Friday 7 June 2013


மழை நாளில் ஒரு கொலை செய்தேன்!

பெ. கருணாகரன்


இடித்து மின்னியது வானம்.

அதிகாலையிலே விழிப்பு வந்துவிட்டது எனக்கு. நேற்று இரவு அடித்த பேக் பைப்பர் தலைக்குள் கனத்துக் கொண்டிருந்தது. ஹேங் ஓவர்!

படுக்கையிலிருந்து எழுந்தேன். மறுபடியும் பேக் பைப்பர் உள்ளே சென்றால்தான் ஹேங் ஓவர் வலி குறையும்.

மணி பார்த்தேன். 5.50. ஆறு மணிக்கெல்லாம் ஒயின்ஷாப் திறந்து விடுவார்கள்  (டாஸ்மாக் வராத காலம்). இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு படியிறங்கினேன்.

மழையைப் பிடிக்குமா உங்களுக்கு? பிடிக்காதவர்கள் உண்டா மழையை? எனக்குப் பிடிக்காது மழையை. ஒரு மழைநாளில்தான் நான் ஒரு கொலை செய்தேன்.

கொலை எந்தெந்த காரணங்களுக்காக நடக்கலாம்? பொன்னுக்காக... மண்ணுக்காக... அப்புறம், ஆம்! பெண்ணுக்காக... நான் விரும்பியவள் என்னை விரும்பாமல் இன்னொருத்தனை விரும்புகிறபோது ஏற்படுகிற ஈகோ... பொறாமை... கோபம்... இன்னபிற பெயரிட முடியாத உணர்வுகள்.

அது பாலம்... விருத்தாசலம் நகரை கிழக்கு, மேற்காகப் பிரிக்கும் மணிமுத்தாற்றுப் பாலம். மழை பெய்து கொண்டிருந்த ஒரு சுபமுகூர்த்த வேளையில் பாலத்திலிருந்து தள்ளி விட்டேன், நண்பன் விருத்தகிரியை. இருகரையும் புரண்டோடிய இருட்டுத் தண்ணீருக்குள் அவன் தொலைந்துபோனான். உடல்கூட கிடைக்கவில்லை.

புரொபஷனல் கில்லர்களைக் கொலைகள் டிஸ்டர்ப் செய்வதில்லை. ஆனால், என்னைப் போன்ற எமோஷனல் இடியட்களுக்கு? அதுவும் அந்தக் கொலைக்கான சூழ்நிலைகளும், பாதிக்கப்பட்டவர்களும், அந்தக் கொலையை நினைவூட்டி துயரப்படுத்திக் கொண்டே இருந்தால்?

கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி, பூமியில் புதைந்த சொர்க்கம் மாதிரி. ஜங்ஷன் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இறக்கம். இறக்கத்தின் இறுதியில் கல்லூரி, ஓஸோன் திரையைப் பாதிக்காமல் மரங்கள் மூலம் இயற்கை ஏற்படுத்திய .ஸி. அதன் கெபாஸிட்டியை அதிகரிக்கும் கண்களுக்குக் குளிச்சியான பெண்கள்.

ஆண்கள் பள்ளியிலிருந்து கோ-எஜுகேஷனுக்குச் செல்லும் தாயும், சகோதரிகளும் இல்லாத ஒரு ஆடவனுக்கு ஏற்படும் பதட்டம்தான் எனக்கும் ஏற்பட்டது. பெண்களைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பது, வகுப்புத் தோழிகளிடம் பேசும்போது, முகம் பார்க்க முடியாத கள்ளத்தனம்! பெண்களை அலட்சியப்படுத்தினால் தான் அவள் உன்மேல் ஆர்வம் காட்டுவாள் என்ற மேல் ஆணாதிக்கப் பொய் மனோபாவம்.

கல்லூரியில் பிஸிக்ஸ் டிபார்ட்மெண்டும், மேத்ஸ் டிபார்ட்மெண்டும் ஒரே லாபியில் அடுத்தடுத்து இருந்தன. நான் பிசிக்ஸ். அபிராமியும் என் வகுப்புதான். விருத்தகிரி மேத்ஸ் படித்தான்.

அபிராமி தாவணி அணிந்து புத்தகங்களை மார்போடு அணைத்து கல்லூரிக்குள் நுழையும்போதுமணியே! மணியின் ஒளியே! ஒளிரும் அணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகேஎன்று அபிராமி அந்தாதி பாடத் தோன்றும்.
அபிராமியிடமும் நான் முன்பு சொன்ன சைக்காலஜி படிதான் நடந்துகொண்டேன்.

மாணவர்களின் இருக்கை வலதுபுறமும், இடதுபுறம் மாணவிகளின் இருக்கையும். இந்த முனையில் நான், பெண்கள் இருக்கையின் அடுத்த முனையில் அபிராமி. நான் அபிராமியைக் கண்டுகொள்ளாத மாதிரி பாவனை செய்தேன்.

நான் பார்க்காதபோதும் அவள் என்னை சைட் அடிப்பதாகவும், ரசித்து சந்தோஷிப்பதாகவும் எனக்குள் ஓர் எண்ணம். நான் வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கும்போது, அவள் என்னை ஊடுருவிப் பார்ப்பதாக ஒரு கற்பனை! அந்தக் கற்பனை என்னை ஒரு ஹீரோ மாதிரி உற்சாகமாக வைத்திருந்தது.
சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரே வகுப்புதான். ஆனால், அபிராமியுடன் நான் கடந்த மூன்று மாதங்களில் பேசிய வார்த்தைகள் பத்து கூட தேறாது. அதே நேரம் அவளுடன் நான் ரகசியமாக ஒரு காப்பியம் அளவுக்குப் பேசிவிட்டேன். தலை தடவி, முதுகு வருடி, விரல் பிணைத்து, பிடறியில் முகம் புதைத்து இன்ன பிற என்று ஏராளமான ஸ்பரிசங்கள்.

அபிராமி அவளுக்குத் தெரியாமல் எனக்குள் பூதாகாரமாய் வளர்ந்து கொண்டிருந்தாள்.

அபிராமியுடன் ஏற்பட்ட ரகசிய கைக்கிளைக் காதலை அவளுக்கு நான் தெரியப்படுத்துவதற்கு முன்பே, அவள் என்னிடமிருந்து விலகிச் செல்லும் வகையில் (விலகி என்ன விலகி... வெறுத்து ஒதுக்கும் வண்ணம்) சில சம்பவங்கள்...

சம்பவம் - 1

இலங்கை ராணுவத்தால் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தோம். என் வகுப்பறையிலிருந்து மாணவர்களை வெளியே அழைத்து வர நான் தான் பேசினேன்... “ஆகவே, கல்தோன்றி, மன்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியான நமது தமிழினம் அழிக்கப்படுவதை இனி பொறோம். கொலைவாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே... உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா!” வகுப்பில் நண்பர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரித்தார்கள்.

ஜாடைப் பார்வையால் அபிராமியைப் பார்த்தேன், பெருமை பொங்க. ஆனால், அவள் பார்வையில் அனல் பறந்தது. இந்த ஸ்ட்ரைக்  பற்றி இவள் என்ன நினைக்கிறாள்? மறுநாளே விடை கிடைத்தது.

அன்று நான் மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன் வகுப்பறைக்கு. அப்போது அபிராமி விருத்தகிரியுடன் பேசிக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் விருத்தகிரி என் கையைப் பிடித்து இழுத்து வகுப்பறைக்கு வெளியே அழைத்து வந்தான்.

உன் மேலே அபிராமி வருத்தத்தில் இருக்காடா. செமஸ்டர் டைமில் காலேஜில் ஸட்ரைக் பண்றாரே... அவருக்குக் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி இருக்கான்னு கேட்கறாடாஎன்றான்.

சம்பவம் - 2

அன்று காலை கல்லூரிக்கு என் யமஹாவில் பறந்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு அருகே வந்த போது, குறுக்கே சடாரென்று ஒரு ஆட்டோக்காரன் வந்தான். உரசல்! வண்டியின் மட்கார்டு நசுங்கிவிட்டது. கோபம் உச்சத்துக்கு எகிற, இறங்கி ஆட்டோக்காரனை ஒரு எத்து எத்தினேன். வயசாளி... கீழே கிடந்த கல் ஒன்று மண்டையில் குத்தி ரத்தம் பொங்கத் தொடங்கியது. சுற்றிலும் மனிதர்கள் வட்டம் வரைந்தார்கள். அப்போதுதான் அபிராமி பஸ்ஸிலிருந்து இறங்கி கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

ஏண்டா இப்படி முரடனா இருக்கே...? ஈவிரக்கமே இல்லாத காட்டுமிராண்டியா உங்க ஃபிரண்டுன்னு அபிராமி இன்னிக்குக் கேட்கறா... என்னால அவகிட்டே எதுவும் பேச முடியலைடா...” என்றான் விருத்தகிரி. பதறிவிட்டேன். அபிராமியிடம் விலாவாரியாகப் பேசினால் என்ன என்று தோன்றியது.

காதலை எப்படி தெரிவிப்பது? ஆண் என்பது கர்வம்! கம்பீரம்! ஒரு பெண்ணிடம் தலை சொரிந்து கொண்டு ஜொள் விடுவதா? கூடாது.
காதலை வெளிப்படுத்தும்போதே ஒரு கம்பீரம் வேண்டும். ஒரு ஆண்தனம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்கென்ன வழி? யோசித்தபோது...

அதை அபிராமியும் எதிர்பார்த்திருக்கமாட்டாள். நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. குனிந்து காலில் அணிந்திருந்த வஸ்துவை எடுத்து மின்னலாய் என் கன்னத்தில் ஒரு இழுப்பு இழுத்தாள். துடித்துப்போனேன்.

செருப்பால் அடிக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்துவிட்டேன்? ரெஸ்ட் ரூமில் யாரும் பார்க்காத சமயத்தில் அபிராமியை இறுக்கி அணைத்து அழுத்தமாய் ஒரு முத்தம் தந்தேன். அது தவறா?

அன்று முழுவதும் ரொம்பவும் அவமானமாக இருந்தது. இரவு மன உளைச்சல் அதிகமானது. மதுவின் துணை தேவையானது. தூக்கத்தைத் துரத்திப் பிடிக்க வேண்டியதாகி விட்டது. மௌனமாய் ஒரு ஆவேசம மனசுக்குள் குடியேறியது.
மறுநாள் என்னை விருத்தகிரி வகுப்பறையிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.

நீ பண்ணியது ரொம்பவும் தப்புடா... பெண்கள்கிட்டே உனக்கு அணுகவே தெரியலே. நீ சாஃப்டாவே அபிராமிகிட்டே விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் அவளும் சாஃப்டாவே உன்னிடமிருந்து விலகியிருப்பாள். அடிப்படையில் ஒரு விஷயம். அவளுக்கு உன்னைப் பிடிக்கலே... உன்னைப் பற்றி அவளுக்குள் ரொம்பவும் நெகடிவ் இமேஜ் வளர்ந்துருச்சி... அதுக்கும் மேலே முக்கியமான விஷயம், உன்கிட்டே இதுவரைக்கும் நான் சொல்லாதது... நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.”

எனக்கு அதிர்ச்சி! எல்லோரும் என் நிம்மதியையும், சந்தோஷத்தையும் கெடுப்பதற்காகவே வந்திருக்கீங்களா? இதை சும்மா விடப் போவதில்லை.
அடைந்தால் அபிராமி, இல்லையேல்...?

அபிராமியை அடைய வேண்டும். என்னை செருப்பால் அடித்தவள் காலமெல்லாம் கலங்க வேண்டும். அதற்கு முதல் காரியமாக விருத்தகிரி ஒழிய வேண்டும். அதற்கான வாய்ப்பு அடுத்த சில தினங்களிலேயே கிடைத்தது.
பாரில், “கோபமாடா?” என்றான் விருத்தகிரி. அவன் கேட்டபோது, என் கோபம் இன்னும் எகிறியது.

என்னடா முட்டாள்தனமா பேசறே...? உன் மேலே நான் ஏன் கோபப்படணும்?” சொன்னது பச்சைப் பொய். அடி வாங்கிய வலி உள்ளுக்குள்.
அபிராமி விஷயம்...”

மறந்துட்டேன். வேற பேசலாமே...”

நான் எதிர்பார்க்கலைடா. தற்செயல்தான், ஒரே தெரு... பேசறத்துக்கும், பார்க்கிறதுக்கும் வாய்ப்புகள் அதிகம்.”

வேற பேசலாமே...”

இல்லேடா. என்னவோ தெரியலே... மனசுக்குக் கஷ்டமா இருக்கு...” வின்டேஜ் பேசியது. அழுதான். தண்ணியடிக்கும்போதுதான் மனிதர்கள் நியாயஸ்தர்களாக மாறுகிறார்கள்.

கைகளைப் பிடித்துக்கொண்டான். “மன்னிச்சுருடா...”

ப்ளடிபிட்ச்... நாடகமா ஆடறே?’

நேற்று உன்னைப் பற்றி அபிராமி சொன்னாள்...”

நான் பேசவில்லை. நிமிர்ந்து கவனித்தேன்.

நீ முரடனாம். கெட்டவனாம். உன்கூடப் பேசக்கூடாதுங்கறாடா...” உள்ளே மிருகம் கட்டுக் கழியை அசைத்துப் பார்த்தது.

உனக்குப் பெண்கள்கிட்டே பழகற பக்குவம் இல்லேடா... சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க... அக்கா தங்கைகளும் இல்லே. அப்பா மட்டும்தான். அதனால பெண்களைப் பற்றி காற்றுவாக்கில் உலவி வருகிற தவறான தியரிகளை நீ உண்மைன்னு நம்பிட்டே. அபிராமி உன்னைக் கூட லவ் பண்ணியிருக்கலாம். ஏன்னா, என்னை விட நீ வசதியானவன், அழகானவன். பட், உன்னோட தவறான தியரிகள்... அணுகுமுறைகள்... அவளை என்கிட்டே நெருங்கி வரும்படி பண்ணியிருக்கு.”

பேசுடா மவனே பேசு. இன்னும் கொஞ்ச நேரம் தானே...!’ நான் மௌனம் காத்தேன். இன்னொரு ஆஃப் வாங்கி நான் கொஞ்சமாகவும், அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவும் ஊற்றித் தந்தேன். பாரிலிருந்து வெளியே வந்தோம். விருத்தகிரி தடுமாறி, தள்ளாடியபடி வந்தான்.

மழை தூறத் தொடங்கியிருந்தது. என் யமஹாவில் உட்கார்ந்து அவனைப் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டேன். மணிமுத்தாற்றுப் பாலத்தின் மையத்துக்கு வந்ததும் வண்டியை நிறுத்தினேன்.

ஏண்டா...?” என்றான் குழறல் குரலில்.

மழையில் நனையணும்போல இருக்குடா... வாயேன். அந்த பிளாட்பாரத்தில் உட்கார்ந்துக்கலாம்.” அவன் பதிலை எதிர்பார்க்காமல் நான் பிளாட்பாரக் கட்டையில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனும் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். மழை சற்று வலுக்க ஆரம்பித்தது. கீழே மணிமுத்தாறு சளசளவென்ற சத்தத்துடன் இரு கரையையும் அணைத்துக்கொண்டு ஓடியது.

டேய்... மழை அதிகமாகுது... வாடா கிளம்பலாம்.”

இருடா, போகலாம். இந்த ஆறு என்னவோ சொல்ற மாதிரி உனக்குத் தோணுதா?”

இல்லையேடா.”

எனக்கு நல்லா கேட்குது. ‘விருத்தகிரி வேணும். விருத்தகிரி வேணும்’னு சொல்லுதுடா...”

என்னடா சொல்றே?” போதையிலும் பதறினான்.

சொல்றேன். எனக்கு அபிராமி வேணும். அதுக்கு இதைவிட்டால் வேற வழிதெரியல... சாரிடா...” அவன் எதிர்பாராத தருணத்தில் அவனை வலுக்கட்டாயமாகத் தூக்கி நிறுத்தி, பாலத்தின் தடுப்புக் கம்பியில் அழுத்தி, அவனது கால்களை வாரிவிட்டேன்.

அலறல்  கூட போடாமல் தண்ணீரில் போய் விழுந்த விருத்தகிரி, சுவடு இல்லாமல் ஜலசமாதி ஆனான்.

யின் ஷாப்புக்கு வந்துவிட்டேன். கடை இன்னும் திறக்கவில்லை. கடைக்கு முன்பிருந்த படிக்கட்டில் அமர்ந்தேன். அந்த ஒயின்ஷாப்பில் நானும், விருத்தகிரியும் பலமுறை தீர்த்தம் அருந்தியிருக்கிறோம்.

விருத்தகிரியை ஒரு ஆவேசத்தில் ஆற்றிலிருந்து தள்ளிக் கொன்று விட்டேனே தவிர - அதன் பிறகு நான் அனுபவித்தவை எல்லாம் மரண அவஸ்தைகள். நடைபிண நாட்கள்.

விருத்தகிரி இறந்த கடந்த மூன்றாண்டுகளில இரண்டு முறை தற்கொலை முயற்சிகள்... ஏழெட்டு முறை கையில் சிகரெட் சூடுகள்... ஆவேசத்தில் செய்கிற தவறுகள் பூமராங்காய் திரும்ப வந்து நம்மை உறுத்துகின்றன.

விருத்தகிரி போய்விட்டான். இனி அபிராமிக்கு நாதியில்லை. எளிதாக வளைத்துவிடலாம் என்று நான் போட்ட கணக்கு எவ்வளவு தவறானது என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டேன்.

விருத்தகிரி இறந்தபிறகு அபிராமி கல்லூரியிலிருந்து நின்றுவிட்டாள். அதற்கடுத்து நடந்தது அதிர்ச்சி நிகழ்ச்சி, அபிராமி ஒரு மடத்தில் சேர்ந்து சந்நியாசினியாகிவிட்டாள்.

இப்போதும் அபிராமியை சாலையில் எப்போதாவது பார்ப்பேன். அவளும் என்னைப் பார்ப்பாள். அந்தப் பார்வையில் கோபமா? சாபமா? சோகமா? அல்லது எல்லாம் கலந்த கலவையா? எனக்குப் புரியவில்லை. விருத்தகிரியைக் கொன்று அபிராமியை வாழ்க்கை முழுவதும் தண்டிக்க நினைத்தேன். ஆனால், அவள் நீதிபதியாகி என்னைக் குற்றவாளியாக்கி தினம்தினம் தண்டித்துக் கொண்டிருக்கிறாள்.

ஒயின்ஷாப் ஓனர் தனது டூவீலரில் வந்து இறங்கினார்.  நைன்ட்டி எம்.எல். வாங்கி, அந்த செமி திராவகத்தை வயிற்றுக்குள் இறக்கிக்கொண்டேன். மழை தூறத் தொடங்கியது. நான் நனைந்தபடி நடக்கத் தொடங்கினேன்.

சிறிது நேர நடைக்குப் பிறகு பாலம் வந்தது. மழை வலுக்கத் தொடங்கியது. தொப்பலாக நனைந்துவிட்டேன். விருத்தகிரியை நான் தள்ளிவிட்ட அந்த இடம்! விழிகளில் நீர் பெருகி மழையுடன் மழையாகக் கலந்தது.

விருத்தகிரி, என் நண்பனே... என் முரட்டுப் பிடிவாதத்தால் உன் வாழ்க்கை சூன்யமாகி விட்டதடா... என்னை மன்னிச்சிடு...’

காதல்ங்கிறது எமோஷனல் நியூசென்ஸ்! உணர்ச்சிவசப்பட்டு செயல் பட்டிருக்கக் கூடாது.

எனக்குப் புரிந்துவிட்டது. நான் அபிராமி மேலே வைத்தது காதல் கிடையாது. பண்ணையார்த்தனம்! உரிமை வெறி! தனக்குக் கிடைக்காத பொம்மை இன்னொரு குழந்தைக்குக் கிடைத்துவிடும்போது, அதைப்பிடுங்கி உடைத்துவிடுகிற குழந்தையின் சிறுபிள்ளைத்தனம்!

புலம்பல் புராணம் போதும்னு நினைக்கிறேன். .கே. கிளம்புங்க. அதுக்கு முன்னாடி ஆறு என்னவோ சொல்லுதே... உங்களுக்குக் கேட்குதா? கேட்கலையா?

எனக்கு நல்லா கேட்குது. .கே. பை... பை...

தொப்!


1 comment: