Wednesday 5 June 2013



கறுப்புப் பூந்தோட்டம்

பெ. கருணாகரன்


பெண் கவர்ச்சி முதன்முறையாக எனக்கு எந்தப் பெண்ணின்மேல் ஏற்பட்டது என்று தெளிலாகக் கூற முடியவில்லை. இதில் என்னுடன் ஐந்தாம் வகுப்பில் படித்த கீதாவுக்கும் பங்குண்டு. எஸ்.எஸ்.எல்.சி.யில் என்னுடன் டியூஷன் படித்த பத்மாவுக்கும் பங்குண்டு.

கீதாவின் மீது ஏற்பட்ட உணர்வு என்னவென்று இனம்பிரிக்க முடியாத சின்ன வயசு உணர்வு. பெண், ஆண் என்ற பாகுபாடு தெரியும். வகுப்பறையில் கிண்டல் செய்வது... ‘நான் ஆண் சிங்கம் என்று இல்லாத மீசையை முறுக்கிக் காட்டுவது... அவளது சடையைப் பிடித்து இழுப்பது... புஷ்பம் டீச்சரிடம் கீதா புகார் பண்ண, அவரும் என்னைக் கை நீட்டச் சொல்லி, பிரம்பால் அடித்து அலற விடுவது... அந்த நினைவுகள் மனச்சட்டத்தில் புகைபடிந்த சித்திரமாய்.

இன்று கீதா கல்யாணமாகிக் குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறாள். அவளை விடுவோம்.

பத்மா... இன்னும் அவளது சிரிப்பு எனது ஞாபகத்தில் இருக்கிறது. அது, ஆசை அரும்பும் பருவம். போனசாக முகத்தில் மீசையும். டியூஷனில் அடிக்கடி என்னைப் பார்த்துச் சிரிப்பாள். நானும் தலைமுடியை ஸ்டைலாக ஒதுக்கிவிட்டுக் கொள்வேன். உரத்துப் பேசி என் இருப்பை அவளுக்குக் காட்டிக் கொள்வேன்.

அவள் தனது சடையை முன்னுக்கு எடுத்து  போட்டுக் கொள்வாள். செல்வம் சொல்வான், “சடையை முன்பக்கம் இழுத்துப் போட்டுக்கிற பெண்களை அந்த விஷயத்தில் திருப்தி படுத்தவே முடியாது... –இந்த மாதிரி விஷயங்களைப் பேசுவதிலும், கேட்பதிலும் சுவாரஸ்யம் காட்டிய பருவம்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஏக்கமாய்ப் பார்த்துச் சிரித்துக் கொள்வதோடு சரி. பேச்சு? மூச்... நம்புங்கள். அவளிடம் நான் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. இரண்டு பேரும் பாஸ் செய்து ப்ளஸ் டூ போன பிறகும் கூட பார்வைகள் தொடர்ந்தன.

அந்தப் பார்வைக்கான காரணத்தை இப்போது யோசிக்கும்போது தெரிய வருவது – நிச்சயம் அது காதல் அல்ல. அவளது உடல் மீது எனக்கு ஏற்பட்ட இனக்கவர்ச்சி. பத்மா இன்ஜினீயரிங் படிக்க திருச்சி போன பிறகு, என்னை மறந்தாள். இப்படியாக, கீதா, பத்மா விஷயங்கள் சாதாரணம். ஆனால், சித்ரா..? அது சாதா ரணம் அல்ல, மிகப் பெரிய ரணம்.

நான் தமிழிலக்கியம் மூன்றாம் ஆண்டுக்கு வந்தபோது,  முதலாண்டில் சேர்ந்தாள் சித்ரா. கறுப்பு, ஆனால், களையான முகம். வண்ணத்துப்பூச்சி போல படபடக்கும் பெரிய கண்கள். சின்னதான ஈரம் ததும்பும் உதடுகள். கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த அவளைச் சீண்டிப் பார்க்க நண்பர்களுக்கு ஆசை. “வாடா... குருவி புதுசு... கலாய்ச்சிட்டு வருவோம்...

நண்பர்களுடன் அவளது வகுப்பறைக்குள் நுழைந்தேன்.  அவளுக்கு முன்னே போய் டேபிளில் கையூன்றி நின்றேன்.

அவள் பதட்டத்துடன் எழுந்து நின்றாள்.

“உன் பேர் என்ன..? என்றேன் சற்று அதட்டலாக.

“சித்ரா... என்றாள் நசுங்கிய குரலில்.

“வீட்ல சோறு போடறதில்லையா? குரல் டைபாய்டு வந்த எலி மாதிரி இருக்கு... நண்பர்கள் சிரித்தார்கள். அவள் அழுது விட்டாள். ‘இன்று இது போதும்... என்று கழன்று கொண்டோம். முதன்முதலில் எனக்கு சித்ராவுடன் அதுதான் அறிமுகம்.

சித்ரா சற்றுக் குள்ளம். உடை அணிவதில் சில நுணுக்கங்களைப் பின்பற்றினாலே போதும். குள்ளத்தை மறைத்து விடமுடியும். அந்த நுணுக்கம் அவளுக்குத் தெரியவில்லை. உடை விஷயத்தில் அவள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய. பாவாடையைக் கணுக்காலுக்குமேல் தூக்கிக் கட்டி பாவாடை மேல் பகுதியால் தொப்புளை மூடிவிடுவாள்.  பாவாடைக்கும், ஜாக்கெட்டுக்கும் இடைவெளி நான்கு விரல்கடைதான் தேறும்.

அவள் உடை அணியும்விதம் அவளது உயரக் குறைவைப் பெரிதுபடுத்திக் காட்டியது. அன்று...

கல்லூரி வளாகத்தில் வந்து கொண்டிருந்த அவளிடம், “சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டியே... என்றவுடன், “சொல்லுங்க... என்றாள் விழிகளில் ஆவல் தேக்கி.

“ஏற்கெனவே நீ குள்ளம். இதில் பாவாடையை வேறே தூக்கிக் கட்டுறதாலே இன்னும் குள்ளமாத் தெரியறே... என்றேன் சிரித்துக் கொண்டே. அவள் என்னை அமைதியாகப் பார்த்தாள்.
“லோ ஹிப் கட்டு. பாவாடை தரையில் புரளட்டும். நீ உயரமாய்த் தெரிவாய்...

இதற்குப் பதில் ஏதும் பேசாமல் போய்விட்டாள். எனக்குள் குழப்பம். நான் சொன்னதை அவள் எப்படி எடுத்துக கொண்டிருப்பாள்? தப்பாக எடுத்துக் கொண்டிருப்பாளோ? இனி பேசுவாளா? ஒதுங்கிப் போவாளா?

மறுநாள்... சித்ரா கல்லூரிக்கு வந்தபோது, அவளது பாவாடை தரையில் புரண்டது. தூரத்திலேயே என்னைப் பார்த்தவுடன் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தாள். அருகில் நெருங்க நெருங்க மினி சைஸ் ரோஜா போல அவளது தொப்புள். அனிச்சையாக வாய் விசிலடித்தது. நான் விசிலடித்த்து அவளக்கும் பிடித்திருந்தது. அவளது முக உணர்ச்சி அதனைப் பிரதிபலித்த்து.

அன்று மதியம் அவளது வகுப்பறைக்குச் சென்றேன். வகுப்புத் தோழிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கை நீட்டி, “எனக்கு,... என்றேன் அவளிடம்.

“ஊஹூம்... என்றாள். மற்ற பெண்கள் சுவாரசியமாய் வேடிக்கை பார்த்தனர்.

“இப்போ நீ கொடுக்கலைன்னா டிபன்பாக்ஸைப் பிடுங்கி நானே சாப்பிட்டுடுவேன்... என்று மிரட்டினேன். அவள் பதில் கூறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான் டிபன் பாக்ஸைப் பிடுங்க முயன்றேன். அவள் அதைப் பின்னுக்கு இழுத்தாள். மீண்டும் நான் முயல, அவள் மேலும் பின்னுக்கு இழுத்தபோது, அவளது கையிலிருந்த டிபன்பாக்ஸ் தவறி கீழே விழுந்தது. சாதம் டெஸ்கில் பாதியும், தரையில் பாதியுமாகச் சிதறியது.

அவள் எரிச்சலுடன் முறைத்தாள். நான் அவளிடம் “ஸாரி... சொல்விட்டுக் கிளம்பினேன்.

மாலை... கல்லூரி முடிந்த்தும் அவளைச் சந்தித்தேன். “என் மேல் கோபமா? என்றேன். “அதெல்லாம் இல்லே...  என்றாள் தயக்கத்துடன்.  
மறுநாள்... அவள் கல்லூரிக்குச் சாப்பாடு எடுத்து வரவில்லை. எனக்குள் ‘சுருக்.

மதியம், நண்பன் ஒருவனிடம் டிபன்பாக்ஸை வாங்கிக் கொண்டு அவளுக்காக எடுத்துச் சென்றபோது, அவள் வகுப்பில் அழுது கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு? என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அவள் தொடர்ந்து அழுதாள்.

“என்ன நடந்தது? என்று அவள் தோழிகளிடம் சைகையால் கேட்டேன்.
“ஒருத்தன் திட்டிட்டான்... – ஒருத்தி பதில் சொன்னாள்.

“சரி, அழாதே... சமாதானப்படுத்த முயன்றேன். ஊஹூம். அழுகை நின்ற பாடில்லை.

“எல்லாத்தையும் சாயங்காலம் பேசிக்கலாம். இந்தா, இதில் இட்லி இருக்கு. முதல்ல சாப்பிடு... என்றேன்.

அழுகையினூடே “வேண்டாம்... என்றாள்.

“இதை இங்கே வெச்சுட்டுப் போறேன். நீ கண்டிப்பா சாப்பிடணும்... சாயங்காலம் வந்து டிபன்பாக்ஸ் கேட்பேன். டிபன்பாக்ஸ்ல இட்லி இருந்துச்சுன்னா இதுதான் நான் உன்கிட்டே கடைசியாப் பேசறதா இருக்கும்...

டிபன்பாக்ஸை டெஸ்க்கில் வைத்துவிட்டுக் கிளம்பினேன். சாயங்காலம் போய் டிபன்பாக்ஸை வாங்கியபோது, அது எடையற்று இருந்தது.
“மகிழ்ச்சி. சரி, மதியம் உன்னைத் திட்டியது யாரு? என்றேன்.
“முடிஞ்சிடுச்சி. வேண்டாம், விடுங்க

“அப்படியே விட்டுட்டா நாளைக்கும் வருவான். கிண்டல் பண்ணுவான். சொல்லு... அவன் யாரு?

அவள் மவுனம் சாதித்தாள்.

சித்ராவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவளது சேடிப்பெண் ஒருத்தி, “சண்முகம்... என்றாள் கீச்சுக் குரலில். அதுபோதும்.

நண்பர்களிடம் நடந்த விஷயங்களைச் சொன்னபோது, “நாம அதுக்கு என்ன பண்ணணும்கிறே? என்றார்கள்.

“அந்தப் பயலோட எலும்பைக் கழற்றணும்... என்றேன்.
“எதுக்காக? நீயும்தான் அவளைக் கிண்டல் பண்ணியிருக்கே... அப்பவும்தான் அவள் அழுதாள்.

“அது வேறே... இது வேறே...

“ஏண்டா, நீ சித்ராவை டாவடிக்கிறியா?

“அப்படிதான் வெச்சுக்கோயேன்... என்றேன் அலட்சியமாக.

“அவ மேலே உனக்கு அப்படி என்னடா அஃபெக்ஷன்? கறுப்பு கலர்ல, கத்தரிக்காய்க்குக் கால், கை முளைச்ச மாதிரி  குள்ளமா இருக்கா. அவளைப் போய் டாவடிக்கிறியே... என்று ஒருவன் கூறிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தான்.

“சிலரைப் பிடிக்க சில காரணங்கள் இருக்கலாம். சிலநேரங்களில் சிலரைக காரணமே இல்லாமல் பிடிக்கும். எனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு. அதுக்குக் காரணம் தெரியலே... என்றேன் சாதாரணமாக.

“அதுக்குக் காரணம் நான் சொல்றேன்டா... என்றான் கோபால்.

“என்னடா காரணம் சொல்லப் போறே..? என்றேன்.

“பத்மாவையும் நீ டாவடிச்சே... ஆனால், அவள்கிட்ட்டே நீ நிமிர்ந்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கியா? சித்ரா விஷயத்தில் நீ இப்போ தலைகீழா இருக்கே. காரணம் என்ன தெரியுமா? உன் தாழ்வுமனப்பான்மை. பத்மா, அழகி. பணக்காரி. அதனால்  உன்கிட்டே தாழ்வு மனப்பான்மை. சித்ரா குள்ளம், கறுப்பு. ஏழை. அதனால், உனக்கு சுப்பீரியர் காம்ப்ளக்ஸ் வந்திடுச்சி... என்றான்.

“ஐயா சைக்கியாட்ரிஸ்ட் அவர்களே... என்ன வேணும்னாலும் சொல்லிக்குங்க. ஆனால், இந்த விஷயத்தில் எனக்கு உதவி பண்ணுங்க... என்றேன்.

“எத்தனை பொண்ணுங்க அழகழகா, கலர்கலரா இருக்கிறாளுங்க. பணக்காரக் குட்டிகள். புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும். அதை விட்டுட்டுப் பைத்தியக்காரத்தனம் பண்றே... என்றான் ஒருவன்.
“உஷ்... உங்களோட உபதேசம் எனக்குத் தேவையில்லே... எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு... அவ்வளவுதான். எனக்கு உடனடி தேவை சண்முகம் அடிவாங்கணும். நீங்க என்ன செய்யப் போறீங்க..? – ஆத்திரமாகக் கேட்டேன்.

இரவு... ஹாஸ்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சண்முகத்தை வழியில் மடக்கி ஆற்றுக்குள் அழைத்துச் சென்றோம். ஆற்று மணலில் அவனைப் புரட்டி எடுத்தோம். சித்ராவைக் கிண்டல் செய்ததற்காக தெருவிளக்கு வெளிச்சத்தில் வைத்து அவனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினோம்.

கோயிலுக்குச் செல்லும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. அன்று, ஒரு வேலையாக கோயிலுக்கு அருகில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது, சித்ரா கோயிலுக்குள் நுழைந்தாள் தனது தங்கையுடன்.
நானும் என்னை அறியாமல் அவர்களுடன் கோயிலுக்குள் நுழைந்தேன். என்னைப் பார்த்த்த அவளது முகத்தில் வெட்கம் கலந்த பெருமிதப் புன்னகை. அவள் தினமும் கோயிலுக்கு வருகிறாள் என்பதை அறிந்து நானும் அன்றிலிருந்து தினமும் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

அவளது பிறந்தநாள் நெருங்கியது. அவளுக்குத் தெரியாமல் அவளது அடையாள அட்டையில் நான் பார்த்துத் தெரிந்து கொண்டது இது. ஒரு பேனா செட் வாங்கி அவளுக்கு வகுப்பில் அன்பளித்தேன்.

‘வேண்டாம் என்று மறுத்தாள். அவளது டெஸ்க்கிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். அவள் எனது வகுப்பறைக்கு வந்தாள். பேனாவை ‘வேண்டாம் என்று சொல்லித் திருப்பித் தந்தாள். நான் மறுக்க - அவள் பேனா செட்டை டேபிள் மீது வைத்துவிட்டுப் போய் விட்டாள்.

எனக்குள் சின்னதாக ஒரு வலி. ஏன் மறுத்தாள்? வீட்டுக்கு எடுத்துச் சென்றால் திட்டுவார்கள் என்பதாலா? அல்லது, என்னிடம் ஏதேனும் குறைகண்டு பிடித்திருப்பாளா? என்னைக் காதலித்துக் கொண்டே புறக்கணிப்பதாக நடிக்கிறாளா? காதலித்துக் கைவிட்டுவிடுவேன் என்று பயமா? நான் இத்துடன் விலகுகிறேனா அல்லது தொடர்ந்து நெருங்குகிறேனா என்ற சோதனையா? நெருங்குவதுபோல் நெருங்கி விலகும் நாடகம் ஏன்? பெண்மையே இதுதானோ?

மாலை... கல்லூரி முடிந்து மாணவிகள் சென்றார்கள். சித்ராவைத் தனியாக மடக்கினேன்.

“சொல்லு... உனக்கு என்னைப் பிடிக்கலையா? என்றேன்.
“ஐய்யய்யோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே... என்றாள்.
“பின்னே, நான் கொடுத்த பிரசென்டேஷனை ஏன் வேண்டாம்னு சொன்னே?

“அப்பா திட்டுவாரு... என்றாள்.

“ஏன் உங்க வீட்ல என்னைப் பற்றி யாராவது சொல்லிட்டாங்களா? என்று கேட்டேன். அவள் பதில் பேசவில்லை.

“பேசவே மாட்டியா?

“நான் வீட்டுக்குப் போகணும்...

“சரி போ... போறதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லணும். ஐ லவ் யூ... என்றேன்.

சரேலென்று அவள் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அதில் சந்தோஷம் ததும்பும் சோகம்.  பதில் கூறாமல் போய்விட்டாள்.

இரவு, கோயிலுக்குப் போனேன். கோயில் கதவுகள் பூட்டப்படும் வரை அவள் வரவேயில்லை.

மறுநாள்... கல்லூரிக்கும் அவள் வரவேயில்லை. தொடர்ந்து ஒருவாரம் அவள் கல்லூரிக்கு வரவேயில்லை.

என்ன ஆனது? அவளுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா? அவளது தோழி ஒருத்தியிடம் கேட்டேன். அவளுக்குக் கூட காரணம் தெரிந்திருக்கவில்லை.   

ஒருநாள் கடைவீதியில் அவளை அவள் அம்மாவுடன் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் தாய்க்குப் பின்புறம் ஒளிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். சிலநாட்கள் கழித்து அவள் கல்லூரியை விட்டு டி.சி. வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல் வந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அடிபெண்ணே.., உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் இந்த நிலை?
அவள் என்னை நெருங்கி பிறகு விலகியதற்கும், கல்லூரியை விட்டு நின்று போனதற்கும் காரணம் நான்தானா?

அன்று மாலை... நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவளைப் பற்றிப் பேச்சு வந்தது. “நீ முட்டாள்டா... இதையெல்லாம் ப்ப்ளிக்காவா பேசுவான்? தமிழ் இலக்கியத்துல இதைக் களவுன்னு ஏன் சொன்னான்? திருட்டுத்தனமா பண்ணணும்கிறதுக்காகதான். ரகசியமா வச்சிருக்க வேண்டிய விஷயம்டா இது. நீ நிறைய சீன் கிரியேட் பண்ணிட்டே... நான் விசாரிச்சுட்டேன். விஷயம் அவளு  டைய வீட்டுக்குப் போயிடுச்சி. அவளுக்கு செமை டோஸ். அதனாலதான் காலேஜை விட்டு நிறுத்திட்டாங்க. அவளுக்குக் கல்யாண ஏற்பாடுகள் நடந்துகிட்டிருக்கு...”’ என்று ஒருவன் கூற எனக்குள் சலீர் என்று நொறுங்கல்.

எனது காதல் வெற்றி பெறவில்லையே என்ற வருத்தமில்லை.  அவளைப் பிரிவதிலும் துக்கமில்லை. வலியில்லை. அந்தக் கறுப்புப் பூந்தோட்டம் என் வாழ்க்கையில் வந்திருந்தால் வசந்தம் வீசியிருக்கும்தான். ஆனால், இப்போது நான் ஒரு புயலாக அல்லவா அவள் வாழ்வில் வீசி விட்டேன்.
படித்து ஓர் அரசு அதிகாரியாகவோ, பேராசிரியையாகவோ வரவேண்டியவள். பட்டதாரியாக வேண்டிய முதல் தலைமுறைப் பெண். என் அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறையால் அவளது முன்னேற்றம் முடக்கப்பட்டு வீட்டுக்குள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து விட்டேனே... அதுதான் எனக்கு வலி. அதுதான் எனது உறுத்தல். வாழ்நாள் பூராவும் ஞாபகங்களின் மூலம் நான் அவளை எந்த மாதிரியெல்லாம் துன்புறுத்தப் போகிறேனோ? இது ஒருபுறமிருக்க-

ஒருத்தியின் வாழ்க்கையை பாழடித்த இந்த நீசனுக்கு எதிர்காலத்தில் எந்த மாதிரியெல்லாம் உறுத்தல் ஏற்படப் போகிறதோ..?

3 comments:

  1. அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்திக்கிறேன்..

    ReplyDelete