Thursday 6 June 2013


ரவி - ஒரு ஃப்ளாஷ்பேக்...

பெ. கருணாகரன்


டைரியை எங்கே வைத்தேன் என்று நினைக்கவில்லை. நேற்று இரவு ஒரு பொதுக்கூட்டத்தை ரிப்போர்ட் செய்வதற்காக குறிப்பெடுத்தபோது கூட கையில் டைரி இருந்ததே. இப்போது எங்கே போனது? அந்த டைரி போனதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. டைரியில் அந்தரங்கமான கிளுகிளுப்பு எதுவும் இல்லை... எனினும் டைரி காணாமல் போனதில் மனதில் ஒரு பெரிய வலி.

காரணம், என் இனிய நண்பன் ரவி... இருபத்தாறு வயதிலேயே இறந்து போன இளைஞன்... அந்த டைரியில்தான் ரவியின் புகைப்படத்தை வைத்திருந்தேன். டைரியுடன் அவனது புகைப்படமும் தொலைந்து போய்விட்டது. இதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

அவன் மாநிறம்தான்... சராசரி வளர்த்தி... சுருட்டையிலும், கோரையிலும் சேர்க்க முடியாத இரண்டுக்கும் இடைப்பட்ட தலைமுடி. இடதுகாலை விட வலதுகால் சற்று நீளம். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முறை தடுக்கி விழுந்தது. இடதுகால் முறிந்து புத்தூரில்போய் கட்டு கட்டிய பிறகு சரியானது. ஆனாலும் கால் முன்மாதிரி வலுவுடன் இல்லை. தாங்கித் தாங்கித்தான் நடப்பான். சாதாரணமாகப் பார்த்தால் அது தெரியாது. சற்றுக் கூர்ந்து பார்த்தால் தெரியும்.

அப்பா ஒரு வாத்தியார். அவனை பி.. எக்னாமிக்ஸ் படிக்க வைத்தார். பிறகு எம்.எல்.., மந்திரி என்று சிபாரிசுக்கு அலைந்து, அவன் படிப்பை முடித்த மறு ஆண்டிலேயே அரசு வங்கி ஒன்றில் வேலை வாங்கிவிட்டார். வேலை கிடைத்தவுடன், ஆர்டரைத் தூக்கிக் கொண்டு அவன் என்னிடம் வந்தான். முகத்தில் ஒளியில்லை.

“எனக்கு வேலை கிடைச்சிருக்குடா..." என்றான்.  குரலில் சுரத்தில்லை.
“ரொம்ப சந்தோஷம். இன்னிக்கு பார்ட்டி உண்டாடா?" என்றேன்
“இதுல பார்ட்டி கொடுக்கறதுக்கு என்னடா இருக்கு? வேலை கிடைச்சிடுச்சேன்னு நானே நொந்து போயிருக்கேன்..." என்றான்.
“என்னடா சொல்றே?" என்றேன் அதிர்ந்து.

“ஆமாண்டா... படிச்ச களைப்பு தீர ஜாலியா கொஞ்ச நாள் கத்தணும்டா... அது இல்லாம படிச்சு முடிச்சவுடனே வேலைன்னா, சரியான அறுவை. அது மட்டுமில்லாம ஒரே இடத்துல அடைஞ்சு கிடக்கிறதுங்கிறதும் என்னால முடியாத விஷயம்... ஒரு ஆபீஸ்ல வெற்றிகரமா வேலை செய்ய முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்லை..." என்றான்.

“வேலை கிடைச்சிருக்கு... அது உனக்குக் கசக்குதோ? வெளியிலே சொல்லாதேடா...  சிரிப்பாங்க..."

அவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, என்னோட வாழ்க்கைச் சுழற்சி மாறுவதை எப்படித் தாங்கிக்கப் போறேனோன்னு பயமா இருக்கு... வேலை பிடிக்கலேடா..." என்றான்.

“அப்படின்னா படிச்சு முடிச்சுட்டு வேலையில்லாதவனா சுத்தணும்னு நினைக்கிறியா? உனக்கு உன் பெற்றோர் எத்தனை நாளைக்குதான்டா சோறு போடுவாங்க...? உனக்குன்னு ஒரு வேலை வேண்டாமா...?" என்றேன்.
“சோறு சாப்பிடறது மட்டும்தான் வாழ்க்கையா? என்னால் சாப்பிடாமலேயே இருக்க முடியும்டா..." என்றான். வீம்புக்கு இரண்டு நாட்கள் சாப்பிடாமலேயே இருந்தான்.

கடலூரில் வேலை. போய்ச் சேர்ந்து விட்டான்.

வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே திரும்பி வந்தான். என்னடா... வேலை எப்படி இருக்கு?" என்று கேட்டேன்.

“ரிஸைன் பண்ணிட்டு வந்துட்டேன்..." என்று சாதாரணமாகக் கூறினான்.

“அடப்பாவி..."

“சரிதான் விடு... மானேஜர் நேத்து காரணமே இல்லாம என்னைத் திட்டினான்... என்னால் ஏற்க முடியலே... மானேஜரைக் கண்டபடி திட்டிட்டு வந்துட்டேன்" என்றான்.

“உன் அப்பாகிட்டே சொல்லிட்டியா?"

“இல்லை... இனிதான் சொல்லணும்..."

“திருப்தியான சம்பளம்... அதைப் போய் ராஜினாமா பண்ணிட்டியேடா..." என்றேன்.

“திருப்தின்னா என்னடா? மனச் சம்மதம்... பணம் மட்டுமே சந்தோஷமில்லேடா... உனக்கு அது தெரியாது... என்னால் எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ் போக முடியாது... பதினோரு மணி வரை தூங்கணும்... அது எனக்கு ரொம்ப முக்கியம்... மனசுலே நினைச்ச மாதிரி நடந்துக்கணும்... முக்கியமா நான் சுதந்திரமா இருக்கணும்..." என்றான்.

அந்த வேலையை வாங்க இவனது அப்பா பட்ட கஷ்டங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். அன்று மாலையே அவனது அப்பா என்னிடம் நொந்து கொண்டார். நீயாவது உன் ஃப்ரெண்டுக்கு அட்வைஸ் பண்ணக்கூடாதா தம்பி..." என்றார்.
நான் என்ன செய்யட்டும்? ஒன்றா... இரண்டா... பல விஷயங்கள்... என்னிடம் மறுதலித்துப் பேசியிருக்கிறான். இருவருக்கும் இடையில் ஏராளமான முரண்பாடுகள்... நான் கூறுவதை மறுத்துக் கூறுவதே தனது தலையாய கொள்கை என்பதுபோல் வீணுக்கு வாதம் பண்ணுவான். எனினும் முரண்பாடுகளுக்கு நடுவிலும் எங்கள் நட்பு தொடர்ந்தே வந்திருக்கிறது.

அவனும் காதலித்தான், மூன்று பெண்களை... முதல் காதலி கிரிஜா... எல்லாம் முடிந்து போன நிலையில் காதல் அலுத்துப் போயோ என்னவோடாடா காட்டிவிட்டாள். கொஞ்ச நாள் அவளது ஞாபகத்துடன் தாடியுடன் அலைந்தவன் அடுத்து நீலாவிடம் மயங்கினான். அவளை விடாமல் துரத்தினான். அவள் மடங்கவில்லை. ’நீ சரிப்பட மாட்டே என்று அவளிடமிருந்து விலகினான்.

இவை இரண்டும் கல்லூரி அளவில் நிகழ்ந்த காதல்கள். மூன்றாவது காதல் அவனது தெருவிலேயே இருந்த பெண். பெயர் லதா. இந்தக் காதலும் கைகூடவில்லை.

“ஆண்டவன் ஆண் - பெண் என்ற பாகுபாட்டை ஏன் படைத்தான்...?" என்று ஒரு நாள் கேட்டான். நான் பச்சையாக விளக்கம் சொன்னேன்.
“அதுதான்... ஏன் அப்படிப் படைக்கணும்கிறேன்? பைத்தியக்காரத்தனமா ஒரே ஒரு சின்ன விஷயத்துக்காகப் பொம்பளைகளை விடாமல் துரத்திக்கிட்டு, காதலிச்சுக்கிட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவஸ்தைகள் பட்டுக்கிட்டு, ரொம்பவும் அசிங்கமா உணர்றேன்" - கொஞ்ச நேரம் நிறுத்தினான். பிறகு தொடர்ந்தான்.

“ஆண், பெண் என்ற பிறப்பு பாகுபாடு எனக்குப் பிடிக்கலேடா... எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரே விஷயம்... அந்தப் பாகுபாடு இருக்கிறதாலேதானே அவஸ்தைகள்... பாலியல் வன்முறைகள்..."

“வேறு என்னதான் பண்ணச் சொல்றே? உனக்கும் பெண் தேவைப்படுதுதானே... நீயும்தான் துரத்தித் துரத்தி காதல் பண்ணினே... நீ வேணும்னா பெண்ணை ஒதுக்கி வெச்சுட்டு வாழ்ந்து காட்டு பார்க்கலாம்" என்றேன்.

“மண்புழு தெரியுமா? ஒரு மண்புழுவோட சுகத் துக்கம் எல்லாம் அந்த மண்புழுவோடேயே அடக்கம்... ஆம்பளையும் அதுதான்... பொம்பளையும் அதுதான்... தானே தன்னுடன் உடலுறவு... திருப்தியற்ற செக்ஸ் மண்புழுவின் வாழ்க்கையில் இல்லே. பிடிக்காத உறவுகளுடன் அனுசரிச்சுப் போக வேண்டிய அவசியமும் இல்லே... அவஸ்தைகளும் இல்லே... கடவுள் மண்புழு மாதிரி ஏன் மனுஷனைப் படைக்கலே...? படைச்சிருந்தா இந்த மாதிரியெல்லாம் பிரச்சினை வந்திருக்காதே..." என்றான்.
மூன்றாவது காதலிக்குப் பிறகு அவன் யாரையும் காதலித்ததாகத் தெரியவில்லை.

ஒரு நாள் நானும் அவனும் பார் ஒன்றில் பீர் குடித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய பிறப்பு எனக்குப் பிடிக்கலேடா..." என்றான். நான் அவனையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

“சில நேரங்களில் ஏன் பொறந்தேன்னு நினைக்கத் தோணுது... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்கிறது எவ்வளவு பெரிய உண்மை..." நிறுத்திவிட்டு பீரை ஒரு விழுங்கும் விழுங்கிவிட்டுத் தொடர்ந்தான்.

“ஏண்டா அப்பாவுக்கு இருக்கிற நோய் மகனையும் பாதிக்கணும்? இந்த ஜீன்ஸ் விஷயங்கள் எல்லாம் இயற்கையோட முட்டாள்தனம்... என் உடம்பிலே என் அப்பாவோட ஜீன்ஸ்தான் டாமினேட் பண்ணியிருக்கு... என் அப்பாவைப் பாடாய் படுத்திக்கிட்டிருக்கிற ஆஸ்துமா என் ரத்தத்திலேயும் இருக்குடா. மூச்சு வாங்குது..." திடீரென்று கோபமாகத் தரையில் உதைத்தான்.

தொடர்ந்து, நான் என்னடா செய்தேன், எனக்கு ஏன் வரணும் அது?" என்றான்.
“ட்ரீட்மெண்ட் எடுத்தால் சரியாயிடும்டா..." என்றேன்.

“மருந்து மாத்திரைகள் எல்லாமே நமக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் தானேடா... என்றான்.

“ரவி... நீ பிரச்சினைகளைச் சந்திக்கப் பயப்படலே... இல்லாத பிரச்னைகளை இருக்கிறதா பாவனை பண்ணிக்கிட்டுப் பயப்படறே..."

“போடா... உன் உபதேசங்களைத் தூக்கி உடைப்பில் போடு" என்றான் அலுப்பாக.

மூன்று மாதங்களுக்கு முன், ஒரு நாள் காலை நேரம்... ஓடி வந்தான். நான் தஞ்சாவூருக்குப் போறேண்டா... பெரிய கோயில் பார்க்கணும்... சரஸ்வதி மஹால் போகணும்... நீ வர்றியா?" என்றான்.

“ஒரு முக்கியமான இண்டர்வியூ பண்ணப் போக வேண்டியிருக்கு... என்னால் வரமுடியாது..." என்றேன்.

“சரி... என்னோடு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் பேச்சுத் துணையா வாயேன்..." என்றான்.

அவனைத் தஞ்சாவூர் பஸ்ஸில் ஏற்றிவிட்டுத் திரும்பினேன். டிரைவருக்குப் பின்புற இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். ஜன்னல் வழிக் காற்றும், வேடிக்கையும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

மாலையில் தகவல் வந்தது - எதிரில் வந்த ஒரு லாரி பஸ்ஸில் மோதி முன்புறம் உட்கார்ந்திருந்த அவன் இறந்து போனான் என்று. நான் திக்பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தேன். இரவு சாப்பிடப் பிடிக்கவில்லை. என்னை மிகவும் கவர்ந்தவன் அவன். அவனுடன் நானும் தஞ்சாவூர் போயிருக்கலாமோ என்று தோன்றியது.

மறுநாள் மதியம்... மருத்துவமனையின் அனைத்து சடங்குகளும் முடிந்து உடல் முழுக்க வெள்ளை பாண்டேஜ் சுற்றப்பட்டு, ரவியின் உடல் அவனது வீட்டுக்கு வந்தது.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் உயிருடன் இருப்பது போலவே உணர்வு...

இடுகாடு... சொர்க்கம் சேர... கைலாசம் சேர..." ரவியின் அப்பா ஆற்றாமையுடன் கையில் தீச்சட்டியை எடுத்துக் கொண்டு, சிதையைச் சுற்றி வந்தார். தனக்குக் கொள்ளி போட வேண்டியவனுக்குத் தானே கொள்ளி போட வேண்டிய கொடுமை.

சிதைக்குத் தீ வைக்கப்பட்டபோது என் மனம் பதறியது. உடம்பில் ஓடிய எல்லா ரத்தமும் தொண்டைக்குழிக்குள் வந்துவிட்ட மாதிரி உணர்வு... கண்களை மூடிக் கொண்டேன்.

“இறந்தவங்க வீட்டுக்குப் போகறதுன்னா ஏனோ பிடிக்க மாட்டேங்குதுடா..."
“ஏண்டா...?"

“அங்கே நடக்கிற கூத்துக்கள் எல்லாம் சோகத்தைவிட எரிச்சலைத்தான் கிளப்புது. இறப்பு வீட்ல கிடத்தப்பட்டிருக்கிற உடலைப் பார்க்கும்போது, நாமும் ஒரு நாள் இப்படித்தானே ஆகப்போகிறோம்கிற விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடியலே... அங்கே போய் ஏன் மனசை சஞ்சலப்படுத்திக்கிட்டு..."
“சாவை நினைச்சு உனக்குப் பயமா இருக்காடா?"

“சேச்சே... பயம் இல்லேடா. தவிப்பா இருக்குடா... அது தவிர்க்கவே முடியாத விஷயம்... என் உடம்பை விட்டு உயிர் பிரியப்போற விஷயம் இப்பக் கூட நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கு... என் உடம்பு - என் உயிர் - ரெண்டும் பிறந்ததிலிருந்து இணை பிரியாம நண்பர்களாகவே இருக்கு... அவை பிரியப் போறதை நினைச்சா தவிப்பா இருக்கு. தாங்கிக்க முடியலே... அடுத்த பிறவின்னு சொல்றாங்க... உண்மையில் அப்படி ஒன்று இருந்தாலும் எனக்குத் தேவையில்லை... ஒரு தடவை இந்த உடலைவிட்டுப் போன உயிரை இன்னொரு உடம்போடு பொருத்திப் பார்க்கறதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலே..." முன்பு தன் உடலைப் பற்றி குறைபட்டுக் கொண்டவன், ஜீன்ஸ் பற்றி விமர்சித்தவன் தன் அடிமனதில் தன் உடலின் மீது காதலுடன்தான் இருந்திருக்கிறான்!

சிதை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீச்சுடர்கள் காற்றில் விரிந்து, சுருங்கி அசைந்தன. சிதையின் தணல்பட்டு எனது உடல் சுட்டது. ரவியின் உடல் சாம்பலாகத் தொடங்கியது.


 ’குட்பை நண்பா... கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

2 comments:

  1. மனதை மிக பாதிக்கிறது.

    ReplyDelete
  2. அருமையான அரிதான கதாபாத்திரம்...ரவி மாதிரி இருக்கிறவங்க எல்லாம் சராசரியை தாண்டியவர்கள் ஒரு விதத்தில் அதனாலேயே இந்த உலகில் வாழ முடியாமல் தத்தளிப்பவர்கள்...

    ReplyDelete