Thursday 6 June 2013



காசிநாதனின் காயங்கள்

பெ. கருணாகரன்

காயம் : இரண்டு

கிராமம் என்றாலே சாராயத்துக்குப் பஞ்சமிருக்காது. கிராமத் தொழிலான விவசாயத்துக்கு  முழு நேர வேலை  இருக்காது.  சில தினங்களில் வேலை இருக்கும். பல தினங்களில் வேலை இருக்காது. வீட்டுத் தாழ்வாரங்களிலும் திண்ணைகளிலும் கிராம மரத்தடிகளிலும்  பகலிலும் பலர் ஆனந்த சயனம் செய்து கொண்டிருப்பதைக் காணலாம். டி.வி. என்கிற சாத்தான் தேவதை வருவதற்கு முன் கிராமங்களின் முக்கிய பொழுதுபோக்கு தூங்குதல்தான்.
சில பெரிசுகள் கோயில் கல்தரையில் உளிவைத்துச் செதுக்கி கோடுகள் வரைந்து ஆடுபுலி ஆட்டம், சதுரங்கம் விளையாடுவார்கள். சிலரோ, கல்லிலேயே குழிபறித்துப் பல்லாங்குழி ஆடுவார்கள். தூங்குவதிலும் சிக்காத, விளையாட்டிலும் மாட்டாத சிலரது ஒரே போக்கிடம்  சாராயக் கடைதான்!

கிராமத்துச் சாராயக் கடைக்கு கூரையோ, கல்லாப் பெட்டியோ எதுவும் இருக்காது. கருவேலந் தோப்பில் ஒரு பெரிய கருவேல மரம்தான் கடை. கீழே  முண்டாசு கட்டிக்கொண்டு கருத்தவன் எவனாவது உட்கார்ந்திருப்பான். சிறிய பீப்பாயில் அந்தப் போதை திரவம் தள்ளாடிக் கொண்டிருக்கும்.

கோயிலில் ஆடுபுலி விளையாட்டை விட, சுவாரஸ்யம் இந்தக் கருவேல மரத்தடி விளையாட்டு. அவனவனுக்கு இடுப்பில் கட்ட வேண்டிய வேட்டி தலையில் முண்டாசாக மாறியிருக்கும். இன்னும் சிலரோ வேட்டியை அவிழ்த்துக் கக்கத்தில் சொருகிக் கொள்வார்கள்.
ஆனந்தக் கூத்தாட்டத்தில் பாடல்கள் பறக்கும்!

ஊர் ரகசியங்கள் அங்கு அம்பலமாகும். காசிநாதனின் அப்பா ராஜாராமும் அந்தப் பட்டியலில் சேர்ந்ததுதான் பரிதாபம்! வாரத்துக்கு இரண்டு நாட்களாவது அவர் சாராயம் குடிப்பார். குடித்துவிட்டால் வீட்டில் அம்மாவுடன் சண்டை, ரகளை....

ஒரு தடவை, அவருக்குக் காலில் சுளுக்கு! நடக்க முடியவில்லை. காசியை அருகில் அழைத்தவர், காசி... தோப்புக்குப் போய் நூறு மில்லி வாங்கிக்கிட்டு வாடா..." என்று அவனிடம் பாட்டிலும் இரண்டு ரூபாயும் கொடுத்தார்.

“ஏன்ய்யா உனக்கு மூளை கெட்டுப் போச்சா? சின்னப் பையனைப் போய் சாராயக் கடைக்கு அனுப்பறியே..." என்றாள் அம்மா.

“ஏய்... வாயை மூட்றி..." என்றார் ராஜாராம். காசி பாட்டிலுடன்  வெளியே வந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான்.

கருவேலந் தோப்புக்கு வந்து பாக்கெட்டுக்குள் கைவிட்டவன் திடுக்கிட்டான். ஒரு ரூபாய்தான் இருந்தது. ஒரு ரூபாய்? வழியில் எங்கேயோ தவறிவிட்டது. நடுங்கிவிட்டான். தெரிந்தால் அப்பா தோலை உரித்து உப்புக் கண்டம் போட்டு விடுவார். அவனுக்கு திடீரென்று அந்த யோசனை! ஒரு ரூபாய் கொடுத்து ஐம்பது மில்லி வாங்கிக் கொண்டான். வருகிற வழியில் ஏரி இருந்தது. ஏரித் தண்ணீரை கலந்துவிடலாம் என்பது அவனது திட்டம்!

ஆனால், அவனது துரதிர்ஷ்டம் - ஏரித்தண்ணீர் கலங்கலாக இருந்தது. கலந்தால் நிறம் காட்டிக் கொடுத்து விடும். என்ன செய்யலாம்? அப்போதுதான் அவனுக்கு அபாரமான அந்த யோசனை!

அப்பாவிடம் கொண்டுவந்து பாட்டிலைக் கொடுத்தவுடன் அவர் ஐந்து காசு கொடுத்தார்.

கடலை மிட்டாய் வாங்கிக்க."

அப்பா, டம்ளரில் தண்ணீர் கலந்து குடித்தார். “பேமானிப் பசங்க... வரவர சரக்குல தண்ணீர் கலந்து விக்க ஆரம்பிச்சுட்டானுங்க... கலி முத்திப் போச்சு... உலகம் தாங்காது... சீக்கிரம் அழிஞ்சுடும்..."  என்றார்.
சிறிது நேரம் ஆகியிருக்கும். ராஜாராம் எதற்காகவோ எழுந்தார். திடீரென்று தடுமாறி அங்கு சுவர் மூலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய தாழியில் விழ, அது டமார் என்ற சத்தத்துடன் உடைந்தது.

நிச்சயம் அவர் விழுந்தது போதையினால் அல்ல. கால் சுளுக்கு காரணமாகத்தான் என்பது காசிக்குத் தெரியும்!

அம்மா பதறிக் கொண்டே வந்தாள். பாவி மனுஷா... சாராயத்தக் குடிச்சுட்டு இப்படி உயிரை வாங்கறியே... அதுக்கு காசியோடதைப் பிடிச்சுக் குடி... இன்னும் போதை ஏறும்..." எரிச்சலில் அம்மா கத்தினாள்.
- காசிக்குச் சிரிப்பு தாங்கவில்லை. கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு சிரித்தான்.

இதற்குமுன்பும் பலமுறை காசியை அவனது தந்தை சாராயக் கடைக்கு அனுப்பியிருக்கிறார். அப்போதெல்லாம்அவனுக்கு அவர், கடலைமிட்டாய் வாங்க ஐந்து பைசா லஞ்சமும் கொடுப்பார். அது அவனுக்கு ஊக்கத் தொகை.
அன்றொருநாள் அப்படித்தான் பணம் கொடுத்து கருவேலந்தோப்புக்கு அனுப்பினார். முண்டாசுக்காரனிடம் சாராயம் வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான் காசி. மாலை மயங்கும் நேரமது.
மேக்கால கெணத்துக்குள்ளே

விழுதுபாரு நெருப்புப் பந்து...பாடிக் கொண்டே வந்தவனுக்கு திடீரென்று கேள்வி ஒன்று. சாராயம் எப்படி இருக்கும்? எல்லோரும் ஏன் சாராயத்துக்காகப் பறக்கிறார்கள்? இந்தக் கேள்வி எழுந்தவுடன் அவனுக்குள் விபரீதமான அந்த ஆசை! குடித்துப் பார்த்தால்தான் என்ன? கிராமத்தில் சின்ன வாண்டுகள் சாராயம் குடிப்பது பெரிய விஷயமல்ல. சாராயம் அங்கு சகஜம். சாராயம் இல்லையென்றால் பல பயல்கள் பைத்தியமாகியிருப்பார்கள். அப்பா குடிப்பார். வேடிக்கை பார்க்கும் பையனும் பதின்மூன்று வயதிலேயே தீர்த்த யாத்திரைக்கு டிக்கெட் வாங்கி விடுவான்.

உழைப்பை மட்டுமே அறிந்த வேறு பொழுதுபோக்கு ஏதும் இல்லாத அவர்களுக்கு அந்த திரவ ராட்சசன்தான் நேரப்போக்கு! உடல் வலிக்காகவும், உற்சாகத்துக்காகவும், வறுமைச் சோகத்துக்காகவும், வாழ்துணை தோல்விக்காகவும், எருமை இறந்ததற்கும், பூமி காய்ந்ததற்கும், இப்படி எதுவானாலும் சாராயமே அவர்களின் காவல் தெய்வம்!

சிறுசுகள் குடிக்க பணம்? வீட்டில் நெல் இருக்கும். மணிலா இருக்கும். கம்பு, கேழ்வரகு இப்படி ஏதாவது இருக்கும். அவற்றில் கொஞ்சம் எடுத்து மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு வந்து, முண்டாசுக்காரனிடம் கொடுத்தால் போதும், தானியம் வாங்கிக் கொண்டு சாராயம் தருவான். பண்டமாற்று!
காசி கையிலிருந்த பாட்டிலை நோட்டம் விட்டான். அந்த வெள்ளைத் திரவத்தை முகர்ந்து பார்த்தான். அடிக்கடி அப்பாவிடம் அவன் நுகர்ந்தகழிச்சடை வாடை தான். ஆனால், இப்போது அது அவனுக்கு சுகமாக இருந்தது. மூளை நரம்புகளில் கிளர்ச்சி அலை வீசியாடியது. ஆழமாய் நுகர்ந்தான்.

ஆஹா... வாடை ஆளைத் தூக்குதே

யாரய்யா கடையிலே.... ஓய்
அய்யாசாமித் தேவரா?
போடய்யா ஒன்றரை - அந்தப்
பூப்போட்ட கிளாஸிலே...
- ஊரில் பெரியசாமி படையாச்சி குரலெடுத்துப் பாடுகிற அந்தப் பாட்டு அவனது ஞாபகத்துக்கு வந்தது.

மறுபடியும் நுகர்ந்தான். குடிக்கலாமா? தப்பில்லையா? சின்னதாய்  தயக்கமா, பயமா எதுவென்று தெரியாத ஓர் உணர்வு  தடுத்தாட் கொண்டது.
தப்பில்லை. அப்பாவே குடிக்கிறாரே... உள்மனசு சமாதானம் சொன்னது.
அப்படியே சாப்பிடறதா? அப்பா தண்ணியைக் கலந்து கண்ணை மூடிக்கிட்டு கடகடன்னுதானே குடிப்பாரு... ரொம்பவும் காருமோ?

அப்ப தண்ணி? கலந்து குடிக்க பாத்திரம்? யோசித்துக் கொண்டே வந்தவனின் பார்வையில், ஒழிஞையின் ஓரமாகக் கிடந்த அந்த மண்சட்டி தென்பட்டது. எடுத்துக் கொண்டான். வழியில் முத்துசாமி படையாச்சியின் பம்ப்செட் இருக்கிறது. வரும்போது பார்த்தான். ஓடிக்கொண்டு இருந்தது. இப்போதும் ஓடுமா? யோசித்தவாறே வந்தான். அவன் அதிர்ஷ்டம் (!) ஓடிக் கொண்டிருந்தது. இருட்டு கவிந்து இருந்தது. பம்ப்செட்டில் யாரும் இல்லை. மோட்டார் தொட்டியருகே வந்தான். சட்டியை மண்போகக் கழுவினான். பிறகு மண்சட்டியில் கொஞ்சமாய் சாராயத்தை ஊற்றினான். கைகளால் தண்ணீர் சேந்தி அதில் வைத்தான்.

மனசுக்குள் கலவரம்! எச்சரிக்கையாக முதல் உறிஞ்சு உறிஞ்சினான். ’தூத்தேறி அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது. ’தண்ணி கலந்ததுக்கே இந்தக் காரு காருது. மனுஷப் பயலுவோ இதுக்குத் தான் பறக்குறானுங்களா... வௌங்காத பயலுங்க. நினைத்துக் கொண்டே சட்டியிலிருந்ததைக் குடித்து முடித்தான்.

குடித்த சாராய அளவுக்கு, இணையாக பாட்டிலில் தண்ணீர் ஊற்றி நிரப்பிக் கொண்டான். அமைதியாக வீட்டுக்கு வந்தான். அப்பாவிடம் முகம் கொடுக்கக் கூட இல்லை. வாடையை வைத்துக் கண்டுபிடித்து விட்டால்?

“இந்தாடா, கடலை மிட்டாய் வாங்கிக்கோ" அப்பா கொடுத்த ஐந்து பைசாவை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். இப்போது, அவனுக்கு ஜாலியாக இருந்தது. இதுவரை அவனுக்கு ஏற்படாத புது அனுபவம் இது. பெட்டிக் கடைக்கு வந்தவனுக்குக் கடலை மிட்டாய் வாங்கத் தோன்றவில்லை. காரமாய் எதையாவது நொறுக்கணும் போல இருந்தது.

எலுமிச்சை ஊறுகாய் வாங்கினான். பிய்த்துச் சுவைத்தபோது அதன் காரம், அவனுக்குத் தேனாய் இனித்தது. இரவு யாரிடமும் பேசாமல் வீட்டுக்கு வந்து சொகமாய் படுத்துக் கொண்டான். சாராயத்துக்கு எல்லோரும் ஏன் அடிமைகளாய் இருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது.

சில தினங்கள் ஓடின. கல்யாணம் ஒன்றுக்காக அன்று கம்மாபுரத்துக்குப் போயிருந்தார்கள் அப்பாவும் அம்மாவும். அவனது சுழி ஒய்ந்திருக்கவில்லை. அன்று கிடைத்த மயக்க ருசி இப்போது தேவை போலத் தோன்றியது. காசு வேண்டுமே. வீட்டுக்குள் பீராய்ந்தான். ம்ஹும்... எங்கும் பைசா பெயரவில்லை. நெல், கம்பு எதையாவது எடுக்கலாமென்றால், அடுக்குப்பானை காலியாக இருந்தது.

அவனுக்குள் இருந்த கிரிமினல் அவனை உசுப்பிவிட்டான். திட்டம் வகுத்துக் கொடுத்தான். அதைச் செயல்படுத்தத் தயாரானான் காசி.

கையில் பாட்டிலையும் மஞ்சள் பையையும் எடுத்துக் கொண்டான். சக்கரவர்த்தி ரெட்டியாரின் முந்திரித் தோப்புக்குச் சென்றான். பச்சைச் சிறுமலைகளாய் கும்பல் கும்பலாய் உட்கார்ந்திருந்தன முந்திரி மரங்கள். ஒவ்வொரு மரமும் கூடாரம் போல். உள்ளே நுழைந்து விட்டால் கண்டறிய முடியாது.

கிளை கிளையாய் படர்ந்து தரையில் தவழ்ந்து கிடந்தன முந்திரிக் கொம்புகள். மரங்களில் மஞ்சள், சிவப்பு என்று முந்திரிப் பழங்கள். அதற்குக் கீழே ஒட்டிக் கொண்டிருந்தன முந்திரிக் கொட்டைகள்.

ஒரு மரத்தின் உட்புறம் நுழைந்தான். தரையில் மெத்தை கட்டியிருந்தன சருகுகள்! கால் வைத்தவுடன் சரசரத்தன. சத்தமிடாமல் பூனையின் இயல்புடன் காலெடுத்து வைத்தான். கிளைகளில் தவ்வி ஏறினான். ஒவ்வொரு பழமாய்ப் பறித்தான். முந்திரிக் கொட்டையைத் திருகி எடுத்துக் கொண்டு பழத்தை கீழே எறிந்தான். பால் வழியும் முந்திரிக் கொட்டைகளை இடுப்பில் செருகியிருந்த மஞ்சள் பையில் பத்திரப்படுத்தினான்.

சிறிது நேரத்தில் கணிசமாய் முந்திரிக் கொட்டைகள் சேர்ந்து விட்டன. இறங்கினான். கீழே வீசிய முந்திரிப் பழங்களை பொறுக்கி குழிதோண்டிப் புதைத்தான். அப்படியே விட்டு விட்டால், தடயமாகிக் காட்டிக் கொடுத்துவிடும். பையுடன் பதவிசாய் வெளியே வந்தான்.

கருவேலந்தோப்பில் குடிகாரர்கள் ஜமா.  முண்டாசுக்காரனிடம் தயங்கித் தயங்கி பையினுள் இருந்த முந்திரிக் கொட்டைகளை நீட்டினான்.  பார்வையால் காசியை அளந்தவன் ஏதுடா? என்றான்.

“அப்பா கொடுத்தாரு."

முந்திரிக் கொட்டைகளை வாங்கிக் கொண்டு அளந்து ஊற்றினான். இதையெல்லாம் ரெட்டியார் கொல்லையில் வேலை பார்க்கும் மாடசாமி கவனித்துக் கொண்டிருந்தான். ’இவனுக்கு முந்திரி மரமே கிடையாதே. முந்திரிக் கொட்டை ஏது? என யோசித்தான்.

நம்ம முதலாளி தோப்பில் பறிச்சிருப்பானோ? என்ற சந்தேகம் வந்தது. எஜமான விசுவாசம் விஸ்வரூபம் எடுத்தது. கையிலிருந்த கிளாஸை மளுக்கென்று கவிழ்த்துக் கொண்டான். விடுவிடுவென்று தோப்பை நோக்கி நடந்தான்.

முதலாளியாக இருந்தாலும் கூலியாக இருந்தாலும் பயிர் என்பது அவர்களது குழந்தை மாதிரி. குழந்தையின் உடம்பில் எங்கு மச்சம் இருக்கும் என்பது பெற்றோருக்குத் தெரியாதா என்ன? தினம் தினம் பார்த்துப் பார்த்து வளர்க்கிற பயிராயிற்றே. முந்திரி மரத்தில் எங்கெங்கே எவ்வளவு விளைந்திருக்கிறது என்பது அவன் அறியாததா? தோப்பு மரங்களைச் சுற்றி வந்தவன், அந்த மரத்தில் மட்டும் வித்தியாசத்தை உணர்ந்தான். முந்திரிப் பழங்கள் இருந்த பல இடங்கள் வெறுமை தாங்கியிருந்தன. மரத்துக்கு உள்ளே நுழைந்தான். சருகுகள் மிதிபட்ட அடையாளம். மரச் சுள்ளிகள் சில உடைந்து தொங்கின. இயல்புக்கு மாறாய் சருகுகள் குவிந்திருந்த இடத்தை விலக்கிப் பார்த்தபோது முந்திரிப் பழங்கள் புதைக்கப்பட்டிருந்தன. காசியின் அப்பன்தான் பறித்திருக்க வேண்டும் என்று அவசர முடிவெடுத்தான்.

உடனே ரெட்டியாரிடம் கூறி தனது விசுவாசத்தை நிரூபிக்க அவனது கூலி மூளை உத்தரவிட்டது. காற்றெனப் பறந்தான்.

அப்போதுதான் கல்யாணம் முடிந்து கம்மாபுரத்திலிருந்து மனைவியுடன் திரும்பியிருந்தார் ராஜாராம். காசியை வீட்டில் காணோம். தறுதலை, எங்கேயாவது சுற்றப் போயிருப்பான். கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தார்கள். சட்டையைக் கழற்றி எரவானக் கழியில் தொங்கவிட்ட, அந்த நேரத்தில்தான், ரெட்டியார் ஆவேசமாக வீட்டு வாசலில் வந்து நின்றார். அவருக்குப்  பின்னே மாடசாமி.

“ஏய், ராஜாராம்... திருட்டு வேலை செஞ்சுக் குடிக்கச் சொல்லுதா. சொரணை கெட்டவனே..." எடுத்தவுடன் ஏக வசனத்தில் ஆரம்பித்தார் ரெட்டியார்.
ரெட்டியாரின் ஏச்சுக்குரல் கேட்டு ஒன்றும் புரியாமல் வெளியே வந்தார் ராஜாராம். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டு வாசல்களில் ஆட்கள் முளைத்தார்கள்.

“நீ சாராயம் குடிக்க என் முந்திரித் தோப்புதான் கிடைச்சுதா? என்ன பிறவிடா நீ."

“ரெட்டியாரே... என்ன பேசறீங்க..?  நிதானமா புரியுற மாதிரி பேசுங்க."

“குடிகாரப்பய நீ... எனக்கு நிதானம் போதிக்கிறியா?  என் தோப்புல முந்திரியத் திருடி, சாராயம் வாங்கிக் குடிக்கிறியே... அதைத்தாண்டா சொல்றேன்."
“ரெட்டியாரே நானா?"

“ஆமாய்யா. நீயே எடுத்துக்கிட்டுப் போக வெட்கப்பட்டுக்கிட்டு உன் மகன்கிட்ட கொடுத்தனுப்பி சாராயம் வாங்கிக்கிட்டு வரச் சொல்லியிருக்கே.... உன்னைப் பஞ்சாயத்துல வச்சி அபராதம் போட்டால்தான் சரிப்படும்."

“ரெட்டியாரே... நான் இப்பதான் கம்மாபுரத்திலே ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வர்றேன்."

“அப்போ, உன் மகன் காசி சாராயம் வாங்கினது யாருக்காம்? அவன் குடிக்கவா?"

சுருக்கென்று கோபமானார் ராஜாராம்.

“ரெட்டியாரே... காசியைக் கூட்டிட்டு வர்றேன். அவன் வந்த பிறகு பேசிக்குவோம்."

“இனி பேறதெல்லாம் பஞ்சாயத்துலதான்..." கூறிவிட்டு விறுவிறுவென்று போய்விட்டார் ரெட்டியார். ராஜாராம் திகைத்தார். முந்திரிக் கொட்டையைக் கொடுத்து காசி சாராயம் வாங்கினானா..? யாருக்கு?

யோசித்த ராஜாராம் கோபமானார். கையில் மூங்கில் பிரம்பை எடுத்துக் கொண்டார். காசியைத் தேடி வேக நடை போட்டார். வாத்தியார் தோட்டம், மதகு, ஏரி என்று எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, கடைசியாக அவர் வந்து நின்றது மடத்தான் பம்ப்செட்.

பம்ப்செட் கூரைக் கொட்டகையில் சுக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான் காசி. மூங்கில் பிரம்பால் அவனது பின்பக்கத்தில் பளீரென்று இழுத்தார் ராஜாராம்.
அடியின் வலியில் போதைக் கிறக்கம் கலைய... சடாரென்று விழித்தான் காசி. எதிரே மூங்கில் பிரம்புடன் தந்தை!

“பொறுக்கி... பொறுக்கி... இந்த வயசிலேயே குடிக்கிறியாடா? அதுவும் திருடிக் குடிக்கிறியா?" ராஜாராம் கையிலிருந்த பிரம்பு, ரத்த ருசியுடன் சுழன்றது.
அடிகளை வாங்கிக் கொண்டே தடுமாறி எழுந்தவன், வரப்பில்  விழுந்து எழுந்து, ஓடத் தொடங்கினான்.

“ஓடாதே. நில்லுடா..." துரத்தினார் ராஜாராம். ஒரு நீண்ட ஓட்டத்தில் இருவருக்குமான இடைவெளி குறைந்திருந்தது. இனி ஓடத் தெம்பில்லை என்பதை உணர்ந்த காசி, அங்கிருந்த புளிய மரத்தில் சரசரவென்று ஏறினான்.

“இறங்குடா..." தந்தை சொல்வது எதுவும் காதில் விழாமல், வெறியுடன் ஏறினான். அரைமயக்கம். கை பிசகியது. உயரத்திலிருந்து அசுரத்தனமாய் கீழே விழுந்தான். காசி விழுந்த வேகத்தில் கையை ஊன்றியபோது மளுக்கென்று சத்தம்.

“அப்பா..." வலியால் அலறினான். வலது கை எலும்பு உடைந்து சதையைக் கிழித்துக் கொண்டு துருத்தி நின்றது. ராஜாராமுக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

“பாவி... பாவி... எனக்குன்னு வந்து பொறந்திருக்கியேடா... இந்த வயசுலேயே உனக்கு சாராயம் கேட்குதா?" விடாமல் அடித்தார்.

கைவலி... சாராய மயக்கம். இவற்றுக்கு நடுவே கிறக்கத்துடன் சொன்னான் காசி.

“சின்னப் பையனை சாராயக் கடைக்கு நீ அனுப்பியது மட்டும் நியாயமா?"
காசியின் கேள்வி ராஜாராமின் மனசாட்சியில் அம்புவிட்டது. உடனே அவர் அடிப்பதை நிறுத்திவிட்டார். அவன் கேட்பதில் என்ன தவறு?
“சரி... வா வீட்டுக்கு..." என்றார்.

வலது கையை இடது கையால் தாங்கிப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினான் காசி.
மகனை அழைத்துக் கொண்டு ராஜாராம் வீட்டுக்குச் சென்றபோது, மனதுக்குள் சபதம் செய்து கொண்டார். இனி குடிப்பதில்லை.  பெண் குழந்தைகள் தாயைப்போல; ஆண் பிள்ளை தகப்பன் போல என்று கூறுவது எவ்வளவு நிஜம். அவர்கள் தான் முன்மாதிரிகள். பெற்றவர்கள் குழந்தைகளுக்கு நல்லவர்களாய்த் தோற்றம் தர வேண்டும். ’ஆஹா...  அப்பா நல்லவர், நாமும் அதுமாதிரி இருக்கணும் என்று அவர்களுக்கு நற்பாதை உபதேசிக்கும் குருவாக விளங்க வேண்டும். ராஜாராம் முடிவெடுத்து விட்டார் - இனி காசியிடம் நற்தந்தை என்ற பெயர் பெற வேண்டுமென்று.

உடைந்த கைக்கு மருத்துவம் பார்க்க ஒட்டேரிப்பாளையம் சென்றார்கள். வைத்தியச் செலவுக்குப் பணமில்லை. அம்மாவின் காதுத் தோடுகள் அடகுக் கடைக்குக் குடியேறின. மூங்கிற் சிம்புகள் பதித்து, பச்சிலை வைத்துக் கட்டுப் போட்டார்கள். எலும்பு உடைந்தது ஒரு புறமென்றால், எலும்பு கிழித்த காயம் இன்னொருபுறம்... வலியில் மண்டை காய்ந்தது காசிநாதனுக்கு!

இந்த நிலையில்தான் பஞ்சாயத்து கூடியது. ஊர்ப் பெரிய மனிதர்கள் வரிசையில் மரத்தடியில் சக்கரவர்த்தி ரெட்டியாரும் உட்கார்ந்திருந்தார்.
காசிநாதன்  தாய், தந்தையுடன் இடது ஓரமாக கையில் கட்டுடன் தலை குனிந்து நின்றிருந்தான்.

“ராஜாராமின் மகன் காசிநாதன் என் முந்திரித் தோப்பிலிருந்து முந்திரிக் கொட்டை திருடியிருக்கான். இதை இப்படியே விட்டால், இன்னும் பல பேரின் கொல்லைகளிலும் திருட்டு நடக்கும். அதனால், இந்தத் திருட்டுக்கு உரிய  தண்டனையைத் தர வேணுமாய் கேட்டுக்கறேன்..." என்று பிராது வாசித்தார் ரெட்டியார்.

“ராஜாராம்... ரெட்டியாரோட குற்றச்சாட்டுக்கு நீ என்னப்பா சொல்றே?" என்றார் ஊர்த்தலைவர் கோவிந்தராசு.

ராஜாராம் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.

“பெரியவங்களையெல்லாம் கும்பிடறேங்க... என் மகன் சின்னப் பையன். தெரியாமல் செஞ்சுட்டான். அதனால இந்த முறை பெரிய மனசு பண்ணி அவனை மன்னிச்சு விட்டுடணும்னு வேண்டிக்கிறேன்..."

“சாராயம் குடிச்சுட்டு ஆடறான்... அவன்தான் சின்னப் பையனா?" - ஒருவர் கூற, எல்லோரும் சிரித்தனர். காசிநாதன் கண்கலங்கத் தலை குனிந்தான். தன்னால் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அவமானம்.

தலைவர் பேசினார்...  “சின்னவனோ, பெரியவனோ திருட்டு திருட்டுதான்... எதிர்காலத்தில் இதுமாதிரி வேறு தவறுகள் நடக்கக் கூடாதுன்னு இந்தப் பஞ்சாயத்து நினைக்குது. அதனால, கோயில் நிதியாக ராஜாராம் ஆயிரம் ரூபாய் கட்டணும்னு தீர்ப்பு சொல்லுது பஞ்சாயத்து..."

ஆயிரம் ரூபாயா? கை முறிவுச் செலவுக்கு நூறு ரூபாய் இல்லாமல் காதுத் தோடுகளை அடகு வைத்துதான் வைத்தியம் பார்க்க வேண்டியதானது. ராஜாராம் தாமதிக்கவில்லை. காசியின் அம்மாவும்தான்.

“செய்யறதையும் செஞ்சுப்புட்டு குத்துக்கல்லாட்டம் நிக்கறான் பாரு. கீழே விழுந்து கும்புடுடா..." - மூன்று பேரும் நெடுஞ்சாண்கிடையாகப் புழுதித் தரையில் விழுந்தார்கள்.

“பெரியவங்க எல்லாம் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும். அபராதத் தொகையைக் குறைச்சிக்கணும்..." - தரையில் கிடந்தவாறே தலைநிமிர்த்தி வேண்டிக் கொண்டார் ராஜாராம்.

“சரி... சரி... அபராதத்தை இந்தப் பஞ்சாயத்து ஐநூறாகக் குறைச்சிக்குது..." என்றார் தலைவர்இந்த முறை ராஜாராம் எழுந்து ஓடோடிச் சென்று தலைவரின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினார்.

“ஐயா... நாங்க அன்னாடம் காய்ச்சிங்க... வேலை செய்து வயிறு கழுவறவங்க... இவ்வளவு பெரிய தொகையை எங்களால கட்ட முடியாது. ஐயாமாருங்க பெரிய மனசு பண்ணி அபராதத்தைக் குறைச்சுக்கணும்..." - மன்றாடினார் ராஜாராம்.

தொகை இன்னும் பாதியாகக் குறைந்தது. மேலும் மன்றாடினார். தொகை குறையல்! ஒரு வழியாக நூறு ரூபாய்க்கு வந்து நின்றது.

ராஜாராம் இப்போதும் கெஞ்சிப் பார்த்தார். ரெட்டியார் வெகுண்டு எழுந்தார். தலைவரே...  நல்லா இருக்குது... இப்படியே போனால், இவன் அபராதமே கட்ட வேண்டாம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே..." என்றார் கோபமாக.

“சரி... சரி... இல்லாதப்பட்டவன்... தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். நாம பெரிய மனுசங்க. மன்னிச்சுத்தானே ஆகணும்..." என்று ரெட்டியாருக்குப் பதில் கூறிய தலைவர், ராஜாராமைப் பார்த்து, ராஜாராம்... இதுக்கு மேல் குறைக்க முடியாது... இன்னும் ஒரு வாரத்துல அபராதத் தொகை நூறு ரூபாயை ஒழுங்கு மரியாதையாகக் கூட்டிடு... இத்தோட பஞ்சாயத்து முடியுது..." என்றார்.

காசிநாதனின் உள்ளுக்குள் நடுக்கம்! வீட்டுக்குப் போனால் முதுகு தோல் உரியப் போவது நிச்சயம்! பஞ்சாயத்து முடிந்து தளர்வுடன் வீட்டுக்கு நடந்தான். மனசுக்குள் அவமானக் குறுகல்! சிறியதாய்  தவறு செய்யப் போக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எவ்வளவு பெரிய அவமானம்! தனக்குள் புழுங்கினான்.

வீட்டுக்கு வந்த பிறகு, அவன் நினைத்ததுபோல் ராஜாராம் அவனை அடிக்கவில்லை. தன் தவறுதான் காசியை இப்படி ஒரு தவறுக்குத் தூண்டியதாக அவருக்குள் உறுத்தல்! இரவு, வீட்டுக்கு வெளியே பாய் விரித்துப் படுத்திருந்த காசி மல்லாந்தபடி வானம் வெறித்தான்.
நட்சத்திரங்களை அவனால் ரசிக்க முடியவில்லை. மனம் முழுக்கப் பஞ்சாயத்து அவமானமே நிறைந்திருந்தது.

ரெட்டியார் பெரிய மனிதர். மன்னித்திருக்கலாமே. அவனது தந்தை ஒட்டேரிப்பாளையத்துக்குச் சென்று திரும்பிய பிறகு, அவரைச் சந்தித்து மன்னித்துக் கொள்ளும்படி எவ்வளவோ கெஞ்சிவிட்டார். மனிதர் மசியவே இல்லை.
“எல்லாம் பஞ்சாயத்தில் பார்த்துக்கலாம்... போ" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். அவர் பெருந்தன்மை காட்டியிருந்தால், இன்று அவர்களுக்குச் சிறுமை நேர்ந்திருக்காது.

எல்லாவற்றுக்கும் காரணம்? பணம்! தான் செய்த தவறுக்குக் காரணம் பணம் இல்லாமை. அவரது செருக்குக்குக் காரணம் பணம் இருப்பது... வானத்தில் இறைந்து கிடந்த நட்சத்திரங்கள் எல்லாம் அவனுக்கு வெள்ளி நாணயங்களாகத் தோன்றின. எல்லாம் தனக்கே சொந்தமாகிவிட்டால்? கற்பனை இனித்தது. நட்சத்திரங்களுக்கு நடுவே தெரிந்த நிலவு, எல்லா வெள்ளிக்காசுகளுக்கும் ஏகபோக உரிமையாளன் போல அவனுக்குத் தோன்றியது. அப்படியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டான்.

காலையில் எழுந்து அவன் ஏரிக்கரைக்குச் சென்றான். அவன் வட்டப் பயல்கள் யாருமே அவனிடம் பேசவில்லை. சிலர் விலகியும் போனார்கள்.

“ஏலே ராமு..."- ம்ஹூம்... ராமு இவன் கூப்பிட்டதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. என்ன ஆச்சு இவன்களுக்கு? கடைசியில்தான் அவனுக்குத் தெரிய வந்தது, காசிநாதனிடம் பேசக் கூடாதென்று  எல்லோர் வீட்டிலும் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

அவன் திருடன்... குடிகாரன்... மோசமானவன்... என்றெல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு வேப்பிலையடித்து விட்டிருந்தார்கள். விளையாட்டாய் நடந்த விஷயம் விபரீதமாகப் போனது அவனுக்குப் புரிந்தது. ஊர்க்காரர்கள் மீது அவனுக்கு எரிச்சலாக வந்தது.

ஏரியில் கை நனையாமல் குளித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ரெட்டியாரின் பண்ணையாள் மாடசாமி எதிர்ப்பட்டான்.

“என்னடா காசி... குளிச்சுப்புட்டு ஜோராக் கிளம்பிட்டே... சாராயக் கடைக்கா?" - எகத்தாளமாகக் கேட்டான் மாடசாமி. காசிக்குக் கோபம் எல்லை மீறியது.
“மாடசாமிண்ணே... காலையிலேயே வயித்தெரிச்சலைக் கௌப்பாதீங்க... போங்க..." என்றான்.

“சாராயம் குடிச்சா வயிறு எரியத்தாண்டா செய்யும்..." - மறுபடியும் கெக்கலித்தபடி சிரித்த மாடசாமி, அகன்றான்.

காசிநாதனுக்குள் மிருகம் புரண்டெழுந்தது. கூரிய நகங்களால் கீறியது. எல்லா அவமானத்துக்கும் காரணமான ரெட்டியாரை ஒரு வழி பண்ணச்சொல்லி உசுப்பேற்றியது. உடனேவா? வேண்டாம். இப்போது எது செய்தாலும் சந்தேகம் வரும். காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்!

காத்திருந்தான். சில மாதங்கள் ஓடிவிட்டன. கை முறிவு சரியானது. காயமும் குணமானது. ஆனால், மனதில் ஏற்பட்ட காயம் தினம் தினம் ரணமாகிப் புரையோடிக் கொண்டிருந்தது. அதிரடி அறுவைச் சிகிச்சை மட்டுமே இனி தீர்வாக முடியும்? அவமானத்துக்கு அவமானம்!

ரெட்டியாரின் மகன் கிருஷ்ணமூர்த்தியும் காசியின் வகுப்பில்தான் படித்தான். அன்று வகுப்பில் எல்லோரும் உற்சாகமாக  இருந்தனர். காரணம் மதியம் மூன்றாவது பீரியட் விளையாட்டு வகுப்பு! கபடி, ஃபுட்பால், வாலிபால் விளையாடலாம்.

விளையாட்டு பீரியட்டுக்கு முன் கணக்கு வாத்தியார் பரசுராமன் கையில் கோடரிக்குப் பதில் ரம்பத்தை வைத்துக் கொண்டு மாணவர்களிடம் கணக்கைப் பிளந்து கொண்டிருந்தார். நேரம் சீக்கிரம் ஓடாதா என்று காத்திருந்தார்கள் மாணவர்கள்.

பரசுராமனிடம் வினோதப் பழக்கம் உண்டு. வகுப்புக்கு வந்தவுடன் கைக் கடிகாரத்தைக் கழற்றி டேபிள் மீது வைத்து விட்டுத்தான் பாடம் நடத்த ஆரம்பிப்பார். கையில் அதிகமாக வேர்ப்பதுதான் காரணம். அன்றும் அப்படித்தான்.

கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தனது வழுக்கைத் தலையைத் தடவியபடியே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த பீரியட் முடிந்ததற்கான மணியடித்தவுடன், மாணவர்கள் பைகளை வகுப்பில் வைத்துவிட்டு, விளையாட்டு மைதானத்துக்குக் கூச்சல் போட்டுக் கொண்டே எகிறினார்கள்.

கைமுறிந்த காரணத்தினால், காசி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டாதவனாக, அவசரமில்லாதவனாய் எழுந்தான். மாணவர்கள் போய் விட்டார்கள். ஆசிரியரும் போய்விட்டார். அவனது பார்வை தற்செயலாய் டேபிள் மீது விழுந்தது. அங்கே கடிகாரம்!

அதைப் பார்த்தவுடன் உற்சாகமானான். காத்திருந்த பொன்னான நேரம் வந்துவிட்டது! அவசர அவசரமாய் அந்த வாட்சை எடுத்தான். விரைந்து செயல்பட்டான். கிருஷ்ணமூர்த்தியின் பையைத் திறந்து அதனுள் போட்டுவிட்டு, இவனும் மைதானத்தை நோக்கி விரைந்தான்.

எல்லோரும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவன் வாலிபால் போஸ்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பாயிண்ட் குறித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த பரசுராமன், விளையாட்டு மாஸ்டர் மகேஸ்வரனுடன் என்னவோ பேசினார். உடனே மகேஸ்வரன் காசியை அழைத்தார். காசி விரைந்தான்.

“ஏய்... சாரோட வாட்ச்சை கிளாஸ் டேபிள்ல விட்டுட்டுப் போயிட்டாராம். நீ எடுத்தியா?" - எடுத்தவுடன் அதிரடியாய்க் கேட்டார் மகேஸ்வரன்.
“வாட்சா? நான் பார்க்கலே சார்..."

“உண்மையைச் சொல்லுடா" - அவரது கையிலிருந்த வேப்பங்கழி, அவனது கெண்டைச் சதையில் இறங்கியது.

“ஐயோ... எனக்குத் தெரியாது சார்..."

“யார் கடைசியா கிளாஸ்லேர்ந்து வந்தது."

“நான்தான் சார்..."

“அப்ப நீதான் எடுத்திருக்கணும். ஊர்ல முந்திரிக் கொட்டை திருடியவன்தானே நீ..."
“சார்... அதை மனசுல வச்சி என்னை இந்த விஷயத்தில குற்றவாளின்னு முடிவு பண்ணிடாதீங்க..." கெஞ்சினான்.

“அப்போ வேறே யார் எடுத்தது?" - கண்களை உருட்டி மிரட்டினார்.

“அதையும் நான் பார்க்கலை சார்..."

“உன் கிளாஸ் பசங்க எல்லோரையும் வரச் சொல்லி வரிசையாக நிற்கச் சொல்லு..."

எல்லோரும் வரிசையில் நின்றார்கள். மகேஸ்வரன் அனைவரின் டிரவுசர் பாக்கெட்களையும் சோதனையிட்டார். பிறகு, ஏமாற்றமாக பரசுராமனிடம் திரும்பி உதட்டைப் பிதுக்கினார்.

“சார்... அப்போ கிளாஸ்க்குப் போய் ஸ்கூல் பேக்ஸை செக் பண்ணுவோம்" இரண்டு ஆசிரியர்களும் முன் செல்ல மாணவர்கள் பின் தொடர்ந்தனர்.
வகுப்பிலும் சோதனையில் முதல் இலக்கானது காசியின் பைதான்! அதில் ஒன்றுமில்லை. தொடர்ந்து வரிசையாக பைகள் சோதனையிடப்பட்டன. கிருஷ்ணமூர்த்தியின் பை! மகேஸ்வரன் கையில் எடுத்தபோது காசியின் இதயம் சந்தோஷக் குதியல் போட்டது. பையை விரித்தார்.

ஆஹா!

கையை விட்டார்...

பேஷ்!

திடீரென்று அவரது முகத்தில் மாற்றம்... கையை இப்போது அவர் வெளியே எடுத்தபோது அதில் வாட்ச்.

சபாஷ்!

“சார்.. இதோ வாட்ச்..." பரசுராமரிடம் வாட்சைக் கொடுத்த மகேஸ்வரன், யாருதுடா இந்தப் பை?" என்றார் அதட்டலாக.

“என்னோடது சார்..." - நடுங்கியபடியே வந்தான் கிருஷ்ணமூர்த்தி. மகேஸ்வரன் அதன் பிறகு அவர் பேசவே இல்லை. வேப்பங்கழிதான் பேசியது! வீசியது! புரண்டு புரண்டு பாய்ந்தது. கிருஷ்ணமூர்த்தி வலியில் அலறினான்.

விஷயம் தெரிந்து, சிறிது நேரத்தில் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் அங்கு வந்தார்.

ஒரு வெள்ளை அட்டை எடுக்கப்பட்டது. அதில் நான் ஒரு திருடன்... இனி திருட மாட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.

“இதைக் கழுத்துல மாட்டிக்கிட்டு ஸ்கூல் முழுக்க ஒரு சுற்று சுற்றி வா..." என்றார் தலைமை ஆசிரியர்.

அவன் அதை வாங்காமல்தயங்கினான். அடுத்த வினாடி மகேஸ்வரனின் பிரம்பு பேசியது. அலறிக் கொண்டே அடிவாங்கிய கிருஷ்ணமூர்த்தி அழுதுகொண்டே பள்ளி முழுக்கச் சுற்றி வந்தான். எல்லா மாணவர்களும் வேடிக்கைப் பார்த்தார்கள்.

திரும்பி வந்தவனிடம் ராதாகிருஷ்ணன் கூறினார். நாளைக்கு வரும்போது உன் அப்பாவைக் கூட்டி வா..."

காசி மனசுக்குள் நினைத்துக் கொண்டான் - தன் அப்பா அனுபவித்த வலியை ரெட்டியார் உணரப் போகும் தருணம் இது!

No comments:

Post a Comment