Tuesday 3 July 2012


காதல் ஒப்பாரி!

என்மன வானில் ஏறி
 ஏதேதோ ராகம் பாடி
பொன்வனக் குயிலே அன்று
 போதையைத் தந்தாய்; இன்று
என்மனப் பாடல் எல்லாம்
 ஏந்திழை உன்னை எண்ணி
கண்ணீரில் மூழ்கி மூழ்கி
 கரையுதே மெல்ல மெல்ல!

புதிரினைப் போலே, கண்ணால்
 புரிந்திடா அர்த்தம் தந்தாய்!
மதிதனை மயக்கி, கொஞ்சம்
 மதுவெறி புகுத்தி, நித்தம்
மதிலிலே பூனை போல
 மனத்தினை அலைக்க ழித்தாய்!
சதிராடும் பூவே! நான்உன்
 மரப்பாச்சிப் பொம்மை தானா?!

காலங்கள் தோறும் இந்தக்
 குவலயம் மாறும்; ஆனால்
ஓலங்கள் போடும் நெஞ்சம்
 ஒருபோதும் மாறா தம்மா!
பாலங்கள் உடைந்த போதும்
 பாடலால் பாலம் போட்டு
காலத்தைத் திரும்ப மீட்டேன்;
 கண்ணீரைத் தேக்கி வைத்தேன்!

உயிரிலே திராவ கத்தை
 ஊற்றியே சென்றாய்; கோடை
வெயிலிலே உருகு கின்ற
 வெண்ணெயாய் ஆனேன்; காதல்
மயிலேஉன் முகத்தைக் காண
 முடியாமல் ஏங்கிச் சாவு
துயில்வாங்கச் செல்லு கின்றேன்
 சுடுகாட்டுத் திடலில் இன்று!

பாவினை மறந்து இந்தப்
 பாரினில் உயிர்து றந்து
சாவினைத் தொட்ட தேகம்
 சவக்குழி செல்லும் முன்னர்
பாவிஎன் உடலின் மீது
 பாவைநீ மலர்கள் அள்ளித்
தூவிடு அதுவே போதும்!
 சொர்க்கமா சீ!சீ! வேண்டாம்!


No comments:

Post a Comment