Tuesday 18 September 2012

மழை நாட்கள்…!




பெ. கருணாகரன் / சிறுகதை

சூரியன் காயவில்லை. மந்தமாக இருந்தது. மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது, ஊர் சற்று இருளடைந்தே தெரிந்தது. தூரத்தில் விருத்தகிரீஸ்வர்ர் கோயில் சாம்பல் கூம்பாய்க் காட்சியளித்தது. நேற்று இரவு பெய்த மழையின் மிச்ச சொச்ச மேகங்கள் வானத்தை மூடியிருந்தன.

மாடியிலிருந்து பார்த்தபோது, ஊரே கழுவிவிட்ட மாதிரியிருந்தது. பார்ப்பதற்கு விருத்தாசலம் ஊட்டி மாதிரி காட்சியளித்தது. 

ஜில்லென்று குளிர்க்காற்று வீசியது. லேசாகச் சாரல் அடிக்கத் தொடங்கியது. மீண்டும் மழை பொழியப் போகிறது. கீழே இறங்கிவிட வேண்டியதுதான். அப்போது கிழக்குத் திசையின் கீழ் வானத்தில் சின்னதாய் ஒரு மின்னல் முணுமுணுத்தது.

மின்னல்... மறக்க முடியாத அந்த நாள்! பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருந்த அரை டிராயர் நாட்கள். முனிசிபல் பள்ளிக்கு நண்பர்களுடன் ஒன்றாகத்தான் போவேன். என்னுயிர்த் தோழன் சம்பத். எப்போதும் தோளின்மேல் கைபோட்டுக் கொண்டு சேர்ந்துதான் பள்ளிக்குப் போவோம். வீட்டுக்கு வருவோம். தோழன் தோளில் கைபோட்டுப் பழகாதவர்கள் பால்யத்தை முழுமையாய் ருசிக்காதவர்கள்.

இரண்டு பேருக்கும் துண்டு ஃபிலிம் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். ரஜினி அப்போதுதான் ஃபீல்டில் நுழைந்து கலக்கிக் கொண்டிருந்தார். அன்று அவன் ’16 வயதினிலே’ ரஜினி ஃபிலிம் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். மரத்தடியில் ரஜினி உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரியான ஃபிலிம் அது. ‘டேய்... எனக்குக் கொடுடா...’ என்று கெஞ்சிப் பார்த்தேன். ‘கொடுக்க முடியாது...’ என்று மறுத்துவிட்டான்.

அவன்மேல் எனக்கு எரிச்சலானது. அவன் பேச்சு ‘கா’ விட்டேன். மதியத்திலிருந்து அவனுடன் பேசவேயில்லை. சாயங்காலம் வானம் இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்கூல் க்ளோசிங் பெல் அடித்தபோது, மின்னலும் இடியும் போட்டியிட, மழை வீறத் தொடங்கியது.
புத்தகப் பையைத் தலைக்கு வைத்துக்கொண்டு, எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பினோம். சம்பத் முன்னால் ஓடத் தொடங்க, நான் இடைவெளி விட்டு அவனுக்குப் பின்னாலேயே ஓடத் தொடங்கினேன். கொஞ்ச தூரம்தான் சம்பத் ஓடியிருப்பான். அப்போது, ஒரு மின்னல்... தொடர்ந்து காது பிளக்கும் இடி. என்ன நடந்ததென்று தெரியவில்லை. ‘அம்மா...’ என்று அலறிக்கொண்டே சம்பத் சுருண்டு விழுந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முகத்தில் வழிந்த மழைநீரைத் துடைத்துக்கொண்டே அருகில் போய்ப்பார்த்தால், அவன் கரிய நிறத்தில் விரைத்துக்கிடந்தான். ‘கா’ விட்ட வீறாப்பையெல்லாம் மறந்து ‘சம்பத்... சம்பத்...’ என்று கூப்பிட்டுப் பார்த்தேன். அவனிடம் எந்த அசைவும் இல்லை. அதற்குள் கடைத்தெருவில் அனைவரும் கூடிவிட, நான்தான் சம்பத்தின் வீட்டுக்குப் போய்த் தகவல் சொன்னேன். பதறிக் கொண்டு ஓடி வந்தார்கள். அவனது அம்மா, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாள்.

சம்பத் தலைச்சன் பிள்ளை என்பதால், அவன் மீது இடி விழுந்துவிட்டது என்றார்கள்.  எனது அம்மா என்னை அணைத்துக்கொண்டாள். ‘ரெண்டு பேரும் தோள்ல கைபோட்டுக்கிட்டு ஒண்ணாத்தானே சுத்துவானுங்க.... இவன் எப்படி தப்பிச்சான்?’ என்று வாத்தியார்கள் வியந்தார்கள்.

சம்பத்தின் மரணத்துக்குப் பிறகும் கூட, மழை என்னை பயமுறுத்தும் விஷயமாக ஆகிவிடவில்லை.

மழை என்றும் என்னால் வெறுக்க முடியாததாகவே இருந்தது. மேகம் சூழ்ந்து நாலு தூறல் போட ஆரம்பித்தாலே போதும், ஃபிரெண்ட்ஸ்கள் எல்லாம் சேர்ந்துவிடுவோம். மழையில் இறங்கி ஒரே கும்மாளம்தான். ‘மழையில் ஆடாதடா... ஜுரம் வந்திடும்’ என்று எல்லோர் வீட்டிலும் ஏகத்துக்குக் கத்துவார்கள். அவற்றை யார் கண்டுகொண்டார்கள்? குதி குதியென்று குஷிதான்!

மாடி வீட்டு மூர்த்தி மட்டும் வீட்டுக்குள்ளிருந்து நாங்கள் விளையாடுவதை ஏக்கமாக வேடிக்கை பார்ப்பான். மழையென்றல்ல... எப்போதும் அவன் அப்படித்தான். அவனது அம்மா அவனை விளையாட விடுவதில்லை. எங்களுடன் சேரக் கூடாதென்று அவள் தடுத்து வைத்திருந்தாள். எங்களுடன் அவன் சேர்ந்தால் கெட்டு விடுவானாம்.

ன்றொருநாள்... ஆலங்கட்டி மழை பெய்தது. தட் தட்டென்று கல்லால் அடிப்பதுபோல் ஆலங்கட்டிகள் தரையில் வந்து விழுந்தன. ஆலங்கட்டிகளை சீசாவில் போட்டு வைத்தால் அந்தத் தண்ணீர் தேள்கடிக்கு மருந்து என்றார்கள். நான் குடையுடன் மழைக்களத்தில் இறங்கினேன். குடை பொத்துக்கொள்ளுமோ என்று நினைக்கும்படி வேகமாக மழை குடையில் டிரம்ஸ் வாசித்தது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகள்  ஐஸ் கட்டிகள் மாதிரிதான் இருந்தன. பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டேன். ஜில்லென்றிருந்தது.

சாரலாய் வீசிய மழை சற்று முதிர்ந்து தூரலாய் விழத் தொடங்கியது. காற்று ஈரத்தைச் சுமந்துவந்து உடம்பில் பூசியது. உடல் சிலிர்த்தது. மூக்குக்குள் நமநமவென்று உபாதை உணர்ச்சி. உடலுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் மழை என்பது சந்தோஷம்தான். விளையாடும் பருவம் என்றல்ல, எப்போதாக இருந்தாலும் மழையை வேடிக்கை பார்ப்பதைப் போன்ற ஆனந்தம் உண்டா?

கலில் மழை பெய்தால் விளையாடலாம். இரவில்? இரவில் மழை பெய்தால் பிரச்சினைதான். வீடு ஒழுகும். தூங்க வேண்டுமே! பகல் மழை என் பால்யத்தில் அமுதம் பொழிந்த்தென்றால், இரவு மழை திராவகம் ஊற்றியது.

சிறியதான சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒழுகும் இடங்களுக்கு நேராக அம்மா பாத்திரங்களை நகர்த்தி வைத்துக்கொண்டிருப்பாள். பித்தளை, சில்வர், அலுமினியம் என்று விதவிதமானவை. மழையின் வேகத்துக்கேற்ப ஒழுகும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகப்படும்.

பாத்திரங்களில் விழுந்து எழும் நீர்ச்சொட்டுக்களின் தாளலயமும் மாறும். நான் சிறிய மூங்கில் குச்சியை எடுத்துப் பாத்திரங்களின் விளிம்பில் டொங்… டொங் என்று தட்டுவேன். ‘டேய்… சும்மா இருடா…’ என்று அம்மா செல்ல எரிச்சலைக் காட்டுவாள். ஒரு பாத்திரம் மழை நீரால் நிரம்பிவிட்டதென்றால்,அதை எடுத்துவிட்டு அம்மா அந்த இடத்தில் வேறு பாத்திரம் வைப்பாள்.

இந்த வேடிக்கை கொஞ்சநேரம்தான். எனக்குத் தூக்கம் வரும். வீட்டிலிருக்கும் பெஞ்சுக்கு மேலே இரண்டு குடைகளை விரித்து, அம்மா பிடித்துக்கொண்டு பெஞ்சின் ஓரமாய் உட்கார்ந்திருக்க, அவள் மடியில் நான் படுத்துக்கொண்டு தூங்குவேன். அப்பா ஒரு மூலையில் ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு, பீடி புகைத்துக்கொண்டே மேலே வெறிப்பார். ஏக்கப் பெருமூச்சு அவரிடமிருந்து கிளம்பிவரும்.

அப்பாவைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கும். மழை அவருக்குக் கவலையைக் கொடுக்கும். வியாபாரம் பாதிக்கப்பட்டு வருமானம் போய்விடுமே… வியாபாரம்..? பெரிதாக ஒள்றுமில்லை – பெட்டிக்கடைதான்.  மழையைத் திட்டுவார். அந்த அளவில் அவருக்குத் திருப்தி. வீட்டுக் கூரையை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் அவரால் அது முடிந்ததில்லை. சிலநேரங்களில் பேய்த்தனமாக மழை பெய்யும்போது, அம்மா என்னைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டுக்குப் போகச் சொல்லுவாள். நான் போக மாட்டேன்.

மழை பெய்த மறுநாள்…. அம்மா ஈரமான விறகுகளை வைத்துக் கொண்டு, சொத சொத அடுப்பில் சோறு சமைக்க, ஊதுகுழலை வைத்து ஊதிக்கொண்டு புகையுடன் போராடுவாள். நான் அவளது முந்தானையைப் பிடித்துக்கொண்டே, பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். புகையில் அம்மா இருமுவாள். எனக்கும் இருமல் வரும்.
‘போ அந்தப் பக்கம்….’ என்று விரட்டுவாள். நான் நகராமல் அங்கேயே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். புகையும் அடுப்பு சிறிது சிறிதாக எரிய ஆரம்பித்து, பானை சூடாகி சாதம் பொங்க ஆரம்பிக்கும். நான் ‘பொங்கலோ பொங்கல்…’ என்று கூவுவேன்.

‘சனியனே… இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே….’ என்று அம்மா எரிந்து விழுவாள்.

“சனியனே…. மழை தூறுதில்லே…. ஆடாதடா…. உள்ளே வா…” – கீழே என் மனைவி என் மகனைக் காய்த்துக் கொண்டிருந்தாள். காலங்கள் மாறினாலும் அம்மாக்களும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் மாறுவதேயில்லை. இன்னும் இருபதாண்டுகள் கழித்து, என் மகனுக்குள்ளும் இதுபோன்ற நினைவுகள்…. புனைவுகள் வரும் போலும்.

மழை வலுக்கத் தொடங்கியது.  நான் மாடியிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினேன்.

3 comments:

  1. மனதைத் தொட்ட மழைகள் .........

    ReplyDelete
  2. நீரோடு ஆடும் பால்யம்..
    பயத்தோடு பார்க்கும் தாய்மை..
    எதுவும் மாறவில்லை..மழை போல..

    ReplyDelete
  3. அருமையான தொகுப்புகள்..மழை போல...:) :) :)

    ReplyDelete