Tuesday 23 April 2013



காகிதப் படகில் சாகசப் பயணம் - 5

பயணங்கள் முடிவதில்லை!

பெ. கருணாகரன்

மீபத்தில் விகடன் ஆசிரியர் ரா. கண்ணன் ஃபேஸ்புக்கில் விகடன் அலுமினி பக்கத்தில் ‘மாணவப் பத்திரிகையாளர் திட்டம் இல்லாதிருந்தால் நாமெல்லாம் என்னவாகியிருப்போம்?’ என்று சக நண்பர்களுக்கு நிலைத்தகவல் போட்டிருந்தார். என்னவாகியிருப்போம்? சுவாரஸ்யமான யூகங்களைக் கிளப்பிவிடும் கேள்வி அது.

அதற்கு முன் அந்தத் திட்டத்தைப் பற்றி சில வரிகள். மாணவப் பத்திரிகையாளர் திட்டம் என்பது ஒரு திட்டம் மட்டுமல்ல. அது ஓர் இயக்கம். மாணவப் பத்திரிகையாளனாய்த் தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. இதுவரை என்னைப்போல் ஆயிரம் பேருக்கும் மேலே மாணவப் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது விகடன். அதில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பத்திரிகைத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் எந்தப் பின்புலமும் இல்லாத பலரையும் இன்று வாழ்க்கை யுத்தத்தில் அனாயசமாக வாள் சுழற்ற அது கற்றுக் கொடுத்துள்ளது. நெருக்கடிகளை வெல்லும் நெளிவு சுளிவுகளைக் கற்றளித்திருக்கிறது. 

கண்ணனின் நிலைத்தகவலுக்கு நான் இவ்வாறு பின்னூட்டம் எழுதினேன். ‘மாணவப் பத்திரிகையார் திட்டம் இல்லாதிருந்தாலும் நான் பத்திரிகையாளனாகவே ஆகியிருப்பேன்’ என்று. 

ம். பத்திரிகையாளனாக வேண்டும என்பது என் ஆழ்மனதில் ஊறித் திளைத்த கனவு. பத்தாம் வகுப்பில் ஃபெயிலானபோது, அந்த ஓராண்டில் மின் அச்சகத்துக்குச் சென்று கம்போசிங் கற்றுக்கொண்டேன். காரணம், பத்திரிகை வேலைக்கு அது அத்யாவசியம் என்கின்ற என் யூகிப்பு. ஒரு பத்திரிகையின் பணி உள்கட்டமைப்பு, அந்தப் பணியில் கம்போசிங் தேவையா என்பது குறித்த விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அவற்றைத் தெரிந்து கொள்ளவோ வழிகாட்டவோ எனக்கு யாருமில்லை. எனக்குள் நானே கருவாகி எனக்கு நானே எருவாகியும் வளர்ந்தேன் என்பதே நிஜம். ப்ளஸ் டூ முடித்தவுடன் என் சிறுகதைகள், கவிதைகள் தினகரனில் வெளிவந்திருந்ததால் அதனையே எனக்கான பரிந்துரையாக்கி தினகரனுக்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். அதன்பிறகு என் கதைகளை தினகரனில் வெளியிடுவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஹா... ஹா... 

அதன்பிறகு கல்லூரி வந்து படித்துக் கொண்டிருக்கும்போதே விகடன் உட்பட பல பத்திரிகைகளில் சுமார் 50 சிறுகதைகள் எழுதியிருந்தேன். இந்த நிலையில்தான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் குறித்த அறிவிப்பை விகடனில் பார்த்தேன். விண்ணப்பத்தைப் பார்த்தவுடன் இது நமக்கெங்கே கிடைக்கப் போகிறது என்ற தயக்கம்தான் தோன்றியது. காரணம் அதில் புகைப்படம் எடுக்கத் தெரியுமா? தட்டச்சத் தெரியுமா? ஷார்ட் ஹேண்ட் தெரியுமா என்று ஏகப்பட்ட தகுதி தொடர்பான கேள்விகள். எதுவும் எனக்குத் தெரியாது, எழுதுவதைத் தவிர. நான் விரக்தியில் விண்ணப்பம் போட வேண்டாம் என்ற நினைத்தேன். நண்பர்கள் கி. நாகராஜனும் இரா. துரையப்பனும்தான் நம்பிக்கையளித்து விண்ணப்பிக்க வைத்தனர். 

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருந்த அனைத்துத் தகுதிக் கேள்விகளுக்கும் ரொம்ப வெட்கப்பட்டுக் கொண்டே தெரியாது என்று நிரப்பி ஒருவாறு நம்பிக்கை இல்லாமலே விண்ணப்பித்தேன். முதல்கட்டமாக திருச்சியில் நடந்த எழுத்துத் தேர்வில் என் எழுத்துத் திறமை என்னை நேர்முகத் தேர்வுக்குத் தகுதியாக்கியது. நேர்முகத் தேர்வில் நான் பதிலளித்த விதமும் என் சிறுகதைகளும் என்னைத் தேர்வு செய்தன. திறமையிருப்பவர்களை யாரும் பரிந்துரைக்கத் தேவையில்லை. நம் திறமைகளே நமக்கான பரிந்துரைகள். இன்றும் இதில் நான் உறுதியாய் இருக்கிறேன். திறமை இருந்தும் மதிக்கப்டவில்லையென்றால் அங்கிருந்து எவ்வளவு விரைவில் வெளியேற முடியுமோ வெளியேறி விடுங்கள். அங்கிருந்து கொண்டு புலம்பாதீர்கள். இது என் அனுபவ அறிவுரை. 

து 1987ம் ஆண்டின் ஜூலை மாதம். இரண்டாம் தேதி - விடிகாலை 3.30 மணி. மலைக்கோட்டை விரைவுத் தொடர்வண்டி என்னை விருத்தாசலம் சந்திப்பில் ஓர் எச்சில் திவலையாய் துப்பிவிட்டுச் சென்றது. 

கையில் சூட்கேஸ் கனத்தது. அதனைவிட தலை சற்று கூடுதலாகவே கனத்துக் கொண்டிருந்தது. சில தினங்கள் முன்புவரை நான் கொளஞ்சியப்பர் அரசுக் கலைக்கல்லூரியின் ஒரு சராசரி மாணவன். இன்று விகடன் மாணவப் பத்திரிகையாளன். எனக்குப் பின்னே ஓர் ஒளி வட்டம் இருப்பதாகவும் எல்லோரும் என்னையே கவனித்துக் கண்டிருப்பதாகவும் ஒரு மூடப் பிரமை. பெருமிதமான, பரவசமான என் வாழ்வின் உன்னதமான அந்தத் தருணத்தை இப்போது நினைத்தால் இன்றும் என் உடல் சிலிர்க்கும். 

விகடன் மாணவப் பத்திரிகையாளன்! இப்படிச் சொல்லிக் கொள்ளும்போதே மனதுள் ஒரு கம்பீரம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. மாணவப் பத்திரிகையாளராகும் வரை நான் ஒரு தனிநபர். ஆனதும் நான் ஒரு சாமுராய். ஒவ்வொரு செய்திச் சேகரிப்புக்குச் செல்லும்போதும் புரவியில்லாத போராளி என்ற மனோபிம்பத்தோடுதான் நான் கிளம்புவேன். என் நடையிலும் எழுத்து நடையிலும் கம்பீரம் உணர்ந்த காலம் அது. நூறு சதம் பத்திரிகை வேலையை நேசிக்கும் என் சக மாணவப் பத்திரிகையாளர்களுக்கும் அத்தகைய பிம்பம் தோன்றியிருக்கலாம்.

நேற்றுவரை அடையாளமில்லாதிருந்தவனுக்கு இன்று ஒரு கம்பீர அடையாளம். பையில் விகடன் நிருபர் என்பதற்கான அடையாள அட்டை. கண்களில் ததும்பி வழியும் கனவுகள். அந்த ஒரே நாளில் சமூகத்தின் என் மீதான மதிப்பீடுகள் தலைகீழாக மாறிப் போயின. வாழ்வில் அன்றிலிருந்து சுறுசுறுப்பும் சுவாராஸ்யமும் கூடிப் போயின. 
ஒருபுறம் நண்பர்கள் வட்டமும் மறுபுறம் எதிரிகள் வட்டமும் விரிந்தன. வருமானச் சான்றிதழ் கொடுக்காமல் கடுப்படித்த தாசில்தார் ‘உட்காருங்க சார்’ என்று பவ்யம் காட்டினார். காவல் நிலையத்திலும் நாற்காலி வரவேற்பு. கல்விக் கட்டணம் கட்டுவதற்குக் கூட பெற்றோரின் கைகளை எதிர்பார்த்திருந்தவன் சுய காலில் நிற்கத் தொடங்கிய நாட்கள். 

மாணவப் பத்திரிகையாளனாய் இருந்த அந்த ஒரு வருடத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் நான் பயணம் செய்யாத ஊர்கள் மிகக் குறைவே. தினமும் புதிதாக 25 பேரையாவது சந்தித்து நட்பாக்கிக் கொள்வது என்று தீர்மானம் போட்டிருந்தேன். எனக்கு அது கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு. அதிலும் வெற்றி பெற வேண்டும். அதேநேரம் விகடன் மாணவப் பத்திரிகையாளராய் அவுட் ஸ்டேண்டிங் தகுதி பெற்று எம்டி எஸ். பாலசுப்பிரமணியனின் கையால் சிறப்புப் பரிசு பெற்று விகடனில் வேலைக்குச் சேர்ந்து வேண்டும. இதுவே என் ரத்தத்தில் ஊறிப் போன அப்போதைய லட்சியமாய் இருந்தது. 

பகலெல்லாம் ரிப்போர்ட்டிங் சென்றதால் கல்லூரிக்குச் செல்வதில் சிரமமிருந்தது. என் நிலையுணர்ந்த க்ல்லூரிப் பேராசிரியர்கள் நான் வகுப்பில் இல்லாதபோதும் எனக்குப் பிரசெண்ட் போட்டுப் பெருந்தன்மை காட்டினார்கள். ஜூனியர் விகடனில் ஒருபுறம் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்க, மறுபுறம் ஆனந்த விகடனில் சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருந்தேன். திட்டத்திலிருந்த அந்த ஆண்டு மட்டும் 13 சிறுகதைகள் எழுதினேன். எல்லாம் ஒருபக்க, இரண்டு பக்கக் கதைகள். ஜூவியில் சுமார் 40 கட்டுரைகள் வெளியாகின.

மறுபுறம் கல்லூரிப் பாடம். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாடோடி இலக்கியம், சம கால இலக்கியம் என்று தலையணை சைஸ் புத்தகங்களுடன் போராட்டம். புத்தகத்தின் சைஸ் பார்த்தவுடனே தூக்கம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
‘எம்.ஏ.வில் நல்ல மார்க் எடுத்து எம்.பிஃல். முடிச்சுடுங்க. பேராசிரியர் வேலை கிடைக்கும். நல்ல சம்பளமும் மரியாதையும் கிடைக்கும். பத்திரிகை வேலை உங்களுக்கு வேண்டாம். இது தற்காலிகப் போதை. உங்களால் இதில் பெரிய வளர்ச்சி காண முடியாது’ என்று அப்போது என் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் தூபம் போட்டார்கள். ஆனால், என்னால் அதனை ஏற்க முடியவில்லை. 

ஏனோ அரசு வேலையில் மனம் ஆரம்பத்திலிருந்தே நாட்டம் கொள்ளவில்லை. ஒரு நாடோடித்தனமான வாழ்க்கையையே மனம் விரும்பிக் கிடந்தது. ஒரு பத்திரிகையாளனாக இருந்தால்தான் அது இயலும் என்று தோன்றியது. என் மனோபாவத்துக்கு வாத்தியார் வேலை சரிவராது. எனக்கான திட்டம தெளிவாக இருந்தது. பத்திரிகையாளன் ஆவது! பத்திரிகைக்குள் நுழைந்து நிறைய கதைகள் எழுதுவது. இதுதான் அந்தத் திட்டம். (அது நடந்ததா என்பதை இன்னொரு இடத்தில் சொல்கிறேன்).

ஆழ்மனதில் புதைந்து போன அந்த உறுதியான முடிவால், பேராசிரியர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்தேன். என் முடிவுகளில் உறுதியாய் இருந்தேன். 

ஆனது. அந்த ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் நான் அவுட் ஸ்டாண்டிங் வரமுடியவில்லை. டிஸ்டிங்ஷன்தான் கிடைத்தது. (அதேநேரம் முதுகலைப் படிப்பில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்). அவுட் ஸ்டாண்டிங் இல்லை என்பதற்காக நான் நிராகரிக்கப்படவில்லை. என் எழுத்துத் திறன் எனக்கான நாற்காலியை வழங்கவே செய்தது. அடுத்த ஆண்டு நான் விகடனில் ஸ்பெஷல் கரெஸ்பான்டெண்டாக நியமிக்கப்பட்டேன். அதற்கடுத்த ஆண்டு விகடன் ஆசிரியர்க் குழுவில் இணைக்கப்பட்டேன். 

கண்ணன் கேட்டதுபோல் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் இல்லாது போயிருந்தால் நான் நிச்சயம் பத்திரிகையாளனாய்தான் ஆகியிருப்பேன். ஆனால், இப்போதைய உயரம் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். 

ஒரு மாணவப் பத்திரிகையாளனாய் தேர்வு பெற்று, பல இதழ்களில் பணிபுரிந்து தினம் தினம் ஒரு நர்சரிப் பள்ளி மாணவனின் அறியாமையை அகற்றிக் கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தோடு புதிது புதிதாய் கற்றுக்கொண்டும் அடுத்துவரும் இளைய தலைமுறைக்குக் கற்றதைக் கற்பித்துக் கொண்டும் பிரமாண்டாய் தகத்தகாயமாய் ஒளிவீசி நீண்டு விரிந்து செல்லும் ராஜபாட்டையில் இன்னும் ஒரு மாணவப் பத்திரிகையாளனாகவே பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது  :)
 

1 comment:

  1. க்ரேட் தல..சோர்ந்து வரும் என் நம்பிக்கைகளையும் துளிர்க்கச் செய்கிறது, உங்கள் வரிகள். தொடருங்கள் சார்.

    ReplyDelete