Tuesday 3 July 2012


கனவுத் தொழிற்சாலையில் கரைந்த நிழல்கள்

ஆனந்தவிகடன் பணியிலிருந்து நான் விலகியபோது, அடுத்து என்ன வேலை என்று எனக்குள் எந்தத் திட்டமுமில்லை. பெரிய நிறுவனத்தை விட்டு விலகியதன் மூலம் நான் முட்டாள்தனம் செய்துவிட்டதாக நெருங்கிய நண்பர்கள் கடிந்துரைத்தார்கள்.  இந்நிலையில் ‘நக்கீரன் கோபால் அண்ணனைச் சந்தித்தேன். ‘நக்கீரன் உங்க இயல்புக்குச் சரிப்பட்டு வராது. புதிதாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம். அதற்கு டம்மி போட்டுக் கொண்டு வாருங்கள்...என்றார்.
நான் மூன்று டம்மிகள் தயார் செய்தேன். 1. நாவலுக்கானது 2. ஒரு பல்சுவை வார இதழ் 3. சிறுகதைகளுக்காகவே ஓர் இதழ். அவருக்கு சிறுகதைகளுக்காக தயார் செய்யப்பட்ட டம்மி பிடித்திருந்தது.
சிறுகதைக் கதிர் என்று பெயரிடப்பட்டு, அந்தப் பத்திரிகை நக்கீரன் வெளியீடாக வெளிவந்தது.  முழுக்க முழுக்க விதவிதமான சிறுகதைகளுடன் அன்றைய பத்திரிகைத் துறையில் அது தனித்துவமாக இருந்தது.  வரலாற்றுச் சிறுகதை, நகைச்சுவைச் சிறுகதை, அறிவியல் சிறுகதை, காதல் சிறுகதை என்று வகைக்கு ஒன்றாக கதைகளில் வெரைட்டி காட்டினேன். நான் அதன் இணையாசிரியர்.
விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனைச் சந்தித்து முதல் இதழைக் கொடுத்து ஆசி வாங்கினேன். இதழைப் பக்கத்துக்குப் பக்கம் புரட்டியவர் மிகவும் மகிழ்ந்தார். வாழ்த்துக்கள் சொன்னார். மூன்றாவது இதழிலேயே ‘ரஜினி ராஜ்யம் என்று ரஜினியைக் கதாநாயகனாக வைத்து ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொடர். அந்த இதழ் 42 ஆயிரம் விற்பனையை எட்டியது. தொடர்ந்து இதழுக்கு இதழ் புதுமை செய்தோம். அந்த இதழுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தார் கோபால் அண்ணன். மாத இதழாக இருந்தது மாதம் இரண்டு முறை இதழானது. நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் மனசுக்குள்ளேயே நீறு பூத்த நெருப்பாய் இருந்த அந்த ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.  அது சினிமா ஆசை.
ரசிகன் படத்துக்கு அடுத்தபடியாக, விஜய் நடிக்கும் படத்துக்கு ஆஸ்கார் மூவீஸ் பாஸ்கருக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன். அந்தப் படத்துக்கு விஷ்ணு என்று பெயரும் வைத்திருந்தார்கள். அந்தப் படத்திற்குக் கதை வேண்டுமென்று நண்பர் கூறினார்.  நான் தயாரிப்பாளர் பாஸ்கரைச் சந்தித்து ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடித்துவிட, சந்திரசேகரனுக்குப் போன் செய்து வரச் சொன்னார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நான் தமிழ்சினிமா உலகில் டைரக்டர் ஆகிவிட்டதாகவே கனவு கண்டேன். மதியம் சந்திரசேகரன் தனது சீடர்களுடன் வந்தார். அவரிடமும் நான் கதையைச் சொன்னேன்.கதையை முழுக்கக் கேட்டு முடித்த அவர்,  ‘இந்தக் கதை கிளாசிகலா இருக்கு. ரசிகன் மாதிரி ஒரு மசாலா கதை வேண்டும் என்றார்.
நான் அசரவில்லை. இரண்டே நாட்களில் அவர் எதிர்பார்த்த கிளுகிளு மசாலாவை எடுத்துக் கொண்டு வடபழனியில் சந்திரசேகரன் அலுவலகத்துக்குச் சென்றேன். வசந்த வாசல் படத்தின் எடிட்டிங்கில் இருந்த அவர், ஒவ்வொரு சீனுக்கும் சிரித்துச் சிரித்துக் கதை கேட்டார். இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சேஞ்ச் பண்ணிக்கலாம்... என்றவர்,  பாஸ்கருக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினார். அன்று மாலை தனது அலுவலகத்துக்கு வரச் சொன்னார் பாஸ்கர்.
நானும் மாலையில் அவர் அலுவலகம் சென்றேன். கதை கூறச் சொன்னார். கூறினேன். நானும் கூறும்போது, ஒரு சீனுக்கும் அவர் சிரிக்கவே இல்லை. இறுதியாக, ‘நான் கதை கேட்டேன். நீங்க வெறும் சீன்களை மட்டும்தானே சொல்றீங்க... இதிலே கதை இல்லியே... சீன் பண்றது பெரிய விஷயம் இல்லே... இனி கதை தோன்றினால் என்கிட்டே நேரா வந்து சொல்லுங்க. காலையில் ஆபிஸ் வர்ற நான் சாயங்காலம் வரைக்கும் இங்கேயேதான் இருப்பேன்...என்றார்.
அவர் கூறியதன் அர்த்தம், ‘நீ ஏன் சந்திரசேகரைப் பார்த்து கதை சொன்னே? என்கிட்டே தானே சொல்லியிருக்கணும்...
என்பதுதான். தயாரிப்பாளர் என்ற முறையில், கதையை தானே முடிவு செய்ய வேண்டும் என்று பாஸ்கரும், ஹீரோவின் தந்தை மற்றும் படத்தின் இயக்குநர் என்ற வகையில் கதையை தானே முடிவு செய்ய வேண்டும் என்று சந்திரசேகரும் நினைத்திருந்ததால், இருவரின் ஈகோவுக்கு நடுவில் நான் நசுங்கிப் போனேன். நான் மட்டுமல்ல, இன்னும் பல இளம் இயக்குநர்கள் கூறிய கதைகளும் பந்தாடப்பட்டன என்பது பின்னர்தான் தெரிந்தது. அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரன் பெயரில் கதை, திரைக்கதை வசனத்துடன் ‘விஷ்ணுபடம் வந்தது.
இந்த அனுபவத்தில் ஒன்றைப் புரிந்து கொண்டேன். தமிழ் சினிமாவுக்கு என் கதைகள் ஒத்துவரலாம். ஆனால், தமிழ் சினிமா ஆட்களின் மனோபாவத்துக்கு நான் ஒத்து வரமாட்டேன். அன்றே என் சினிமாக் கனவுகளை மூட்டை கட்டித் தூக்கிப் பரணில் எறிந்து விட்டேன். கனவுத் தொழிற்சாலையில் என் கனவுகளை கரைத்துவிட்டு, என் நிஜத்தை மட்டும எடுத்துக் கொண்டு திரும்பினேன்.
மீண்டும் பத்திரிகைத் துறைக்கு வரக்கூடாது என்று முடிவு செய்து ஊருக்குப்போய் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலில் இறங்கி ஒரு வருடம் முயன்றேன். தெரியாத தொழில் கையைச் சுட்டது. ஆணி புடுஙக நான் லாயக்கற்றவன் என்பதை உணர்ந்து மீண்டும் பத்திரிகைத் துறைக்கு வந்து சேர்ந்தேன்.
கோபால் அண்ணன் அடிக்கடி சொல்வார், ‘இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படக் கூடாது...
அது பலரின் வாழ்வில் உண்மைதான். அதேநேரம், பறப்பதைப் பிடிக்க தெம்பும், திட்டமும், அயராத முயற்சியும் இருந்தால் ஆசைப்படலாம். தவறில்லை!
 

15 comments:

  1. மகிழ்ச்சி.... இந்த தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  2. //இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படக் கூடாது...’ அது பலரின் வாழ்வில் உண்மைதான். அதேநேரம், பறப்பதைப் பிடிக்க தெம்பும், திட்டமும், அயராத முயற்சியும் இருந்தால் ஆசைப்படலாம். தவறில்லை!//

    அருமை நல்லப் பதிவு... தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்...

    ReplyDelete
  3. அற்புதம் கண்ணே அற்புதம்...வலையுலக மன்னனாக விளங்க வாழ்த்துக்கள் சார்...வாழ்த்துக்கள்...முதல் கம்மெண்ட் என்னுடையது தான்:-)

    ReplyDelete
    Replies
    1. அந்த முதல் ஆள் நான் தான் @ வினி..... யாருன்னு தெரியுதா...?

      Delete
    2. அவ்வவ் நீங்க யாரு...உங்கமேல லைட்டா பொறாமை :-)

      Delete
    3. நெசமாவே தெரியலையா...?

      Delete
  4. வலைப்பூவிற்குள் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.....

    Followers list add செய்யுங்க...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சார்! great...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சார்..முதல் பதிவே அசர வைத்துவிட்டது...தொடருங்கள்

    ReplyDelete
  7. அருமையான முயற்சி. கனிவான வாழ்த்துக்கள் கருணா :)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. மனமார்ந்த் வாழ்த்துக்கள் பெருமாள் கருணாகரன். உங்கள் கனவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்து நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. திரைஉலகினறின் மற்றோறு முகத்தை வெளியில் தெரிய வைத்துள்ளீர்கள்.


    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  11. உண்மையை வெளிப்படையாக சொல்ல ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அது நிறைய உள்ளதாக உணர்கிறேன் நண்பரே... வாழ்த்துக்க்கள்!

    ReplyDelete
  12. superb anna... well try.. and keep it up.!!

    ReplyDelete