Tuesday 11 September 2012

அறிவு ஜீவிகள்



பெ. கருணாகரன் / சிறுகதை


று மாதங்களுக்கு முன் பார்த்தபோது மாலினி இப்படி இல்லை. இப்போது கொஞ்சம் சதைபோட்டிருந்தாள். இடுப்பில் மடிப்புகள். மார்புகள் கொஞ்சம் சரிந்து பார்க்கக் கிளர்ச்சியூட்டினாள்.

வெளிர்நீலப் புடவையில் கறுப்பு தேவதை மாதிரி ஜொலித்தாள். கலகலவென சிரித்தாள். எதிரே கடலலைகள் நுரை தள்ளிக் கரைமோதித் திரும்பின.

எதிரே குமார். அவனுக்கு அவளைவிட இரண்டு வயது குறைவு. இவனுக்கு இருபத்தேழு. அவளுக்கு இருபத்தொன்பது.

அவளுடன் முதல் அறிமுகம் ஒரு பேட்டியின்போதுதான். ‘பலாத்காரம் செய்யப்பட்டால் உங்கள் நிலை? என்ற தலைப்பில் அவன் பணிபுரிந்த பத்திரிகைக்காக சிலபெண்களிடம் பேட்டி எடுக்க வேண்டியிருந்தது. அபத்தமான தலைப்புதான். அடிக்கடி அவன் பணியில் இதுபோன்ற அபத்தங்கள் சாதாரணம். தலைப்பைக் கேட்டதும் பல பெண்கள் பேட்டிக்கு மறுத்தார்கள். சிலரோ ‘வாழ்க்கையை அத்துடன் முடித்துக்கொள்வேன்... என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். மாலினி மட்டுமே தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகப் பேசினாள். வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அதிர்வுகள்.

“கற்பு... அதில் அழிப்பு... இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பலாத்காரம் ஒரு வன்முறை அவ்வளவுதான். சண்டைபோடும்போது நம் முதுகில் யாரோ ஒருத்தன் பலமா குத்திடறான். வலிக்குதில்லையா? அந்த அடியில் நமக்கு விருப்பமில்லை. ஆனாலும் அதைத் தவிர்க்க முடியாத நிலையில்? அடி எப்ப கிடைக்குது? எதிர்க்க முடியாத நிலையில். அல்லது எதிர்பாராத தருணத்தில். அடிக்கிறவன் அதிகாரியா இருக்கும்போது... இதுவும் ஏறக்குறைய அப்படிதான். எதிராளி என்னைவிட வலுவுள்ளவன். முதுகில் அடிவாங்க்கிற வன்முறை மாதிரிதான் பலாத்காரமும். இதுவும் வலி. விருப்பமில்லாத வலி. நம்ம சுதந்திரத்துக்கு எதிரா நடந்துடுது. அவ்வளவுதான்.

என் முதுகில் ஒருத்தன் அடிக்கிறதை எப்படி எடுத்துப்பேனோ இதையும் அப்படிதான் எடுத்துப்பேன். வாழ்க்கைச் சீரஞ்சுப் போயிட்டதாப் புலம்ப மாட்டேன. அந்த வன்முறையை நினைச்சு ஆயுள் முழுக்க்க் கரைஞ்சு உருக மாட்டேன். கோர்ட், கேசன்னு இழுத்தடிச்சு அவனை அலைக்கழிப்பேன். எந்த நிலையிலும் யாருக்காவும் என் சந்தோஷத்தை இழக்க மாட்டேன்... என்று பரபரப்பு பேட்டி தந்தாள்.

பேட்டி வெளியானதும் வாசகர் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகள். பரபரப்பு. ஏகப்பட்ட கடிதங்கள். பல கடிதங்கள் மாலினியைக் கண்டித்தன. இன்னும் சில அவளது முகவரியைக் கேட்டு வந்தன. அந்தப் பேட்டியில் ஆசிரியருக்கு  முழுதிருப்தி. அவனை வெகுவாகப் பாராட்டினார்.

பத்திரிகை பாலிசிபடி அவளது முகவரி யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவளது நட்பு அவனுக்குத் தொடர்ந்து கிடைத்தது. மாலினிக்கு அண்ணா சாலையில் உள்ள ஒரு டிவி ஷோ ரூமில் வேலை.

பேட்டி வெளியான அன்றே மாலினி அவனுக்கு போன் செய்தாள். “லஞ்சுக்கு வர்றீங்களா? யமுனாவுக்குப் போகலாம்...

ட்டல் யமுனா. கருமை கலந்த மங்கிய மஞ்சள் விளக்கின் ஒளிஉமிழ்ப்பு. பர்ப்யூமும், சாப்பாட்டு சமாச்சாரங்களும் கலந்த வாடை எங்கும்.

டேபிளில் குலோப் ஜாமூன். எதிரே அதைவிட இனிப்பான மாலினி.

பேச்சு பிறந்த ஊரைப் பற்றித் திரும்பியது. அவள் சொன்னாள். “பிறந்தது கும்பகோணம். அப்பா தையல் கடை வைத்திருந்தார். பெரிய வருமானமில்லே... ஒரு தம்பி, தங்கை உண்டு.
 என் அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் நல்ல சிவப்பு. நான் மட்டும்தான் கருப்பு. சில சமயங்கள்ல எங்க அம்மாகிட்டேயே தமாஷா கேட்டிருக்கேன். ‘ஏம்மா, நீ என்னை உண்மையிலேயே உன் புருஷனுக்குத்தான் பெத்துப்போட்டியா?ன்னு...  உடனே அம்மா டென்ஷனாகித் துள்ளிக் குதிப்பா... உலகமே அழியப் போற மாதிரி பெருங்குரல்ல கத்துவா... ‘மானங் கெட்டவளே... பெத்தவளைப் போயி இப்படிப் பேசுறியே... உன் நாக்கு அழுகிப் போக...னு திட்டுவா. கையில கிடைக்கிறதை எடுத்து வீசுவா... நான் வெளியே ஓடியாந்துடுவேன். அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கைப் பார்ப்பார்...

அவன் அவள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். “என் அப்பா இல்லாமல் வேறு யாருக்காவது என்னை என் அம்மா பெத்துப் போட்டிருந்தா வருத்தப்பட்டிருப்பேன்னு நினைக்கிறீங்களா? ஒருநாளும் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஏன் நான் வருத்தப்படணும்? என் உடம்பு ரொம்ப ஆரோக்கியமா இருக்கு, என் தம்பி, தங்கை எல்லாம் ஒல்லியா பாக்க நோயாளி மாதிரி இருப்பாங்க. எல்லோருக்கும் நோஞ்சான் உடம்பு. என் அப்பா, அம்மாவும் அதே மாதிரிதான். நான் மட்டுமே கொஞ்சம் சதை பூசிய குண்டு.

தன் உடல் புனிதத்தைப் பாதுகாத்து பெண்மையின் மாண்பை நிலைநிறுத்தி என் அம்மா என் அப்பாவுக்கு மட்டுமே என்னைப் பெத்துப் போட்டிருந்தால் நான் சந்தோஷப்பட அதில் ஒரு விஷயமும இல்லே... அவன் அவள் பேசுவதையே வியப்பாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தொடர்ந்தாள்.

“என் அம்மாவின் கற்பு, அந்தக் கற்பு தேடித் தந்த பூஞ்சையான உடம்பு, இது எனக்குச் சந்தோஷத்தையா கொடுக்கும்? என் அம்மாவின் உடல் புனிதத்தைவிட என் உடம்பும் ஆரோக்கியமும் முக்கியம்னு நினைக்கிறேன். நான் ஆரோக்கியமா இருக்கிறதுக்கு என் அம்மா செய்த தவறுதான் காரணம்னா, உங்க பாஷையிலே சொல்லணும்னா ஒழுக்க்க் கேடு.... அதுக்காக நான் என் அம்மாவுக்கு நன்றி சொல்வேன்...-இப்படியாக அவர்கள் ஒவ்வொரு சந்திப்பின்போதும் அதிர்ச்சி அலைகள்.

ருநாள் இருவரும் அண்ணா நகர் டவருக்குச் சென்றிருந்தார்கள். அவள் சொன்னாள். “எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதை விடச் சேர்ந்து வாழற சிஸ்டம்தான் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டு யாருக்காவோ விட்டுக் கொடுத்து அவஸ்தைப்பட்டுக்கிட்டு... சரிப்படலைன்னா அந்த உறவை முறிச்சுக்கிட்டு... டைவர்ஸிங்கிற முத்திரை குத்திக்கிட்டு...
சேர்ந்து வாழறதில் எனக்குப் பிடித்தம் இருக்கு. நம்பிக்கை இருக்கு... என்றாள். அவள் பேச்சு எதை நோக்கி நகர்கிறது என்பது அவனக்குப் புரிந்தது. அவன் மவுனமாய் இருந்தான்.
மாலினியின் குரல் இப்போது உஷ்ணமாய் வெளிவந்த்து. “குமார் எனக்கு நீங்க வேணும். அதேநேரத்தில் கல்யாணம் வேணாம்... அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அதில் அழுத்தம். அவனுக்கும் அது தேவைபோலதான் இருந்தது.

றுநாள் அவள் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள். மாலையில் சென்றான். வீடு புரசைவாக்கத்தின் கடைசியில் இருந்தது. அவள் சிவப்புநிற நைட்டி அணிந்திருந்தாள். தன் கைப்பட சமைத்த வத்தக் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியலைப் பறிமாறினாள்.
“உங்களை மாதிரியே உங்க சமையலும் சுவையா இருக்கு... என்றான் அவன். அவள் நன்றி கூறிச் சிரித்தாள்.

இருவரும் படுக்கையறைக்கு வந்தார்கள். அருகருகே முகம் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார்கள்.

“உங்களுக்கு இதுக்கு முன்னாடி வேறே பெண்களோடு தொடர்பிருக்கா? என்றாள் அவள்.
“சுவாரஸ்யமா ஒண்ணுமில்லே... ஆனால், உங்க விஷயத்திலே இனம் தெரியாத ஒரு பரபரப்பும் பதட்டமும் இருக்கு. மற்ற பெண்கள் விஷயத்திலே அப்படித் தோணியதில்லே... அது ஏன்னே தெரியலே...  என்றான்.

அவள் மறுபடியும் சிரித்தாள். அவன் கேட்டான்.

“உங்களுக்கு ஆண்களோட அனுபவம்..?

“இருக்கு... முதல் அனுபவம் கும்பகோணத்தில் ப்ளஸ் டூ படிக்கிறபோது... என் இங்கிலீஷ் மாஸ்டர் - கல்வி சொல்லித் தரவேண்டியவர் - கலவியையும் சொல்லிக் கொடுத்துட்டார். என்னை நாசம் பண்ணிட்டாருன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, செக்ஸ் ரீதியான எதிர்பார்ப்பு அப்போ எனக்குள்ளேயும் நிறைய இருந்தது. எல்லாமே யூகம்தான். வாய்க் கேள்விதான். அது என்னதுன்னு பார்த்துடணும்கிற எதிர்பார்ப்பு... ஆர்வம். டியூஷன் சொல்லித் தரும்போது கையைத் தடவினார். நான் சின்ன வெட்கத்தைக் காட்டி கிரீன் சிக்னல் கொடுத்துட்டேன். அதன் பிறகு நிறைய நண்பர்கள், வந்தாங்க. போனாங்க... சிரித்தாள்.

அவன் எழுந்து உட்கார்ந்து சட்டையைக் கழற்றினான். பனியன் அணியாத மார்பு உள்ஒடுங்கிப் போயிருந்த்து. “குமார்... சட்டையைக் கழற்றிட்ட பிறகு பார்த்தால் நீங்க ரொம்பவும் ஒல்லியா இருக்கீங்க. உங்க அப்பா எப்படி?

அவன் சொன்னான். “என் அப்பாவும் என்னை மாதிரிதான். உங்க பாஷையில் சொல்லணும்னா என் அம்மா உடல் புனித்த்தை இழக்கலே. அப்பாவுக்குத் தப்பாமல் பொறந்தவன் நான். நீங்க அன்று யமுனாவில் பேசிய விஷயங்கள் எல்லாமே ஏற்கெனவே பலமுறை நான் யோசித்த விஷயங்கள்தான். ஆனால், வெளியிலே சொன்னால் வெட்கக்கேடு. எனக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் நானே தீர்மானிச்சுக்க முடியுது. ஆனால், என் பிறப்பு என்னால் தீர்மானிக்கப்பட முடியலையேன்ற இயற்கைக்கு மாறான எண்ணம் தவிப்பு எனக்கு உண்டு. குணா படத்தில் கமலஹாசன் பேசற டயலாக்தான்... என் அப்பா தன் முகத்தை என் முகத்தில் ஒட்டி வெச்சிட்டுப் போயிட்டார்.
சின்ன வயதிலிருந்தே என் உடம்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை, கவலை எனக்கு உண்டு. ஆறாவது படிக்கும்போது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலே நான் கடைசியா வந்தபோதும், என்சிசியில் உடல் காரணம் காட்டப்பட்டு நான் நிராகரிக்கப்பட்ட போதும் என்னால் தாங்கிக்க முடியலே. அப்பல்லாம் என்னைப் பெத்தவங்க மேலே அநியாயத்துக்குக் கோபம் வரும்.
ஏன்? தலைவிதியா? மழையில் நனைந்தால் சளி... தலைவலி... தூசி, துருமபில் சிக்கினால் டஸ்ட் அலர்ஜி... கொஞ்ச தூரம் ஓடினால் மூச்சு வாங்கல். ‘ஏண்டா என்னைப் பெத்துப் போட்டே?னு என் அப்பாவை எரிஞ்சு விழணும்னு நினைப்பேன். ஒரு பக்கம் வாழணும்மகிற அறிவு. இன்னொரு பக்கம் மழைக்காலத்தில் சைனஸ் வந்து துடிக்கும்போது, செத்துட்டால் பரவாயில்லைங்கிற எண்ணம். பலநேரங்களில் ஏன் பிறந்தோம்னு வெறுத்துக்கிட்டே வாழறேன்... என்றான். குரல் உடைந்து பிசிறடித்தது.

“அழுமூஞ்சி... செல்லமாய் அவனது தலை முடியைக் கலைத்துவிட்ட்டாள். அது அவனுக்குப் பிடித்திருந்தது. அவனது முகத்தைத் தன் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டாள். அது மிகவும் பிடித்திருந்தது.

றுநாள்...

அவளது அலுவலகத்துக்கு அவன் போன் செய்தான்.

“இன்னிக்கும் மீட் பண்ணலாமா..? என்று உற்சாகமாய்க் கேட்டான்.

“வேண்டாம் குமார்... நேற்று நாம அப்படி நடந்துக்கிட்டது தப்போன்னு இப்ப தோணுது... என்றாள்.

“ஏன் அப்படி? எனக்கு ஒண்ணும் அப்படியில்லையே...

“இல்லே குமார். நீங்க எமோஷனல். உங்களை நான் எக்ஸ்பிளாய்ட் பண்றனோன்னு உறுத்தலா இருக்கு. இதுதவிர, உங்க ஃபிரெண்ஷிப்பை இந்த உறவாலேயே நான் இழந்திட வேண்டி வருமோன்னு கொஞ்சம் கவலையாவும் இருக்கு...

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்...

“ராத்திரி நான் நிறைய யோசிச்சேன். இந்த உடம்புக்காக என்னைத் தேடியலைஞ்சவங்க அதிகம். எவ்வளவோ நண்பர்கள் வந்தாங்க. போனாங்க. எல்லா ஃபிரெண்ட்ஷிப் மாதிரியும் உங்க ஃபிரெண்ட்ஷிப்பும் ஆகிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி உறவுகள்ல ஒருநிலைக்கு அப்புறம் இவ்வளவுதானா எல்லாம்கிற அலுப்பும், அலுப்பு ஏற்படுத்துகிற விலகலும் இருவருக்கும் இடையில் வேண்டாமே. இதுக்கு முன் நிறைய பேரை நான் இந்தக் காரணத்தால் இழந்தேன். உங்களை அப்படி நான் இழக்க விரும்பலே...

ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஈடுபாடு இருக்கணும். அந்த ஈடுபாடு உடம்பு மேலே மட்டும்கிற நிலை வந்துடக் கூடாது. உங்க உடம்பை விட உங்க அருகாமையும் உங்க பேச்சும்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உடம்பு தவிர வேற எதிர்பார்ப்புகளே இல்லைங்கிற மாதிரி நம்ப இருவருக்கம் நடுவில் போயிடக் கூடாது. நேற்று நடந்த சம்பவம் நம்ப ஃபிரெண்ஷிப்பை திசை திருப்பிடுச்சோன்னு நினைக்கிறேன்... –அவன் பதில் சொல்வதற்குள் போனை வைத்துவிட்டாள்.

அவளுக்கென்ன? அவள் எளிதாய்ச் சொல்லிடவிட்டாள். அவனா அவளிடம் கேட்டான்? அவளாகத்தான் வந்தாள். இப்போது அவளாகவே வேண்டாம் என்கிறாள். பெண்மையைப் புதிர் என்று கூறுவது இதனால்தானோ?

அதன் பிறகு ஒரு மாதத்துக்கு அவனோ அவளோ போனே செய்து கொள்ளவில்லை. அன்று அவளிடமிருந்து போன் வந்தது. பேசினான். “சாயங்காலம் பீச்சுக்கு வர்றீங்களா? தலையாட்டினான்.

“ஏன் பீச்சுக்குக் கூப்பிட்டீங்க?

அவள் சாதாரணமாகச் சொன்னாள். “நான் குழந்தை பெத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அவன் ஒன்றும் பதில் கூறவில்லை. கவனித்தான்.
“இருபத்தொன்பது வயசாகிடுச்சி... அம்மா, அப்பா எல்லோரும் என்னைத் தேவடியாள் கணக்காய் விரட்டியடிச்சுட்டாங்க. ஆறு வருஷமா மெட்ராஸ்ல தனியா தங்கியிருந்தாச்சு. தற்காலிக உறவுகள் நிறைய. இந்தத் தனிமை சமீப காலமா துன்புறுத்தலா இருக்கு குமார். என்னை நேசிக்கிற ஒரு ஜீவன்... என் ரத்தத்திலேர்ந்து வரப்போற ஜீவன்...

“எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க...? யாரை?

“கிண்டலா? நான்தான் கல்யாணம்கிற சிஸ்டத்திலே நம்பிக்கை இல்லைன்னு ஏற்கெனவே உங்கக்கிட்டே சொல்லியிருக்கேனே...

“கல்யாணம் பண்ணிக்காமலேயே குழந்தையா..?-இதை அவளிடம் கேட்கும்போது அவனுக்குள் இனம்புரியாத எதிர்பார்ப்பு. இந்த விஷயத்தை வேலை மெனக்கெட்டு தன்னிடம் ஏன் அவள் கூறவேண்டும்? அவன் நெஞ்சுக்குள் தடக்... தடக்...

அவள் சொன்னாள். “என் ஆபீஸ் மேனேஜர் சுந்தர்ராஜன்... ரொம்ப இனிமையானவர். உடல் ஆரோக்கியம் நிறைந்தவர். புத்திசாலி. என் குழந்தை உடல் ஆரோக்கியம் நிறைந்ததா இருக்கணும்..

இந்தப் பதில் அவனுக்குள் ஊசி பாய்ச்சியது. அவனுக்குள் எதுவோ நொறுங்கி விழுந்த உணர்வு.

அவன் அவசரமாய் எழுந்தான்.

“என்ன எழுந்துட்டீங்க..?

“தலை வலிக்குது. நாளைக்குப் பார்க்கலாம்... அவன் அவசரமாக விரைந்தான்.

றுநாள்... அவனது தலைவலி எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காக அவள் அவனுக்கு போன் செய்தாள். தான் அலுவலகத்துக்கு வரவில்லை என்று கூறிவிடுமாறு அவன் ஆபரேட்டரிடம் கூறிவிட்டான்.

2 comments:

  1. oru junior bala chandarai indha kadhaiyin moolam kaankiraen....vidhaasamaana unarvupoorvamaana kadhai...

    ReplyDelete