Wednesday 5 June 2013


காசிநாதனின் காயங்கள்

பெ. கருணாகரன்

காயம் : ஒன்று

சொக்கலிங்கப் பத்தர் பெயரைக் கேட்டவுடன் இவர் குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் என்று யாரேனும் யூகித்திருப்பின், அதனை மாற்றிக் கொள்க! இவர் ஆசிரியர். எந்த ஜாதி என்பது நமக்குத் தேவையில்லாத விஷயம். காசிநாதனைப் பொறுத்தவரை அவர் மனித ஜாதி இல்லை, பயங்கரவாதி. அவ்வளவுதான்.

சொக்கலிங்கப் பத்தரில் - பத்தர் என்பது இடைச்செருவல். மாணவச் செல்வங்கள் அவருக்கு வைத்த செல்லப் (?) பெயர் அது. அவரது பெயரைக் கேட்டாலே அந்தக் கிராமத்திலுள்ள எல்லா மாணவர்களும் நடுங்குவார்கள். அவருக்கு நடுங்க வைக்கும் ஆஜானுபாகுத் தோற்றமெல்லாம் இல்லை.
ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு சுற்றுப் பெருத்தால் எப்படி இருப்பார்? அவர்தான் சொக்கலிங்கப் பத்தர். அவருக்கு வகுப்பில் ஒழுக்கம் முக்கியம். அந்தக் கிராமத்தில் அது உதவி பெறும் தொடக்கப்பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் அவர் தலைமையாசிரியர். அவரது தனிப்பட்ட முயற்சியால் அந்தக் கிராமத்தில் அந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. கல்வி கற்காமல் வயற்காட்டிலும் டூரிங் டாக்கீஸிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக் குழந்தைகளுக்குக் கல்விக் கண் கொடுத்த கலியுகக் கண்ணப்ப நாயனார் அவர்.

அப்படிப்பட்டவர் காசிநாதனுக்கு மட்டும் பயங்கரவாதியாகத் தெரிந்தது ஏன்? அவரின் அணுகுமுறை அப்படி. அவருக்குப் பிடித்த பழமொழிகள்ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது; அடியாத மாடு படியாது’.  வளையாதவற்றை ஒடித்தாவது வளைத்துவிட வேண்டுமென்று நினைப்பவர் பத்தர். பத்தர் என்று பெயர் வந்த காரணத்தை முதலில் பார்ப்போம்.
மாணவர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனைகள் மகா மோசமானவை. மாதிரிக்கு சில தண்டனைகளைப் பார்ப்போம்.

புளிய மரத்தில் மாணவனைத் தலைகீழாகக் கட்டிப் போட்டு கீழே சுள்ளிகளை எரியவிட்டு, அதில் மிளகாயைப் போடுவார். கருகிய மிளகாயின் காரம் தாங்காமல் கண்கள் எரிய, தும்மி தும்பி மூக்கெரிய மாணவன் தவித்து விடுவான். அதன் பிறகே கட்டுகளை அவிழ்த்து அவனைக் கீழே இறக்கிவிடுவார்.

சரளைக் கற்கள் நிறைந்த பள்ளி மைதானத்தில் கால் முட்டி போட்டவாறே ரவுண்ட் வரச் சொல்வார். முட்டி தேய்ந்து ரத்தம் சொத சொதக்கும். இது ஒருபக்கம் என்றால் இரண்டு விரல்களுக்கு நடுவே பென்சிலைக் கொடுத்து, விரல்களை அழுத்திக் கொண்டு பென்சிலைத் திருகுவார். வலியில் மண்டை தெறிக்கும். சில மாணவர்கள் வகுப்பிலேயேஒன் பாத் போய்விடுவார்கள். ’நான் எக்ஸ் மிலிட்ரிகாரன். என் தண்டனைகள் இப்படித்தான் இருக்கும்அப்பதான பசங்க ஒழுங்கா படிப்பாங்க... என்று தனது மீசையை முறுக்கிக்கொண்டே சொல்வார். அவர்.

“என் பையனைப் போட்டு இப்படித் துவைச்சுட்டீரே..." என்று யாரும் வந்து கேட்க மாட்டார்கள். செல்வாக்குள்ள குடும்பம் அவருடையது. கூடவே, ’நம்ப பையன் நல்லாவரணும்னு நானே எல்லாம்... என்று மனதை ஆற்றுப்படுத்திக் கொள்வார்கள் கிராமத்துவாசிகள்.

பத்தரின் தண்டனைகளில் பிரசித்தமானது காது துளை போடல். ’தடித்த ஓர் மகனைத் தந்தை ண்டடித்தால்... என்ற வள்ளலாரின் பாடலை தனது ஆறுகட்டைக் குரலில் பாடிக்கொண்டே தவறு செய்தவனின் காது மடலைப் பிடித்து அழுத்தமாய் நகங்களால் முத்தமிடுவார். கட்டை விரல் நகமும், ஆள்காட்டி விரல் நகமும் தொட்டுக் கொள்கிறவரை அவரது அழுத்துதல் நிற்காது. அம்மையப்பா இனி ஆற்றேன்... என்று பாடலை அவர் முடிக்கும் போது, காரியம் கனக்கச்சிதமாய் முடிந்திருக்கும். ஜீவகாருண்யம் போதித்தவரின் பாடலைப் பாடிக் கொண்டு இப்படி ஒரு ரணகளம்.
சொக்கலிங்கம் அதுகுறித்து அலட்டிக் கொள்ளவே மாட்டார்.

ஆசிரியன் கடவுள் போன்றவன். ஆக்கலும் ஆவனே - அழித்தலும் அவனே... என்பார் அவர். இந்தத் தண்டனையின்போது இன்னொரு கொடுமை மாணவன், வாய்விட்டுக் கத்தக் கூடாது. வலியை உள் வாங்கிக் கொள்ளுதல் வேண்டும். ’மனக்கட்டுப்பாடு வேணும்டா இந்த வயதில்... என்பார். வகுப்பில் பல மாணவர்களின் காதுகளில் துளை இருக்கும். இப்படி காது துளை போடுவதில் இவர் கை தேர்ந்தவராக இருந்ததால்தான், இவருக்கு பத்தர் என்ற அடைமொழியை மாணவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

காசிநாதனை ஒன்றாம் வகுப்பில் போட்டபோது, பலிகடா மாதிரி மலங்க மலங்க விழித்தவாறுதான் வகுப்புக்கு வந்தான். வெற்றிகரமாக பத்தரின் கைபடாமலே நான்காம் வகுப்பு வரை வந்து விட்டான்.

நான்காம் வகுப்பில்தான் அவரது இரும்புக்கரம் அவனது காது பற்றி துளையிட்டது. அப்படி அவன் என்னதான் தப்பு செய்து விட்டான்?
பத்தர் அந்த ஊரில் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். மாணவர்கள் காலையிலேயே எழுந்துவிட வேண்டும்; படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி. படிக்கும்போது கூட குரலெடுத்துச் சத்தமாகப் படிக்க வேண்டும். தினமும் காலையில் நான்கு மணிக்கே எழுந்துவிடும் பத்தர் ஒவ்வொரு வீடாகச் சென்று வெளியில் நின்று ஒட்டுக் கேட்பார். எந்த வீட்டிலாவது படிப்புச் சத்தம் கேட்கவில்லை என்றால், கதவைத் தட்டுவார். பையனை எழுப்பி அதட்டல் போட்டு படிக்க வைத்துவிட்டுத்தான் அடுத்த வீடு போவார்.
“ஏன் இந்த வேலையத்த வேலை வாத்தியாருக்கு..?" என்று யாராவது கேட்டால், இது வேலையில்லை; சேவை" என்பார் பத்தர். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது ஒரு பக்கம் என்றால், மார்கழி மாதத்திலோ காலை எழுந்தவுடன் பஜனை என்பார் அவர்.

மார்கழி மாதம் என்றாலே பொடிசுகளுக்குக் குளிரில் உடல் நடுங்கும். நான்கு மணிக்கெல்லாம் மாணவர்கள் ஊர் ஏரிக்கு வந்து குழுமிவிட வேண்டும். ஏரிக்கரை காலையிலேயே ஜேஜே என்றிருக்கும். பனிக்காற்று உடல் சிலிர்க்க வைக்கும். ஏரித் தண்ணீரோ ஐஸ் கட்டி மாதிரிஜில்லிட்டிருக்கும்.
ஒவ்வொருத்தனாக நடுங்கும் உடலுடன் தண்ணீரில் இறங்கி விடுவார்கள். முதலில் உள்ளங்கால்; குளிர் அங்கு பழக்கமானவுடன் கெண்டைக் கால்; படிப்படியாக உடலுக்குக் குளிரைப் பழக்கப்படுத்திக் கொண்டு, இடுப்பளவு தண்ணீருக்கு வந்தவுடன், பத்தர்ஒன் டூ த்ரி சொல்லுவார். மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி எழுந்திருப்பார்கள். மூழ்காதவனுக்கு அன்று சாத்து பூஜை நிச்சயம்.

மூழ்கிக் குளித்த பிறகு, கரை ஏறி, நெற்றியில் திருமண் அணிந்து, மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்... பாடிக் கொண்டே கோழிக் குஞ்சு மாதிரி உடல் நடுங்க ஊரையே சுற்றி வருவார்கள். பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான் பார்ப்பவர்களுக்கு; ஆனால், அனுபவிப்பவர்களுக்கு?
அந்த மார்கழி மாத நடுக்கத்தில் காசிநாதனும் மாட்டிக் கொண்டான். அந்த ஆண்டு மார்கழி முதல் தேதி - குளியல் அவனுக்கு அவஸ்தையானதாகி விட்டது. சளி பிடித்துக் கொண்டு அன்றெல்லாம் தலைவலி; மூக்கொழுகல்! இனி பொறுப்பதற்கில்லை என உள்ளுக்குள் வெகுண்டான். மறுநாள் மார்கழிக் குளியலின் போது தலையெண்ணிய பத்தர் ஒரு தலை குறைவதைக் கண்டு துணுக்குற்றார்.

“யாரடா அவன்?"

“நம்ம காசிநாதன் ஐயா..."

“வகுப்புக்கு வரட்டும், பேசிக்கிறேன்..." - மற்ற மாணவர்கள் குளித்தெழ - பஜனை தொடர்ந்தது.

அன்று காசிநாதன் பள்ளிக்கூடத்துக்கும் வரவில்லை. பத்தர் கோபத்தில் முகம் சிவந்தார்.

“அவனைப் போய்க் கூட்டிட்டு வாங்கடா..." என்றார். சில மாணவர்கள் அவனைத் தேடிப் போனார்கள். பிறகு திரும்பி விட்டார்கள்.

“என்னடா ஆச்சு?"

“ஐயா, அவன் காலையிலேயே பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி வந்துட்டானாம்..."

“பள்ளிக்கூடத்துக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு ஊரையா சுத்தறான்? அவனை விடாதீங்கடா.. எங்க இருந்தாலும் உடனே போய் இழுத்துக்கிட்டு வாங்க..." வாட்ட சாட்டமாய் சில மாணவர்களை அனுப்பி வைத்தார். சென்றவர்கள் மதியம் வந்து கை விரித்தார்கள்.

“ஊர்லே எங்கேயும்காணோம் ஐயா..."

பற்களை நறநறத்தார் பத்தர். எங்கே போயிருப்பான்? பக்கத்துல  தான் எங்கேயாவது போயிருப்பான். எப்படியா இருந்தாலும் ஊர் சுத்திட்டு ராத்திரி திரும்பி வந்துதானே ஆகணும். அப்பப் பேசிக்கறேன்..."

அன்று இரவு காசிநாதன் திரும்பி வரவில்லை. வீட்டில் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அதே நேரம் ஊருக்கு ஒதுங்கியிருந்த வயல்காட்டுப் புளிய மரத்தின் உச்சியில் நடுங்கும் குளிரில் உட்கார்ந்திருந்தான் காசி.

காலை பஜனையில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்தது பத்தரை கோபப்படுத்தும் என்று தெரிந்தே அவன் வகுப்புக்கு மட்டம் போட்டான். வகுப்புக்குப் போகாமல் வீட்டிலும் இருக்க முடியாது. அவர் வீட்டுக்கு வந்து முதுகெலும்பை உடைத்து விடுவார். வேறு வழியில்லாமல்தான் ஓடிவந்து ஒளிந்து கொண்டான். பகலில் கம்மங்கதிர்களையும் கருப்பங்கழியையும் சாப்பிட்டு அலுத்துவிட்டது. வாய்க்கு வக்கணையாக காரமாய் எதையாவது சாப்பிட வேண்டும் போல இருந்தது. தூரத்துக் கருவேல மரங்களில் மின்மினிப் பூச்சிகள் மினுக்கிக் கொண்டிருந்தன.

சுந்தரேச படையாச்சியின் பம்ப் செட் இரவைக் கிழித்துக் கொண்டு வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தது. திடீரென்று அவனுக்குத்தெருப்புழுதி ஞாபகத்துக்கு வந்தான். தெருப்புழுதி இரண்டு வருஷத்துக்கு முன்பு, பக்கத்துப் புளியமரத்தில் தூக்கில் தொங்கியவன். இளவயது துர்மரணம் ! தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டவன். பக்கத்து டவுன் அரசு மருத்துவமனைக்கெல்லாம் போய்க் காட்டினான். வலி சரியாகவில்லை. ஒருநாள் சாயங்காலம் தொங்கிவிட்டான்.

தனக்குப் பிறந்த மூன்று குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்து போனதால், இவனாவது தங்கட்டும் என்றுதெருப்புழுதி என்று பெயர் வைத்தார் அவனது அம்மா... ஆனால் அவனும் புழுதியோடு புழுதியாகிவிட்டான். அவன் இறந்து சில மாதங்கள் வரை அவனது ஆவியைப் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள். பிறகு தெருப்புழுதியை மக்கள் மறந்து விட்டார்கள். ஆனால், அவன் இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டான். பக்கத்துப் புளிய மரத்தில் நிழலாடுவது மாதிரி பிரமை ஏற்பட்டது. காசிக்கு முதுகுத் தண்டு பயத்தில் ஜில்லிட்டது.

உச்சி முடியை யாரோ பற்றி இழுப்பது போலிருந்தது. மெல்ல இறங்கினான். வீட்டுக்குத் திரும்பி விடுவதுதான் ஒழுங்கு என்று தோன்றியது. பத்தரை நினைத்தால் மனம் பகீர் என்றது. என்ன தண்டனை கொடுப்பார் என யோசித்தான். தலைகீழாகக் கட்டித் தொங்க விடுவாரா? முட்டிப் போட்டு கிரவுண்டைச் சுற்றிவரச் சொல்வாரா? அல்லது காது குத்திவிடுவாரா? காதைத் தடவிவிட்டுக் கொண்டவன் பயந்து கொண்டே வீடுவந்து சேர்ந்தான்.
“இங்க பாரு உம்புள்ளையை... திருடன் மாதிரி வர்றான்..." என்று அப்பா திட்டினார்.

“ஏங்க அவனைத் திட்டறீங்க?" - தாயுடன் அணைத்தாள். மறுநாள், விடிகாலையிலேயே பத்தர் வந்து விட்டார்.

“பயல் வந்துட்டானா?" என்றார். அம்மா, ம்" சொன்னவுடன் அவர் புயலாய் வீட்டுக்குள் நுழைந்தார். பாயில் சுருண்டு படுத்திருந்த  காசியை அலேக்காகத் தூக்கிக் கொண்டார். யாரோ தூக்குவதை உணர்ந்து அதிர்ச்சியில் கண் திறந்த காசி திடுக்கிட்டான். அவன் முகத்தருகே அவரது பெரிய மீசை வைத்த முகம். கண்கள் பிதுங்கி அச்சுறுத்தும் வீரனார் போலவே அவர் அவனுக்குத் தோன்றினார். பத்தர் அவனைக் கீழே இறக்கவே இல்லை. நேராக ஏரிக்கரைக்கு வந்தார். அங்கே மாணவர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.

காசியைத் தூக்கி ஏரியில் வீசினார் பத்தர். சில்லிட வைக்கும் தண்ணீரில் விழுந்தவுடன் மூச்சடைத்து, தாடைகள் இறுகிப் போயின காசிக்கு. மாணவர்கள் ஏரியில் இறங்கி மூழ்கினார்கள். பிறகு, எல்லோரும் கரையேற... பஜனை ஆரம்பமானது.

       மாலே மணிவண்ணா மார்கழி
                நீராடுவான்.
                மேலையார் செய்வனகள்
                வேண்டுவன கேட்டியேல்
                ஞாலத்தையெல்லாம் நடுங்க
                முரல்வன
                பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச
                சன்னியமே..."
- எல்லோருடனும் காசியும் புரியாத அந்தப் பாடலைப் பாடி கொண்டே சென்றான்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது. வாத்தியார் தன்னை அடிக்கப் போவதில்லை என்று நினைத்தான் காசி. ஆனால், அவன் நினைத்தது மிகப் பெரிய பிசகு.

காலையில் வகுப்புக்கு வந்தவுடன், கணக்கு வாத்தியார் படம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த பத்தர், கிட்டே வாடா" என்று காசியை அழைத்தார். இவன் நடுங்கிக் கொண்டே சென்றான். பெரிய மனுஷனாயிட்டியோ...?" என்றவாறே கண்களை மூடி தடித்த ஓர் மகனை..." என்ற அருட்பா பாட ஆரம்பித்து விட்டார். காசிக்கு ஈரல் குலை நடுங்கியது. பத்தரின் வலது கரம் மெதுவாக காசியின் காதுகளைத் தொட்டது. பாடிக் கொண்டே காது மடலை வருடிய அவரது விரல்கள் சிறிது சிறிதாக முரட்டுக்கோலம் பூணத் தொடங்கியது.

வாழை மடலில்  கோணி ஊசி ஏறுவதுபோல் காது மடலில் அவரது கூரிய நகங்கள் பதமாக இறங்கின. அம்மையப்பா இனி ஆற்றேன்.." என்று பாடி முடித்தார் பத்தர். வலி தாங்காமல் துடித்த காசி மெல்ல காது மடலைத் தடவினான். சொதசொதவென்று ரத்தம் பிசுபிசுத்தது.

“எல்லாம் கல்யாணத்துக்குள்ளே ஆறிடும். அந்த சாக்பீஸ் தூளை எடுத்துக் காயத்தில் பூசிக்கோ..." என்று ரொம்ப சாதாரணமாகச் சொன்ன பத்தர், வகுப்பிலிருந்து வெளியேறினார்.

இந்த அட்டூழியம் பிடித்தவரை அடக்க வழியில்லையா? காசியின் மனது கொந்தளித்தது. அந்தச் சண்டியருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்தான்.

என்ன செய்யலாம் என்று அவன் தீவிரமாய் யோசித்துக் கொண்டே வகுப்பில் சாணி மெழுகிய தரையில் உட்கார்ந்தான். அவரது கொட்டம் அடக்க அவனுக்குத் தோன்றிய யோசனை அவரது வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போடப் போவதும், தனது மனதில் அது தீராத ரணத்தை ஏற்படுத்தப் போகும் விஷயமும் காசிக்கு அப்போது தெரியாது!

சொக்கலிங்கப் பத்தரிடம் காது கிள்ளு வாங்கிய பிறகு காசி ருத்ரனானான். சக மாணவனாய் இருந்திருந்தால் சமர் செய்யலாம். சில்லி மூக்கை உடைக்கலாம். எதிராளி பெரியவர். குரு. வாழ்க்கையில் அவர் மறக்கவே முடியாத அளவுக்குப் பதில் அடி தர நினைத்தான் காசி.

வாத்தியாருக்கு ஊரில் கிடைப்பது மரியாதை. அதைப் பறிக்க வேண்டும். மானத்தோடு உலா வருபவனுக்குத்தான் மரியாதை. மானம் போய்விட்டால்? எப்படி? எப்படி? சைத்தான் காசிக்குள் குடியேறினான். காதினைத் தடவிப் பார்த்தான் காசி. வலி... வலி... சைத்தான் முழு ஆவேசத்தில் அவனுக்குள் துர்மந்திர உச்சாடனம் செய்தான்.

இப்போது கொடுக்கப் போகிற அடியில், இனி சொக்கலிங்க வாத்தியார் எழுந்திருக்கவே கூடாது! மளமளவென்று காரியங்கள் நடந்தேறின.
அன்று தனது நாற்காலியில் வந்து உட்கார்ந்த பத்தரின் டேபிள் மீது நான்காய் மடிக்கப்பட்ட அந்த துண்டுச்சீட்டு காற்றிலாடியது. எடுத்துப் பிரித்தார். படித்தார்.

கிறுக்கல் கையெழுத்தில் பென்சிலால் எழுதப்பட்ட ஒரு கடிதம்! உங்கள் மனைவி உங்களுக்குத் துரோகம் செய்கிறாள். மிராசுதார் பரமசிவத்துடன் தொடுப்பு இருக்கிறது. தினமும் ஏரிக்கரையில் மாணவர்களைக் குளிப்பாட்டுகிறீர்கள். உங்கள் மனைவி அதே நேரத்தில்...! கடிதத்தைப் படித்து ஆத்திரமானார் சொக்கலிங்கம்.

கையெழுத்தைப் பார்த்தார். தெளிவில்லாமல் கிறுக்கலாக இருந்தது. இதே பள்ளியில் படிக்கும் எவனோதான் எழுதியுள்ளான். யாரிடம் விசாரிப்பது? வேறு விஷயமாக இருந்தால் அதட்டி உருட்டி விசாரித்துக் கண்டுபிடித்து விடலாம். இந்த விஷயம் - தன் குடும்பம் சம்பந்தப்பட்டதல்லவா? அவரால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை!

அன்று முழுக்க அவரால் பள்ளிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. நடுநடுவே அவரது மனைவியின் முகமும் பரமசிவத்தின் முகமும் தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது. அவருக்கு நெருடலாய் ஒரு தயக்கம். உண்மையாய் இருக்குமோ?

அவரது நடவடிக்கைகளைப் பார்த்த காசி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவன் வீசிய கல் அவரது மனசுக்குள் ஏகப்பட்ட சலனங்களை ஏற்படுத்தி விட்டிருந்தது. வாத்தியார் சரியான சந்தேக கேஸ்... மாணவர்கள் சொல்லும் எதையும் நம்பாமல் சந்தேகத்துடனே பார்ப்பார். சந்தேகப் பேர்வழியான அவரது நிம்மதியைக் குலைக்க அவனுக்குத் தோன்றிய யோசனைதான் அந்தக் கடிதம்!

திட்டத்தின் அடுத்த கட்டம்... சொக்கலிங்கம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் எப்படி கண்டிப்பாக இருப்பாரோ, அதேபோல சாயங்காலம் விளையாட வேண்டும். ’காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டுன்னு பாரதி சொல்லியிருக்காருல்ல... என்பார்.

திருடன் போலீஸ், டியாண்டோ, கண்ணாமூச்சி என்று தினமும் ஒரு ஆட்டம். நிச்சயம் அது ஓடிப் பிடிக்கிற விளையாட்டாக இருக்க வேண்டும். நிலவின் வளர் பருவத்துக்கேற்ப அவர்களது விளையாட்டும் மாறுபடும்!
அன்றுஅமாவாசை. அதனால் திருடன், போலீஸ் ஆட்டம்... வடக்குத் தெருமுக்கிலிருந்த பெட்டிக்கடையில்  பாஸிங் ஷோ காலி சிகரெட் பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டான். சீட்டுக்கட்டு விளையாடுவதற்கென்று ஏற்கனவே அவன் அப்படி வாங்கியிருப்பதால், கடைக்காரன் கோணச்சாமியும் கொடுத்தான்.

திருடன் போலீஸ் விளையாட்டில் முருகேசன் திருடன். மற்ற நண்டு சிண்டுகள்தான் போலீஸ் படை. காசிநாதனும் ஒரு கான்ஸ்டபிள். திருடனைப் பிடிக்கிற சாக்கில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் பத்தர் வீட்டின் உளுந்து மிலார் வேலியைத் தாண்டி, மண்வாசல் முகப்புக்கு வந்துவிட்டான். பத்தர் பக்கத்து ஊருக்குப் போயிருந்தார். சாயங்காலம் மாட்டு வண்டியில் போவதை அவன் பார்த்தான். வரச் சிறிது நேரமாகும். பையிலிருந்த சிகரெட் பெட்டியை வெளியில் எடுத்தான். நிலைவாசல் சுவர் அருகே வீசினான். யாரும் பார்க்காதபோதே அவசரமாய் ஓடி வந்துவிட்டான். மீண்டும் நல்ல பிள்ளையாக வந்து மற்ற பையன்களுடன் கலந்து கொண்டான்.

கொஞ்ச நேரம் விளையாடிய பிறகு... மாட்டுவண்டிச் சத்தம்! பத்தர் திரும்பி வந்து கொண்டிருந்தார். ’வாங்க சார்... நாளைக்கு வேடிக்கை பாருங்க - மனசுக்குள் கறுவிக் கொண்டான் காசி.

மறுநாள்... வழக்கம்போல் காலையிலேயே ஆரம்பித்து விட்டது மார்கழி பஜனை. ஆனால், பத்தரால் வழக்கமான ஈடுபாட்டுடன் இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு விஷயத்தை இழந்துவிட்ட மாதிரி இருந்தார். பஜனை பாடி ஊர் சுற்றி வந்து முடிந்த பிறகு மாணவர்கள் கலைந்தார்கள்.

வீட்டுக்கு வந்த பத்தர் உள்ளே பார்வையை ஓடவிட்டார். வீடு வழக்கம்போல மாற்றம் ஏதுமில்லாமல் இருக்கவே, அவருக்குத் திருப்தி. அந்தத் திருப்தியுடன் வீட்டுக்கு வெளியே வந்தவர் துணுக்குற்றார். அந்த சிகரெட் பெட்டி!
எப்படி? எடுத்துப் பார்த்தார். பாஸிங்ஷோ! இது பரமசிவம் புகைக்கிறதாச்சே! இங்கே எப்படி? ஒருவேளை. அந்தக் கடிதம் உண்மைதானோ?

“புள்ளை பூங்கோதை..." - வீட்டுக்குள்ளிருந்த துணையாளை அழைத்தார்.

“என்னங்க ஐயா... - மனைவி கூட தன்னை ஐயா என்றுதான் அழைக்க வேண்டும் என்பது அவரது உத்தரவு.

“யாராவது வந்தாங்களா?" - அவளது முகத்தை ஆழமாகக் கூர்ந்தார்.

“இல்லீங்களே ஐயா..."

“அப்புறம் ஏது இந்த சிகரெட் பெட்டி?" - இன்னும் ஆழமாக அவளது முகத்தைக் கூர்ந்தார்.

“தெரியலையங்கய்யா..."

“வீட்லதான இருக்க..? உனக்குத் தெரியாம இது இங்க எப்படி வந்தது?" - கேள்வியால் குடைந்தார்.

“பசங்க யாராவது" - அவளை முடிக்க விடவில்லை பத்தர்.

“பசங்கதான் சிகரெட் பிடிக்குதா? வேலை மெனக்கெட்டு இங்க கொண்டுவந்து போடுதா?" - எடக்கு மடக்குக் கேள்விகளுடன் இன்னும் தீவிரமானார் பத்தர்.

“ஐயா, என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலே..." அந்த தர்மபத்தினி குழப்பமாய் அவரைப் பார்த்தாள்.

“நான் இல்லாத நேரத்தில் பரமசிவம் வந்தானா?"

“ஐயா..." அவள் அதிர்ந்தாள்.

“எல்லாம் எனக்குத் தெரியும்டி. எத்தனை நாளா இந்தக் கூத்து நடக்குது...?" 
என்றார் அவர்.
“ஐயா அபாண்டம்..." - அவர் தனது மனைவியையும் ஒரு மாணவி மாதிரியே நடத்தி வந்தார். கணவனிடம் அதிகம் பேச முடியாது. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கும் அவளால் விரிவாக விளக்கம் சொல்ல முடியவில்லை.

“என்னடி ஆடு திருடிய கள்ளன் மாதிரி முழிக்கிறே? கையும் களவுமா மாட்டிக்கிட்டோமேன்னு முழிக்கறியா?"

“ஐயா... தப்பு... தப்பு.." - அவள் அவர் காலில் விழுந்தாள். அவர் அவளை எட்டி உதைத்தார்.

“தப்புதாண்டி... நீ பண்ணறது பெரிய தப்பு. உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது ரொம்ப பெரிய தப்பு... என்ன தண்டனை தரலாம்? நீயே சொல்லு..."

“ஐயா... யாரோ சொல்றதைக் கேட்டு, நீங்க என்னைத் தப்பா நினைச்சுட்டீங்க..." மன்றாடினாள்.

“யாரோ சொல்லலைடி. ஊரே சொல்லுது. சிரிப்பாச் சிரிக்குது..." அவருக்குள் இருந்த சந்தேகப் பிராணி விஸ்வரூபம் எடுத்தது. அவளது தலைமுடியை இடதுகையால் கொத்தாகப் பற்றியவர். அப்படியே தூக்கி, வலது கையால் அவளது கன்னத்தில் பளீரென்று அறைந்தார். பொறியில் விழுந்த அறையில் நிதானம் தவறிய அவள் தடுமாறி அங்கிருந்த அம்மிக் கல்லில் தலைமோதி விழுந்தாள். ரத்தம் பெருகி ஆறாக ஓடியது.

விழுந்தவள் அப்படியே கோடு மாடாகக் கிடந்தாள். ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. பத்தர் அவளை நெருங்கினார். ரொம்பவும் நடிக்காதடி..." கால்களால் எத்தினார். தளர்ந்துபோய் அவள் தரையில் உருண்டாள். கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தன. அவள் செத்துப் போயிருந்தாள்!

அதன்பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஊர் அதைக் கொலையாக நினைக்கவில்லை. தற்செயல்... விபத்து... என்று முடிவு செய்தது. இருந்தாலும் அவர் ஆசிரியராக இருப்பது முறையல்ல என்று பஞ்சாயத்து நினைத்தது. பள்ளிப் பொறுப்பிலிருந்து அவரை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

கம்பீர பத்தர் - அதன்பிறகு எல்லாம் தொலைந்து, கிறுக்கன் போலானார். பிரமை பிடித்தவர் போல் தனக்குத்தானே பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் ஊர் சுற்றி வந்தார். விசாரிக்காமல் அவர் வழங்கிய தீர்ப்புக்கான தண்டனை அவர் தலையிலேயே விழுந்தது.

காசிநாதனுக்கு வழியில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் கஷ்டமாக இருக்கும் ஏதோ ஒரு வெறியில் தான் விளையாட்டாய் செய்த தவறு விபரீதமாய் முடிந்து ஒருவரின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கி விட்டதே...

கண்ணாடியில் காசிநாதன் முகம் பார்க்கும்போது, காது காயத்தில் பத்தரின் முகம் தெரியும். படுபாவி" என்று திட்டுவது போலிருக்கும். மௌன அழுகை அந்த ஒன்பது வயது கிரிமினலுக்குள் வெடிக்கும்!

No comments:

Post a Comment