Tuesday 4 June 2013




அடங்குமுறை!

பெ. கருணாகரன்


அவனுக்குத் தூக்கம் வரவில்லை - துக்கமாக வந்தது. சமீபகாலமாகவே தூக்கம் வருவதில்லை. மனதுக்குள் இனம் புரியாத உணர்வுகள். எதையும் சகித்துப் போகாமையும்  எதிர்காலம் குறித்த  உறுதியற்றக் குழப்பமும்.  எப்போதாவது உறக்கம் வரும்போது கூட, மூளையில் ஏதோ ஒரு மூலையில் எது குறித்தோ சம்பந்தா சம்பந்தமற்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.  காலையில் விழிக்கும்போது களைப்பாயிருக்கும்.

இப்போதெல்லாம் அவனுக்கு மனிதர்கள் யாருடனும் பேசப் பிடிப்பதில்லை. விருத்தாசலத்திலிருந்த போதும் சரி...  சென்னையிலிருக்கும் போதும் சரி...  எல்லா ஊரிலும் மனிதர்களின் குரல்கள் அதிகாரத்தால் மட்டுமே ஆகியிருப்பதான பிம்பமே மனதில் பதிந்திருக்கிறது. அவர்களுடன் பேச விஷயமே இல்லாத மாதிரி  தோன்றி விட்டது.

மவுனம் பிடிக்கிறது.  தனிமையில் மவுனம் தவிப்பைத் தருகிறது.  தவிப்பு துணை தேடுகிறது. யாரிடமாவது பேச விரும்புகிறது. ஆனால், இவர்களிடம் பேச என்ன இருக்கிறது? மீண்டும்  மவுனம்... தனிமை...  தவிப்பு!
படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன் எழுந்தான். ரூமை விட்டு வெளியே வந்தான். மான்ஷனின் ரிஸப்ஷனில் தூங்கிக் கொண்டிருந்த வாட்ச்மேன் தாத்தாவை எழுப்பினான். பூட்டியிருந்த வெளிக் கதவைத் திறந்து விட்டார். மான்ஷனிலிருந்து சாலையில் இறங்கினான். சாலை...  

திருவல்லிக்கேணியில் குறுகி விரியும் பெல்ஸ் ரோடு. திருவல்லிக் கேணிக்குக்  குடிவந்து மூன்று மாதங்களாகி விட்டன.  இந்த மூன்றே மாதங்களில் திருவல்லிக்கேணி அவனுக்கு அலுத்து அந்நியமாகி விட்டது.

ஏழடிக்கு ஏழடி அறை! அது சிறை! கடகடக்கும் மின் விசிறியின் சத்தம். பக்கத்து ரூம் கல்யாணம் ஆகாத முதிர் ஆடவனின்லொக்... லொக்... இருமலும், பீடி நாற்றமும்...  காலையில் படுக்கையில் புரண்டு, உருண்டு கொண்டிருக்கும்போது வெளியே  கை பம்ப்பின்லொடக், லொடக்சத்தம்...  எங்கிருந்தோ மிதந்து வரும் டேப் ரிக்கார்டர் கானா... நடுவில் யாரோ விசிலடித்துக் கொண்டே ஓடுவார்கள். ஏதோ ஓர் அறையின் வெளிக் கதவு  பூட்டப்படும்  டு டக்... டர்க்... சத்தம்- இதுவெல்லாம் இந்த நேரத்துக்கு இது நமக்கும் என்பது மாதிரியான நிர்ணயிக்கப்பட்ட பொழுதுகள்.

திருவல்லிகக்கேணிக்குக் குடியேற முதலில் அவனுக்குத் திட்டம் வந்ததே - கடல் மேல் உண்டான  ஈர்ப்புதான்.

கடல் - அதன் பிரம்மாண்டம் - நீல நிறம் தரும் சந்தோஷம் - கடல் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், அவனால் திருவல்லிக்கேணியில் ஒண்ட முடியவில்லை. அதன் உப்பு நீரும், தெலுங்கானா, கேரள, கன்னட இளைஞர்களின் புரியாத வார்த்தைகளும், தமிழ் பேசும் மானிடர்களிடம் வெளிப்படும் அவனுக்குத் தொடர்பற்ற  சுவாரஸ்யங்களும்... அவனை மான்ஷனில் தனிமைப்படுத்தியது. பெண்கள்... சினிமா... அரசியல்... இவற்றை விட்டால் இங்கு பேச வேறு விஷயங்களே இல்லையா?

சென்னைக்கு வந்த இரண்டே வருடங்களில் சுமார் எட்டு அறைகளுக்கு மாறி வந்தாயிற்று. தியாகராய நகர், திருவல்லிக்கேணி, வடபழனி, மைலாப்பூர், பாரிமுனை என்று எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தாயிற்று.

எட்டுக்கும் மேற்பட்ட வேலைகளையும் பார்த்தாயிற்று. ஊரிலிருந்து ஓடி வந்தபோது, கிடைத்த முதல் வேலை ஒரு பதிப்பகத்தில்! தியாகராய நகரில் உள்ள ஒரு பதிப்பகம். ரங்கநாதன் தெருவில் ஒரு மான்ஷனில் அறை.
வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே உள்ளிருந்த ஜோதி உயிர் கொண்டெழுந்தது. புத்தகம் வாங்க வந்த ஒருத்தரிடம்  ‘இங்கிருக்கும் எல்லாப் புத்தகங்களும் டுபாக்கூர் புத்தகங்கள் என்றான். இதைப் பதிப்பக முதலாளி கேட்டு விட்டார். வேலை பறிபோனது. கையில் கொஞ்சம் பணமிருந்தது. அது ஒரு மாதத்துக்குப் போதுமானதாக இருந்தது. பணம் கரைந்த பிறகு மீண்டும் வேலை தேவையாக இருந்தது. அலைந்தான்.

இறுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை கிடைத்தது. இங்கு இரண்டாவது மாதத்தில் வேலையை விட்டு ஓடி வந்தான். மனசு சேலைகளுக்குள் மடங்க மறுத்தது. முதலாளியின் கட்டளைகள் பிடிக்கவில்லை. தனது தகுதிக்கு உகந்த வேலை அதுவல்ல என்று தோன்றியது.

பிறகு - காஸட் கடையில் வேலை... ’வா முனிம்மா பாடல்கள் காதுகளுக்குள் திராவகம் இறக்கின. தலை தெறிக்கத் தப்பி ஓடி விட்டான் - சம்பள பாக்கிக் கூட வாங்கவில்லை.

வேலை... முதலாளிகளின் தர்பார்... அதில் உடன்பட்டுச் சம்மதிக்க முடியாமை...  வேலையை விடுதல்...  மீண்டும் வேலை...  கடந்த இரண்டு வருடங்களாக இதுவே  வேலையாகிப் போனது.

எந்த முதலாளியுடனும் அவனுக்குச் சரிப்பட்டு வரவில்லை. அவன் கடைசியாகப் பார்த்த ஓட்டல் வேலையை விட்டு, ஒரு மாதம் தான் ஆகிறது. அடுத்த வேலைக்கான அலைச்சலில்தான் இருந்தான். காலையில் எழுவது...  கிளம்பி  அரக்க, பரக்க ஓடுவது...  வேலை... அதிகாரச் சக்கரத்தில் நசுங்கிக் கூழாகி இரவில் திரும்ப வந்து படுக்கை... இந்த அமைப்பியல் அவனுக்குச் சரிப்பட்டு வரவில்லை.

சென்னைக்கு வந்த முதல் வருடத்திலேயே ஒரு சைக்கியாட்ரிஸ்டைப் பார்த்தான். எல்லாம் பவர் ஸ்ட்ரக்சர்... யாருக்காவது அடிமையாக இருந்தே தீர வேண்டும். அது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தாலும் யாருடைய பேச்சையாவது  கேட்டே ஆக வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியின் நிலையே அது என்றால் - நீ சுண்டைக்காய்... கருப்பட்டி... இந்த பவர் ஸ்ட்ரக்சரில் இதுதான் நடைமுறை. இதற்கு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை. அடக்குமுறை என்பது சின்ன வயதிலேயே அம்மாவிடமிருந்தே தொடங்கி விடுகிறது. பிறகு, உன் அந்தஸ்து... சூழ்நிலை இவற்றுக்கு ஏற்ப அடக்குமுறைகள் அமைகின்றன. அடங்கப்பழகு. எல்லோரிடமும் கோர நகங்கள் இருக்கின்றன. உன்னிடம் கூட அவை இருக்கின்றன. உனக்குச் சந்தர்ப்பம் வரும்போது நீயும் அதைப் பயன்படுத்தவே செய்வாய்."
அவனுக்கும் இருக்கிறதா கோர நகங்கள்? தொடர்ந்து அவனை சிகிச்சைக்கு வரச் சொன்னார் சைக்கியாட்ரிஸ்ட். ஆனால், அவன்  போகவில்லை.
ஊரில் முதலில் சேர்ந்த பள்ளி,  ஃபாத்திமா ஆங்கிலப் பள்ளி.  எல்.கே.ஜி.யிலிருந்து  யூ.கே.ஜி வந்தபோது, கிளாசுக்கு வந்த ஸ்டெல்லா மிஸ்ஸைப் பிடிக்காமல் போனது. முகம் முழுக்க பவுடரைப் பூசிக் கொண்டு, உதடுகளில் லிப்ஸ்டிக் அடித்து, மினி ஸ்கர்ட் போட்டு, கையில் பிரம்புடன் கண்களை உருட்டி மிரட்டும் அவர் மீது வெறுப்பும், அன்னியத்தனமும்  வந்துவிட்டது.

பெரும்பாலான மிஸ்கள் எல்லோருமே மினி ஸ்கர்ட்தான் போட்டிருப்பார்கள். அவர்களது அகங்காரம் நிறைந்த மிடுக்குத் தோற்றம் - அச்சுறுத்தலையே தந்தது. எல்.கே.ஜி.க்கு வந்த கலா மிஸ் புடவை கட்டியிருப்பார். யாரையும் அதட்டக் கூட மாட்டார். பேசும்போது பூ உதிரும். ஸ்டெல்லா மிஸ் நேர் எதிர். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபம் வந்து புரட்டி எடுத்து விடுவார்.

ஸ்கூலில் கலா மிஸ்ஸைத் தவிர வேறு எதையும் பிடிக்கவில்லை. ஸ்கூல் ஃபோபியா வந்து விட்டது. ஸ்கூலுக்குச் செல்ல மறுத்தான். சில தடவை ஸ்கூல் வேனில் அம்மா அடித்து இழுத்துச் சென்று ஏற்றி விட்டாள். சில நேரங்களில் நையப் புடைத்தாள். பிறகு அவளுக்கே அலுத்துவிட்டது. அவனை ஸ்கூலுக்கு விரட்டும் பழக்கம் குறைந்தது. யூ.கே.ஜி. வந்த மூன்றாவது மாதத்திலேயே ஸ்கூலை விட்டு நிறுத்தி விட்டார்கள்.

அதே ஊரில் நகராட்சிப்  பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியில் கான்வென்ட்டில் இருந்த மாதிரி ஒழுங்கு செய்யப்பட்ட தோட்டங்கள் இல்லை. வேப்ப மரம், தூங்குமூஞ்சி மரம், புளிய மரம் என்ற ஏராளமான மரங்கள் இருந்தன. மரம் நல்ல பொழுது போக்கு. காக்கை, குருவிகள் வந்து போகும். குரங்குகளின் சண்டை வேடிக்கை பார்க்கலாம். வகுப்பறையில் இருந்தபோதும் மனம் வெளியிலேயே வட்டமிட்டது. வகுப்பறைகள் கந்தகக் கிடங்குகளாகவே இருந்தன.
வாத்தியார்கள் எல்
லோரும் கிங்கரர்கள் போலவே தோன்றினார்கள். குரங்காட்டிகள் போலவே மாணவர்களை படுத்தினார்கள். வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் பிரம்படி... கணக்கு தப்பாகப் போட்டால் காதில் கிள்ளல்... டிக்டேஷன் தப்பாய் எழுதினால் முட்டி போடல்... விரல்களுக்கு நடுவில் பென்சிலை சொருகி திருகுதல்...
அன்று கணக்குப் பாடம் தப்பாகப் போட்டதால் கணக்கு வாத்தியார் அவனது காதைத் திருகிக் கிள்ளினார். காதில் ஏதோ ஒரு நரம்பில் அவரது நகம் சொருகி - மூளையில் விண்ணென்று தெறித்தது. கொட, கொடவென்று ரத்தம் ஒழுகியது. வலியில் துடித்து விட்டான்.

அன்று மதியம்... கணக்கு வாத்தியார் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இலந்தை மரத்துக்குப் பின்புறமிருந்து ஒட்டாஞ்சில் எடுத்து மண்டையைக் குறி பார்த்து வீசினான். குறி தப்பவில்லை. அலறிக் கொண்டே சைக்கிளிலிருந்து பாலன்ஸ் தவறி கீழே விழுந்தார்.

அவன்தான் அவரை அடித்தான் என்பது யாரோ அல்லக்கை மூலம்  தெரிந்து விட்டது. அன்றே அவன் அப்பாவை வரவழைத்து டி.சி.யைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பிறகு தென்கோட்டை வீதி பள்ளிக்கூடத்துக்குப் படிப்பு மாறியது.  அதன் ஹெட் மாஸ்டர் அவனது அப்பாவுக்குத் தெரிந்தவர். ஒரு மாதிரி கண்களை உருட்டி மிரட்டி, இங்கே ஒழுங்கா இருக்கணும். இல்லே வாலை நறுக்கிடுவேன்... தெரியுமா?" என்றார்.  அவன் பலியாடு மாதிரி தலையாட்டினான்.

வகுப்புக்குச் சென்ற முதல் நாளே சரித்திரப் பாட ஆசிரியர் அவனைக் கிண்டல் செய்தார். நீதான் அந்த வாத்தியார் மண்டையை உடைச்ச அசகாய சூரனா? அப்ப, உன்கிட்ட இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும்பா..." என்று கூறி பயந்தது போல் பாவனை காட்டினார். மொத்த வகுப்பும் கெக்கெலி கொட்டியது. அவனுக்குள் ரத்தம் சொட்டியது.

வந்த ஒவ்வொரு வாத்தியாரும் அந்தக் காயத்தையே சீண்டி, சீண்டி பெரிசுபடுத்தினார்கள். முதல் நாளே அவனுக்குப் பள்ளிக்கூடம் கொள்ளிக் கூடமாகி விட்டது. அதற்கு மறுநாள் அவன் பள்ளிக்குப் போகவில்லை. பதிலாகப் பெரிய கோவிலுக்குச் சென்றான்.

கோயிலின் ஏழாவது  மாடத்தில் ஒளிந்து கொண்டான். பள்ளி முடியும் நேரம் வந்தவுடன் கீழே இறங்கி வீட்டுக்குப் போய் விடுவான்.
ஏழாவது மாடத்திலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்தமாக விருத்தாசலமே தெரியும். ஒரு சின்ன விஷயம்கூட பிசகாது. அந்த உயரத்திலிருந்து ஊரை வேடிக்கைப் பார்ப்பதில் மிகவும் சுவாரஸ்யம் இருந்தது. அவனைக் காயப்படுத்துவதற்கும் அங்கே யாருமில்லை.

அன்று... பகலில் அவன் அப்பா அவனைத் தேடி பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கிறார். அப்போதுதான் அவருக்குத் தெரியும் - அவன் ஒரு மாதமாகப் பள்ளிக்கூடத்துக்கே போகாத விஷயம். மாலையில், அவன் பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் வீட்டுக்குப் போனான்.

“எங்கேடா போயிருந்தே..?" - அப்பா கேட்டார். குரலில் வினயம்.
“ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேன்..." அடுத்த வினாடிபொளேர் என்று ஓர் அறை அவன் கன்னத்தில் விழுந்தது. அதற்குப் பிறகு - அவனைப் பேசவே விடாமல் தொடர்ந்து  புரட்டி எடுத்துவிட்டார்.

“நாயே... ஊரைச் சுற்றிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வர்றேன்னு பொய்யா சொல்றே..?" அப்பா துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே போய் விட்டார். அவன் மூலையில் உட்கார்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தான்.

மறுநாள் - காலையில் அவன் காணாமல் போனான்.  நெய்வேலிக்கு நடந்தே போகத் தொடங்கினான். அது தேர்தல் சமயம். உதய சூரியன் கட்சி வேட்பாளர் கணபதி, வழியில் ஒரு கிராமத்தில் வோட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட தொண்டர்கள் கூட்டம். ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியனும் வோட்டு கேட்டுக் கொண்டிருந்தார், கணபதிக்காக. அவர்  அவனது  தந்தையின் மிக நெருங்கிய நண்பர். அவர் அவனைப் பார்த்து விட்டார்.
“தம்பி எங்கே போறே?" என்று அவனைக் கூப்பிட்டு விசாரித்தார். அவன் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான். உடனே அவனை அழைத்துத் தன்னுடனே வைத்துக் கொண்டார்.

வீட்டில் அவன் காணாமல் போனதும் பதறி விட்டார்கள். சொந்தங்கள் படை திரண்டு தேடத் தொடங்கின.

மாலையில் சுப்பிரமணியன் அவனை என் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவன் அப்பா கோபத்தில் எகிறிக் குதித்துக் கொந்தளித்தார்.. உடனே மீண்டும் அடிகள் விழுந்தன. சுப்பிரமணியன் தடுத்தார். பையனை இப்படி மாட்டை அடிக்கிற மாதிரியா போட்டு அடிக்கிறது? சரியா வளர்க்கணும்ப்பா... இல்லேன்னா, சண்டிக் குதிரையாகி விடுவான், பிறகு அடக்கவே முடியாது..." என்றார்.

அதன் பிறகு அப்பா அவனை அடிப்பதில்லை. பேச்சுக்குக்கூட திட்டுவதில்லை. மீண்டும் வீட்டை விட்டு ஓடி விடுவான் என்று ரொம்பவும் பயந்துவிட்டார்.
அப்பாவும், அம்மாவும் அவன் மீது முன்பைவிட ரொம்பவும் அன்பாகி விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போனால் போ... போகாவிட்டாலும் பரவாயில்லை. நீ ஒருத்தன் கண் முன்னே உலாத்திக் கிட்டிருந்தால் அதுவே போதும்... என்று நினைத்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட சுதந்திரம் - அவனைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தியது என்றே சொல்ல வேண்டும்.  அவன் ஒழுங்காகப் பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பித்தான். வாத்தியார் ஓநாய் நகங்களால் பிறாண்டியபோது சகித்துக் கொண்டான். பத்தாம் வகுப்பு வந்தபோது ஃபெயிலாகி விட்டான்.

நடுவில் ஒரு வருடம் - சின்னச் சின்ன முள் அனுபவங்கள். ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொள்ளலாம் என்று டிரெடில் பிரஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்தான். கம்போஸிங் கற்றுக் கொள்ள ஆசை! கற்றுக் கொடுத்த கம்பாஸிடர் முதல் நாளிலேயே தலையில் குட்டி விட்டார். மறுநாள் - அவன் வேலைக்குப் போகவில்லை.

பிறகு, ரேடியோ மெக்கானிசம் கற்றுக் கொள்ள பாரதி எலெக்ட்ரானிக்சில் சேர்த்தார் அப்பா. அங்கு கடைக்காரன் டீ வாங்கிக் கொண்டு வரச்சொன்னான். எச்சில் துப்பி டீ வாங்கிக் கொண்டு வந்து தந்தான். வழியில் கடைக்காரருக்குத் தெரிந்தவன் எவனோ பார்த்து விட்டுக் கூறிவிட, வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

அதன் பிறகு சைக்கிள் கடை, ஆட்டோ மொபைல்ஸ், கடிகாரக் கடை என்றெல்லாம் போய் - டீக்கடை வரை வேலைக்கு வந்தாயிற்று. அதிகபட்சம் எல்லாக் கடைகளிலும் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. முதலாளிகளை அப்போதிருந்தே அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதிக்கத்துக்கு அடங்க மறுத்தது மனம். மதித்து நடந்து கொள்பவர்களைத்தான் அவனுக்குப் பிடித்தது. ஆனால், அப்படிப்பட்டவர்களைத் தேடியே காலம் ஓடிவிட்டது.

ஃபெயிலான சப்ஜெக்டை மீண்டும் எழுதி பாஸ் ஆகிவிட்டான். பிளஸ் ஒன் சேர்ந்தாகி விட்டது. படிப்பில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லை. பள்ளிக்கூடம் மாறியிருந்தது. அவனும் டிராயரிலிருந்து பேண்டுக்கு மாறியிருந்தான். அவ்வளவே.

ப்ளஸ் டூ பப்ளிக் எக்ஸாம்... எழுதிய அன்றே தெரியும் - ஃபெயிலாகி விடுவான் என்று. எதிர்பார்த்த மாதிரியே ஆகியும் விட்டான். எல்லாப் பாடத்திலும் ஃபெயில்! அம்மா அழுதாள்.

“இங்க பார்றா கண்ணா...  நீ ஒரே ஒரு பிள்ளை... நல்லாப் படிச்சு பெரிய உத்யோகத்துக்கு வரணும்னு ஆசைப்படறோம்.  ஆனால் - நீயோ பொறுப்பில்லாமல் சுத்திக்கிட்டிருக்கே.." - இது அப்பாவின் உபதேசப் பொழிவு. அவனைக் கட்டுப்படுத்தும் தொனியுடன் வெளிப்பட்ட அதிகப்படியான அந்த அன்பை அவனால் ஏற்க முடியவில்லை. கூடுதலான  எந்த அன்பும் அடக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே வெளிப்படுகிறது.

அன்றே கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வைகையில் ஏறியவன்தான் - அடுத்த நான்கு மணி நேரத்தில் அவன் சென்னையில் இருந்தான்.
அம்மா, அப்பாவிடமிருந்து நிரந்தரப் பிரிவு! அம்மா, அப்பா எல்லாமே அலுத்துப்போன முகங்கள்! அன்புக்காக உருகி, எரிச்சலைக் கிளப்பும் ஜீவன்கள்! அதிகப்படியான அன்பை யாரால் சகித்துக் கொள்ள முடியும்?

பீச் ரோட்டின் சோடியம் விளக்கு வெளிச்சத்தைத் தாண்டி, மணலுக்குள் நடக்கும்போது,  இருட்டு...  நீண்டு கிடந்தது மணல் வெளி...  நிலவு இல்லை வானத்தில்!  மணல் வெளியைத் தாண்டி நிழலாய் உறுமிக் கொண்டிருந்தது கடல்! அதன் பிரம்மாண்டம் தூரத்திலிருந்து பார்த்தபோது தெரியவில்லை. கறுப்பு  நிழல்களாய் கட்டு மரங்கள்  கரையோரமாய்.

நடந்து கடலை நெருங்கியபோது கொஞ்ச கொஞ்சமாய் குளிர் சேர்ந்தது.
பிரம்மாண்ட கடலும், வானமும் கண்ணுக்குத் தெரியாத கோட்டில் ரகசியமாய் சங்கமித்துக் கொண்டிருந்தன. பகலில் கடல் சந்தோஷப்படுத்தியது. இரவில் இருட்டில், தனிமையில் - கடல் பயமுறுத்தியது.

கடற்கரையின் மணல் சரிவில் இறங்கினான். முதல் அலை ஓடிவந்து காலை முத்தமிட்டபோது ஜில்லென்றிருந்தது. இன்னும் இறங்கினான். இப்போது தொடர்ந்து அலைகள் முத்தமிட்டு பிறகு விலகி ஓடின. இன்னும் நடந்தபோது, இப்போது ஜில்லிப்பு தெரியவில்லை. வா... வா..." என்று  கடல் அழைப்பதுபோல் இருந்தது.

சடாரென்று வாழ்வதற்கான காரணமோ, திட்டமோ, எல்லையோ இல்லாத மாதிரி தோன்றியது.  சிறிது சிறிதாக நீருக்குள் நகர்ந்தான்.  நீர் மட்டம்  உயர்ந்தது.  அப்போதுதான் அவன் அந்தக் காட்சியைக் கவனித்தான். அதே கரையோரத்தில் சிறிது தூரத்தில், வேறு யாரோ ஒருவன் தண்ணீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தான்.

உடனே இவன் கத்திக் கொண்டே கரையை நோக்கிப் பாய்ந்தான்.

“ஏய்... நில்லு... போகாதே...




No comments:

Post a Comment