Monday 3 June 2013



ராஜாதி ராஜன் இந்த ராஜா!

பெ. கருணாகரன்
சீர்காழி - ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதென்றால், பண்ணைபுரம் இளையராஜாவுக்கு இசைப்பால் ஊட்டியது. பண்ணைபுரம் - மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் கிராமம்.
தந்தை: எம்.ஆர்.ராமசாமி, தாய்: சின்னத்தாயி. பாவலர் வரதராசன், ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் என்று சகோதரர்கள்.
ராஜாவுக்கு அந்தச் சிறுவயதிலேயே இசைமீது இனம்புரியா ஆர்வம். ஓடைக்கரைகளும், சாலை மதில்களும், பள்ளிமரத்தடிகளும் சிறுவயதிலேயே ராஜா அசுர சாதகம் செய்த சங்கீதக் கலா சாலைகள். அங்கு, சத்தங்களைச் சுரம்பிரித்து, இயற்கையிடம் இசைப்பாடம் பயின்றான் அந்தச் சிறுவன்.
ஒவ்வொரு துளைகளுக்கும் நடுவே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்ற இலக்கணமெல்லாம் தெரியாமலேயே, மூங்கிலில் தோராயமாகத் துளைகள் போட்டு அவன் தயாரித்த புல்லாங்குழல் - சரியான கனகச்சிதமான இலக்கணத்தோடு அமைந்ததுதான் ஆச்சரியம்!
பாவலர்!
அண்ணன் பாவலர் வரதராசன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்பெற்ற பிரசாரப் பாடகர். பாவலரின் பாடல்கள் ராஜாவின் சங்கீதப் பாதையை முறைப்படுத்தியது.
ராஜா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் இயக்க நிகழ்ச்சி ஒன்று. அந்த நேரத்தில் பாவலருக்கு உடல் நிலை சரியில்லை. ராஜாவைத் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை.
திருச்சி - திருவெறும்பூரில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். பாவலருக்கு ஓய்வுதர - இடை இடையே ராஜாவும் தன் பிஞ்சுக் குரலெடுத்துப் பாடினார். அவரது பாட்டுகளுக்குக் கைதட்டல்கள் மூலம் கௌரவம் செய்தனர் மக்கள். அதன்பிறகு, கச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் அவ்வப்போது, இந்த இலக்குவணனையும் உடனழைத்துச் செல்ல ஆரம்பித்தார் பாவலர்.
விளைவுபாட்டு, இசை, கச்சேரி என்று ஓடிய வாழ்க்கையில் படிப்பு, பள்ளி ஆகியவை மறந்து போயின.
அந்த வயதில் ராஜாவின் குரல் பெண் சாயலுடையதாக இருக்கும். பாவலருடன் ஜோடியாகப் பாட ஏற்ற குரல்! ராஜா தொடர்ந்து கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டிருந்த நிலையில், மகரக்கட்டு ஏற்பட்டு, குரல் உடையத் தொடங்கியது. அதனால், பாவலர், ராஜாவை வீட்டில் விட்டு விட்டு, தம்பி கங்கை அமரனை உடனழைத்துச் சென்றார்.
பாவலர் பிரதர்ஸ்!
அண்ணன் ஊருக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் அவரது ஆர்மோனியப் பெட்டியைத் தனியாக வாசித்துப் பழக ஆரம்பித்தார். அண்ணனுக்கு, தன் ஆர்மோனியப் பெட்டியை யாரும் தொடக்கூடாது. தொட்டால் கோபம் வரும். பிரம்பெடுத்துப் புறங்கையில் டிரம்ஸ் வாசித்துவிடுவார்.
பாவலருக்கு விஷயம் தெரியவந்தபோது, ராஜாவின் திறமை கண்டு வியந்தார்; மகிழ்ந்தார்! அதன்பிறகு, பாவலர் கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் பொறுப்பு ராஜாவுக்கு. ஆர்.டி. பாஸ்கர் தபேலா. பாவலரும், கங்கையமரனும் பாடுவார்கள். பாவலர் இசைக்குழு, பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவானது.
பாரதிராஜா!
1963 - வாக்கில் நடிப்பில் ஆர்வம் கொண்ட மலேரியா இன்ஸ்பெக்டர் ஒருவர் பண்ணைபுரத்துக்கு வந்தார். பெயர், அல்லி நகரம் சின்னசாமி. பாரதிராஜா. தேனி, மதுரை முதலிய பகுதிகளில் பாரதிராஜா நாடகம் போட்டபோது - இசைப் பொறுப்பு, ராஜாவுக்கு.
1965ல் சினிமாவில் சாதிக்கும் துடிப்புகளுடன் பாரதிராஜா சென்னை கிளம்பினார். 1967ல் ராஜா, பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோர் சென்னைக்குப் புறப்பட்டனர்.
வடபழனியில் ஒரு சிறு அறையில் வாழ்க்கை; வயிற்றில் பசி; மனதிலோ தாகம்; அது, இசை தாகம்! வாய்ப்பு தேடியலைந்தார் ராஜா. நடுநடுவே நாடகங்களுக்கு இசையமைத்தார். பசி, வறுமையுடன் எட்டாண்டுகள் ஓடின. வறுமைக்கு நடுவிலும் ராஜா இசை பயிலத் தவறவில்லை. லஸ் கார்னரில் தங்கியிருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை கற்றுக் கொண்டார்.
அன்னக்கிளி!
வாய்ப்பு தேடி அலைந்து காய்ப்பு ஏறிய பாதங்கள்; ஆனாலும், மனம் முழுக்க நம்பிக்கை நந்தவனம்.
அது, 1975. ஒரு நாள் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை ராஜா பாம்குரோவில் சந்தித்தார். வாய்ப்பு கேட்டார். எதிரில் ஒல்லியாக வெட வெடவென்றிருந்த அந்த இளைஞரை நம்பிக்கையில்லாமல் பார்த்த பஞ்சு, ‘‘நாளை ஆர்மோனியப் பெட்டியோடு வந்து ட்யூன் போட்டுக் காட்டுங்க’’ என்றார்.
‘‘நாளை எதுக்கு? இப்பவே பாடிக் காட்டறேன்’’ என்ற ராஜா, ‘அன்னக்கிளிபடத்தில் இடம்பெற்ற பாடல்களின் மெட்டுகளை உருக்கமாகப் பாடினார். அவை, பஞ்சு அருணாசலத்துக்குப் பிடித்துப்போக, அன்னக்கிளி வாய்ப்பு ராஜாவுக்குக் கிடைத்தது. ராஜையா என்ற பெயரை இளையராஜா என்று மாற்றியவரும் பஞ்சுதான்.
ராஜாவின் ராஜாங்கம்!
1970களில் தமிழ் சினிமா இசையில் ஒரு தேக்கநிலை! அந்த வெற்றிடத்தை இந்திப் பாடல்கள் இட்டு நிரப்பின. அந்தச் சமயத்தில்தான் அன்னக்கிளி ரிலீஸானது. தென்றலின் இனிமையோடும் புயலின் வலிமையோடும் வெளிப்பட்ட பாடல்களைக் கேட்ட தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
அன்னக்கிளி, பத்ரகாளி என்று வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினார் இந்த ட்ரெண்ட் செட்டர். அதன் பிறகு, தமிழ் சினிமா இசையின் வசந்த காலம்! 80களுக்குப் பிறகு வெளிவந்த பெரும்பாலான படங்கள் ராஜாவின் இசையில் வெளிவந்தன. வருடத்துக்கு முப்பதிலிருந்து ஐம்பது படங்கள்! ராஜாவின் இசை, இந்திப் பாடல்களை மீண்டும் மும்பைக்கே விரட்டியடித்தன.
பாடல்களிலும், ரீ ரெக்கார்டிங்குகளிலும் பல புதுமைகள்; பல சோதனை முயற்சிகள்!
ராஜாவின் இசைப் பாடல்களால் மட்டுமல்ல; பின்னணி இசையாலும் மனதைத் தொட்டன. நடிகர்கள் நடிக்க முடியாத நுணுக்க உணர்வுகளையும் அவரது பின்னணி இசை நடித்துக் காட்டியது.
நடிகர் கால்ஷீட் இருந்தால் போதும் என்ற நிலைமாறி ராஜாவின் கால்ஷீட் இருந்தால் போதும் என்ற நிலை. ஃபைனான்ஸியர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும் ராஜாவை முழுதாக நம்பினர்.
ஏராளமான தேசிய விருதுகளும், தமிழக அரசு விருதுகளும் இவரது வரவேற்பறையை அலங்கரிக்கத் தொடங்கின.
பரம்பொருள்!
இசைப் பணியால் பொருள் சேர்ந்தது. அதில் பொருளற்ற தன்மை இருப்பதை மனம் உணர்ந்தது. பரம் பொருள் தேடி மனம் விரைந்தது. சிறு வயதில் நாத்திகராகவும், சாமி கும்பிடுபவர்களைக் கிண்டல் செய்து கொண்டுமிருந்த ராஜாவுக்குள் இறையருள் புகுந்தது. 1986ம் ஆண்டுகளில் அந்த மாற்றம் நிகழ்ந்தது.
அன்னை மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உட்பட பல கோயில்களுக்குக் கோபுரம் கட்ட உதவியதன் மூலம், இறைவன் தனக்களித்ததை அவனிடமே அர்ப்பணித்தார். இந்த இசை ஞானிக்குப் பிடித்த ஞானி: ஸ்ரீரமணர். பிடித்த நூல் ரமணரின் அருண்மொழித் தொகுப்பு!
சிம்பொனி!
சினிமா, இசை, பாட்டு என்று ஓடிக்கொண்டிருந்த ராஜா 1987ல் ஹெள டு நேம் இட்என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1988ல் ஹரிப்பிரசாத் சௌராஷ்யா புல்லாங்குழலில் நத்திங் பட் விண்ட்என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட மிகப் பெரும் இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், ‘இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல்நிலை சரியாக இருந்து  நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன்என்றார் நெகிழ்ச்சியாக.
இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல், ஆசியாவிலேயே சிம்பொனிஇசையமைத்த மேதை என்ற சிறப்பும் ராஜாவையே சேரும். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் சாதனைகளால் நிறைந்தவை.
ராஜா கூறுகிறார்: எதையும் நான் செய்யவில்லை. இங்கிருந்ததை மீண்டும் எடுத்துக் கொடுக்கிறேன்!அட!
அடக்கம் அமரருள் உய்க்கும்!
இசையுலகில் இளையராஜா ஓர் ஆல் ரவுண்டர். மெட்டு போடுவது, பாடுவது, கருவிகள் இசைப்பது எல்லாம் அவருக்குக் கைவந்த கலை. இவர் பாடலாசிரியரும் கூட. நிறைய பாடல்களை எழுதியிருக்கும் இவர் நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறார்.
வெட்டவெளியில் கொட்டிக் கிடக்குதுஎன்பது இவர் எழுதிய வசன கவிதைத் தொகுதி. மரபுக் கவிதைகளும் இவருக்கு அத்துப்படி. எல்லாப் புலவர்க்கும் புலியான வெண்பா இவரிடம் பூனைக்குட்டியாய் பணிந்து கிடந்தது. இவரது வெண்பாக்களை அ.ச.ஞான சம்பந்தன், ஷெயகாந்தன், பெரும்புலவர் நமசிவாயம் ஆகியோர் வியந்து புகழ்கிறார்கள்.
தமிழில் புகுந்து விளையாடும் ராஜாவுக்கு, சமஸ்கிருதமும் தெரியும். இதுதவிர, இவருக்கு ஓவியமும் வரைய வரும்; கூடவே நல்ல புகைப்படக் கலைஞரும் கூட. இவர் எடுத்த புகைப்படங்களை வைத்து, மிக விரைவில் ஒரு கண்காட்சி நடந்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment