Friday, 14 September 2012

மாய வலை




சிறுகதை/ பெ. கருணாகரன்

“ஏன் தேவா இப்படி குடிச்சு வீணாப் போறே...?” என்றாள் சோனா.

“நீ இப்ப என்ன சொல்ல வர்றே?” முகம் நிமிர்த்திக் கேட்டான் தேவா.

“குடிக்கிறதை நிறுத்தச் சொல்றேன்... நீ குடிச்சு சாதிச்சதென்ன...? ஆபீசுக்குத் தண்ணியடிச்சுட்டு வந்து போன மாசம் மெமோ வாங்கினே.  உன் ரெக்கார்ட்ல பிளாக் மார்க்... நியாயமா உனக்குக் கிடைக்க வேண்டிய ப்ரொமொஷன் பரமசிவத்துக்கு கிடைச்சிருக்கு.
அவனோட டிசிப்ளின் மேனேஜ்மெண்ட்டுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ திறமையானவன். ஆனால், டிசிப்ளின் இல்லாதவன். போர்டு மீட்டிங்கில் உனக்கு ஃபேவராக யாரும் பேசலை தெரியுமா...?”

“லுக் சோனா... எனக்கு ப்ரைவஸி முக்கியம்... என் சுதந்திரத்தில் யார் தலையிடறதையும் அனுமதிக்க மாட்டேன். பல தடவை என்கிட்டே இதைப் பற்றிப் பேசிட்டே. நானும் பதில் சொல்லிட்டேன். இந்த விஷயத்தில் நீ தலையிடாதே...” கோப்பையிலிருந்த அந்தத் திராவகத் திரவத்தின் கடைசித் துளிகளை வயிற்றுக்குக் கொடுத்தான்.

சோனாவின் குரலில் கெஞ்சல். “விட்டுடு... இந்தக் கேவலத்தை விட்டுடு...  உன்கிட்டே திறமை இருக்கு. டிசிப்ளின் இருந்தால்தான் லைஃபில் உயர்வு, மரியாதை வரும். இந்த வருஷம் விட்டுப் போன ப்ரோமோஷனை அடுத்த வருஷமாவது நீ வாங்கணும்...”

சோனா கூறிக் கொண்டிருக்கும்போதே, தேவா பாட்டிலில் இருந்த சரக்கைக் கோப்பையில் சரித்தான். பிறகு அதை வாய்க்கும் கொடுத்தான்.

“ப்ரொமோஷனாவது, புண்ணாக்காவது... எனக்கு அதெல்லாம் பெரிசில்லே... எனக்கு எது பிடிக்குமோ அதன்படி வாழ விரும்பறேன். எனக்கு இது பிடிக்குது. இதில் கிடைக்கிற சந்தோஷம் பற்றி உனக்குத் தெரியாது. தெரிஞ்சுக்கணும்னா வா... கம்பெனி தா... ரெண்டு பெக் அடி...”
“கொடுமைடா சாமி...” என்று காதை மூடிக்கொண்டவள், பிறகு கேட்டாள்.

“என் வீட்டில் எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க...”

கோப்பையை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்தான். “உனக்கு ஒரு லவ்வர் இருக்கிற விஷயத்தை அவங்ககிட்டே சொல்ல வேண்டியதுதானே.”

“அதுக்காகத்தான் உன்கிட்டே பேச வந்தேன். குடிக்கிறதை நிறுத்து.”

“நான் குடிக்கறதை நிறுத்துறதுக்கும் நாம கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்...?”
“இருக்கு... எந்தப் பொண்ணும் தன் புருஷன் குடிகாரனா இருக்கறதை விரும்பமாட்டாள். நானும் விதிவிலக்கில்ல...”
“எல்லாம் தெரிஞ்சுதானே நீ லவ் பண்ண ஆரம்பிச்சே...?”

“ஆமா... தப்புதான்... ஃபீல் பண்றேன். முன்னாடியெல்லாம் வாரத்துக்கு ஒரு தடவைன்னு இருந்தது. இப்போ தினமும்னு ஆகிப்போச்சு. அடிமை ஆயிட்டே. உடம்புக்குக் கேடு. அந்தஸ்துக்குக் கேடு... இந்த சனியனை விட்டொழி... நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.”

“என்ன அட்வைஸா...? லவ்வராக இருந்தாலும் உனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. அதைத் தாண்டி உள்ளே நுழையாத...”

“கடைசியா கேட்கறேன்... குடிப்பதை நிறுத்துவியா, மாட்டியா?”
தேவா ஆக்ரோஷமாய் எழுந்தான்.

“ந்நோ... முடியாது. என் சன்டே மூடை ஸ்பாயில் பண்றதுக்காகவே புறப்பட்டு வந்தியா?”
சோனா எழுந்தாள்.

“போறேன் தேவா... இந்த நிலையில் நாம ரெண்டு பேரும் லவ் பண்ணுறதில் அர்ததமே இல்லே... உனக்கு சாராயம்தான் ப்ரையாரிட்டி. சாராய பாட்டிலேயே கட்டிக்கிட்டுத் தூங்கு. இது மாதிரி தொடர்ந்து குடிச்சிட்டிருந்தே நீ நாசமா போயிடுவே... ஒரு பயலும் உன்னைச் சீந்தமாட்டான்...”

“சர்தான் போடி... தர்மபத்தினி... சாபம் கொடுக்கறா... நீ இல்லேன்னா எவளும் கிடைக்க மாட்டாளா என்ன..? சீக்கிரம் இடத்தை காலி பண்ணு...” உள் நுழைந்த திரவச் சாத்தான் கொக்கரித்தது.
முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு குன்றிப்போன உணர்வுடன் வெளியேறினாள் சோனா.

மறுநாள் அலுவலகத்தில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இது நிழல் யுத்தமா...? நிஜயுத்தமா..? அவளுக்குப் புரியவில்லை. அவனிடம் பேசவில்லையே  தவிர, அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. பேசத் துடித்தது மனசு. அவன் மீதிருந்த கோபம் கடிவாளம் போட்டது.

இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தன. திடீரென்று அந்தச் சம்பவம் நடந்தது. தேவா கம்பெனிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான். தண்ணியடித்து விட்டு ரோட்டில் இறங்கி ரகளை செய்ய, போலீஸ் அவன் மீது நியூசென்ஸ் கேஸ் போட்டது. கம்பெனியோ அவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

தட்டுத் தடுமாறி தேவா நடந்து கொண்டிருந்தான். தார்ச்சாலை பொதக் கொதக் என்று உள்ளே வாங்குவது போல உணர்வு. டிஸ்மிஸ் ஆகி இரண்டு வாரங்கள் விளையாட்டாய் ஓடிவிட்டன. தினமும் தீர்த்த யாத்திரை!  பகல்... இரவு என்ற கணக்கு இல்லாமல்!

வேலை இல்லாததால். ஞாயிற்றுக்கிழமை எது என்று கூட அடையாளம் காண முடியாத குழப்பம். இதற்கிடையில் முதல் தேதி வந்து பயமுறுத்தியது. மாதா மாதம் சுளையாய் முப்பதாயிரம் ரூபாய். அது இப்போது இல்லை. வங்கி பேலன்ஸும் பேலன்ஸ் இழந்து தடுமாறியது. பணம் இல்லாமல் வாழ முடியுமா? பொருளாதார நிர்ப்பந்தம் அவனைப் பயமுறுத்தியது.

வேறு சில கம்பெனிகளில் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டான். அவனது டிசிப்ளின், தகுதியின்மையாக குறுக்கே நின்றது. அறைக்கு வந்தபோது உறக்கமே வரவில்லை. அழுகை வந்தது. குடிக்க வேண்டும் போலிந்தது. மீதம் வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் குடித்தான். அழுகை அதிகரித்தது. மனசு உறுத்தியது. வாழ்க்கை அவ்வளவு தானா? சோனா சொன்ன மாதிரி நான் நாசமாகப் போய்விடுவேனா? என் சாப்டர் க்ளோஸ்?

மல்லாந்து படுத்து உத்தரத்தை வெறித்தான். இந்த நிலைமைக்கு தான் வரக் காரணம்? - யோசித்த போது விடை கிடைத்தது. எழுந்து சென்று முகம் கழுவினான். அந்த ஊர் அவனுக்கு ஏனோ பிடிக்காமல் போனது. வேறு எங்காவது போய்விடத்  தீர்மானித்தான். அவன் செய்த இரண்டாவது தீர்மானம் குடிக்கக் கூடாது.

இது நடந்து எட்டாண்டுகளுக்குப் பிறகு, எக்கனாமிக் டைம்ஸில் அவனது பேட்டி வெளியாகியிருந்தது. சாஃப்ட்வேர் பிஸினஸில் மும்பையில் முன்னணி நிறுவனம் என்று அவனது கம்பெனியைப் புகழ்ந்து தள்ளி அறிமுகம் செய்திருந்தார்கள். தேவா தனது பேட்டியில்,
“நான் இந்த அளவுக்கு முன்னேறியதுக்குக் காரணம் ஒரு பெண். லவ் ஃபெயிலியர் ஒரு ஆணை தேவதாஸாகத்தான் மாற்றும். ஆனால், என் லவ் ஃபெயிலியர் என்னை உயர்ந்த நிலைக்குக்கொண்டு வந்திருக்கு. நான் எதிர்காலத்தில் நாசமா போயிடுவேன்னு என் லவ்வர் சொன்னாள். அப்படி இல்லை, நான் வாழ்ந்து காட்டறேன் பார் என்கிற வைராக்கியத்தோடு வாழ்க்கையைத் திட்டமிட்டேன். அதனால்தான் சாஃப்ட்வேர் பிஸினஸில் என்னால் முன்னணிக்குவர முடிந்தது.  இதற்கு நான் அந்தப் பெண்ணுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்று கூறியிருந்தான்.

பேட்டி வெளிவந்த அன்று... மதியம் போன் அடிக்கவே, எடுத்தான். மறுமுனையில் சோனா!
“தேவா... எப்படி இருக்கே?” என்றாள்.

“நல்லா இருக்கேன். நீ எப்படி சோனா இருக்கே...?”

“ஃபைன். உன் பேட்டி படிச்சேன். எனக்குத்தான் நன்றி சொல்லணும்னு சொல்லியிருந்தே... சிரிச்சுட்டேன்.  நான் உன்கிட்டே சொன்ன சென்ஸ் வேறே...  நீ அதைப் புரிஞ்சுக்கிட்டது வேற மாதிரி... ஓ.கே. நீ ஆள் எப்படி இருக்கே..? போட்டோவில் பார்த்தேன் கன்னம் உப்பியிருக்கு... தொப்பை போட்டுட்டியா என்ன?”

“நோ... நோ... ஆல்வேஸ் ஸ்லிம்தான்....”

“கல்யாணம்...?”

அவள் கேட்டதும் தயங்கினான்.  என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான். ஏதோ ஒரு உணர்வு; உந்துதல்.

“ம். ஆயிடுச்சி...” என்றான்.

“தேவா நாம சந்திக்க முடியுமா? சென்னை வந்தால் என்னை வந்து பாரேன்...” - நுங்கம்பாக்கத்தில் ஒரு முகவரி கொடுத்தாள்.

நுங்கம்பாக்கத்தின் இருதயப் பகுதியில் அந்தத் தனி பங்களா உயர்ந்து நின்றிருந்தது. குறைந்தது பத்துகோடி ரூபாய் மதிப்பிருக்கும். ஆச்சரியத்துடனும் சந்தேக்துடனும் காரிலிருந்து இறங்கினான் தேவா. வாட்ச்மேனிடம் பெயர் சொல்ல, “மேடம், உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க...” என்று ரெடிமேட் பதில் சொன்னான்.

கேட் திறக்க... உள்ளே நுழைந்தான். பரந்து கிடந்த புல், பூச்செடிகளுக்கு நடுவே உட்கார்ந்திருந்தது பங்களா. போர்டிகோவை ஒட்டிய பால்கனியில் தேவதை கணக்காக சோனா. “வா தேவா...” என்று கோல்கேட் பற்கள் தெரிய வரவேற்றாள்.

புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, படிகளில் ஏறினான். முன்னிலும் கொஞ்சம் குண்டடித்து அழகு கூடியிருந்தாள் சோனா.

“உன் வொய்ஃபைக் கூட்டிட்டு வரலே...?” சோனா கேட்டாள்.

“அவளுக்கு வேற ஒரு வேலை இருக்கு... அதான் வர முடியலை...” அவள் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான். தொடர்ந்து, “இந்த வீட்டில் நீ மட்டுமா இருக்கே?” -கல்யாணம் ஆயிடுச்சா என்பதன் மறைமுகக் கேள்வி.

“எஸ். வேலைக்காரங்க இருக்காங்க.  துணைக்குப் புத்தகம், டி.வி.  பெரும்பான்மையான நேரங்கள் பிஸினஸில் போயிடும். குறையொன்றுமில்லை...” என்றாள்.

“நான் டிஸ்மிஸ் ஆன பிறகு என்னை ரூமுக்கு வந்து ஒரு தடவைகூட நீ பார்க்கலே... அதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன் தெரியுமா?”

“தப்பு தேவா... பல தடவை நான் உன் ரூமுக்கு வந்தேன். ஆனால், நீ ரூமிலேயே இல்லே. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு நீ காலி பண்ணிட்டதா சொன்னாங்க... அதுக்கப்புறம் நீ எங்கே போனேன்னு தெரியலை. அதைவிடு, நீ மட்டும் என்னவாம்? ஆபீசுக்குப் போன் பண்ணிப் பேச வேண்டியதுதானே...”

“டிஸ்மிஸ் ஆகி ரோட்ல நின்ன நான், எந்த முகத்தோட ஆபீஸில் பேசறது சொல்லு..? சாஃப்ட்வேர் பிஸினஸ் ஆரம்பித்த பிறகு, ஆபீஸில் உன்னைப் பார்க்க வந்தேன். நீ சூஸைட் அட்டெம்ட் பண்ணி, உயிர் பிழைச்சு வேலையை ரிஸைன் பண்ணிட்டதா சொன்னாங்க... என்ன ஆச்சு?”
சோனா அமைதியாகச் சொன்னாள்.

“ஒரு சன்டேயில் நீ என்னை அவமானப்படுத்தி  அனுப்பிய பிறகு, உன்மேல் எனக்கு வருத்தம். அதே நேரம் உன்னை என்னால வெறுக்கவும் முடியலைடா... ஏன்னா, உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகி நாம ஒண்ணு சேருவோம்கிற நம்பிக்கை இருந்துச்சி... ஆனால், நீ ஊரை விட்டுப்போன பிறகு, எல்லாத்துக்கும் காரணம் நான் தானோன்னு உறுத்தலாயிருச்சி... பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன். அப்போதான் தூக்க மாத்திரை சாப்பிட்டு செத்துப்போக முயற்சி பண்ணினேன். ரூம்மேட் காப்பாத்திட்டா... ஃப்ரெண்ட்ஸ் அட்வைஸ் பண்ணினாங்க.

தனிமையில் செல்ஃப் அனலைஸ் பண்ணிப் பார்த்தேன். என்னை மதிக்கத் தெரியாத, என் கருத்தைப் பரிசீலனைக்குக் கூட ஏற்பத் தயாரில்லாத உனக்காக நான் சூஸைட் பண்ணிக்க முயன்றது முட்டாள்தனம்னு பட்டது. இருந்தாலும் உன்னை மறக்க முடியல. அதுக்குக் காரணம் என்னன்னு யோசிச்சேன். என் மைண்ட் ரொம்ப ஸ்பேஸியஸ் ஆக இருந்தது. அதனால்தான் நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன்னு தெரிஞ்சது. மூளையை டைட் ஷெட்யூல்ல வச்சுக்கத் தீர்மானிச்சேன். அதற்கு ஒரே வழி, பிஸினஸ்... உன் ஞாபகங்களை எனக்குள் கிளறிவிட்ட ஆபீஸ் வேலையை ரிஸைன் பண்ணிட்டு, கார்மெண்ட்ஸ் பிஸினஸில் இறங்கினேன். கடுமையான உழைப்பு, வலி இல்லாமல் வெற்றிகரமாக வாழற வித்தையைக் கத்துக்கிட்டேன். எமோஷனல் குறைந்து மைண்ட் பேலன்ஸ் ஆனது.

இன்று தமிழகத்தில் முக்கியமான  கார்மெண்ட்ஸ்களில் என்னுடையதும் ஒன்று...” சொல்லிக் கொண்டிருந்த சோனாவை பிரமிப்பாகப் பார்த்தான் தேவா.

நீண்ட நேரம் பேசினார்கள். மதிய உணவு சாப்பிட்டார்கள். பிறகு விடை பெற்றுக் கிளம்பினான். 

அவன் சென்னை வரும்போதெல்லாம் அவளைச் சந்தித்தான். எதற்காக வருகிறோம் என்ற காரணமே இல்லாமல் சென்னை வந்தான். பல வருகைகள்... பல சந்திப்புகள்... அப்படித்தான் ஒருநாள்... சென்னையில் அவர்கள் சந்திப்பு நடந்தது. அவன் தயக்கத்துடன் கேட்டான்.

“சொல்றேன்று தப்பா நினைக்க மாட்டியே...”

“சொல்லு தேவா...”

“வெவ்வேறு ஃபீல்டுகளில் சிறப்பாக வெற்றியடைந்திருக்கும் நாம ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது...?”

ிசிரித்தாள் சோனா.

“யு மீன்... ரெண்டாவது கல்யாணம்...?”

“ஸாரி சோனா... எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு உன்கிட்டே பொய் சொன்னேன்...” -அவள் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.

“நீ நாசமாப் போயிடுவேன்னு என்னைச் சொன்னே... உனக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும்ங்கிற ஆவேசம் அடி மனசில்... அதனாலேயே குடிக்கிறதை விட்டேன்.  நீ இல்லாத போதும் நான் நல்லா வாழறேன் பாருன்னு காட்டறத்துக்காக நான் சொன்ன பொய்தான் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னது. என்னை மன்னிச்சிடு. மனசின் எதோ ஒரு மூலையில் நீ இன்னும் இருக்கிறேன்னு நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு இதுவரை கல்யாணம் பண்ணிக்கத் தோணலையோ என்னவோ...”

சிரித்தாள் சோனா.

“எனக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம்தான் இருந்திருக்கணும்னு  நினைக்கிறேன். ஆனால், இந்த நிமிஷத்திலிருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். தேவா, இந்த எட்டு வருஷத்தில் நீ நிறைய மாறியிருப்பேன்னு நினைச்சேன். ஆனா, ஒரு சின்ன மாற்றம்கூட உன்கிட்டே இல்லே. உன் ஈகோ, கொடூர நகம் கொண்ட ராட்சசனா மேலும் மேலும் வளர்ந்து சில்லித்தனங்கள் பண்ணிக்கிட்டிருக்கு... நீ சொன்ன கல்யாணப் பொய் சில்லித்தனத்தின் உச்சகட்டம்.
எனக்கு முன்னாடி நீ நல்லா வாழணும். அதைப் பார்த்து நான் வயிறு எரியணும். அதுதானே நீ சொன்னதன் அர்த்தம்? ஐ ஃபீல் ஷேம்.

நாம பிரிந்த பிறகுதான் நல்லா இருக்கோம். சேர்த்திருந்த போது வலிகள்தான் மிச்சம். பிரிஞ்சிடலாம் தேவா. தவிர, சொல் பேச்சு மீறாத, பதில் பேசாத, அடக்க ஒடுக்கமான ஒரு பெண்தான் உனக்குச் சரிப்பட்டு வருவா.... அது மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ... நாம் குட் ஃப்ரண்ட்ஸா மட்டும் இருந்துடுவோம். மறுபடியும் ஒரு மாயவலையில் சிக்கிக்கிட்டுப் போராட வேண்டாமே.”

ஒரு சின்ன பெருமூச்சுடன் எழுந்தான் தேவா.

Tuesday, 11 September 2012

அறிவு ஜீவிகள்



பெ. கருணாகரன் / சிறுகதை


ஆறு மாதங்களுக்கு முன் பார்த்தபோது மாலினி இப்படி இல்லை. இப்போது கொஞ்சம் சதைபோட்டிருந்தாள். இடுப்பில் மடிப்புகள். மார்புகள் கொஞ்சம் சரிந்து பார்க்கக் கிளர்ச்சியூட்டினாள்.

வெளிர்நீலப் புடவையில் கறுப்பு தேவதை மாதிரி ஜொலித்தாள். கலகலவென சிரித்தாள். எதிரே கடலலைகள் நுரை தள்ளிக் கரைமோதித் திரும்பின.

எதிரே குமார். அவனுக்கு அவளைவிட இரண்டு வயது குறைவு. இவனுக்கு இருபத்தேழு. அவளுக்கு இருபத்தொன்பது.

அவளுடன் முதல் அறிமுகம் ஒரு பேட்டியின்போதுதான். ‘பலாத்காரம் செய்யப்பட்டால் உங்கள் நிலை?’ என்ற தலைப்பில் அவன் பணிபுரிந்த பத்திரிகைக்காக சிலபெண்களிடம் பேட்டி எடுக்க வேண்டியிருந்தது. அபத்தமான தலைப்புதான். அடிக்கடி அவன் பணியில் இதுபோன்ற அபத்தங்கள் சாதாரணம். தலைப்பைக் கேட்டதும் பல பெண்கள் பேட்டிக்கு மறுத்தார்கள். சிலரோ ‘வாழ்க்கையை அத்துடன் முடித்துக்கொள்வேன்...’ என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். மாலினி மட்டுமே தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகப் பேசினாள். வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அதிர்வுகள்.

“கற்பு... அதில் அழிப்பு... இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பலாத்காரம் ஒரு வன்முறை அவ்வளவுதான். சண்டைபோடும்போது நம் முதுகில் யாரோ ஒருத்தன் பலமா குத்திடறான். வலிக்குதில்லையா? அந்த அடியில் நமக்கு விருப்பமில்லை. ஆனாலும் அதைத் தவிர்க்க முடியாத நிலையில்? அடி எப்ப கிடைக்குது? எதிர்க்க முடியாத நிலையில். அல்லது எதிர்பாராத தருணத்தில். அடிக்கிறவன் அதிகாரியா இருக்கும்போது... இதுவும் ஏறக்குறைய அப்படிதான். எதிராளி என்னைவிட வலுவுள்ளவன். முதுகில் அடிவாங்க்கிற வன்முறை மாதிரிதான் பலாத்காரமும். இதுவும் வலி. விருப்பமில்லாத வலி. நம்ம சுதந்திரத்துக்கு எதிரா நடந்துடுது. அவ்வளவுதான்.

என் முதுகில் ஒருத்தன் அடிக்கிறதை எப்படி எடுத்துப்பேனோ இதையும் அப்படிதான் எடுத்துப்பேன். வாழ்க்கைச் சீரஞ்சுப் போயிட்டதாப் புலம்ப மாட்டேன. அந்த வன்முறையை நினைச்சு ஆயுள் முழுக்க்க் கரைஞ்சு உருக மாட்டேன். கோர்ட், கேசன்னு இழுத்தடிச்சு அவனை அலைக்கழிப்பேன். எந்த நிலையிலும் யாருக்காவும் என் சந்தோஷத்தை இழக்க மாட்டேன்...” என்று பரபரப்பு பேட்டி தந்தாள்.

பேட்டி வெளியானதும் வாசகர் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகள். பரபரப்பு. ஏகப்பட்ட கடிதங்கள். பல கடிதங்கள் மாலினியைக் கண்டித்தன. இன்னும் சில அவளது முகவரியைக் கேட்டு வந்தன. அந்தப் பேட்டியில் ஆசிரியருக்கு  முழுதிருப்தி. அவனை வெகுவாகப் பாராட்டினார்.

பத்திரிகை பாலிசிபடி அவளது முகவரி யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவளது நட்பு அவனுக்குத் தொடர்ந்து கிடைத்தது. மாலினிக்கு அண்ணா சாலையில் உள்ள ஒரு டிவி ஷோ ரூமில் வேலை.

பேட்டி வெளியான அன்றே மாலினி அவனுக்கு போன் செய்தாள். “லஞ்சுக்கு வர்றீங்களா? யமுனாவுக்குப் போகலாம்...”

ஓட்டல் யமுனா. கருமை கலந்த மங்கிய மஞ்சள் விளக்கின் ஒளிஉமிழ்ப்பு. பர்ப்யூமும், சாப்பாட்டு சமாச்சாரங்களும் கலந்த வாடை எங்கும்.

டேபிளில் குலோப் ஜாமூன். எதிரே அதைவிட இனிப்பான மாலினி.

பேச்சு பிறந்த ஊரைப் பற்றித் திரும்பியது. அவள் சொன்னாள். “பிறந்தது கும்பகோணம். அப்பா தையல் கடை வைத்திருந்தார். பெரிய வருமானமில்லே... ஒரு தம்பி, தங்கை உண்டு.
 என் அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் நல்ல சிவப்பு. நான் மட்டும்தான் கருப்பு. சில சமயங்கள்ல எங்க அம்மாகிட்டேயே தமாஷா கேட்டிருக்கேன். ‘ஏம்மா, நீ என்னை உண்மையிலேயே உன் புருஷனுக்குத்தான் பெத்துப்போட்டியா?’ன்னு...  உடனே அம்மா டென்ஷனாகித் துள்ளிக் குதிப்பா... உலகமே அழியப் போற மாதிரி பெருங்குரல்ல கத்துவா... ‘மானங் கெட்டவளே... பெத்தவளைப் போயி இப்படிப் பேசுறியே... உன் நாக்கு அழுகிப் போக...’னு திட்டுவா. கையில கிடைக்கிறதை எடுத்து வீசுவா... நான் வெளியே ஓடியாந்துடுவேன். அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கைப் பார்ப்பார்...”

அவன் அவள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். “என் அப்பா இல்லாமல் வேறு யாருக்காவது என்னை என் அம்மா பெத்துப் போட்டிருந்தா வருத்தப்பட்டிருப்பேன்னு நினைக்கிறீங்களா? ஒருநாளும் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஏன் நான் வருத்தப்படணும்? என் உடம்பு ரொம்ப ஆரோக்கியமா இருக்கு, என் தம்பி, தங்கை எல்லாம் ஒல்லியா பாக்க நோயாளி மாதிரி இருப்பாங்க. எல்லோருக்கும் நோஞ்சான் உடம்பு. என் அப்பா, அம்மாவும் அதே மாதிரிதான். நான் மட்டுமே கொஞ்சம் சதை பூசிய குண்டு.

தன் உடல் புனிதத்தைப் பாதுகாத்து பெண்மையின் மாண்பை நிலைநிறுத்தி என் அம்மா என் அப்பாவுக்கு மட்டுமே என்னைப் பெத்துப் போட்டிருந்தால் நான் சந்தோஷப்பட அதில் ஒரு விஷயமும இல்லே...” அவன் அவள் பேசுவதையே வியப்பாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தொடர்ந்தாள்.

“என் அம்மாவின் கற்பு, அந்தக் கற்பு தேடித் தந்த பூஞ்சையான உடம்பு, இது எனக்குச் சந்தோஷத்தையா கொடுக்கும்? என் அம்மாவின் உடல் புனிதத்தைவிட என் உடம்பும் ஆரோக்கியமும் முக்கியம்னு நினைக்கிறேன். நான் ஆரோக்கியமா இருக்கிறதுக்கு என் அம்மா செய்த தவறுதான் காரணம்னா, உங்க பாஷையிலே சொல்லணும்னா ஒழுக்க்க் கேடு.... அதுக்காக நான் என் அம்மாவுக்கு நன்றி சொல்வேன்...” -இப்படியாக அவர்கள் ஒவ்வொரு சந்திப்பின்போதும் அதிர்ச்சி அலைகள்.

ஒருநாள் இருவரும் அண்ணா நகர் டவருக்குச் சென்றிருந்தார்கள். அவள் சொன்னாள். “எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதை விடச் சேர்ந்து வாழற சிஸ்டம்தான் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டு யாருக்காவோ விட்டுக் கொடுத்து அவஸ்தைப்பட்டுக்கிட்டு... சரிப்படலைன்னா அந்த உறவை முறிச்சுக்கிட்டு... டைவர்ஸிங்கிற முத்திரை குத்திக்கிட்டு...
சேர்ந்து வாழறதில் எனக்குப் பிடித்தம் இருக்கு. நம்பிக்கை இருக்கு...” என்றாள். அவள் பேச்சு எதை நோக்கி நகர்கிறது என்பது அவனக்குப் புரிந்தது. அவன் மவுனமாய் இருந்தான்.
மாலினியின் குரல் இப்போது உஷ்ணமாய் வெளிவந்த்து. “குமார் எனக்கு நீங்க வேணும். அதேநேரத்தில் கல்யாணம் வேணாம்...” அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அதில் அழுத்தம். அவனுக்கும் அது தேவைபோலதான் இருந்தது.

மறுநாள் அவள் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள். மாலையில் சென்றான். வீடு புரசைவாக்கத்தின் கடைசியில் இருந்தது. அவள் சிவப்புநிற நைட்டி அணிந்திருந்தாள். தன் கைப்பட சமைத்த வத்தக் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியலைப் பறிமாறினாள்.
“உங்களை மாதிரியே உங்க சமையலும் சுவையா இருக்கு...” என்றான் அவன். அவள் நன்றி கூறிச் சிரித்தாள்.

இருவரும் படுக்கையறைக்கு வந்தார்கள். அருகருகே முகம் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார்கள்.

“உங்களுக்கு இதுக்கு முன்னாடி வேறே பெண்களோடு தொடர்பிருக்கா?” என்றாள் அவள்.
“சுவாரஸ்யமா ஒண்ணுமில்லே... ஆனால், உங்க விஷயத்திலே இனம் தெரியாத ஒரு பரபரப்பும் பதட்டமும் இருக்கு. மற்ற பெண்கள் விஷயத்திலே அப்படித் தோணியதில்லே... அது ஏன்னே தெரியலே...”  என்றான்.

அவள் மறுபடியும் சிரித்தாள். அவன் கேட்டான்.

“உங்களுக்கு ஆண்களோட அனுபவம்..?”

“இருக்கு... முதல் அனுபவம் கும்பகோணத்தில் ப்ளஸ் டூ படிக்கிறபோது... என் இங்கிலீஷ் மாஸ்டர் - கல்வி சொல்லித் தரவேண்டியவர் - கலவியையும் சொல்லிக் கொடுத்துட்டார். என்னை நாசம் பண்ணிட்டாருன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, செக்ஸ் ரீதியான எதிர்பார்ப்பு அப்போ எனக்குள்ளேயும் நிறைய இருந்தது. எல்லாமே யூகம்தான். வாய்க் கேள்விதான். அது என்னதுன்னு பார்த்துடணும்கிற எதிர்பார்ப்பு... ஆர்வம். டியூஷன் சொல்லித் தரும்போது கையைத் தடவினார். நான் சின்ன வெட்கத்தைக் காட்டி கிரீன் சிக்னல் கொடுத்துட்டேன். அதன் பிறகு நிறைய நண்பர்கள், வந்தாங்க. போனாங்க...” சிரித்தாள்.

அவன் எழுந்து உட்கார்ந்து சட்டையைக் கழற்றினான். பனியன் அணியாத மார்பு உள்ஒடுங்கிப் போயிருந்த்து. “குமார்... சட்டையைக் கழற்றிட்ட பிறகு பார்த்தால் நீங்க ரொம்பவும் ஒல்லியா இருக்கீங்க. உங்க அப்பா எப்படி?”

அவன் சொன்னான். “என் அப்பாவும் என்னை மாதிரிதான். உங்க பாஷையில் சொல்லணும்னா என் அம்மா உடல் புனித்த்தை இழக்கலே. அப்பாவுக்குத் தப்பாமல் பொறந்தவன் நான். நீங்க அன்று யமுனாவில் பேசிய விஷயங்கள் எல்லாமே ஏற்கெனவே பலமுறை நான் யோசித்த விஷயங்கள்தான். ஆனால், வெளியிலே சொன்னால் வெட்கக்கேடு. எனக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் நானே தீர்மானிச்சுக்க முடியுது. ஆனால், என் பிறப்பு என்னால் தீர்மானிக்கப்பட முடியலையேன்ற இயற்கைக்கு மாறான எண்ணம் தவிப்பு எனக்கு உண்டு. குணா படத்தில் கமலஹாசன் பேசற டயலாக்தான்... என் அப்பா தன் முகத்தை என் முகத்தில் ஒட்டி வெச்சிட்டுப் போயிட்டார்.
சின்ன வயதிலிருந்தே என் உடம்பு பற்றிய தாழ்வு மனப்பான்மை, கவலை எனக்கு உண்டு. ஆறாவது படிக்கும்போது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலே நான் கடைசியா வந்தபோதும், என்சிசியில் உடல் காரணம் காட்டப்பட்டு நான் நிராகரிக்கப்பட்ட போதும் என்னால் தாங்கிக்க முடியலே. அப்பல்லாம் என்னைப் பெத்தவங்க மேலே அநியாயத்துக்குக் கோபம் வரும்.
ஏன்? தலைவிதியா? மழையில் நனைந்தால் சளி... தலைவலி... தூசி, துருமபில் சிக்கினால் டஸ்ட் அலர்ஜி... கொஞ்ச தூரம் ஓடினால் மூச்சு வாங்கல். ‘ஏண்டா என்னைப் பெத்துப் போட்டே?’னு என் அப்பாவை எரிஞ்சு விழணும்னு நினைப்பேன். ஒரு பக்கம் வாழணும்மகிற அறிவு. இன்னொரு பக்கம் மழைக்காலத்தில் சைனஸ் வந்து துடிக்கும்போது, செத்துட்டால் பரவாயில்லைங்கிற எண்ணம். பலநேரங்களில் ஏன் பிறந்தோம்னு வெறுத்துக்கிட்டே வாழறேன்...” என்றான். குரல் உடைந்து பிசிறடித்தது.

“அழுமூஞ்சி...” செல்லமாய் அவனது தலை முடியைக் கலைத்துவிட்ட்டாள். அது அவனுக்குப் பிடித்திருந்தது. அவனது முகத்தைத் தன் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டாள். அது மிகவும் பிடித்திருந்தது.

மறுநாள்...

அவளது அலுவலகத்துக்கு அவன் போன் செய்தான்.

“இன்னிக்கும் மீட் பண்ணலாமா..?” என்று உற்சாகமாய்க் கேட்டான்.

“வேண்டாம் குமார்... நேற்று நாம அப்படி நடந்துக்கிட்டது தப்போன்னு இப்ப தோணுது...” என்றாள்.

“ஏன் அப்படி? எனக்கு ஒண்ணும் அப்படியில்லையே...”

“இல்லே குமார். நீங்க எமோஷனல். உங்களை நான் எக்ஸ்பிளாய்ட் பண்றனோன்னு உறுத்தலா இருக்கு. இதுதவிர, உங்க ஃபிரெண்ஷிப்பை இந்த உறவாலேயே நான் இழந்திட வேண்டி வருமோன்னு கொஞ்சம் கவலையாவும் இருக்கு...”

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்...”

“ராத்திரி நான் நிறைய யோசிச்சேன். இந்த உடம்புக்காக என்னைத் தேடியலைஞ்சவங்க அதிகம். எவ்வளவோ நண்பர்கள் வந்தாங்க. போனாங்க. எல்லா ஃபிரெண்ட்ஷிப் மாதிரியும் உங்க ஃபிரெண்ட்ஷிப்பும் ஆகிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி உறவுகள்ல ஒருநிலைக்கு அப்புறம் இவ்வளவுதானா எல்லாம்கிற அலுப்பும், அலுப்பு ஏற்படுத்துகிற விலகலும் இருவருக்கும் இடையில் வேண்டாமே. இதுக்கு முன் நிறைய பேரை நான் இந்தக் காரணத்தால் இழந்தேன். உங்களை அப்படி நான் இழக்க விரும்பலே...

ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஈடுபாடு இருக்கணும். அந்த ஈடுபாடு உடம்பு மேலே மட்டும்கிற நிலை வந்துடக் கூடாது. உங்க உடம்பை விட உங்க அருகாமையும் உங்க பேச்சும்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உடம்பு தவிர வேற எதிர்பார்ப்புகளே இல்லைங்கிற மாதிரி நம்ப இருவருக்கம் நடுவில் போயிடக் கூடாது. நேற்று நடந்த சம்பவம் நம்ப ஃபிரெண்ஷிப்பை திசை திருப்பிடுச்சோன்னு நினைக்கிறேன்...” –அவன் பதில் சொல்வதற்குள் போனை வைத்துவிட்டாள்.

அவளுக்கென்ன? அவள் எளிதாய்ச் சொல்லிடவிட்டாள். அவனா அவளிடம் கேட்டான்? அவளாகத்தான் வந்தாள். இப்போது அவளாகவே வேண்டாம் என்கிறாள். பெண்மையைப் புதிர் என்று கூறுவது இதனால்தானோ?

அதன் பிறகு ஒரு மாதத்துக்கு அவனோ அவளோ போனே செய்து கொள்ளவில்லை. அன்று அவளிடமிருந்து போன் வந்தது. பேசினான். “சாயங்காலம் பீச்சுக்கு வர்றீங்களா?” தலையாட்டினான்.

“ஏன் பீச்சுக்குக் கூப்பிட்டீங்க?”

அவள் சாதாரணமாகச் சொன்னாள். “நான் குழந்தை பெத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அவன் ஒன்றும் பதில் கூறவில்லை. கவனித்தான்.
“இருபத்தொன்பது வயசாகிடுச்சி... அம்மா, அப்பா எல்லோரும் என்னைத் தேவடியாள் கணக்காய் விரட்டியடிச்சுட்டாங்க. ஆறு வருஷமா மெட்ராஸ்ல தனியா தங்கியிருந்தாச்சு. தற்காலிக உறவுகள் நிறைய. இந்தத் தனிமை சமீப காலமா துன்புறுத்தலா இருக்கு குமார். என்னை நேசிக்கிற ஒரு ஜீவன்... என் ரத்தத்திலேர்ந்து வரப்போற ஜீவன்...”

“எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க...? யாரை?”

“கிண்டலா? நான்தான் கல்யாணம்கிற சிஸ்டத்திலே நம்பிக்கை இல்லைன்னு ஏற்கெனவே உங்கக்கிட்டே சொல்லியிருக்கேனே...”

“கல்யாணம் பண்ணிக்காமலேயே குழந்தையா..?” -இதை அவளிடம் கேட்கும்போது அவனுக்குள் இனம்புரியாத எதிர்பார்ப்பு. இந்த விஷயத்தை வேலை மெனக்கெட்டு தன்னிடம் ஏன் அவள் கூறவேண்டும்? அவன் நெஞ்சுக்குள் தடக்... தடக்...

அவள் சொன்னாள். “என் ஆபீஸ் மேனேஜர் சுந்தர்ராஜன்... ரொம்ப இனிமையானவர். உடல் ஆரோக்கியம் நிறைந்தவர். புத்திசாலி. என் குழந்தை உடல் ஆரோக்கியம் நிறைந்ததா இருக்கணும்..”

இந்தப் பதில் அவனுக்குள் ஊசி பாய்ச்சியது. அவனுக்குள் எதுவோ நொறுங்கி விழுந்த உணர்வு.

அவன் அவசரமாய் எழுந்தான்.

“என்ன எழுந்துட்டீங்க..?”

“தலை வலிக்குது. நாளைக்குப் பார்க்கலாம்...” அவன் அவசரமாக விரைந்தான்.

மறுநாள்... அவனது தலைவலி எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காக அவள் அவனுக்கு போன் செய்தாள். தான் அலுவலகத்துக்கு வரவில்லை என்று கூறிவிடுமாறு அவன் ஆபரேட்டரிடம் கூறிவிட்டான்.

Saturday, 14 July 2012

கவிதை



தண்டி ஓட்டம்!
-பெ. கருணாகரன்

வெற்றிக் கோடு குறித்துக்
கவலையில்லை எனக்கு...
அது வெறுமையால் நிறைந்தது
முன்னாலும், பின்னாலும்
ஓடிக் கொண்டிருப்பவர்கள் குறித்தும்
கவனமில்லை எனக்கு
அது நிரந்தரமற்றது

முந்திச் செல்பவன் குறித்த பொறாமையோ
பிந்திச் செல்வது குறித்த அவமானமோ
எதுவும் இல்லை எனக்கு

எந்தக் குதிரையும்
முதலில் வருவதற்காகச் சந்தோஷமோ
கடைசியில் வந்ததற்காக வருத்தமோ கொள்வதில்லை.
ஓடுதல் மட்டுமே குதிரைக்குச் சந்தோஷம்

கிண்டி மைதானமாயினும்
தண்டி மணற்பரப்பாயினும்
ஓடுவேனே தவிர,
யாத்திரை செய்ய மாட்டேன்.

அதனை தண்டி ஓட்டம் என்று
சரித்திரம் குறிப்பெழுதிக் கொள்ளும்.