Wednesday 4 July 2012


 கோடுகள் நடந்த பாதை..!

                                         -கார்ட்டூனிஸ்ட் பாலா பேட்டி

“எங்க தாத்தா பொன்னையா  அடிக்கடி சொல்ற வார்த்தை, ‘பாலா... எங்கேயும் நாம அலக்கா தெரியணும்டா... ’ ‘அலக்என்ற இந்தி வார்த்தைக்குத் தனித்தன்மை  என்று  அர்த்தம். பத்திரிகைத் துறையில் செய்தியாளனாகவும், ஆசிரியர் பிரிவிலும்  பணிபுரிந்தபோதும் நான் முழுநேர கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் ஆகணும்னு முடிவு பண்ணியதுக்குக் காரணம், என் தாத்தாவின் அறிவுரைதான்.
எனது பூர்வீகம் நெல்லை. வறட்சியான எங்கள் பகுதியில் இருந்து மும்பைக்குப் பிழைக்கப் போனவர்களில் எனது தாத்தா பொன்னையாவும் ஒருவர். தாத்தா மும்பை மில்களில் வேலை பார்த்தார். பிற்பாடு மும்பை வந்த எனது தந்தை, ரயில்வே பணியில் சேர்ந்தார். நான் பிறந்து வளர்ந்து ஆரம்பக் கல்வியை முடித்தது மும்பையில்தான். ஒரு கட்டத்தில் தாத்தாவுக்கு மண்பாசம் வந்து, சொந்த ஊருக்கே வந்துட்டார். பின்னாடியே தாத்தா,  பாட்டிக்கு உதவியாக என்னையும் என் அக்காக்கள் ரெண்டு பேரையும்  ஊருக்கு அனுப்பி வைச்சுட்டாங்க.
தாத்தா மேற்பார்வையில் வளர்ந்தேன். தாத்தா ரொம்ப வித்தியாசமான பர்சனாலிட்டி. மும்பையில் இருந்ததால் அவருக்கு நல்லா இந்தி தெரியும். புத்தகங்கள் படிக்கக் கூடியவர். மத்த பசங்க எல்லாம் தட்டாம் பூச்சி புடிக்கிறது, ஓணான் அடிக்கிறதுன்னு விளையாடும்போது, தாத்தாவோ என்னைப் படிக்கச் சொல்லுவார். தோட்டத்தில் செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்லுவார். மத்த பசங்க கூட விளையாடிக்கிட்டு இருக்கும்போது கூப்பிட்டு, இப்படி படி, செடிக்கு தண்ணி ஊத்துனு சொன்னா கடுப்பு வராதா... எனக்கும் கடுப்பா வரும். ஆனால், அதை சரிகட்டும் விதமாக தாத்தா எனக்கு ராணி காமிக்ஸ் வாங்கித் தருவார். காமிக்ஸ் படிக்கிறதுன்னா எனக்கு கொள்ளை ஆசை.
அதில் எனக்கு ரொம்பப் புடிச்ச காரெக்டர் முகமூடி வீரர் மாயாவி. அது ரொம்ப ஃபேன்டஸியா இருக்கும்.  டெவில்ங்கிறது மாயாவியோட நாயின் பெயர். தேவர் ஃபிலிம்ஸ் நாய் மாதிரி செம சமர்த்து. அதன் மேலே இருந்த ஈர்ப்பினாலே ரோட்டுலே எந்த நாய் கிடைச்சாலும் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சுருவேன். எல்லா நாய்க்கும் ஒரே பெயர்தான், டெவில். இந்தக் காலக்கட்டத்தில் மாயாவி படத்தையும் டெவில் படத்தையும் வரைய ஆரம்பிச்சேன். எப்படின்னா, வெள்ளை பேப்பரைத் தலையில் தடவினால், அதில்  எண்ணெய் படிந்து ஒரு செமி டிரேஸ் பேப்பர் மாதிரி ஆயிடும். அப்படியே படத்தின் மேல் வச்சு காப்பி பண்ணுவேன். அச்சு அசலா படம் பிரதி எடுத்த மாதிரி வந்துடும். எனக்கு சந்தோஷம் புடிபடாது. ஓவியம் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத என் குடும்பத்திலிருந்து இப்படித்தான் எனது ஓவியப் பயிற்சி தொடங்கியது. ஓவிய ஆர்வம் எங்கள் வீட்டுச் சுவரில் கிறுக்கல்களாக வெளிப்படும். சுவரையெல்லாம் இப்படி கிறுக்கி, நான் காலிபண்ணுவதை என் தாத்தா ஒரு போதும் கண்டித்ததே இல்லை.
அப்போ, விவேகானந்தா கேந்திரா என்ற அமைப்பு திருநெல்வேலி மாவட்ட அளவில் மாணவர்களுக்காகப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியெல்லாம் வைச்சுக்கிட்டிருந்தாங்க. ஓவியப் போட்டியிலே நானும் கலந்துக்கிட்டேன். பேர் கொடுக்கும்போதே நான்தான் முதல் பரிசு வாங்கிட்டதா கனவு காண ஆரம்பிச்சுட்டேன். ஆனால், போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்த பிறகுதான் தெரிந்தது,  நான் ஒரு ஜுஜுபின்னு. வந்த பசங்க எல்லாம், எதையும் பார்க்காம கற்பனையா வரையறானுங்க. ஆனால், நான்? என் ஓவிய அனுபவம் டிரேஸ் எடுக்கிறது மட்டும்தானே? அந்தப் போட்டியில் தோற்றுவிட்டேன். பரிசு என்றால் சில புத்தகங்கள் தருவார்கள். எனக்கு அதை இழந்தது பெரிதாக வருத்தமில்லை. ஆனால், அந்தப் பரிசை சபையில் வைத்துத் தருவார்களே, பள்ளி ஹெட்மாஸ்டர் பிரேயரில் நம் பெயரைச் சொல்லிப் பாராட்டுவாரே. அந்தப் பெருமையை இழந்துவிட்டேனே என்பதுதான் என் வருத்தம். அன்னிக்குத் தூக்கமில்லே. அடுத்த வருஷம் எப்படியாவது முதல் பரிசை வாங்கி, ஸ்கூல்ல நம்ம தோஸ்துகள் முன்னாடி ஹீரோ மாதிரி ரவுண்ட் வரணும்னு வெறியாயிட்டேன்.
மறுநாள் நான் டிரேஸ் பேப்பரை எடுத்து படம் வரைஞ்சுக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்த எனது தாத்தா,   ‘இதுல என்னடா திறமை இருக்கு. கற்பனை சேஞ்சு வரையணும். இப்போ ஒரு நரியும் சிங்கமும் பேசிக்கிட்டு இருக்குற மாதிரி வரைஞ்சு காட்டு பார்ப்போம்என்றார். நானும் அதைச் சவாலா எடுத்துக்கிட்டு நரியும் சிங்கமும் பேசிக்கிட்டு இருக்குற மாதிரி வரைஞ்சு காட்டினேன். அதைப்பார்த்து விட்டு, ‘அபாரம்டா... ரொம்ப நல்லா இருக்கு...என்று வாயார வாழ்த்தினார். இப்ப யோசிக்கும்போது நான் ஒண்ணும் அந்தப் படத்தை  பிரமாதமா வரையல. அது ரொம்ப சுமாரான படம்தான். இருந்தாலும் தாத்தா என்னை உற்சாகப்படுத்தணும்கிறதுக்காகத்தான் அப்படிச் சோல்லியிருக்கார். (இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நரியும், சிங்கமும் பேசிக்கொண்டு இருப்பது போல் வரையச் சொன்னதுதான் கார்ட்டூனுக்கான தன்மை. அதுதான் நான் கார்ட்டூன் வரைவதற்கான முதல் வித்து)
அடுத்த வருடத்துக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்பும் வந்தது. நான் பேர் கொடுக்கப் போறது தெரிஞ்சி தாத்தா, ‘பாலா, சந்தேகமே படாதே. பரிசு இந்த வருஷம் உனக்கு தான்னு உறுதியாகச் சோன்னார். அதேமாதிரியே முதல் பரிசு எனக்குதான். அந்த வருஷம் மட்டுமில்லே, நான் பத்தாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் முதல் பரிசை நானே தொடர்ந்து வாங்கிக்கிட்டிருந்தேன்.
ஓவியப் போட்டியில் கிடைத்த அந்த முதல் தோல்விதான் என்னைத் தொடர்ந்து போட்டிகளில் ஜெயிக்கத் தூண்டியதுன்னு இப்ப நினைச்சுப் பார்க்கிறேன். அந்த அவமானம், பசங்க கிண்டல் அதுதான் என்னை உசுப்பேத்தி விட்டிடுச்சு. வெறும் வீம்பாக இல்லாமல் என் திறமையையும் நான் மேம்படுத்திக்கிட்டதும் என் வெற்றிக்கு முக்கியக் காரணம். அப்புறம், வள்ளியூரில் ப்ளஸ் டூ படிப்பு. அது முடிந்து அதற்குமேல் குடும்பச் சூழல் காரணமாக படிக்க முடியாமல் மும்பைக்கு வந்துட்டேன். சதீஷ் குப்தா என்கிற ஆடிட்டரின் ஆபீசில் அக்கவுண்டன்ட் வேலை. அங்கு வேலைப்பார்த்துக் கொண்டே மேற்படிப்பும் கம்யூட்டர் அனிமேஷனும் படிக்க ஆரம்பிச்சேன். 
மும்பையிலிருந்து மும்பை தமிழ் டைம்ஸ்என்கிற தினப்பத்திரிகை வெளி வந்துக்கிட்டிருந்தது. அதில், ‘உங்கள் எண்ணங்கள்என்றொரு பகுதி. நானும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதிப் போட்டுக்கிட்டிருந்தேன்.  ஒருநாள் திடீர்ன்னு நான் எழுதினது பிரசுரமாகியிருந்தது. சந்தோஷம் தாங்கலே.
அடுத்து, கதை எழுதி அதுக்கு நானே படமும் வரைஞ்சு அனுப்ப ஆரம்பிச்சேன்.  தினமும் பேப்பர் பார்க்கிறதும், அது வரலைன்னதும் சின்ன சோகம் தாக்கும். ஆனாலும் சோர்ந்து போயிடாமல் தொடர்ந்து கதைகளும் படங்களும்  அனுப்பிக்கிட்டிருந்தேன்.  ஒருநாள் நான் எழுதிய கதை, நான் வரைந்த படத்துடன் பிரசுரம் ஆனது.
அந்தச் சமயம் பாலபாரதி, மதியழகன் சுப்பையா என்கிற இரு நண்பர்களை நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போது நான் ஓவியம் என்ற பெயரில் வரைந்து வைத்திருந்தவைகளைப் பார்த்த பாலபாரதி, ‘உனக்குப் படமே வரையத் தெரியலே... பேசாம நீ கார்ட்டூனிஸ்ட் ஆயிடுஎன்றார். எனக்குப் புரியவில்லை. அப்போதுதான் அவர், எனது கோடுகள் கார்ட்டூன் தன்மை கொண்டவை என்றும் அரசியல் கார்ட்டூன்கள் வரைய இந்தியாவில் ஆட்கள் குறைவு, நீ முயற்சி செய்தால் கார்ட்டூனிஸ்ட் ஆகிடலாம்என்று உசுப்பேத்தி விட்டார். அந்தக் கணமே நாம கார்ட்டூனிஸ்ட் ஆகுறோம் என்று முடிவு செய்து, அரசியலையும் மற்ற கார்ட்டூனிஸ்ட்டுகளின் கார்ட்டூன்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன்.
தொடர்ச்சியாக கார்ட்டூன்கள் வரைஞ்சு, ‘தமிழ் டைம்ஸ்க்கு அனுப்ப ஆரம்பிச்சேன். என் கார்ட்டூன் ஒன்றை மிஸ்டர் டைம்ஸ் என்ற கேள்வி-பதில் பகுதியில் முதன் முதலாகப் பயன்படுத்தினாங்க. உற்சாகமாகிட்டேன். தொடர்ந்து நான் சளைக்காமல் கார்ட்டூன்கள் அனுப்பிக்கிட்டே இருந்தேன். நடு நடுவில் ஒரு சில படங்கள் பிரசுரமாயின. ஒருநாள் அந்த முடிவை எடுத்தேன்.
 ‘மும்பை டைம்ஸ்பத்திரிகைக்கு நேரில் போய் அதன் ஆசிரியரைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்தினேன். அதன் ஆசிரியர் ராபர்ட், உதவியாசிரியர் இளங்கோவன் என்னிடம் மரியாதையாகப் பேசினார்கள்.  தொடர்ந்து படம் வரைந்து அனுப்பச் சோன்னார்கள். நானும் தொடர்ந்து வரைந்து அனுப்பிக் கொண்டே இருந்தேன். விடியற் காலையிலேயே எழுந்து சென்று பேப்பர் வாங்கிப் பார்ப்பேன். படம் வெளிவந்திருந்தால்  மீண்டும் இன்னொரு படம் அனுப்புவேன். வராவிட்டால் இரண்டு, மூன்று என்று அதிக அளவில் அனுப்புவேன். இத்தனைக்கும் அந்தப் பத்திரிகையில் சன்மானம்  கூடக் கிடையாது. படத்தை அச்சில் பார்க்கிற சந்தோஷம் மட்டுமே.
இந்த நிலையில் அப்போது, ‘ஜூனியர் விகடனில்வாசகர் கார்ட்டூன் என்ற பகுதி வந்து கொண்டிருந்தது. பட்ஜெட் பற்றிய கார்ட்டூன் ஒன்றை அனுப்பி வைத்தேன். அது பிரசுரமானது. அந்த கார்ட்டூனுக்கு 300 ரூபாய் அன்பளிப்பு. அதுதான் நான் வாங்கிய முதல் சன்மானம். தொடர்ந்து, ஜூவிக்கு வாசகர் கார்ட்டூன் அனுப்ப ஆரம்பித்தேன். நடுநடுவே அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
ஒருநாள் ராபர்ட்டைச் சந்தித்தபோது, ‘இங்கேயே உதவியாசிரியராகச் சேர்ந்து கொள்ளுங்களேன்என்றார்.  சம்பளம்? ஆடிட்டர் ஆபிசில் கிடைத்ததைவிட சொற்பம்தான். அதேநேரம் எனக்கு அந்த வேலை பிடித்திருந்தது. பி.டி.ஐ. செய்திகளை மொழிபெயர்க்கும் வேலை. க்ரைம், போலீஸ் என்கவுன்டர், மர்டர் ஸ்டோரிகளாகப் பார்த்து மொழிபெயர்ப்புக்காக என்னிடம் அனுப்புவார்கள். அவற்றை மொழிபெயர்த்தாலும் கார்ட்டூன் வரைவதில்தான் என் முழு கவனமும் இருந்தது. தினமும் மும்பை டைம்சில்என் கார்ட்டூன் வர ஆரம்பித்தது. தொடர்ந்து செய்தித்தாள்களைப் பார்ப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று செய்திகளைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு பத்திரிகையில் செய்தியாளர், டெஸ்க் ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், கார்ட்டூனிஸ்ட், ஒருவர்தான். எனவே தனித்துவமாகத் தெரிய வேண்டுமானால் கார்ட்டூனிஸ்ட்டாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
இடையில் ஒருநாள் என் அப்பா ஒரு கவரை என்னிடம் நீட்டினார். ரெயில்வேயில் எனக்கு வேலைக்கான கால் லெட்டர். நான் அதை உடனே வாங்கிக் கிழித்துவிட்டேன். அப்பா கலங்கிவிட்டார். எனக்கு வேலைக்கு முயற்சி பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது. தொல்லை பண்ணாதீங்கப்பா...என்று நான் சொன்னபோது, அப்பா தளர்வான குரலில்,  ‘இனி, உன் தலையெழுத்து... பார்த்துக்கோ...என்றார்.
இப்படி என்னவாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்க, நண்பர்கள் பாலபாரதி, மதியழகன் சுப்பையா ஆகியோர் என் கார்ட்டூன்களைப் பற்றி கடுமையாக விமர்சிப்பார்கள். அப்போது அது எனக்கு எரிச்சலைத் தந்தாலும் பின்னர்தான் புரிந்தது, அவர்களின் விமர்சனங்கள் என்னை பட்டை தீட்டுவதற்காக செய்யப்பட்டது என்று. தமிழ்ப் பத்திரிகைகளில் மதன், மதி போன்றோரின் கார்ட்டூன்களைக் கூர்ந்து கவனித்தேன்.  மதன், மதி ஆகியோருடன் போனில் நட்பு கிடைத்தது.  இப்படியாகப் போய்க்கொண்டிருந்த என் கார்ட்டூன் வாழ்க்கையில் ஒரு புத்தகம் மூலம் தீப்பந்தம் மாதிரி ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கார்ட்டூன்கள் வந்து விழுந்தன.
அது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, ‘ஆங்என்ற தலைப்பு கொண்ட மறைந்த கார்ட்டூனிஸ்ட் உதயன் அவர்களின் கார்ட்டூன் தொகுப்பு.  மும்பை புத்தகக் காட்சியில் கிடைத்த அந்தப் புத்தகத்தில், ஒரு கார்ட்டூனிஸ்ட் ரௌத்ரம் பழகியது தெரிந்தது. உதயன் கார்ட்டூனில் அழகுணர்ச்சியை விட, கோபமும் உண்மையின் வீச்சும் அதிகமாக இருந்ததை உணர்ந்தேன். எந்த நிலையிலும் ஒருதலைப்பட்சமாக அவை இல்லை. எனக்கு அந்த நேர்மை கலந்த முரட்டுத்தனமான கோடுகள் பிடித்திருந்தது.  நாமும் கார்ட்டூன் வரைந்தால் அதுபோல் சமரசம் இல்லாமல், நிர்பந்தம் இல்லாமல் வரைய வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.
ஒருநாள், தமிழ்நாட்டுக்கு வந்து எல்லா ஓவியர்களையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், நான் வரைந்த படங்களை எடுத்துக் கொண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் (?) சென்னைப் பட்டணத்துக்கு ரயிலேறினேன். சென்னை வந்ததும், ‘விகடன்ஆபீஸ் சென்று, அங்குள்ள ஆசிரியர் குழுவினரைச் சந்தித்தேன்.  பின்னர் மதன், மருது, மதி, ஸ்யாம், அரஸ் என்று பல ஓவியர்களைச் சந்தித்து என் படங்களைக் காட்டி அபிப்பிராயங்கள் கேட்டுவிட்டு, ‘குமுதம்ஆபீஸ் வந்தபோது செக்யூரிட்டி என்னை உள்ளே விடவில்லை. என் கையில் வைத்திருந்த ஃபைலைப் பார்த்து விட்டு நான் வேலை கேட்டு வந்துவிட்டதாகத் தவறாக முடிவெடுத்து விட்டார். கொடுத்துட்டுப் போங்க... ஆசிரியர் பார்த்துட்டு அப்புறமா பேசுவாரு...என்றார். சரிஎன்று என் செல் எண்ணையும், படங்களையும் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். அன்று இரவு, ஆசிரியர் குழுவிலிருந்து கிருஷ்ணா டாவின்சி பேசினார். படங்கள் நன்றாக இருப்பதாகப் பாராட்டிவிட்டு, கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் இப்போது நினைத்தாலும் ரிவைண்ட் ஆகி காதுகளில் தேனாக ஒலிக்கிறது.
அவர் சொன்ன வார்த்தைகள்,  ‘வேணும்ணா நீங்க ஃபுல் டைம் கார்ட்டூனிஸ்டா இங்கேயே ஜாயின் பண்ணிக்கிறீங்களா?’ அப்புறம் என்னதமிழகத்தின் மிகப் பெரும் பத்திரிகை ஒன்றில் 24 வயதிலேயே ஒருவன் கார்ட்டூனிஸ்ட்டாகி விட்டான். ஆனால் ஒன்று, எப்போதும் எனது கோடுகள் உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்காகப் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  
இப்போ கூட ஒவ்வொரு கார்ட்டூன் வரையும் போதும், புதுசா வரையற மாதிரிதான் உணர்றேன். ஒவ்வொரு முறையும் என் காதருகில் தழுதழுப்புடன் வாஞ்சையாக ஒரு குரல் ஒலிக்கும், ‘பாலா... எங்கேயும் நாம அலக்காதெரியணும்டா...
நன்றி தாத்தா!"

1 comment:

  1. இந்த கட்டுரையின் ஹீரோ பொன்னையா தாத்தா தான்:-)

    ReplyDelete