Friday, 21 September 2012

ரஜினி கொடுத்த இரண்டு லட்சம்..!



பெ. கருணாகரன் 

‘பாபா’ திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். படையப்பா படத்துக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம். எதிர்பார்ப்புக்குப் கேட்க வேண்டுமா?
பல பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘குமுதம்’ இதழில் பொறுப்பாசிரியராய் இருந்தேன்.  குமுதம் சினிமாப் பகுதியின் இன்சார்ஜாகவும் அப்போது இருந்தேன். குமுதம் சினிமா என்று தனியாக ஒரு இதழ் வெளியிடத் திட்டம் இருந்ததால், ஏழு சினிமா நிருபர்கள். ‘பாபா’ படம் பற்றிய பிரத்யேகத் தகவல்களை அள்ளி அள்ளி கொடுத்தோம்.

நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை எங்கள் நிருபர் ஒருவர் பாபா படத்தில் தொடர்புடைய ஒருவரிடம் ‘ஏதாவது லேட்டஸ்ட் டெவலப்மெண்ட் உண்டா?’ என்று கேட்பதற்காக போன் செய்தபோது, எதிர்முனைக்காரர் அவசரமாக போனை கட் செய்தார். சிறிதுநேரத்தில் அவரே லைனில் வந்தார்.  

‘சாரோடு டிஸ்கஷனில் இருந்ததேன். அதான் பேச முடியலை…’ என்றவர், சில தகவல்களைக் கூறினார். அது, பாபா படத்தின் முதல் சண்டைக் காட்சி. அதில் ரஜினி வில்லன்களை நோக்கி நடந்து வருவது போன்று சாதாரணமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த டைரக்டர் ஷங்கர், ரஜினி சாரின் ஷூவிலிருந்து தீப்பொறி பறப்பதுபோல் கிராஃபிக்ஸ் செய்யலாம் என்று ஐடியா கொடுத்திருப்பதாகத் தகவல் கூறினார். இதுபோல் படத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் அவ்வப்போது லைவாக வந்து கொண்டே இருந்தன. நாங்களும் தொடர்ந்து வெளியிட்டோம். அப்போது ரஜினி நடந்தாலும் செய்தி ; உட்கார்ந்தாலும் செய்தி!

ரஜினிக்கு ‘பாபா சினிமா…. சினிமா…’ பாடல் காட்சியில் தோள்பட்டை நழுவிவிட்டது. ரஜினியை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷ் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு அவரும் விஷ் செய்வதால் அவருக்குக் கை வலிப்பதே காரணம் என்று சின்ன சின்ன தகவல்களைக் கூட, பாபா பக்கங்கள் என்று அதற்கென்று தனியாக பக்கங்களையே ஒதுக்கி வெளியிட்டோம். படத்தைப் பற்றி எந்தத் தகவல் கிடைத்தாலும் அதனை மிஸ் செய்யவே இல்லை..
குமுதம் ஒருபக்கம் என்றால், விகடனும் அசரவில்லை. தன் பங்குக்கு அவர்களும் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். குமுதமும் விகடனும் போட்டி போட்டுக் கொண்டு தகவல்களை வெளியிட்டன. விகடன் பெங்களூருக்கே நிருபர்களை அனுப்பி ரஜினி, மனிஷா கொய்ராலா பைக் சவாரியைப் படம் எடுத்து ஸ்பெஷல் ஸ்டோரியே பண்ணியது. பாபா படம் சரிவரப் போகவில்லை. அதற்குக் காரணம், படத்தின் நம்பகத் தன்மையில்லாத கதைதான் என்றாலும் மீடியாக்கள் கொடுத்த ஓவர் பில்டப்பும் இதற்கு மிக முக்கியமான காரணம்.

இந்த நிலையில்தான் ‘குமுதம் ரிப்போர்ட்டரில்’ பாபா பஞ்ச்’ என்கிற போட்டி வைத்தோம். அந்த ஐடியா என்னுடையது. ‘பாபா படத்தில் ரஜினி எந்த மாதிரி பஞ்ச் டயலாக்குகள் பேசுவார்? வாசகர்களே எழுதுங்கள். பஞ்ச்களை ரஜினியே தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புண்டு’ என்று அந்தப் போட்டிக்குச் சிறிய கமர்சியல் கவர்ச்சியும் கொடுத்தோம்.

கிட்டதட்ட 4000 வாசகர் பஞ்ச் டயலாக்குகள் வந்து குவிந்தன. அவற்றில் நான் சுவையான ஐம்பது பஞ்ச்களை மட்டும் தேர்வு செய்தேன். அவற்றை கம்போஸ் செய்து, ‘அன்புள்ள ரஜினி சாருக்கு, இத்துடன் நாங்கள் அறிவித்த பாபா பஞ்ச் போட்டிக்கு வாசகர்கள் எழுதியிருந்த பஞ்ச் டயலாக்குகளை இணைத்துள்ளோம்.  சிறந்தவற்றை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பகிறோம்.’ என்று ஒரு கடிதத்தில் நான் கையெழுத்திட்டு, நானும் நிருபர் இரா. ரவிஷங்கரும் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்று, ரஜினி ரசிகர்  மன்றத் தலைவர் சத்யநாராணாவைச் சந்தித்துக் கடிதத்தையும் பஞ்ச் டயலாக்குகளையும்  கொடுத்தோம்.

அவற்றை ரஜினி சாரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கண்டிப்பாகச் சேர்ப்பிப்பதாகக் கூறினார் சத்யநாராயணா. பட டிஸ்கஷன், ஆர்ட்டிஸ்ட் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கும் ரஜினி இதனைக் கண்டுகொள்ளவா போகிறார் என்று எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அதேநேரம் முயற்சி செய்து பார்ப்போமே என்கிற முனைதல் அது.

கடிதம் கொடுத்து இரண்டு நாட்கள் கழிந்தது. நான் அதனை மறந்து என் கேபினில் ஒரு மேட்டரை எடிட் செய்து கொண்டிருந்தபோது, போன் மணி அடித்தது. எதிர்முனையில் ஒரு குரல். (அவர் பெயர் ஆறுமுகம் என்று நினைவு).

‘நாங்க ரஜினி சார் வீட்லேர்ந்து பேசறோம். சார் உங்கக்கிட்டே பேசணுமாம்….’ நான் லைனில் ஆவலுடன் காத்திருந்தபோது, லைன் இணைப்பு கட் ஆனது.
எனக்குப் படபடப்பு எகிறியது. போன் அருகிலேயே தவிப்புடன் காத்திருந்தேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு. முதல் ரிங் ஒலித்து முடிப்பதற்குள் பாய்ந்து எடுத்து காதுக்குக் கொடுத்தேன். சில விநாடிகள் இடைவெளியில் அந்தக் காந்தக் குரல்.

‘நான் ரஜினி பேசறேன்…’ – அந்த நிமிடத்தின் சந்தோஷம் சொல்லில் எழுத இயலாதது. எதிர்முனையில் கேட்ட காந்தக் குரலில் நான் திகைத்து, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, “வணக்கம் அண்ணே…” என்று சொல்லி வைத்தேன். அலுவல் பூர்வமான உரையாடல்களில் ‘சார்…’ என்று அழைப்பதுதான் முறையானதாகும். ‘அண்ணே’ என்பது என்னையும் அறியாமல் நாக்கில் வந்து உட்கார்ந்துகொண்ட வார்த்தை.

ரஜினி தன் ஸ்டைலில் படபடவென்று தொடர்ந்தார். “கருணாகரன்…. வாசகர் பஞ்ச் ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு வாசகரும் என் மீதான தங்கள் அன்பை பாசத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைத்துமே சூப்பர்ப். ரசிகர்களுக்கு நன்றி. ஆனால், இந்த பஞ்ச் டயலாக்களை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காதுன்னு நினைக்கிறேன். அது தேவையில்லாத யூகங்களுக்குத்தான் வழி வகுக்கும்.
அதனால் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கிட்டே சொல்லிவைக்கிறேன். படத்தின் இயக்குநரான அவர் செலக்ட் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்…” என்றார் ரஜினி.
 “உங்கள் பேட்டி வேணும்ணா…” என்றேன்.

“ஹா… ஹா… இப்ப டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. படத்தின் வேலையில் பிஸியாக இருக்கேன் கருணாகரன். இன்னொரு முறை பார்க்கலாம்…” என்றார்.

ரஜினி, தான் தேர்வு செய்ய வேண்டாம் என்று நினைத்திலும் ஒரு காரணம் இருக்கவே செய்தது. காரணம் வந்திருந்த பஞ்ச் டயலாக்குகளில் பல அரசியல் தொடர்பானவை. அவற்றை ரஜினி தேர்வு செய்திருந்தால் அவர் இன்னாரை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்கின்ற யூகங்களைக் கிளப்பிவிடும் என்பதால்தான் அந்தச் சூழலை அப்போது அவர் தவிர்த்தார் என்று நினைக்கிறேன்..

ஓட்டல் அருணாசலாவில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைச் சந்தித்தேன். வாசகர்கள் எழுதிய அந்த பஞ்ச் டயலாக்குகளை மிகவும் பாராட்டினார். தொடர்ந்து முயன்றால் அவர்களில் பலர் சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்றார். நான் அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ‘பாட்ஷா’ ‘பாபா’ இரண்டுமே உச்சரிப்பில் ஒரே சாயலில் உள்ளனவே…. இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குநர்.  
அப்படியென்றால், இந்தப் படத்திலும் ரஜினி சாருக்கு தாதா கேரக்டர் தானா?’ என்றேன்.

“தாதா கேரக்டர்தான். ஆனால், இது வேறு. இதுக்குமேல் அதைப் பற்றிப் பேச முடியாது. படத்தைப் பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளட்டும்….’ என்று சஸ்பென்ஸ் காட்டினார். பிறகு அவர் தேர்ந்தெடுத்த 21 பஞ்ச் டயலாக்குகளைக் கொடுத்தார்.

ஆபீஸ் வந்து சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசியது, வெளியில் கேட்டது என்று பல விஷயங்களைச் சேர்த்து, ‘பாபா…. வெளிவராத ரகசியங்கள்’ என்று குமுதத்தில் கவர்ஸ்டோரி எழுதினேன்.  பிறகு, சுரேஷ் கிருஷ்ணா தேர்வு செய்த 21 பஞ்ச் டயலாக்களையும் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிட்டோம். அவற்றில் சூப்பர் பஞ்ச் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து, வெளியிட்டோம். அந்த சூப்பர் பஞ்ச், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவேன்...’

டயலாக்குகள் இடம்பெற்ற ரிப்போர்ட்டர் இதழ் வெளிவந்த அன்று மதியம் ஒரு போன். ‘பாபா’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் துரை பேசினார். ‘இஷ்யூவில் வெளிவந்திருக்கிற ஒவ்வொரு டயலாக்கும் ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்...’ என்று கூறி நிறுத்தினார்.

‘அதனால்...? சொல்லுங்க சார்....’ என்று ஆர்வம் காட்டினேன்.

‘பாபா’ ஷூட்டிங் நடக்கிற கேம்ப கோலா வளாகத்துக்கு சாயங்காலம் வாங்க.... ஒரு சஸ்பென்ஸ்....’ என்று கூறிவிட்டு, போனைத் துண்டித்தார்.

தாங்க முடியாத ஆர்வத்தோடு, மாலையில் நானும் இரா. ரவிஷங்கரும் கேம்பகோலா வளாகத்துக்கு விரைந்தோம். காம்பவுண்டுக்கு வெளியே திருவிழாப்போல் மக்கள் கூட்டம். செக்யூரிட்டிகளின் பலத்த பாதுகாப்பு. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி.
துரை ஏற்கெனவே கூறியிருந்ததால் நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். வளாகத்திற்குள் நுழைந்தது நமது வாகனம். நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிறச் சட்டையுடன் நம்மை வரவேற்றார் துரை.

‘என்ன சார் சஸ்பென்ஸ்?’ என்றேன் ஆவலாக.

‘பஞ்ச் எழுதிய ஒவ்வொரு வாசகருக்கும் ரஜினி சார் சிறப்புப் பரிசாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். இருபத்தொரு வாசகருக்கும் தலா பத்தாயிரம் வீதம் மொத்தம் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் பரிசு. அதற்கான டிமாண்ட் டிராஃப்ட்கள் இதோ...’ அவரது படக் கம்பெனியான ‘லோட்டஸ் இன்டர் நேஷனல்’ முகவரியிட்ட கவர்களில் டி.டி.களை வைத்து என்னிடம் ஒப்படைத்தார். வாசகர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தேன்.

‘அதுமட்டுமல்ல. ஒவ்வொரு வாசகருக்கும் அவர் தன் லெட்டர் ஹெட்டில் ‘நீங்கள் எழுதிய ‘பாபா பஞ்ச்’ மிக அருமை. அதைப் படத்தில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறேன். தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் நன்றி’ என்று எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்...’ என்று கூறிய துரை, ரஜினி சார் எழுதிய அந்தக் கடிதங்களையும் என்னிடம் ஒப்படைத்தார்.

‘சார்... இதையெல்லாம் ரஜினி சாரே தன் கைப்பட வாசகர்களுக்கு கொடுத்தால் ஹைலைட்டாக இருக்குமே....’ என்றேன்.

‘அவர் படத்தில் முழு கவனமாக இருக்கிறார். அதனால், அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமே...’ என்றார் பொறுப்புள்ள நிர்வாகத் தயாரிப்பாளராக.

பரிசு பெற்ற ரஜினி ரசிகர்களைச் சந்தித்து அவர்களது பேட்டிகளையும் வெளியிடலாம் என்று நினைத்து, எங்கள் செய்தியாளர்களை மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பியபோது, ஒரு நெகிழ்ச்சியான உண்மை புரிந்தது. டயலாக்குகள் எழுதிய பலரும் அடித்தட்டு மக்கள். நடுத்தர வர்க்கம். ஆட்டோ டிரைவர், சர்வர், நடைபாதை கடை வியாபாரி, மளிகைக்கடைக் கூலி என்று பல்வேறு ரகத்தினர். இவர்கள் பரிசுப் பணத்தைத் தங்கள் வாழ்க்கைத் தேவைக்காகவும் மகனின் உயர் கல்விக்காவும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகச் சொன்னபோது, மிகவும் மனம் மகிழ்ந்தேன். மூன்று டயலாக்குகளை எழுதி முப்பதாயிரம் பரிசு பெற்ற நடைபாதைக் கடை வியாபாரியான பெரம்பூர் வாசகர் அப்துல் ரஹ்மான் அந்தப் பணத்தை முழுவதுமாக தனது பிசினஸில் இறக்கித் தனது பிசினஸை விரிவுபடுத்தினார். அவரைச் சந்தித்தபோது, அவரும் அவருது மனைவியும் கண் கலங்கினர். இதெல்லாம் குமுதம் மூலம் நடந்த விஷயங்கள். குமுதத்தில் இல்லாது போயிருந்தால் இதெல்லாம் எனக்குச் சாத்தியமில்லை. குமுதம் நிறுவனத்துக்கு நன்றி.

‘பாபா’ பட ஷூட்டிங் முடிந்தபிறகு வைத்த பிரஸ் மீட்டில் ரஜினி, ‘பாபா பஞ்ச்’ போட்டியைப் பற்றி குறிப்பிட்டதுடன் அவற்றில் சில டயலாக்குளைப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

   படத்தில் பயன்படுத்தப்பட்ட சில டயலாக்கள்
  1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்
  2. பாம் போட்டால்தான் வெடிக்கும். இந்த பாபா சொன்னாலே வெடிக்கும்
  3. நான் ஒதுங்கினா ஒன்பது அர்த்தம் இருக்கும். இறங்கினா எண்பது அர்த்தம் இருக்கும்
  4. நாம நினைச்சதெல்லாம் நடக்காது. நல்லதை நினைச்சால் நடக்காம இருக்காது.
  5. நான் வரவேண்டிய நேரம் வந்துடுச்சி. நீ போக வேண்டிய நேரம் நெருங்கிடுச்சி
  6. இந்த பாபாவுக்கு கால்ல விழறவனையும் பிடிக்காது. காலை ாவார்றவனையும் பிடிக்காது.
  7. பாபாவுக்கு சீட்டு கொடுக்கவும் தெரியும். சீட்டைக் கிழிக்கவும் தெரியும்
  8. நான் எந்தப் பக்கமும் சாயாத பாபா
  9. நான் நினைச்சா சொன்ன மாதிரி. சொல்லிட்டா முடிஞ்ச மாதிரி
‘பாபா’ படம் நினைவுப் பெட்டகத்தில், நிறைந்து கிடக்கும் வைரப் பொக்கிஷம்.



Tuesday, 18 September 2012

மழை நாட்கள்…!




பெ. கருணாகரன் / சிறுகதை

சூரியன் காயவில்லை. மந்தமாக இருந்தது. மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது, ஊர் சற்று இருளடைந்தே தெரிந்தது. தூரத்தில் விருத்தகிரீஸ்வர்ர் கோயில் சாம்பல் கூம்பாய்க் காட்சியளித்தது. நேற்று இரவு பெய்த மழையின் மிச்ச சொச்ச மேகங்கள் வானத்தை மூடியிருந்தன.

மாடியிலிருந்து பார்த்தபோது, ஊரே கழுவிவிட்ட மாதிரியிருந்தது. பார்ப்பதற்கு விருத்தாசலம் ஊட்டி மாதிரி காட்சியளித்தது. 

ஜில்லென்று குளிர்க்காற்று வீசியது. லேசாகச் சாரல் அடிக்கத் தொடங்கியது. மீண்டும் மழை பொழியப் போகிறது. கீழே இறங்கிவிட வேண்டியதுதான். அப்போது கிழக்குத் திசையின் கீழ் வானத்தில் சின்னதாய் ஒரு மின்னல் முணுமுணுத்தது.

மின்னல்... மறக்க முடியாத அந்த நாள்! பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருந்த அரை டிராயர் நாட்கள். முனிசிபல் பள்ளிக்கு நண்பர்களுடன் ஒன்றாகத்தான் போவேன். என்னுயிர்த் தோழன் சம்பத். எப்போதும் தோளின்மேல் கைபோட்டுக் கொண்டு சேர்ந்துதான் பள்ளிக்குப் போவோம். வீட்டுக்கு வருவோம். தோழன் தோளில் கைபோட்டுப் பழகாதவர்கள் பால்யத்தை முழுமையாய் ருசிக்காதவர்கள்.

இரண்டு பேருக்கும் துண்டு ஃபிலிம் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். ரஜினி அப்போதுதான் ஃபீல்டில் நுழைந்து கலக்கிக் கொண்டிருந்தார். அன்று அவன் ’16 வயதினிலே’ ரஜினி ஃபிலிம் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். மரத்தடியில் ரஜினி உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரியான ஃபிலிம் அது. ‘டேய்... எனக்குக் கொடுடா...’ என்று கெஞ்சிப் பார்த்தேன். ‘கொடுக்க முடியாது...’ என்று மறுத்துவிட்டான்.

அவன்மேல் எனக்கு எரிச்சலானது. அவன் பேச்சு ‘கா’ விட்டேன். மதியத்திலிருந்து அவனுடன் பேசவேயில்லை. சாயங்காலம் வானம் இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்கூல் க்ளோசிங் பெல் அடித்தபோது, மின்னலும் இடியும் போட்டியிட, மழை வீறத் தொடங்கியது.
புத்தகப் பையைத் தலைக்கு வைத்துக்கொண்டு, எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பினோம். சம்பத் முன்னால் ஓடத் தொடங்க, நான் இடைவெளி விட்டு அவனுக்குப் பின்னாலேயே ஓடத் தொடங்கினேன். கொஞ்ச தூரம்தான் சம்பத் ஓடியிருப்பான். அப்போது, ஒரு மின்னல்... தொடர்ந்து காது பிளக்கும் இடி. என்ன நடந்ததென்று தெரியவில்லை. ‘அம்மா...’ என்று அலறிக்கொண்டே சம்பத் சுருண்டு விழுந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முகத்தில் வழிந்த மழைநீரைத் துடைத்துக்கொண்டே அருகில் போய்ப்பார்த்தால், அவன் கரிய நிறத்தில் விரைத்துக்கிடந்தான். ‘கா’ விட்ட வீறாப்பையெல்லாம் மறந்து ‘சம்பத்... சம்பத்...’ என்று கூப்பிட்டுப் பார்த்தேன். அவனிடம் எந்த அசைவும் இல்லை. அதற்குள் கடைத்தெருவில் அனைவரும் கூடிவிட, நான்தான் சம்பத்தின் வீட்டுக்குப் போய்த் தகவல் சொன்னேன். பதறிக் கொண்டு ஓடி வந்தார்கள். அவனது அம்மா, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாள்.

சம்பத் தலைச்சன் பிள்ளை என்பதால், அவன் மீது இடி விழுந்துவிட்டது என்றார்கள்.  எனது அம்மா என்னை அணைத்துக்கொண்டாள். ‘ரெண்டு பேரும் தோள்ல கைபோட்டுக்கிட்டு ஒண்ணாத்தானே சுத்துவானுங்க.... இவன் எப்படி தப்பிச்சான்?’ என்று வாத்தியார்கள் வியந்தார்கள்.

சம்பத்தின் மரணத்துக்குப் பிறகும் கூட, மழை என்னை பயமுறுத்தும் விஷயமாக ஆகிவிடவில்லை.

மழை என்றும் என்னால் வெறுக்க முடியாததாகவே இருந்தது. மேகம் சூழ்ந்து நாலு தூறல் போட ஆரம்பித்தாலே போதும், ஃபிரெண்ட்ஸ்கள் எல்லாம் சேர்ந்துவிடுவோம். மழையில் இறங்கி ஒரே கும்மாளம்தான். ‘மழையில் ஆடாதடா... ஜுரம் வந்திடும்’ என்று எல்லோர் வீட்டிலும் ஏகத்துக்குக் கத்துவார்கள். அவற்றை யார் கண்டுகொண்டார்கள்? குதி குதியென்று குஷிதான்!

மாடி வீட்டு மூர்த்தி மட்டும் வீட்டுக்குள்ளிருந்து நாங்கள் விளையாடுவதை ஏக்கமாக வேடிக்கை பார்ப்பான். மழையென்றல்ல... எப்போதும் அவன் அப்படித்தான். அவனது அம்மா அவனை விளையாட விடுவதில்லை. எங்களுடன் சேரக் கூடாதென்று அவள் தடுத்து வைத்திருந்தாள். எங்களுடன் அவன் சேர்ந்தால் கெட்டு விடுவானாம்.

அன்றொருநாள்... ஆலங்கட்டி மழை பெய்தது. தட் தட்டென்று கல்லால் அடிப்பதுபோல் ஆலங்கட்டிகள் தரையில் வந்து விழுந்தன. ஆலங்கட்டிகளை சீசாவில் போட்டு வைத்தால் அந்தத் தண்ணீர் தேள்கடிக்கு மருந்து என்றார்கள். நான் குடையுடன் மழைக்களத்தில் இறங்கினேன். குடை பொத்துக்கொள்ளுமோ என்று நினைக்கும்படி வேகமாக மழை குடையில் டிரம்ஸ் வாசித்தது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகள்  ஐஸ் கட்டிகள் மாதிரிதான் இருந்தன. பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டேன். ஜில்லென்றிருந்தது.

சாரலாய் வீசிய மழை சற்று முதிர்ந்து தூரலாய் விழத் தொடங்கியது. காற்று ஈரத்தைச் சுமந்துவந்து உடம்பில் பூசியது. உடல் சிலிர்த்தது. மூக்குக்குள் நமநமவென்று உபாதை உணர்ச்சி. உடலுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் மழை என்பது சந்தோஷம்தான். விளையாடும் பருவம் என்றல்ல, எப்போதாக இருந்தாலும் மழையை வேடிக்கை பார்ப்பதைப் போன்ற ஆனந்தம் உண்டா?

பகலில் மழை பெய்தால் விளையாடலாம். இரவில்? இரவில் மழை பெய்தால் பிரச்சினைதான். வீடு ஒழுகும். தூங்க வேண்டுமே! பகல் மழை என் பால்யத்தில் அமுதம் பொழிந்த்தென்றால், இரவு மழை திராவகம் ஊற்றியது.

சிறியதான சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒழுகும் இடங்களுக்கு நேராக அம்மா பாத்திரங்களை நகர்த்தி வைத்துக்கொண்டிருப்பாள். பித்தளை, சில்வர், அலுமினியம் என்று விதவிதமானவை. மழையின் வேகத்துக்கேற்ப ஒழுகும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகப்படும்.

பாத்திரங்களில் விழுந்து எழும் நீர்ச்சொட்டுக்களின் தாளலயமும் மாறும். நான் சிறிய மூங்கில் குச்சியை எடுத்துப் பாத்திரங்களின் விளிம்பில் டொங்… டொங் என்று தட்டுவேன். ‘டேய்… சும்மா இருடா…’ என்று அம்மா செல்ல எரிச்சலைக் காட்டுவாள். ஒரு பாத்திரம் மழை நீரால் நிரம்பிவிட்டதென்றால்,அதை எடுத்துவிட்டு அம்மா அந்த இடத்தில் வேறு பாத்திரம் வைப்பாள்.

இந்த வேடிக்கை கொஞ்சநேரம்தான். எனக்குத் தூக்கம் வரும். வீட்டிலிருக்கும் பெஞ்சுக்கு மேலே இரண்டு குடைகளை விரித்து, அம்மா பிடித்துக்கொண்டு பெஞ்சின் ஓரமாய் உட்கார்ந்திருக்க, அவள் மடியில் நான் படுத்துக்கொண்டு தூங்குவேன். அப்பா ஒரு மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு, பீடி புகைத்துக்கொண்டே மேலே வெறிப்பார். ஏக்கப் பெருமூச்சு அவரிடமிருந்து கிளம்பிவரும்.

அப்பாவைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கும். மழை அவருக்குக் கவலையைக் கொடுக்கும். வியாபாரம் பாதிக்கப்பட்டு வருமானம் போய்விடுமே… வியாபாரம்..? பெரிதாக ஒள்றுமில்லை – பெட்டிக்கடைதான்.  மழையைத் திட்டுவார். அந்த அளவில் அவருக்குத் திருப்தி. வீட்டுக் கூரையை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் அவரால் அது முடிந்ததில்லை. சிலநேரங்களில் பேய்த்தனமாக மழை பெய்யும்போது, அம்மா என்னைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டுக்குப் போகச் சொல்லுவாள். நான் போக மாட்டேன்.

மழை பெய்த மறுநாள்…. அம்மா ஈரமான விறகுகளை வைத்துக் கொண்டு, சொத சொத அடுப்பில் சோறு சமைக்க, ஊதுகுழலை வைத்து ஊதிக்கொண்டு புகையுடன் போராடுவாள். நான் அவளது முந்தானையைப் பிடித்துக்கொண்டே, பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். புகையில் அம்மா இருமுவாள். எனக்கும் இருமல் வரும்.
‘போ அந்தப் பக்கம்….’ என்று விரட்டுவாள். நான் நகராமல் அங்கேயே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். புகையும் அடுப்பு சிறிது சிறிதாக எரிய ஆரம்பித்து, பானை சூடாகி சாதம் பொங்க ஆரம்பிக்கும். நான் ‘பொங்கலோ பொங்கல்…’ என்று கூவுவேன்.

‘சனியனே… இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே….’ என்று அம்மா எரிந்து விழுவாள்.

“சனியனே…. மழை தூறுதில்லே…. ஆடாதடா…. உள்ளே வா…” – கீழே என் மனைவி என் மகனைக் காய்த்துக் கொண்டிருந்தாள். காலங்கள் மாறினாலும் அம்மாக்களும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் மாறுவதேயில்லை. இன்னும் இருபதாண்டுகள் கழித்து, என் மகனுக்குள்ளும் இதுபோன்ற நினைவுகள்…. புனைவுகள் வரும் போலும்.

மழை வலுக்கத் தொடங்கியது.  நான் மாடியிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினேன்.

Friday, 14 September 2012

மாய வலை




சிறுகதை/ பெ. கருணாகரன்

“ஏன் தேவா இப்படி குடிச்சு வீணாப் போறே...?” என்றாள் சோனா.

“நீ இப்ப என்ன சொல்ல வர்றே?” முகம் நிமிர்த்திக் கேட்டான் தேவா.

“குடிக்கிறதை நிறுத்தச் சொல்றேன்... நீ குடிச்சு சாதிச்சதென்ன...? ஆபீசுக்குத் தண்ணியடிச்சுட்டு வந்து போன மாசம் மெமோ வாங்கினே.  உன் ரெக்கார்ட்ல பிளாக் மார்க்... நியாயமா உனக்குக் கிடைக்க வேண்டிய ப்ரொமொஷன் பரமசிவத்துக்கு கிடைச்சிருக்கு.
அவனோட டிசிப்ளின் மேனேஜ்மெண்ட்டுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ திறமையானவன். ஆனால், டிசிப்ளின் இல்லாதவன். போர்டு மீட்டிங்கில் உனக்கு ஃபேவராக யாரும் பேசலை தெரியுமா...?”

“லுக் சோனா... எனக்கு ப்ரைவஸி முக்கியம்... என் சுதந்திரத்தில் யார் தலையிடறதையும் அனுமதிக்க மாட்டேன். பல தடவை என்கிட்டே இதைப் பற்றிப் பேசிட்டே. நானும் பதில் சொல்லிட்டேன். இந்த விஷயத்தில் நீ தலையிடாதே...” கோப்பையிலிருந்த அந்தத் திராவகத் திரவத்தின் கடைசித் துளிகளை வயிற்றுக்குக் கொடுத்தான்.

சோனாவின் குரலில் கெஞ்சல். “விட்டுடு... இந்தக் கேவலத்தை விட்டுடு...  உன்கிட்டே திறமை இருக்கு. டிசிப்ளின் இருந்தால்தான் லைஃபில் உயர்வு, மரியாதை வரும். இந்த வருஷம் விட்டுப் போன ப்ரோமோஷனை அடுத்த வருஷமாவது நீ வாங்கணும்...”

சோனா கூறிக் கொண்டிருக்கும்போதே, தேவா பாட்டிலில் இருந்த சரக்கைக் கோப்பையில் சரித்தான். பிறகு அதை வாய்க்கும் கொடுத்தான்.

“ப்ரொமோஷனாவது, புண்ணாக்காவது... எனக்கு அதெல்லாம் பெரிசில்லே... எனக்கு எது பிடிக்குமோ அதன்படி வாழ விரும்பறேன். எனக்கு இது பிடிக்குது. இதில் கிடைக்கிற சந்தோஷம் பற்றி உனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்கணும்னா வா... கம்பெனி தா... ரெண்டு பெக் அடி...”
“கொடுமைடா சாமி...” என்று காதை மூடிக்கொண்டவள், பிறகு கேட்டாள்.

“என் வீட்டில் எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க...”

கோப்பையை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்தான். “உனக்கு ஒரு லவ்வர் இருக்கிற விஷயத்தை அவங்ககிட்டே சொல்ல வேண்டியதுதானே.”

“அதுக்காகத்தான் உன்கிட்டே பேச வந்தேன். குடிக்கிறதை நிறுத்து.”

“நான் குடிக்கறதை நிறுத்துறதுக்கும் நாம கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்...?”
“இருக்கு... எந்தப் பொண்ணும் தன் புருஷன் குடிகாரனா இருக்கறதை விரும்பமாட்டாள். நானும் விதிவிலக்கில்ல...”
“எல்லாம் தெரிஞ்சுதானே நீ லவ் பண்ண ஆரம்பிச்சே...?”

“ஆமா... தப்புதான்... ஃபீல் பண்றேன். முன்னாடியெல்லாம் வாரத்துக்கு ஒரு தடவைன்னு இருந்தது. இப்போ தினமும்னு ஆகிப்போச்சு. அடிமை ஆயிட்டே. உடம்புக்குக் கேடு. அந்தஸ்துக்குக் கேடு... இந்த சனியனை விட்டொழி... நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.”

“என்ன அட்வைஸா...? லவ்வராக இருந்தாலும் உனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. அதைத் தாண்டி உள்ளே நுழையாத...”

“கடைசியா கேட்கறேன்... குடிப்பதை நிறுத்துவியா, மாட்டியா?”
தேவா ஆக்ரோஷமாய் எழுந்தான்.

“ந்நோ... முடியாது. என் சன்டே மூடை ஸ்பாயில் பண்றதுக்காகவே புறப்பட்டு வந்தியா?”
சோனா எழுந்தாள்.

“போறேன் தேவா... இந்த நிலையில் நாம ரெண்டு பேரும் லவ் பண்ணுறதில் அர்ததமே இல்லே... உனக்கு சாராயம்தான் ப்ரையாரிட்டி. சாராய பாட்டிலேயே கட்டிக்கிட்டுத் தூங்கு. இது மாதிரி தொடர்ந்து குடிச்சிட்டிருந்தே நீ நாசமா போயிடுவே... ஒரு பயலும் உன்னைச் சீந்தமாட்டான்...”

“சர்தான் போடி... தர்மபத்தினி... சாபம் கொடுக்கறா... நீ இல்லேன்னா எவளும் கிடைக்க மாட்டாளா என்ன..? சீக்கிரம் இடத்தை காலி பண்ணு...” உள் நுழைந்த திரவச் சாத்தான் கொக்கரித்தது.
முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு குன்றிப்போன உணர்வுடன் வெளியேறினாள் சோனா.

மறுநாள் அலுவலகத்தில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இது நிழல் யுத்தமா...? நிஜயுத்தமா..? அவளுக்குப் புரியவில்லை. அவனிடம் பேசவில்லையே  தவிர, அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. பேசத் துடித்தது மனசு. அவன் மீதிருந்த கோபம் கடிவாளம் போட்டது.

இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தன. திடீரென்று அந்தச் சம்பவம் நடந்தது. தேவா கம்பெனிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான். தண்ணியடித்து விட்டு ரோட்டில் இறங்கி ரகளை செய்ய, போலீஸ் அவன் மீது நியூசென்ஸ் கேஸ் போட்டது. கம்பெனியோ அவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

தட்டுத் தடுமாறி தேவா நடந்து கொண்டிருந்தான். தார்ச்சாலை பொதக் கொதக் என்று உள்ளே வாங்குவது போல உணர்வு. டிஸ்மிஸ் ஆகி இரண்டு வாரங்கள் விளையாட்டாய் ஓடிவிட்டன. தினமும் தீர்த்த யாத்திரை!  பகல்... இரவு என்ற கணக்கு இல்லாமல்!

வேலை இல்லாததால். ஞாயிற்றுக்கிழமை எது என்று கூட அடையாளம் காண முடியாத குழப்பம். இதற்கிடையில் முதல் தேதி வந்து பயமுறுத்தியது. மாதா மாதம் சுளையாய் முப்பதாயிரம் ரூபாய். அது இப்போது இல்லை. வங்கி பேலன்ஸும் பேலன்ஸ் இழந்து தடுமாறியது. பணம் இல்லாமல் வாழ முடியுமா? பொருளாதார நிர்ப்பந்தம் அவனைப் பயமுறுத்தியது.

வேறு சில கம்பெனிகளில் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டான். அவனது டிசிப்ளின், தகுதியின்மையாக குறுக்கே நின்றது. அறைக்கு வந்தபோது உறக்கமே வரவில்லை. அழுகை வந்தது. குடிக்க வேண்டும் போலிந்தது. மீதம் வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் குடித்தான். அழுகை அதிகரித்தது. மனசு உறுத்தியது. வாழ்க்கை அவ்வளவு தானா? சோனா சொன்ன மாதிரி நான் நாசமாகப் போய்விடுவேனா? என் சாப்டர் க்ளோஸ்?

மல்லாந்து படுத்து உத்தரத்தை வெறித்தான். இந்த நிலைமைக்கு தான் வரக் காரணம்? - யோசித்த போது விடை கிடைத்தது. எழுந்து சென்று முகம் கழுவினான். அந்த ஊர் அவனுக்கு ஏனோ பிடிக்காமல் போனது. வேறு எங்காவது போய்விடத்  தீர்மானித்தான். அவன் செய்த இரண்டாவது தீர்மானம் குடிக்கக் கூடாது.

இது நடந்து எட்டாண்டுகளுக்குப் பிறகு, எக்கனாமிக் டைம்ஸில் அவனது பேட்டி வெளியாகியிருந்தது. சாஃப்ட்வேர் பிஸினஸில் மும்பையில் முன்னணி நிறுவனம் என்று அவனது கம்பெனியைப் புகழ்ந்து தள்ளி அறிமுகம் செய்திருந்தார்கள். தேவா தனது பேட்டியில்,
“நான் இந்த அளவுக்கு முன்னேறியதுக்குக் காரணம் ஒரு பெண். லவ் ஃபெயிலியர் ஒரு ஆணை தேவதாஸாகத்தான் மாற்றும். ஆனால், என் லவ் ஃபெயிலியர் என்னை உயர்ந்த நிலைக்குக்கொண்டு வந்திருக்கு. நான் எதிர்காலத்தில் நாசமா போயிடுவேன்னு என் லவ்வர் சொன்னாள். அப்படி இல்லை, நான் வாழ்ந்து காட்டறேன் பார் என்கிற வைராக்கியத்தோடு வாழ்க்கையைத் திட்டமிட்டேன். அதனால்தான் சாஃப்ட்வேர் பிஸினஸில் என்னால் முன்னணிக்குவர முடிந்தது.  இதற்கு நான் அந்தப் பெண்ணுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்று கூறியிருந்தான்.

பேட்டி வெளிவந்த அன்று... மதியம் போன் அடிக்கவே, எடுத்தான். மறுமுனையில் சோனா!
“தேவா... எப்படி இருக்கே?” என்றாள்.

“நல்லா இருக்கேன். நீ எப்படி சோனா இருக்கே...?”

“ஃபைன். உன் பேட்டி படிச்சேன். எனக்குத்தான் நன்றி சொல்லணும்னு சொல்லியிருந்தே... சிரிச்சுட்டேன்.  நான் உன்கிட்டே சொன்ன சென்ஸ் வேறே...  நீ அதைப் புரிஞ்சுக்கிட்டது வேற மாதிரி... ஓ.கே. நீ ஆள் எப்படி இருக்கே..? போட்டோவில் பார்த்தேன் கன்னம் உப்பியிருக்கு... தொப்பை போட்டுட்டியா என்ன?”

“நோ... நோ... ஆல்வேஸ் ஸ்லிம்தான்....”

“கல்யாணம்...?”

அவள் கேட்டதும் தயங்கினான்.  என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான். ஏதோ ஒரு உணர்வு; உந்துதல்.

“ம். ஆயிடுச்சி...” என்றான்.

“தேவா நாம சந்திக்க முடியுமா? சென்னை வந்தால் என்னை வந்து பாரேன்...” - நுங்கம்பாக்கத்தில் ஒரு முகவரி கொடுத்தாள்.

நுங்கம்பாக்கத்தின் இருதயப் பகுதியில் அந்தத் தனி பங்களா உயர்ந்து நின்றிருந்தது. குறைந்தது பத்துகோடி ரூபாய் மதிப்பிருக்கும். ஆச்சரியத்துடனும் சந்தேக்துடனும் காரிலிருந்து இறங்கினான் தேவா. வாட்ச்மேனிடம் பெயர் சொல்ல, “மேடம், உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க...” என்று ரெடிமேட் பதில் சொன்னான்.

கேட் திறக்க... உள்ளே நுழைந்தான். பரந்து கிடந்த புல், பூச்செடிகளுக்கு நடுவே உட்கார்ந்திருந்தது பங்களா. போர்டிகோவை ஒட்டிய பால்கனியில் தேவதை கணக்காக சோனா. “வா தேவா...” என்று கோல்கேட் பற்கள் தெரிய வரவேற்றாள்.

புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, படிகளில் ஏறினான். முன்னிலும் கொஞ்சம் குண்டடித்து அழகு கூடியிருந்தாள் சோனா.

“உன் வொய்ஃபைக் கூட்டிட்டு வரலே...?” சோனா கேட்டாள்.

“அவளுக்கு வேற ஒரு வேலை இருக்கு... அதான் வர முடியலை...” அவள் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான். தொடர்ந்து, “இந்த வீட்டில் நீ மட்டுமா இருக்கே?” -கல்யாணம் ஆயிடுச்சா என்பதன் மறைமுகக் கேள்வி.

“எஸ். வேலைக்காரங்க இருக்காங்க.  துணைக்குப் புத்தகம், டி.வி.  பெரும்பான்மையான நேரங்கள் பிஸினஸில் போயிடும். குறையொன்றுமில்லை...” என்றாள்.

“நான் டிஸ்மிஸ் ஆன பிறகு என்னை ரூமுக்கு வந்து ஒரு தடவைகூட நீ பார்க்கலே... அதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன் தெரியுமா?”

“தப்பு தேவா... பல தடவை நான் உன் ரூமுக்கு வந்தேன். ஆனால், நீ ரூமிலேயே இல்லே. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு நீ காலி பண்ணிட்டதா சொன்னாங்க... அதுக்கப்புறம் நீ எங்கே போனேன்னு தெரியலை. அதைவிடு, நீ மட்டும் என்னவாம்? ஆபீசுக்குப் போன் பண்ணிப் பேச வேண்டியதுதானே...”

“டிஸ்மிஸ் ஆகி ரோட்ல நின்ன நான், எந்த முகத்தோட ஆபீஸில் பேசறது சொல்லு..? சாஃப்ட்வேர் பிஸினஸ் ஆரம்பித்த பிறகு, ஆபீஸில் உன்னைப் பார்க்க வந்தேன். நீ சூஸைட் அட்டெம்ட் பண்ணி, உயிர் பிழைச்சு வேலையை ரிஸைன் பண்ணிட்டதா சொன்னாங்க... என்ன ஆச்சு?”
சோனா அமைதியாகச் சொன்னாள்.

“ஒரு சன்டேயில் நீ என்னை அவமானப்படுத்தி  அனுப்பிய பிறகு, உன்மேல் எனக்கு வருத்தம். அதே நேரம் உன்னை என்னால வெறுக்கவும் முடியலைடா... ஏன்னா, உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகி நாம ஒண்ணு சேருவோம்கிற நம்பிக்கை இருந்துச்சி... ஆனால், நீ ஊரை விட்டுப்போன பிறகு, எல்லாத்துக்கும் காரணம் நான் தானோன்னு உறுத்தலாயிருச்சி... பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன். அப்போதான் தூக்க மாத்திரை சாப்பிட்டு செத்துப்போக முயற்சி பண்ணினேன். ரூம்மேட் காப்பாத்திட்டா... ஃப்ரெண்ட்ஸ் அட்வைஸ் பண்ணினாங்க.

தனிமையில் செல்ஃப் அனலைஸ் பண்ணிப் பார்த்தேன். என்னை மதிக்கத் தெரியாத, என் கருத்தைப் பரிசீலனைக்குக் கூட ஏற்பத் தயாரில்லாத உனக்காக நான் சூஸைட் பண்ணிக்க முயன்றது முட்டாள்தனம்னு பட்டது. இருந்தாலும் உன்னை மறக்க முடியல. அதுக்குக் காரணம் என்னன்னு யோசிச்சேன். என் மைண்ட் ரொம்ப ஸ்பேஸியஸ் ஆக இருந்தது. அதனால்தான் நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன்னு தெரிஞ்சது. மூளையை டைட் ஷெட்யூல்ல வச்சுக்கத் தீர்மானிச்சேன். அதற்கு ஒரே வழி, பிஸினஸ்... உன் ஞாபகங்களை எனக்குள் கிளறிவிட்ட ஆபீஸ் வேலையை ரிஸைன் பண்ணிட்டு, கார்மெண்ட்ஸ் பிஸினஸில் இறங்கினேன். கடுமையான உழைப்பு, வலி இல்லாமல் வெற்றிகரமாக வாழற வித்தையைக் கத்துக்கிட்டேன். எமோஷனல் குறைந்து மைண்ட் பேலன்ஸ் ஆனது.

இன்று தமிழகத்தில் முக்கியமான  கார்மெண்ட்ஸ்களில் என்னுடையதும் ஒன்று...” சொல்லிக் கொண்டிருந்த சோனாவை பிரமிப்பாகப் பார்த்தான் தேவா.

நீண்ட நேரம் பேசினார்கள். மதிய உணவு சாப்பிட்டார்கள். பிறகு விடை பெற்றுக் கிளம்பினான். 

அவன் சென்னை வரும்போதெல்லாம் அவளைச் சந்தித்தான். எதற்காக வருகிறோம் என்ற காரணமே இல்லாமல் சென்னை வந்தான். பல வருகைகள்... பல சந்திப்புகள்... அப்படித்தான் ஒருநாள்... சென்னையில் அவர்கள் சந்திப்பு நடந்தது. அவன் தயக்கத்துடன் கேட்டான்.

“சொல்றேன்று தப்பா நினைக்க மாட்டியே...”

“சொல்லு தேவா...”

“வெவ்வேறு ஃபீல்டுகளில் சிறப்பாக வெற்றியடைந்திருக்கும் நாம ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது...?”

ிசிரித்தாள் சோனா.

“யு மீன்... ரெண்டாவது கல்யாணம்...?”

“ஸாரி சோனா... எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு உன்கிட்டே பொய் சொன்னேன்...” -அவள் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.

“நீ நாசமாப் போயிடுவேன்னு என்னைச் சொன்னே... உனக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும்ங்கிற ஆவேசம் அடி மனசில்... அதனாலேயே குடிக்கிறதை விட்டேன்.  நீ இல்லாத போதும் நான் நல்லா வாழறேன் பாருன்னு காட்டறத்துக்காக நான் சொன்ன பொய்தான் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னது. என்னை மன்னிச்சிடு. மனசின் எதோ ஒரு மூலையில் நீ இன்னும் இருக்கிறேன்னு நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு இதுவரை கல்யாணம் பண்ணிக்கத் தோணலையோ என்னவோ...”

சிரித்தாள் சோனா.

“எனக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம்தான் இருந்திருக்கணும்னு  நினைக்கிறேன். ஆனால், இந்த நிமிஷத்திலிருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். தேவா, இந்த எட்டு வருஷத்தில் நீ நிறைய மாறியிருப்பேன்னு நினைச்சேன். ஆனா, ஒரு சின்ன மாற்றம்கூட உன்கிட்டே இல்லே. உன் ஈகோ, கொடூர நகம் கொண்ட ராட்சசனா மேலும் மேலும் வளர்ந்து சில்லித்தனங்கள் பண்ணிக்கிட்டிருக்கு... நீ சொன்ன கல்யாணப் பொய் சில்லித்தனத்தின் உச்சகட்டம்.
எனக்கு முன்னாடி நீ நல்லா வாழணும். அதைப் பார்த்து நான் வயிறு எரியணும். அதுதானே நீ சொன்னதன் அர்த்தம்? ஐ ஃபீல் ஷேம்.

நாம பிரிந்த பிறகுதான் நல்லா இருக்கோம். சேர்த்திருந்த போது வலிகள்தான் மிச்சம். பிரிஞ்சிடலாம் தேவா. தவிர, சொல் பேச்சு மீறாத, பதில் பேசாத, அடக்க ஒடுக்கமான ஒரு பெண்தான் உனக்குச் சரிப்பட்டு வருவா.... அது மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ... நாம் குட் ஃப்ரண்ட்ஸா மட்டும் இருந்துடுவோம். மறுபடியும் ஒரு மாயவலையில் சிக்கிக்கிட்டுப் போராட வேண்டாமே.”

ஒரு சின்ன பெருமூச்சுடன் எழுந்தான் தேவா.