Tuesday, 17 September 2013



குழந்தைகளின் பால்யத்தைப் 

பாலைவனமாக்கி விடாதீர்கள்

(பகுத்தறிவுச் சிந்தனை இதழில் வெளிவந்த எனது பேட்டி)  

‘புதிய தலைமுறை’ வார இதழின் இணையாசிரியர் பெ. கருணாகரன் குழந்தைகளுக்காக எழுதிய சிறுகதைத் தொகுதி ‘அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின?’. வழக்கமான குழந்தைகள் கதைகளிலிருந்து மாறுபட்டு, சுற்றுச் சூழல், பிராணிகளிடம் பரிவு, மரம் வளர்ப்பதன் முக்கியம் என்று புதிய கோணத்திலும், தளத்திலும் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு கதைகளுக்கான படங்களை பள்ளிக் குழந்தைகளைக் கொண்டே வரைய வைத்திருப்பதுதான். அட்டைப் படத்தை வரைந்திருப்பவன் யுகேஜி படிக்கும் சிறுவன். இந்தப் புத்தகம் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, உள்ளிட்ட அமைப்புகளின் விருதுகளை வென்றுள்ளது. சமீபத்தில் இந்த நூலுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம்  அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை வழங்கியுள்ளது. கருணாகரனிடம் பேட்டி காண விரும்பினோம். அவரது முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் இங்கே பதில் கூறியுள்ளார்.
(புத்தகம் கிடைக்குமிடம் : அகநாழிகை புத்தக உலகம். தொடர்புக்கு :
999 454 1010, aganzhigai@gmail.com )

திருநாவுக்கரசு திருநீலகண்டன் : உங்களின் குழந்தைப் பருவம் பற்றி கூறுங்கள் 

சகோதரிகள் நிறைந்த குடும்பத்தில் நான் மட்டுமே ஆண் வாரிசு. அதனால், எனக்கு கொஞ்சம் கூடுதல் சலுகைகள் உண்டு. சகோதரிகளுக்குக் கிடைக்காத தின்பண்டங்கள் எனக்கு ரகசியமாக வழங்கப்படும். அப்போது நான் அதனை ஏற்றேன். எனக்கு ரகசியமாய்க் கொடுக்கப்படுவதை யாருக்கும் தெரியாமல் தின்றேன். ஆனால், இப்போது அதனை நினைக்கும்போது, கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவும்  அவமானமாகவும் உணர்கிறேன். என்றாலும் மனமுதிர்ச்சியற்ற அந்தக் குழந்தையின் செயல்பாட்டில் உள்ள நியாயத்தையும் ஒருபுறம் ஏற்கிறேன். மற்றபடி படிப்பில் ரொம்ப சுமாரானவன். பத்தாம் வகுப்பில் தோல்வி. என்றாலும் என் வீட்டில் என்னைப் படி, படி என்று யாரும் தொந்தரவு தரவில்லை. அதுவே எனக்குப் பிடித்தமான எழுத்துத் துறையைத் தடையின்றித் தேர்தெடுக்க்க் காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன். என் குழந்தைகளிடமும் அதிகம் எதையும் வற்புறுத்துவதில்லை. குழந்தைகளிடம் எதையும் வற்புறுத்தக் கூடாது என்பதை என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்திலிருந்து கற்றுக் கொண்டதாகவே நினைக்கிறேன்.

உங்கள் பள்ளி காலத்தில் நீங்கள் விரும்பி படித்த குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் எவர், பத்திரிகைகள் எவை ?

முதலில் பத்திரிகைகள் : கண்ணாடி, அணில், முயல், கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, பொம்மை வீடு, அம்புலி மாமா என்று நீளும் பத்திரிகைப் பட்டியலில் என் மனம் கவர்ந்த பத்திரிகை பூந்தளிர். அதுபோல் ஒரு குழந்தைகள் இதழ் இன்று வந்தாலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தோன்றுகிறது. அதில் இடம் பெற்ற படக்கதைகள் பல ‘டிங்கிள்’ என்ற ஆங்கில இதழில் இருந்து கையாளப்பட்டவை. அப்புறம் காமிக்ஸ் என்றால் முத்து காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ். இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ், டேவிட், ஜானி, ஸ்டெல்லா ஆகிய பாத்திரங்கள் என் பால்யத்தோடு பதிந்து ஒன்றிப் போன கதாபாத்திரங்கள். அப்போது படித்த எழுத்தாளர்கள் என்றால் அழ.வள்ளியப்பா, வாண்டு மாமா. இப்போது, குழந்தைகள் இலக்கியத்தில் நிறைய பங்களித்துக் கொண்டிருப்பவர்  இரா. நடராசன். அருமையான எழுத்துக்கள் அவருடையவை. இப்போது குழந்தைகளுக்கான பத்திரிகைகள் குறைந்து மறைந்து விட்டன. மிகக் குறைந்த விலைக்கு வெளியிடப்பட்ட ராணி காமிக்ஸ் கூட நின்று விட்டது.

இன்றைய குழந்தைகள் குறிப்பாக நகரத்தில் இருக்கும் குழந்தைகள் செல் போன் போன்ற மின்தொடர்புச் சாதனங்களைக் கூட எளிதாக உபயோகிக்கத் தெரிந்திருக்கிறார்கள். இந்த அறிவு முதிர்ச்சி  அவர்களுக்கான கதை எழுதுபவர்களுக்கு எப்படிப்பட்ட சவாலாக இருக்கிறது?

 ஓர் எழுத்தாளன் தகவல் சேகரிப்பதில் தன்னை அப் டு டேட் ஆக வைத்துக் கொண்டிருந்தால் அதில் சவால் ஏதும் இருக்கப் போவதில்லை. அதனை சரியான இடத்தில் சரியான வார்த்தைகளில் பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். அந்த வகையில் இன்றைய விஞ்ஞானச் சாதனங்களையும் கதைகளில் மிக எளிதாக, கொஞ்சம் ஃபேண்டஸி டைப்பில் புகுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு முதலை ஒரு மான்குட்டியைக் கவ்விக் கொண்டு  கடலுக்குள் போய் விடுகிறது. மான் தன் குட்டியைக் காப்பாற்ற வழியறியாது தவிக்கிறது. அப்போது அதற்கு நீர்மூழ்கிக் கப்பல் நினைவுக்கு வர, நீர்மூழ்கிக் கப்பலில் சென்று தன்குட்டியை மீட்டு வருகிறது. இந்தப் புனைவு வெறும் கப்ஸா போலிருக்கலாம். தர்க்கங்களைத் தாண்டியது குழந்தைகளுக்கான கதைத் தொழில்நுட்பம்.   

குழந்தையைப் பொறுத்த வரை மனிதர்களும் மரப்பாச்சி பொம்மைகளும் ஒன்றுதான். இன்னும் சொல்லப் போனால் தன் பெற்றோரிடம் பேசத் தயங்கும் குழந்தை கூட தான் விளையாடும் பொம்மையிடம் அதிகம் பேசும். அதற்கான உளவியல் காரணங்கள் பல.
இன்றைய நிலையில் குழந்தைகள் ஒன்றைப் புரிந்து கொள்வதில் படுவேகம். அதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லாம். நான் கம்ப்பூட்டரை என் 23வது வயதில்தான் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் மகனுக்கோ பிறக்கும்போதே அது சாத்தியமானது. எனவே அவற்றுடனான பழக்கம் இளவயதிலேயே கை வந்து விடுகிறது. உலக மயமாக்கல்  நகரம், கிராமம், ஏழை, பணக்காரர், முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என்பவற்றையெல்லாம் இன்று உடைத்தெறிந்து விட்டது. இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த என் மகனை விட முதல் தலைமுறையைச் சேர்ந்த என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சிறுவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறான்.

ஆர்வம் உள்ள யாரும் தனக்குரியதைக் கண்டெடுத்தே தீருகிறார். இசையுலகில் இளையராஜா என்ற ஏழைச் சிறுவன் தன் சிறுவயதிலேயே தனக்கான புல்லாங்குழலைத் தானே உருவாக்கிக் கொண்டார். ஒரு கனவும் அதில் வலிவும் அதை அடைந்து விடவேண்டும் என்கிற அடங்கா வேட்கையும் அதற்கான உழைப்பையும் ஒருவன் தரத்தயாராய் இருக்கும்போது, எந்தச் சூழலும் அதனைத் தடுத்து விடமுடியாது. எனவே எதிர்காலம் பிரகாசமாயும் நம்பிக்கைக்குரியதாயுமே இருக்கிறது. பெரியவர்களாகிய நாம் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. அது, அந்தக் குழந்தைகள் வாழ்வதற்குத் தகுதியுள்ளதாக இந்த உலகத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அவர்களின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பதே.

இன்றைய குழந்தைகளுக்கு படிப்பதற்கும், பாட்டு, நடனம், கராத்தே பிற கவர்ச்சியான, படிப்பல்லாத செயல்களுக்கும் நேரம் போதுவதில்லை. பாடமல்லாத  வாசித்தல்,  எழுதுதல், பேசுதல்  போன்றவைகளுக்கு  எவ்வளவு நேரம் ஒதுக்குதல் அவசியம் என நினைக்கிறீர்கள்?

குழந்தைக்கு எது ஆர்வமோ அதில் ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கான நேரத்தை அவர்களே ஒதுக்கிக் கொள்ளச் சுதந்திரம் கொடுங்கள். அவர்களுக்குத் திசை காட்டிவிட்டு, அவர்கள் நடந்து செல்வதை ஒரு பார்வையாளனாய் வேடிக்கைப் பாருங்கள். தடுக்கிவிழும் சூழல்களில் மட்டும் தலையிட்டுத் தட்டிக் கொடுத்துத் தூக்கிவிடுங்கள். மாறாக குழந்தையின் கைகளைப் பற்றி, நடத்திச் சென்று தனக்கு நடக்கத் தெரியும் என்கிற உண்மை புரியாதவர்களாய் தன்னம்பிக்கையற்றவர்களாய் அவர்களை மாற்றிவிடாதீர்கள்.  சுருக்கமாய்ச் சொன்னால் ஃபிரீயா வுடு மச்சி...

கருங்குளம் மா. முருகன்  : எதிர்கால இந்தியச் சமூகத்தைக் கட்டமைக்கவிருக்கும் குழந்தைகளுக்கு அவர்களை முழுமைப்படுத்த வழங்கப்பட வேண்டியவை எவை, எவை என்பவற்றை விளக்குங்களேன்

‘உலகத்தை மாற்ற கல்வியே வலுவான ஆயுதம்’ என்றார் நெல்சன் மண்டேலா. அந்தக் கல்வி, குழந்தைகளுக்கு கேள்வி ஞானத்தையும் கற்பனை வளத்தையும் வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். ஆனால், ஆமை ஓட்டுக்குள் தன்னைத் திணித்துக் கொள்வதைப்போல் புறவுலக அனுபவங்களைத் துண்டிக்கும் கத்திரியாகவே இன்றைய கல்வி உள்ளது. பாடங்கள் குழந்தைகளின் நேசிப்புக்குரியதாக அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அவற்றை சுவாரஸ்யப்படுத்தப்படுவதுடன் கற்பித்தலிலும் செய்முறை அணுகுமுறை வேண்டும். ஆனால், இன்று பள்ளிகள் கான்கிரீட் சிறைககளாகக் குழந்தைகளைப் பயமுறுத்துகின்றன. பள்ளிக்குச் சென்றவுடன் எப்போது குளோசிங் பெல் அடிக்கும் என்று குழந்தைகள் ஏங்கும் வகையிலேயே நிலைமை உள்ளது. பல ஆசிரியர்கள் சுவாரஸ்யம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களாகவே இருக்கிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு வளைப்பதற்குப் பதிலாக முறித்துவிடும் முரட்டுத்தன முயற்சிகளே அதிகமிருக்கிறது. முதுகு முறிவதற்குக் குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டையே போதுமானது. தங்கள் பாடத்தின் மீது விருப்பம் வந்துவிட்டால் குழந்தைகளை நாம் படிக்கச் சொல்லி வற்புறுத்தவே வேண்டாம். தானாகப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். ‘காலை எழுந்தவுடன் படிப்பு. பின்னர், ரிலாக்ஸ் செய்து கொள்ள பாட்டு. மாலை முழுதும் விளையாட்டு’ என்ற நிலை வந்தால், புத்தகங்களுக்குள் புதைந்து புழுங்கிச் சாகும் நிலைமை மாறும். கி.ராஜநாராயணன் ஒரு கட்டுரையில் கூறுவார் ’மழைக்காகத்தான் நான் பள்ளிக்கு ஒதுங்கினேன். அப்போது கூட நான் பாடத்தைக் கவனிக்கவில்லை. மழையைத்தான் வேடிக்கைப் பார்த்தேன்’  இந்த நிலைமை மாற பாடங்களை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்ற வேண்டியது அவசியம்.

முத்துராமலிங்கம் சுப்பிரமணியன்  : ஒரு குழந்தைக்குப் படம் பிடித்தால், கண்டிப்பாகப் பெற்றோருடன் அல்லது குடும்பத்துடன் தியேட்டர்களில் சென்று பார்க்க வேண்டிவரும்.  இருந்தும் இன்றைய சூழ்நிலையில் நல்ல கருத்துகளை கூறும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் ஏன் வருவதில்லை?

குழந்தைகள் படத்துக்குப் பெரிய வர்த்தக வாய்ப்பு இல்லை என்றே தமிழ்த் திரையுலகம் நினைக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இதுவரை வெளிவந்திருக்கும் தமிழ்ப் படங்களில் குழந்தைகளுக்காக வெளிவந்திருக்கும் படங்கள் நூறைத் தாண்டுமா என்பதே சந்தேகம்தான். அப்படி எடுக்கப்பட்ட, குழந்தைகள் படம் என்று அடையாளம் காட்டப்பட்ட படங்கள் கூட, சரியான குவியத்துடன் குழந்தைகளை அணுகியிருப்பதாகச் சொல்ல முடியவில்லை.

குழந்தைகள் சேட்டை செய்தால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் நடித்தால் அது குழந்தைகளுக்கான படம் என்கிற ஒரு நம்பிக்கை சினிமாக்காரர்களிடம் இருக்கிறது. . குழந்தைகளை இயல்புக்கு மாறாய், வயதுக்கு மீறிப் பேச விடுவதும் குழந்தைகள் படத்தின் தமிழ் அணுகுமுறைகளில் ஒன்றாக உள்ளது.  விலங்குகள் நடிக்கும் தேவர் பிலிம்ஸ் படங்களும் கூட குழந்தைகளுக்கான படம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டன. அதே படத்தில்தான் ஹீரோவும் ஹீரோயினும் கட்டிப்பிடித்து ஜலக்கிரீடை செய்வார்கள்.  
1984ல் வெளிவந்த இந்தியாவின் முதல் 3டி படமான  ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தை ஒரு முழுமையான குழந்தைகள் படம் என்று சொல்லலாம். அடுத்து, அமீர்கான் நடித்து ஹிந்தியில் வெளியான ‘தாரே ஜமீன் பர்’  படம் அற்புதமான குழந்தைகள் படம்.  மன எழுச்சியைத் தந்த படம். கற்றல் குறைபாடு ஒரு குறையல்ல. அதனை எதிர் கொண்டு வெல்லலாம் என்ற நம்பிக்கையை பாமரர்களுக்கு அளித்த படம்.  கற்றல் குறைபாடுள்ள குழந்தையிடம் அன்பு பாராட்டி எப்படி அணுக வேண்டும் என்பதை செயல்முறையில் விளக்கிய படம். தமிழில் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வூட்டும் நோக்கில் ஹரிதாஸ் என்னும் படம் வந்தது. ஆனால், அது முழுமையாக மனதைத் தொடவில்லை. 
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். “என்னுடைய படங்கள் குழந்தைகளை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன” என்று. தமிழில் அப்படி யாரும் குழந்தைகளைக் குறி வைத்துப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. சாப்பாட்டில் ஊறுகாயைப் போல் குழந்தைகள் ரசிப்பதற்காக சில காட்சிகளைச் சிலர் சேர்க்கிறார்கள்.  இன்றைய உலக மயமாக்கலில் குழந்தைகளை வாங்கும்/ வாங்க வைக்கும் இயந்திரங்களாக்கும் முயற்சியில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பதை விட, அவர்களைக் கவரும் வகையில் விளம்பரப்படங்கள்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன.

  பொதுவாகச் சொன்னால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிப்பதற்கான சில காட்சிகள் உண்டே தவிர, முற்றுமாக குழந்தைப்படம் என்று ஏதும் இல்லை.

தேனம்மை லட்சுமணன்  : கார்ட்டூன் சேனல்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ் இவற்றில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் குழந்தைகளை புத்தக வாசிப்பில் மீட்டெடுப்பது எப்படி?

படிப்பதற்கு கண்களுக்கு இட வல இயக்கம் (Eye Ball Movement) மிக முக்கியம். கவனம் 
கூர்மையாகி, இந்த இயக்கம் வேகமாகும்போது, படிப்பதும் விரைவாக இருக்கும். ஆனால், தொலைக்காட்சி பார்க்கவோ, கேம்ஸ் விளையாடவோ அந்த இயக்கம் தேவையில்லை. மேலும் இந்த இயக்கத்தையே அது மந்தமாக்கி குழந்தைகள் வேகமாகப் படிக்கும் திறனைக் குறைக்கின்றன. இதனால், கண்களின் இயக்கத்தைத் தூண்டுவதற்காகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இன்றைய நிலையில் ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைகளைக் கவனிக்க நேரம் குறைவு. இந்த நிலையில் குழந்தை சமர்த்தாய் வால் தனம் பண்ணாமல் இருந்தால் போதும் என்கிற பெற்றோரின் தப்பித்தல் மனப்பான்மையே குழந்தைகளை இத்தகைய நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருகின்றன. குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குதல் மிக முக்கியம். ஒரு புத்தகத்தைக் கொடுத்து ‘அப்பாவுக்கு (அல்லது) அம்மாவுக்குக் கண் வலிக்குது. படிச்சு சொல்லுடா செல்லம்...’ என்று வாய்விட்டுப் படிக்கச் சொல்லி கேட்கலாம். புத்தகத்தில் உள்ள ஒரு கதையைப் படித்துக் கூறினால் அதற்குப் பரிசு தரலாம். ஆனால், இதெல்லாம் அவர்களுக்காக நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியம்.

முத்துராமலிங்கம் சுப்பிரமணியன் : இன்றைய போட்டி நிறைந்த உலகில் குழந்தைகளை மார்க் வாங்கக் கூடியவர்களாக மட்டுமே பார்க்கும் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் தெரிந்தோ தெரியாமலோ அவர்களை ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுகிறது. மார்க் வாங்கினால் தான் பிழைக்க முடியும் என்பது போன்ற எண்ணங்களால் சிறு சிறு தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் தோல்வி பயத்தில் தற்கொலைகள் நிகழ்கின்றன. இவற்றை சரி செய்ய எந்தவகையான அணுகுமுறை நல்லது? எப்படி ஆரம்பிக்கலாம்?

பெற்றோர்கள், ஆசிரியர்களின் அணுகுமுறைகளே மாற்றப்பட வேண்டியவை. பெரியவர்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டு வந்தவர்கள். அதனால், குழந்தைகளைப் பெரியவர்களால் புரிந்து கொள்வது எளிது. ஆனால், குழந்தைகள் பெரியவர்களாக வாழ்ந்து பார்த்தவர்களில்லை. எனவே அவர்கள் பெரியவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓர் அதிகாரிதான். அவருக்குப் பதில் சொன்னால் போதும். ஆனால், ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைக்குத்தான் எத்தனை அதிகாரிகள். எத்தனை அச்சுறுத்தல்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று நீளும் ஆசிரியர் ஒவ்வொருவரும் குழந்தைகளின் அதிகாரிகளே. அவர்கள் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை முடிக்க வேண்டும். மதிப்பெண் எடுக்க வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்தால் தண்டிப்பார்கள். வீட்டில் திட்டுவார்கள். இவையெல்லாம் அந்தப் பிஞ்சு இதயத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த அச்சங்களால் தூக்கம் இழந்து பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல் மந்த நிலைக்குச் செல்லும் குழந்தைகளும் உண்டு.
அலுவலகம் செல்லும் தந்தைக்குக் கூட அலுவலகத்தோடு வேலைகள் முடிந்து விடுகின்றன. விட்டுக்கு வரும் குழந்தைக்கோ ஹோம் ஒர்க் என்ற பெயரில் மேலும் பணி தொடர்கிறது. பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு முன் அடித்தல், முட்டி போட வைத்தல் போன்ற தண்டனைகள் குழந்தைகளை இறுக்கமான மனநிலைக்குக் கொண்டு செல்கின்றன. பிடிவாதம், முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும் அவர்களை மாற்றிவிடுகின்றன.  இவையே பின்னர் விரக்தி மனோநிலைக்குத் தள்ளி தற்கொலை வரை கொண்டு செல்கின்றன. நாமக்கல்லில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் என் நண்பர் கூறியுள்ளார்.  இதற்கெல்லாம் மூல காரணமாய் இருப்பது மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளைக் கசக்கிப் பிழிவதுதான். மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை செக்கு மாடுகள் ஆக்க வேண்டாம். முதுமைக் காலத்தில் இனிமை தரக் கூடியது பால்ய கால நினைவுகள்தான். குழந்தைகளின் பால்யத்தைப் பாலைவனமாக்கி விடாதீர்கள்.
மதிப்பெண் எடுப்பதுதான் கௌரவம் என்ற போலி பிம்பத்திலிருந்து பெற்றோர் வெளியில் வரவேண்டும். ஆல் பாஸ் பள்ளியில்தான் குழந்தையைச் சேர்ப்பேன் என்ற மனோபாவமும் மாற வேண்டும். பாடத்தைத் தவிர, அவர்களுக்கு ஆர்வமான விஷயங்களில் அவர்கள் நேரம் செலவிடவும் அனுமதிக்க வேண்டும். பில் கேட்ஸின் வார்த்தைகளைக் கேளுங்கள் ‘நான் என் பாடங்கள் சிலவற்றில் ஃபெயிலாகி விட்டேன். என் நண்பன் எல்லாப் பாடத்திலும் வெற்றி பெற்று விட்டான். நான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அவன் அதில் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறான்’. எனவே வாங்கும் மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒருவன் செல்லும் உயரத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஒருவன் நல்ல உயரம் செல்ல வேண்டுமென்றால் அவனுக்குப் பிடித்த விஷயங்களைக் கண்டுபிடித்து சிறு வயதிலிருந்தே அந்தத் துறையில் பயிற்சியளிக்க வேண்டும்.

ரோஸலின் : முன்பெல்லாம் பள்ளிகளில் நல ஒழுக்க கல்வி வகுப்பு இருக்கும். அப்பொழுது நல்ல நல்ல கதைகளை வாசிப்பார்கள். இப்பொழுது இது போல் நிகழ்வு குறைந்து விட்டதற்குக் காரணம், மார்க் மட்டும் வாங்கினால் போதும் என்று நினைக்கும் பெற்றோரா? / புத்தகத்தில் உள்ள பாடங்களை கற்று கொடுத்தால் போதும் என்று நினைக்கும் ஆசிரியர்களா? / மார்க் மட்டும் அதிகம் பெற்று கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கும் நிர்வாகமா?

இதில் முதல் காரணகர்த்தா பெற்றோர்தான். போட்டி நிறைந்த உலகில் தன் வாரிசு அதிக மதிப்பெண் எடுப்பது கௌரவம் என்கிற பெற்றோரின் பொய்யான நம்பிக்கையே ஆசிரியர்களையும், கல்வி நிறுவனங்களையும் இயக்குகின்றன. என் பள்ளி நாட்களில் நான் மிகவும் விரும்பிய வகுப்பு நீதி போதனை வகுப்புதான். அது அபாரமான அனுபவம். தற்போது, பாடச் சுமை அதிகமாக அதிகமாக அந்த வகுப்பையே எடுத்து விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

கார்ட்டூனிஸ்ட் முருகு : விருதுகள் பல பெற்றுள்ள இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் எண்ணம் உண்டா?

அந்த ஆசை இரண்டாண்டுகளுக்கு முன்பே வந்தது. நண்பர் ஒருவரிடம் கூறி, அவரது நண்பரிடம் அதை மொழிபெயர்க்கச் சொன்னேன். ஆனால், அவர் சரியாக மொழி பெயர்க்கவில்லை. எனவே நானே அதனை மொழி பெயர்க்க நினைத்திருக்கிறேன்.

ஆனந்தன் அமிர்தன் : அடுத்த புத்தகம் எப்ப எழுதப் போறீங்க? ஏதேனும் தடையென்றால் நாங்கள் என்ன மாதிரி உதவலாம்?

பூங்குழலி  : அடுத்த குழந்தைகளுக்கான பொக்கிஷம் எப்போ சார் எழுதி வெளியிடப் போறீங்க? 

குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகலாம்.. தலைப்பு கூட ஒரு மாதிரி யோசித்து விட்டேன். ‘காக்கா ஏன் கருப்பாச்சு..?’ (கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது). காக்கா ஏன் கருப்பாகியிருக்கும்னுதான் கொஞ்சம் விஞ்ஞானப்பூர்வமா யோசிச்சிக்கிட்டிருக்கேன். ஒண்ணும் தோண மாட்டேங்குது...


Sunday, 9 June 2013

எனக்கொரு காதலி இருக்கின்றாள்

பெ. கருணாகரன்


சுரேஷ் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்கு மாறியிருந்தான். வசதியற்றவர்களுக்குப் படிப்பு என்பது பிரகாசமாய் இருப்பதில்லை. அவர்கள் படிப்பதற்கு கிடைப்பது கூட சென்ற ஆண்டு மாணவர்களின் பழைய புத்தகங்கள்தான். சுரேஷின் அப்பா ராஜாராமும் அவனுக்குப் பாதி விலையில் எங்கிருந்தோ பழைய புத்தகங்களைத்தான் வாங்கித் தந்தார்.

வகுப்பறையில் பல மாணவர்கள் பொலிவு குலையாத புதிய புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருக்கும்போது, பழைய புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பது, சுரேஷுக்கு மனத்தாழ்வாகவே இருந்தது. இருந்தாலும் அந்தப் பழைய புத்தகங்களில் ஒரு ுசுகந்த மணம் வீசுவதாகவே உணர்ந்தான் சுரேஷ். 

கடந்த ஆண்டு அந்தப் புத்தகத்தை வைத்துப் படித்தமாணவி பெயர் கமலா. ஒன்பதாம் வகுப்பு பி செக்ஷன் என்று எழுதியிருந்தது. ஒரு பெண் தொட்டுப் புழங்கிய, மார்போடு அணைத்துக் கொண்டு பள்ளிக்கு எடுத்துச் சென்றிருந்த புத்தகம் என்ற ஒரு கிறக்கம். புத்தகத்தை அடிக்கடி விரித்து முகர்ந்து பார்ப்பான்.

அவன் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற பிறகு, இரண்டு வாரங்கள் இப்படியாக ஓடின. திடீரென்று அவனுக்குள் ஒரு கவனஈர்ப்பு. கமலா எப்படி இருப்பாள்? அழகானவளா? கறுப்பா, சிவப்பா? அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ரகசியக் குமிழியிட்டது. அவள் விருத்தாசலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாகப் புத்தகக் குறிப்பு கூறியது.

எப்படி அவளை அடையாளம் காண்பது? அந்தப் பெண் யாரென்று நிச்சயம் அப்பாவுக்குத் தெரியும். அவரிடம் கேட்டால்? அவர் தவறாக நினைத்துவிட்டால்? கூடவே, அப்பாவிடம் மகன் கேட்க வேண்டிய கேள்வியா அது? எனவே ஏதாவது ’அழுகுணி வேலை செய்து தான் கமலா யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று, அன்று முழுவதும் மண்டையை உடைத்துக் கொண்டான். என்ன செய்யலாம்?

பழம் நழுவி பாலில் விழும் என்பார்கள். சுரேஷ் விஷயத்தில் அதுதான் நடந்தது. அறிவியல் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவன் அதனுள் இருந்த ஓர் அரசாங்க சாணிக் காகிதத்தால் ஈர்க்கப்பட்டான். எடுத்து ஆர்வத்துடன் பிரித்தான். அது ஜாதிச் சான்றிதழ். கோபுரச் சின்னம் முத்திரை குத்தப்பட்டு பச்சை நிற மையால் தாசில்தார் கையெழுத்துப் போட்டிருந்தார்.

கமலாவின் சான்றிதழ் அது. ஜாதியைப் பார்த்தான். தன்னுடைய ஜாதிதான் என்று தெரிந்தபோது, கமலாவின் மீது கூடுதல் ஈர்ப்பு வந்தது. 
உற்சாகமானவன் மறுநாள் காலையில் எழுந்ததும் தந்தையிடம் அந்த ஜாதிச் சான்றிதழைக் காட்டினான். “அப்பா இந்த சர்ட்டிபிகேட் நீங்க வாங்கிக் கொடுத்த புத்தகத்தில் இருந்ததுப்பா..." - அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

ராஜாராம் வாங்கிப் பார்த்தார். “என்னடா இது?"

“அந்தப் பெண்ணோட ஜாதி சர்ட்டிஃபிக்கேட்பா..."

“ஓ... மாரிமுத்து மகளோட சர்ட்டிபிக்கேட்டா?  நான் விருத்தாசலம் பக்கம் போற தேவையில்லையே..." என்று யோசித்தவர், “நீதான் தெனமும் ஸ்கூலுக்குப் போறில்ல... அப்படியே போய் கொடுத்துடு..." என்றார்.

“வீடு தெரியாதேப்பா..."

“போஸ்ட் ஆபீஸ் முன்னாடி நீல கேட் போட்ட வீடுடா... மாரிமுத்து வீடுன்னு அங்கே கேட்டால் சொல்லுவாங்க..." அவர் வெளியே சென்றார்.

’கமலா... இன்று உன்னைச் சந்திக்கப் போறேன்... மனசுக்குள் இனிப்பாகச் சொல்லிக் கொண்டான்.

சுரேஷ் போஸ்ட் ஆபீசுக்குச் சென்று சேர்ந்தபோது, காலை மணி எட்டு. அவள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன்அவளைப் பிடித்துவிட நினைத்தான். நீல நிற கேட் வீடு. ஓடு வேயப்பட்டிருந்தது. நடுத்தரக் குடும்பம்!

தயக்கத்துடன் சென்று, “சார்..." என்று அழைத்தான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கதவு திறந்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றிருந்தார்.
“நான் ராஜாராமின் மகன் சுரேஷ். நீங்க மாரிமுத்துசார் தானே...?"

“ஓ... வாப்பா... அப்பா நல்லா இருக்காரா?" என்று நலம் விசாரித்தார் மாரிமுத்து. அவனுக்குள் சந்தோஷம் பீறிட்டது.

“சார்... இந்த சர்ட்டிஃபிகேட் உங்க பொண்ணோடதா பாருங்க. புத்தகத்துக்கு நடுவில் இருந்தது..." - முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக் கொள்வது அவனுக்குக் கைவந்த கலை.

வாங்கிப் பார்த்த மாரிமுத்து, “அடடே... இதைத்தான் தேடிக்கிட்டிருந்தோம்" என்றவர், உள்நோக்கி முகம் திருப்பி, “கமலா... இங்கே வாம்மா..." என்று குரல் கொடுத்தார். அவனது இதயத் துடிப்பு எகிறியது. நீல நிறத் தாவணிச் சீருடையில் இடது காலைச் சற்று விந்தியபடி நடந்து வருகிற பெண்தான் கமலாவா?

அவனது உணர்ச்சிகள் பல்வேறு தளங்களில் கலந்து சுழன்றன. இரண்டு வாரங்களாக மனசுக்குள் பூட்டி வைத்திருந்த ரகசிய சினேகிதி மாற்றுத் திறனாளி என்கிற அனுதாபமா? ஏமாற்றமா? ஆர்வத்துக்கு விழுந்த முற்றுப்புள்ளியா? அவனுக்குள் இனம் காண முடியாத உணர்வுகள்.

“என்னப்பா?" - குரலில் இனிமை இருந்தது.

“நாம தேடிக்கிட்டிருந்த ஜாதி சர்ட்டிஃபிகேட்... இதோ இருக்கும்மா... உன் பழைய புத்தகத்தில் மறந்துபோய் வச்சுட்டே..." அவள் அதை வாங்கிப் பார்த்தாள். சுரேஷ் அவளது முகத்தைப் பார்த்தான். எவ்ளோ பெரிய கண்கள்!
சுருள் முடியுடன், சிகப்பாக, சட்டென்று சுண்டியிழுக்காத எளிமையுடன் அழகாகத்தான் இருந்தாள்.

“இவர் யாருப்பா?" என்று கேட்டாள் கமலா.

“இங்கே ராஜாராம் வருவாரில்லே, அவர் மகன்தான்..."

“ஓ" என்று கேட்டுக் கொண்டவள், சாந்தமாக அவனைப் பார்த்துவிட்டு, “தாங்க்ஸ்..." என்றாள். சுரேஷ் விடைபெற்றுத் திரும்பினான். அன்று முழுக்க வகுப்பில் அவனால் பாடத்தைக் கவனிக்க முடியவில்லை. கமலாவின் முகமே வந்து நின்றது. கடவுள் அந்தப் பெண்ணுக்கு ஏன் ஊனத்தை கொடுத்தார் என்று நொந்து கொண்டான்.

அன்று மாலை பள்ளி விட்ட பிறகு, கமலாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அவசர அவசரமாகக் கிளம்பி கடை வீதிக்கு வந்தான். பச்சை, நீல சீருடைகளில் மாணவிகள் சென்று கொண்டிருந்தனர்.

காத்திருந்தான். யார் யாரோ வந்தார்கள். கமலாவை மட்டும் காணோம். மாணவிகள் கூட்டம் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. சுரேஷ் அவநம்பிக்கையின் விளிம்புக்குப் போனபோது தான், தனது இரண்டு தோழிகளுடன் கமலா மெல்ல மெல்ல நடந்து வந்தாள். அந்த மூன்று பேரில் கமலாதான் நல்ல அழகு!

நடந்து, நடந்து அவனை நெருங்கினார்கள். கமலா தனது கவனத்தைச் சுற்றுப்புறத்தில் திருப்பாமல் லயித்துப் பேசியபடி வந்தாள். ’பார்... என்னைப் பார்...’ சுரேஷ் மனசுக்குள் அலறினான். அவள் திரும்பவில்லை. அவர்கள் அவனைத் தாண்டிச் செல்லவிருந்தார்கள்.

இனியும் தாமதியேல் என்று அவர்களைக் குறுக்காகக் கடந்து சென்றான் சுரேஷ்  - ஸ்டைலாகச் செருமிக் கொண்டு. இப்போது கமலா நிமிர்ந்து பார்த்தாள். அவளது முகத்தில் ஆச்சரியம்! இவன் எங்கே இங்கே? ஆச்சரியத்துக்கு நடுவே மெல்லிய புன்முறுவல் ஓடியது அவளது முகத்தில்! சுரேஷ் இறக்கை இல்லாமலே பறந்தான்.

அன்றிலிருந்து கமலாவை தரிசிக்கும் வழக்கம் தொடர்ந்தது. இதற்காகக் காலையிலேயே கிளம்பி வந்து கடைவீதியில் நின்று விடுவான் அவன். கமலா கடந்து போன பிறகு, அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடி தாமதமாய்ச் சென்று முட்டி போடுவான். மாலையிலும் பள்ளி விட்டவுடன் கடைவீதிக்குப் பறந்து விடுவான் புத்தகப் பையுடன்.

கமலாவின் ஸ்பரிசம் படிந்த புத்தகங்களைப் பிரித்துப் படிக்கும் போது, அவனுக்குப் பரவசமாய் இருக்கும். புத்தகத்தைத் தடவிப் பார்க்கின்ற ஆசையிலேயே அடிக்கடி படிக்க ஆரம்பித்தான். அப்படிப் படிக்க ஆரம்பித்ததன் விளைவு, எட்டாம் வகுப்பில் இருபதாவது ராங்க்கில் இருந்தவன் ஒன்பதாம் வகுப்பில் மாதாந்திரத் தேர்வில் மூன்றாவது ராங்க் எடுத்தான். வகுப்பு ஆசிரியர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.

கமலாவுடனான பார்வை சினேகிதம், காலை ஒரு மேனியும் மாலை ஒரு வண்ணமுமாக வளர்ந்தது. கடைவீதியில் பூக்கடைகள் மிகுந்திருக்கும் பகுதியில்தான் சுரேஷ் தினமும் வந்து நிற்பான். அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது, கமலாவும் சரியாக அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள். இப்படியாக இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டதில்லை. ஆயிரம் கோடி மொழிகளைப் பார்வையிலேயே பேசிக் கொள்ளும்போது, வாய்மொழி தேவையோ?

கமலாவின் மீது தனக்கிருப்பது காதல் உணர்வு என்று நினைத்தான் சுரேஷ். எதிரெதிர் பால் ஈர்ப்பும் அவள் மாற்றுத் திறனாளி என்ற அனுதாபமும் தன் மனதில் காதலை ஆழ வேரூன்றி வைத்திருப்பதாக நினைத்தான்.

காதல் என்பது நீருக்குள் சிக்கிக் கொண்ட காற்றுக்குமிழ் போல வெளியேறவே துடிக்கும். அவளைப் புகழ்ந்து யாராவது பேச மாட்டார்களா... பொழுதெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கும். காதலின் இந்த சர்வதேச விதி சுரேஷுகும் பொருந்தியது. கமலாவைப் பற்றி தனது வகுப்பு நண்பர்களிடம் கூற விரும்பினான். எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்று கூறிக் கொள்வதில் உள்ள ஹீரோத்தனமான பெருமிதம் அவனை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளத் தூண்டியது.

ஆனால், அது எவ்வளவு அபாயகரமானது என்பது முட்டாள் சுரேஷுக்கு அப்போது புரியவில்லை. காதலிப்பவர்களில் பெரும் பகுதியினர் முட்டாள்கள்தானே! உணர்ச்சி வசப்படும் முட்டாள்கள்!

பொதுவாக மீசை அரும்பத் தொடங்கும் எட்டாம், ஒன்பதாம் வகுப்புப் பருவங்களில் - தனக்கு ஒரு பெண் நண்பி அல்லது காதலி இருப்பதாகப் பெருமையடித்துக் கொள்வது அந்தப் பொடிசுகளுக்குப் பெருமிதத்துக்குரிய விஷயம். தங்களைப் பெரிய மனிதன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான எத்தனிப்பு. தான் அழகானவன் என்பதை நிரூபித்துக் கொள்வதற்கான துடிப்பு! சுரேஷும் அதிலிருந்து விலகிவிடவில்லை.

அவனது நண்பர்கள் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பெண்ணுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

“என் ஆள் வனஜாவை நேத்து கோவில்ல பார்த்தேன். கோயில்ல சுத்திக்கிட்டு வரும்போது கரண்ட் ஆஃப் ஆயிடுச்சி... சரியான சந்தர்ப்பத்தை விடுவேனா? இறுக்கிக் கட்டிப் பிடிச்சு கன்னத்திலும் கழுத்திலும் முத்தம் கொடுத்துட்டேன்" என்பான் ராஜா.

அவனுக்குப் பதில் கூறுவதுபோல, சுந்தரம் சொல்லுவான். “என் ஆள் சுமித்ரா என் வீட்டுக்குப் பக்கத்து வீடுதானே... போன வாரம் எங்க வீட்ல எல்லோரும் பக்கத்து ஊர்ல கல்யாணத்துக்குப் போயிருந்தாங்க...நான் மட்டும்தான் வீட்ல தனியா இருந்தேன். அப்போதுதான் சுமித்ரா என் வீட்டுக்கு வந்தாள். கதவைப் பூட்டிக்கிட்டு ரொம்ப ஜாலியா இருந்தோம்..." என்பான்.

எல்லாமே கடைந்தெடுத்த கட்டுக்கதைகள். மீசை அரும்பத் துடித்தாலும் சமூகம் பொடியன் என்று அலட்சியப்படுத்துவதை ஜீரணிக்க முடியாமல் பின்னிப் புனையப்படும் பொய்கள். அந்த வயசுக்காரர்களுக்கு அதில் வக்கிரம் கலந்த இதம்.

இப்படித்தான் ஒருநாள் நண்பர்கள் கற்பனைச் சரடுகளை விட்டுக் கொண்டிருந்தபோது சுரேஷும் அதே அளவு கற்பனைகளுடன் தன் கதையைச் சொன்னான்.

“இதுமாதிரி விஷயங்கள் உங்களுக்கு மட்டும்தான் இருக்கா? எனக்கும் இருக்குடா..." என்று ஆரம்பித்தான்.

இத்தனை நாளாய் சைவப் பூனையாய் வாய் மூடியிருந்தவன், வாய் திறந்ததும், மற்றவர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர்.

“என்னடா சொல்றே?"

“நான் சொல்ற பொண்ணு கமலா. கேர்ள்ஸ் ஸ்கூல்ல டென்த் படிக்கறா..." என்றான் சுரேஷ்.

“உன்னைவிட வயசுல பெரியவளா?" என்றான் ராஜா.
“காதலுக்கு வயசாடா முக்கியம். மனசுதான் முக்கியம்" என்றான் சுரேஷ், பெரிய மனிதத் தோரணையுடன். மற்றவர்கள் எதுவும் பேசவில்லை. அவன் தொடர்ந்தான்.

“நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டீப்... நான் எதைச் சொன்னாலும் அவள் செய்வாள்... எங்கள் ஜாதிதான். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள்... எங்கம்மாவை அத்தைன்னுதான் கூப்பிடுவாள்... எங்கம்மாவும் அவளை மருமகளேன்னுதான் கூப்பிடுவாங்க... நானும் அவங்க வீட்டுக்குப் போவேன்..." என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிடத் தொடங்கினான் சுரேஷ்.

“அவளை எங்களுக்குக் காட்டுவியாடா?" என்றான் ரவி. மற்றவர்கள் தாங்கள் காதலிக்கும் அல்லது சில்மிஷம் செய்ததாகக் கூறும் பெண்ணை அதுவரைக் காட்டியதில்லை. காட்டவும் முடியாது. காரணம் அப்படி யாருமே கிடையாது.
ஆனால், சுரேஷ் காட்டுவதாக உறுதியளித்தான். “ஒரு கண்டிஷன்...  நீங்க இருக்கும்போது, அவள்கிட்டே பேச மாட்டேன். அப்புறம் கோவிச்சுக்குவா.." என்றான் சுரேஷ் ஒரு தற்காப்புடன்.

அன்று மாலை பள்ளிவிட்டதும் ராஜா, ரவி, சுந்தரம், மோகனை அழைத்துக் கொண்டு சுரேஷ் கடை வீதிக்கு வந்துவிட்டான். காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில், கமலா தனது தோழிகளுடன் வந்தாள்.

“மூணு பேரில் யாருடா உன் ஆள்?" என்றான் ரவி.

“நடுவில்... காலை விந்தி விந்தி நடந்து வர்றாளே... அவள்தான்..." என்றான் சுரேஷ்.

“பிடிச்சதுதான் பிடிச்சே... நல்ல மாதிரியா பிடிக்கக்கூடாதா?" என்று கேட்டான் சுந்தரம். சுரேஷ் அவனை முறைத்தான்.

கமலா நிமிர்ந்து சுரேஷைப் பார்த்தாள். அவனுக்கு அருகில் நின்ற அவனது நண்பர்களைப் பார்த்ததும், முகத்தில் மிரட்சி காட்டினாள். அவர்கள் சென்ற பிறகு சுந்தரம் கேட்டான் சீண்டலாக.

“போயும் போயும் ஒரு நொண்டிப் பெண்தான் உனக்குக் கிடைச்சாளா?"
அவ்வளவுதான். கடைவீதி என்பதையும் மறந்து கண்மூடித்தனமாகக் கோபம் கொண்டான் சுரேஷ். சுந்தரத்தின் கன்னத்தில் சரேலென்று அறைந்தான். சுந்தரத்துக்குக் கண்கள் கலங்க... அவமானத்திலும் கோபத்திலும் அவன் முகம் சிவந்தது.

பாய்ந்து சுரேஷின் சட்டையைப் பிடித்தான்.

“ஏண்டா அடிச்சே என்னை?" சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

“ஏண்டா அவளை நொண்டின்னு சொன்னே?"

“விந்தி நடக்கிறவளை வேற எப்படிடா சொல்ல...?" என்று இளக்காரமாகப் பதில் சொன்னான் சுந்தரம். இந்தப் பதில் சுரேஷை மேலும் எரிச்சலாக்கியது. சட்டையைப் பிடித்திருந்த சுந்தரத்தின் கைகளைத் தட்டிவிட்டு, அவனது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.

“சுரேஷோட மோதாதே... சுடுகாட்டுக்குப் போகாதே.." என்று அந்த நேரத்திலும் பஞ்ச் டயலாக் பேசினான் சுரேஷ். முகத்தில் வாங்கிய குத்திலிருந்து சற்று நிதானித்த சுந்தரம், இப்போது சுரேஷின் முகத்தில் குத்தினான். ஆவேசமாக பதிலுக்கு சுரேஷ் அடிக்க கடைவீதி வேடிக்கை பார்த்தது.

“சண்டை வேண்டாம்டா... வந்துடுங்க போகலாம்..." ரவி பரபரத்தான். அதற்குள் பெரியவர்கள் சிலர் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டனர். அப்போதுதான் தனது உதடுகளில் ஈரம் உணர்ந்த சுரேஷ், தொட்டுப் பார்த்தான். பிசுபிசுப்பாய் ரத்தம். சுந்தரம் குத்தியதில் அவனது உதட்டோரம் கிழித்து விட்டிருந்தது.

“டேய் உன்னைப் பின்னாலே கவனிச்சுக்கிறேண்டா..." - சவால் விட்டான் சுரேஷ்.

மறுநாள் வகுப்பில் சுரேஷும் சுந்தரமும் பேசிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் சுந்தரம், வகுப்பில் எல்லோரிடமும் கமலா விஷயத்தைப் பரப்பிவிட்டான். சுரேஷ் துணுக்குற்றான். கமலா விஷயத்தில் அவசரப்பட்டு விட்டதாக வருந்தினான்.

சுந்தரம் அத்தோடு நிற்கவில்லை. விளையாட்டுப் பாடவேளையில் சுரேஷின் புத்தகங்களில் ’கமலா என்று எழுதப்பட்டிருந்த இடங்களை எல்லாம் கிழித்தெறிந்தான். ஆனந்தக் களிப்படைந்தான்.

கமலா பெயர் கிழிக்கப்பட்ட புத்தகங்களைப் பார்த்த சுரேஷுக்கு ரத்தக் கண்ணீர் வராத குறைதான். சுந்தரம் தான் கிழித்திருப்பான் என்று அவனால் யூகிக்க முடிந்தது. ஆனால், இது விஷயமாக நேரடியாக  மோதுவது சரியாக இருக்காது என்று முடிவு செய்தான். அவனுக்குள் அக்னிக் குழம்பு கொதிக்கலானது.

அன்று மாலை. கடைவீதியில் சுரேஷ் நின்று கொண்டிருந்தபோது கமலா வந்தாள் - தோழிகளுடன். அவனைப் பார்த்ததும் அவளது கண்கள் கலங்கின. சுரேஷ் பதறினான். கமலா தன் தோழிகளிடம் கண் காட்டிவிட்டு சுரேஷை நெருங்கினாள்.

“அன்னிக்கு உங்கக்கூட வந்தவங்க யாரு? அதிலே கருப்பா இருந்தவன் காலையிலே நான் ஸ்கூலுக்கு வர்றப்போ என்னைப் பார்த்து நொண்டின்னு சொல்லி கிண்டல் பண்றான்" - கமலாவின் விழிகளில் தாரை தாரையாய் நீர். கமலா விறுவிறுவென நடந்து சென்றாள்.

சுரேஷ் துயரமானான். அவள் சொன்ன ’கருத்தவன்’ சுந்தரம்தான்! ‘டேய், சுந்தரம்...’ என்று பற்களைக் கடித்துக் கொண்டான். விஷயம் அத்தோடு முடியவில்லை. சுரேஷ், கமலா விஷயம் அவனது வகுப்பறையிலிருந்து பள்ளியிலும் பரவலானது. ஆசிரியர்களின் காதுகளிலும் அவை போய்ச் சேர்ந்தன.

“சுரேஷ்... பெரிய மனுஷனாயிட்டே போலிருக்கு" என்று சில ஆசிரியர்கள் ஜாடையாகக் கிண்டலடித்தார்கள். கணக்கு வாத்தியார் ராமச்சந்திரன் காதிலும் விஷயம் போய்ச் சேர்ந்தபோது அதிர்ந்தார். அவர் கமலாவின் தந்தை மாரிமுத்துவுக்குக் குடும்ப நண்பர்.

அன்று மாலையே அவர் மாரிமுத்துவிடம் விஷயத்தைக் கூற அவர் கொதித்தார். கமலாவை அழைத்து கோபத்தில் அவளிடம் குதித்தார். மறுநாள் காலையிலேயே சுரேஷின் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.

“வாங்க மாரிமுத்து..." வரவேற்றார் ராஜாராம்.

“வரவேற்பெல்லாம் அப்புறம்... உன் பையனைக் கூப்பிடுய்யா..."

“குளிக்க ஏரிக்குப் போயிருக்கான்... என்ன விஷயம்?" என்றார் ராஜாராம்.

“நீயும் நானும் சம்பந்தியாகணும்னு துடிக்கிறான் உன் மகன்..." என்று கூறிய மாரிமுத்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி முடித்தார்.

அப்போதுதான் சுரேஷ் அங்கு வந்தான். மாரிமுத்து படபடவென்று பொரிய ஆரம்பித்தார். “ஏண்டா, என் பொண்ணு உன்னைக் காதலிக்கறதா ஊர் முழுக்கச் சொல்லி வச்சிருக்கியேடா... என்னிக்காவது என் மகள் உன்கிட்டே பேசியிருக்காளா? உடல் ஊனமான பொண்ணு, ஏதோ பள்ளிக்கூடத்துக்குப் போய் படிச்சா, எதிர்காலம் நல்லா இருக்கும்னு அனுப்பினா, அது உனக்குப் பிடிக்கலையா? உன் வயசுக்கு இதெல்லாம் தேவையா?" - படபடவென பொரிந்தவர்,

“ராஜாராம், உன் முகத்துக்காக இவனை விடறேன்... இல்லே, போலீஸ்லே சொல்லி முட்டியைப் பேர்த்திருப்பேன்..." - கர்ஜித்து விட்டுப் போனார் மாரிமுத்து. அவர் போன பிறகு, ராஜாராம்  தழுதழுக்கப் பேசினார்.

“டே... தலைக்கு வளர்ந்துட்டே... உன்னை அடிக்க முடியாது. நான் சொல்றதைக் கேட்டுக்கோடா... நமக்கு சொத்து எதுவும் இல்லே... நீ படிச்சு வளர்ந்து பெரிய ஆளா வருவேன்னு நினைச்சேன். அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கிடாதேடா... மறுபடியும் இதுமாதிரி ஏதாவது கேள்விப்பட்டேன்... உயிரோட என்னைப் பார்க்க முடியாது..." அவரது கண்கள் கலங்கி விட்டிருந்தன.

அன்று சுரேஷ் வகுப்புக்குச் செல்லவில்லை. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு, மாரி ஓடையில் சுற்றினான். அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தடியில் புத்தகப் பையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து, வேப்ப மரத்தின் மேலே வெறித்தான்.

கமலாவுடனான நட்பு, இனிமையானதாகவும், புனிதமானதாகவும் அவனுக்குப்பட்டது. கமலாவை இனி பார்க்க முடியாது. அதை அவளும் விரும்ப மாட்டாள். மீறிப் போய்ப் பார்த்தால், மீண்டும் வீட்டில் பிரச்சினை வெடிக்கும்!

காவியமாய் வரவேண்டிய உறவு - முற்றுப்புள்ளியாகி விட்டதே. அவசரப்பட்டு நண்பர்களிடம் கமலாவைப் பற்றிக் கூறியிருக்கக் கூடாது. கமலாவின் சிரிப்பும் புன்னகையும் அவன் மனதில் ஆழப் புதைந்து கிடந்தன.
ரகசியம் காக்க வேண்டிய விஷயம். உள்ளுக்குள் வைத்து ஆனந்தப்பட வேண்டிய உணர்வு. அதனால்தான், அதை அகம் என்று  இலக்கியம் பேசுகிறது. கூடா நட்பு காரணமாக இன்று எல்லாமே அவஸ்தையாகிப் போனது.

இதற்கெல்லாம் காரணம்... அவனது கோபம் சுந்தரத்தின் மீது முகாமிட்டது. ’சுந்தரம்.. அவளை நொண்டி என்றா கேலி செய்தாய்? நாளை உலகம் உன்னையும் அப்படித்தான் பேசப் போகிறது!’

சுரேஷ் கோபத்தை மறைத்தான். மறுநாளிலிருந்து நல்ல பிள்ளையாய் பள்ளிக்குப் போய் வந்தான். சுந்தரத்தின் கணக்கை, தீர்ப்பதற்கான நேரத்துக்காகக் காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான கிரிக்கெட் மேட்ச்! எதிரணியில் சுந்தரம்!

சுரேஷ் பந்து வீச வந்தான். எதிரில் மட்டை பிடித்தவன் சுந்தரம். தனக்கான நேரம் வந்து விட்டதாகவே நினைத்தான் சுரேஷ். கால்கள் பூமியில் புதைந்து விடுமளவுக்கு ஆவேசமாக ஓடி வந்த சுரேஷ் மொத்த பலத்தையும் கொடுத்து அழுத்தமாய் வீசினான். அளவு குறைவாகச் சென்ற பந்து... தரையில் ‘பிட்ச்’ ஆகாமல் நேராக சுந்தரத்தின் இடதுகால் முட்டியில் பட்டு எகிறியது.

பந்து பட்ட விநாடியே, வலியில் சுந்தரம் மட்டையை தூர வீசினான். முட்டியைப் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து புரண்டான். கதறினான். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பந்துக் கிண்ண மூட்டில் ஜவ்வு கிழிந்து, சில நுணுக்கமான எலும்புகள் நொறுங்கிவிட்டிருந்தன. 

மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் இருந்தான் சுந்தரம்.
“முன்புபோல காலை மடக்கி நீட்ட முடியாது. நடப்பதும் சற்று விந்தி விந்திதான் நடக்க வேண்டும்" என்று கூறிவிட்டார் டாக்டர். சக மாணவர்களுடன் சுரேஷ் சுந்தரத்தைப் பார்க்கச் சென்றபோது, சுந்தரம் அவனைப் பார்த்த பார்வை, “பாவி... இப்போ உனக்கு திருப்திதானே..." என்று கேட்பதுபோல இருந்தது!