் எடுத்துச் சொன்னது மறக்க முடியாத அனுபவம்.. எண்ணற்றோருக்கு மருத்துவம் தொடர்பான பொருளுதவிகள் வழங்கியுள்ளோம்.  தவிரமதுரை மாநகரில் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்கும் முகமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம் நடத்தியுள்ளோம். இதில் டெல்லி கணேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

எதிர்காலத் திட்டம்
நான் முழுநேர சமூக சேவகன் அல்ல இணையத்தில் எனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றி அதில் சிறிய வெற்றியும் கண்டிருக்கிறேன் எனக்கு இன்னும் ஒரு பாதுகாப்பான, நிலையான வாழ்க்கை அமையவில்லை. ஃபிரீலேன்சர்களுக்கே உரிய வாழ்க்கைமுறைதான் அது. எனக்கு ஒரு நிலைத்த வாழ்க்கை அமையும்பட்சத்தில் , கணினியைத் தாண்டியும் என் சேவைகளை விரிவுப்படுத்துவேன்.
கடந்த ஆண்டு கணவனால் கைவிடப்பட்ட ஒரு அபலைப் பெண்ணை சரியான நேரத்தில் அவள் தவறான முடிவுக்கு போகும் முன்னர் காஞ்சிபுரம் இல்லத்தில் சேர்த்து வேலையும் வாங்கி கொடுத்து அவளது குழந்தை பள்ளியிலும் சேர்த்து விட்டதும் ஒரு திருமணம் செய்து வைத்ததை விட பத்து மடங்கு பெரிதாக கருதுகிறேன்... எதிர்காலத்தில் ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் திட்டமும் உள்ளது. சூழல் அமையும்போது, கண்டிப்பாக  சமூக அக்கறை கொண்ட நண்பர்களின் துணை கொண்டு நிச்சயம் அதைச் செய்வோம்..
எதிர்காலத்தில் ஆங்காங்கே மாவட்டங்களில் உள்ள நமது நண்பர்கள் அவர்கள் சார்ந்துள்ள தொழிலை விடுமுறை காலங்களில் ஏழை இளைஞர்களுக்கு இலவசமாக சொல்லி கொடுக்கும் திட்டம் உள்ளது...
அதன் முதல் வடிவாக அடுத்த கல்வி ஆண்டின் இறுதியில் சென்னையில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக நான் சார்ந்த தொழிலில் (போட்டோஷாப், கோரல் டிரா) ஆகிய மென்பொருள்களை என் வீட்டிற்கு வரவழைத்து நானே இலவசமாக சொல்லிக் கொடுக்கும் திட்டம் மனதில் உள்ளது.. இதுபோல் இன்னும் இதுபோல் திட்டங்கள் இருக்கு. நண்பர்கள் இருக்காங்க. முடிச்சிக் காட்டுவோம்ல?” என்கிறார் வசந்தகுமார் உற்சாகமாக..

சிலரது கருத்துக்கள் :
மயில்சாமி அண்ணாதுரை:
முகநூலை அரட்டை அடிப்பதற்கு மட்டும் இல்லாமல் அதன் மூலம் பலருக்கும் உதவுவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. வெறும் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதோடு நின்றுவிடாமல் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவற்றிற்கு இந்த பெரிய சமூக வலைத்தளத்தை இந்த நண்பர்கள் பயன்படுத்துவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
முகநூல் நண்பர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நான் கலந்துகொண்டு பேசினேன். உதவி செய்ய மனப்பான்மையுடன் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும், உதவி தேவைப்பட்டு காத்திருக்கிற உள்ளூர்வாசிகளையும் ஒருங்கிணைப்பது பற்றிக் கூறினேன்.
உரையாற்றவும், பட்டமளிப்பு விழாவுக்கும் நான் கல்லூரிகளுக்குச் செல்லும் போது அங்கு முகநூல் சங்க நண்பர்களும் வருவார்கள். நான் பேசி முடித்ததும் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என வந்திருக்கும் பெற்றோர்களுக்கு சொல்வேன். எல்லோரிடமும் உண்டியல் குலுக்கி சேகரிக்கும் பணத்தைக் கொண்டு ஒரு மாணவரையாவது நிச்சயம் படிக்க வைக்க முடியும். இந்த உயர்கல்வித் திட்டத்தை பெரிய அளவில் செய்ய விரும்பி ஆம், நம்மால் முடியும் என்ற அமைப்பையே நிறுவி அதன் மூலம் கடந்த வருடம் இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டி அதை மாணவர்களின் படிப்புக்கு கொடுத்தோம். இப்படி கல்வியுதவி மட்டுமின்றி மருத்துவ உதவியும் செய்திருக்கிர்றோம்.
சென்னையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் கழுத்தில் அடிபட்டு மருத்துவமனையில் உதவியின்றி தவிக்கிறார் என்ற செய்தியை முகநூலில் பார்த்துவிட்டு அங்குள்ள மருத்துவரான டாக்டர் மயில்வாகனன் அவர்களை அழைத்துப் பேசினேன். பின்னர் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் சிகிச்சை முடிந்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். சென்னையில் இருக்கும் அவருக்கு பெங்களூருவில் இருக்கும் என்னால் உதவி செய்ய முடிந்தது என்றால் அது முகநூலின் உதவியால்தான்.
புதிய தலைமுறைக் கல்வித் திட்டத்தைப் பற்றியும் எனது முகநூலில் குறிப்பிட்டேன். இதன் மூலம் எங்கெங்கோ இருப்பவர்கள் விண்ணப்பிக்கக்கூடும். உதவிக்காக யாரோ காத்திருப்பதை, உதவி செய்ய ஒருவர் முன்வருவதை இது போல் தெரியப்படுத்துவதன் மூலம் யாரோ ஒருவருக்கு அது நிச்சயம் வாழ்க்கையைத் திருப்பித் தரும் ஒன்றாகவோ, ஏன் வாழ்க்கையாகவோ இருக்கலாம். அவசியமான விஷயங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இன்னும் கூட நிறைய விஷயங்களை செய்ய முடியும்.
டெல்லி கணேஷ்:
வசந்தகுமாரின் அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருந்தது. ஒருத்தருக்கு ஒரு உதவி தேவையென்றதும் இவர் ஒரு ஸ்டேடஸ் போடுவார். அதைப்பார்க்கிற நண்பர்கள் அதை ஷேர் பண்ணுவாங்க. இப்படியே அந்த உதவிக் கோரிக்கை பரவும். அதைப் பார்க்கும் நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் தங்களால் முடிந்த சின்ன சின்னத் தொகைகளைக் கொடுப்பாங்க. அதையெல்லாம் சேர்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விடுவோம். இதுக்குன்னு தனி அக்கவுண்ட், கையிருப்பு கலெக்ஷன்லாம் வச்சிக்கிறதில்லே. ஒருத்தருக்கு ஒரு உதவி முடிந்தபிறகு, அடுத்தவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிதான் இந்த நண்பர்களின் நோக்கமா இருக்குது.
நானும் பலநேரங்களில் என்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடுத்திருக்கேன். இவர்களின் நிகழ்ச்சிக்காக பல ஊர்களுக்குப்போய் நானும் கலந்து கொண்டிருந்திருக்கேன். முகம் காணாத நண்பர்கள் மூலம் இது சாத்தியமாகியிருப்பதுதான் ஆச்சரியம்.

பானு ஸ்ரீ (மலேசியா பொறுப்பாளர்)
எனக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வசந்தகுமார் அண்ணனை தெரியும்..மலேசியாவில் உள்ள நண்பர்களை அழகாக ஒருங்கிணைக்கிறார். அவரது நட்புக்குப் பிறகே மலேசியாவில் உள்ள முகநூல் நண்பர்கள் பலரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றோம். என்னுடைய பிறந்தநாளுக்கு கூட வெகுதூரத்தில் உள்ள மலேசிய நண்பர்களை நேரில் சென்று என்னை வாழ்த்தும்படி அவர் சொல்லி என்னை நண்பர்கள் வந்து சந்தித்ததுண்டு. நானும் மற்ற நண்பர்களின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்னதுண்டு

தமிழ்ச்செல்வன் எம்எஸ் (கத்தார் பொறுப்பாளர்)
இங்கு சுமார் 40 நண்பர்கள் உள்ளோம். மாதா மாதம் மீட்டிங் போட்டுச் சந்தித்துக் கொள்வோம். வசந்த் சாரின் நிலைத்தகவலில் யாருக்கேனும் உதவி தேவையென்று இருந்தால் நண்பர்களிடம் பணம் வசூலித்து அனுப்புவோம். பொதுவாக இங்குள்ள நண்பர்களுக்குப் பொரளார உதவிகள் தேவைப்படாது. அவர்களுக்கு பாஸ்போர்ட் தொலைதல், ரினிவல் பிரச்சினை, தூதரகத்தின் மூலம் ஆக வேண்டிய வேலைகள்தான் இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் அவர்களுக்கு நாங்கள் உதவிகள் செய்கிறோம். இந்தச் சங்கம் இல்லாது போயிருந்தால் நண்பர்கள் ஒன்றிணைய வாய்ப்பு இல்லாது போயிருக்கும்
சக்திவேல் (சர்மிளாவின் தந்தை) :
“குழந்தையிலிருந்தே என் மகளுக்கு இருதயத்தில் ஓட்டை இருந்ததோடு, இருதய வால்வும் குறுகியதாக இருந்தது.. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து என்ற  சென்னை முகப்பேரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காட்டியபோது, மூன்றரை லட்சத்துக்கு மேல் செலவாகும் என்றார்கள். பிறகு புதுவை முதல்வரைச் சந்தித்தபோது, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் உதவி கிடைத்த்து. மீதப் பணத்துக்கு நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் நான் இருந்ததால் என் மகளின் நிலை குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டேன். மலேசியாவில் உள்ள எனது முகநூல் நண்பர் ஜெயா சிர்லி வசந்தகுமாரின் தொலைபேசி எண் மற்றும் அவரது மின்னஞ்சல் முகவரியை அளித்தார். அவரிடம் தகவல் கூறியவுடன் தனது நண்பர்களுடன் நேரில் வந்து பார்த்தார். தைரியம் அளித்தார். இதுகுறித்து அவர் ஸ்டேடஸ் போட்டவுடன் ஏகப்பட்ட நண்பர்கள் குழந்தையை வந்து பார்த்தார்கள். ரத்தம் வேண்டும் என்றவுடன் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ரத்தம் தர முன்வந்தார்கள். வசந்தகுமார், சோனாகிரண், கலாராணி, ராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்து வந்து பார்த்து உடன் இருந்தார்கள். புதுவை முதல்வரும் முகநூல் நண்பர்களும் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது...
லதா (சிவசங்கரின் தாய்) :
“அடையாறு ஆறுபத்திரிலே சிகிச்சைக்காக என் மகனைச் சேர்த்த பிறகு ஏகப்பட்ட ஃபேஸ்புக் நண்பர்கள் தினமும் தொடர்ந்து வந்து பார்த்துக்கிட்டாங்க. சிகிச்சைக்கு ரத்தம் தேவைன்ன உடனே தினமும் வந்து ரத்தம் கொடுத்தாங்க. எல்லோரும் அக்கறையா விசாரிச்சது எனக்கு ரொம்பத் தெம்பா இருந்தது. வசந்த் சாரும் அவரோட ஸ்டேடஸ் படிச்சுட்டு என் பையனை நேரில் பார்க்க வந்தவங்களும் நிறைய பண உதவிகள் செய்தாங்க. பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் என் மகனுக்கு ஏற்பட்டுள்ள நோயை எதிர்த்துப் போராட ஃபேஸ்புக் நண்பர்கள்தான் தைரியம் அளித்துள்ளார்கள். முதல் கீமோ தெரபி முடிஞ்சு அடுத்த கீமோ தெரபி விரைவில் தரப்போறாங்க. முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினரின் நன்றிகள்...